சிவனின் திருவிளையாடல்
நீலகண்டன்
அமிழ்தம் பெறவேண்டி தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைய முற்பட்டார்கள்.
அப்போது கயிறாக கடைந்த வாசுகி என்ற பாம்பு உடல் வலி தாங்காது ‘ஆலாலம்’ என்ற நஞ்சினைக்
கக்கியது. அந்த நஞ்சால் உயிர்கள் அழியாமலிருக்க சிவபெருமான் அந்த நஞ்சினை அமிழ்தம்
போல் கருதி தன் திருவாயிலிட்டு உட்கொண்டார். இதைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் ‘எம்பெருமானே!’
இன்று எங்கள் உயிர்களையெல்லாம் காத்தருளியதற்குச் சான்றாகவும், தங்கள் கருணை மற்றவர்களுக்கு
விளங்கவும் இவ்விதம் தங்கள் திருக்கண்டத்திலேயே தங்கி நிற்கும்படி அருள் செய்க என்று
வேண்டித் துதிக்க, சிவபெருமான் தம்முடைய அழகிய திருமிடற்றில் ஒரு நீலமணி போல் விளங்குமாறு
அந்த நஞ்சினை நிறுத்திக் கொண்டார். இதனை,
”பரியமர சுணங்க யறாப் பருப்பத மதற்கு மத்தாகப்
பெரிய வேலையைக் கலங்கப்
பேணிய வானவர் கடையக்
கரிய நஞ்சது தோன்றக்
கலங்கிய வவர்தயைக் கண்டு
அரிய வாரமுதாக்கு மடிகளுக்கு இடம் அரிசிலியே”
என்கிறார் திருஞானசம்பந்தர்.
”பொங்கி நின்று எழுந்தகடல் நஞ்சினைப்
பங்கி யுண்டதோர் தெய்வம் உண்டோ சொல்வாய்!
தொங்கநீ என்றும் சோற்றுத் துறையர்க்குத்
தங்கு நீபணி செய்மட நெஞ்சமே”
என்று அப்பர்
அடிகளும்,
”கோலாலம் ஆகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர்தான் என்னேடீ”
என்று மாணிக்கவாசகரும்
போற்றிப் பாடியுள்ளார்கள்.
வெண்ணீற்று
அம்மான்
சிவன் வெண்ணீறு அணிந்த திருமேனியை உடையவன்
எல்லாம் அழிந்தபிறகு எஞ்சியிருக்கும் திருநீற்றை அவன் பூசிக்கொண்டு இருக்கின்றான்.
உலகத்துப் பொருள்கள் எரித்தால் அனைத்தும் சாம்பாலகிவிடும். அச்சாம்பலை மேலும் மேலும்
எரித்தாலும் சாம்பலாகவே நிற்கும்.
எல்லாவற்றையும் ‘சங்காரம்’ செய்து தனிப்
பொருளாகச் சர்வசங்கார காலத்தில் எஞ்சிநிற்பவன் சிவபெருமான். அவனுக்கு என்றும் அழிவில்லை.
அதை அவன் அணிந்த திருநீறு காட்டுகிறது. அவன் நித்தியன். எனவே அவனை அடைந்தவர்கள் என்றும்
மாறாத நித்தியமான ஆனந்தத்தைப் பெறுவார்கள்.
இலக்கியத்தில்
திருநீறு
கூன்பாண்டியன் தனக்கு வெப்பு (சூலை) நோய்
ஏற்பட்ட போது, சம்பந்தரையும், சமணர்களையும் நோக்கி ‘உங்களில் யார் எனது வெப்பு நோயைத்
தீர்க்கிறீர்களோ அவர்களே வாதில் வென்றவராவீர்’ என்றான்.
சமணர்கள் தன் கரங்களில் இருக்கும் மயிற்றோகையால்
அரசனுக்கு இடப்பக்கத்திலிருந்து மந்தரம் ஓதி தடவிக் கொண்டு இருந்தார்கள். அதனால் மன்னனுக்கு
நோய் அதிகரித்ததே அன்றி தணியவில்லை. பின் மன்னர் சம்பந்தரை நோக்கினார். சம்பந்தரும்
எல்லாம் வல்ல சிவனை வணங்கி,
”மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர
மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர
மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர்
வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீரே”
என்று திருநீற்றுப்
பதிகத்தைப் பாடிக் கொண்டே அரசனின் மேனியில் திருநீற்றைப் பூசினார். அரசனின் நோய் தணிந்தது.
நீங்கியது.
நடராசமூர்த்தி
சிவபெருமான் கொண்டருளிய திருமூர்த்தங்களில்
மிகவும் சிறப்பு வாய்ந்தது. நடராச மூர்த்தமாகும் . உயிர்களுக்கு முத்தி அருளுதற் பொருட்டு
திரு ஐந்து எழுத்தையே திருமேனியாகக் கொண்டு, ஆனந்தக் கூத்தாடும் திருமூர்த்தியே நடராசதிருமூர்த்தி.
இந்த ஆனந்தக் கூத்திற்குச் சிறப்பான உரிய
இடம் தில்லை ஆகும். சிவபெருமான் திருக்கோலத்தை, ‘ஊன்றியதிருவடி’ ஆண்பகுதிக்குரியது
இது முயலகன் என்பவனை மிதித்து அடக்கும் வகையில் அவன் மீது ஊன்றய நிலையில் அமைந்து விளங்குகிறது
என்றும் முயலகன் மீது உள்ளகால் அம்முயலகனை நன்கு மிதித்து நசுக்காமலும், மிதியாமலே
விட்டு விடாமலும் மெல்லென பெருமான் நிற்கின்றார் என்று நடராசமூர்த்தியின் தன்மை விவரிக்கப்படுகிறது.
முப்புரம் எரித்தமை
திருமூலர் முப்புரம் என்பது ஆணவம், மாயை,
கன்மம் என்ற மும்மலங்களின் செயல்கள். அவைகளைச் சிவன் அப்புறம் எறிந்ததாகத் திரிபுரம்
எரித்த தத்துவத்தைக் கூறினார். அதாவது அசுரர்கள் தாம் முப்புரம் பெற்று விட்டோம் என்ற
ஆணவத்தினால் மாயையில் மதிமயங்கி தேவர்களைத் துன்புறுத்தித் தீவினையைச் செய்தார்கள்.
அதனால் சிவன் அவர்களுடைய முப்புரங்களை அழித்ததோடு அவர்களுடைய ஆணவத்தையும் மாயையும்
கன்மாவையும் போக்கினார்.
இராவணனின் சிரம்
நெறித்தமை
இராவணன் சிரத்தால் இமயமலையைப் பெயர்த்து
எடுக்க முயன்ற போது, அம்மலையை அழுத்தி அவனுடைய சிரத்தை நெறித்தார். இதை,
”இமயவில் வாங்கிள ஈஞ்சடை அந்தணன்
உமையமர்ந்து
உயர்மலை இருந்தோனாக
ஐயிரு
தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி
தடக்கையின் கீழ்புகுந்த அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல” (கலி)
இதிலிருந்து இலக்கியங்களில் சிவனின் வீரமும்
ஈரமும் கொண்ட செயல்களில் தம்மை வழிபடும் அன்பர்களின் தூலம், சூக்கும, காரணம் என்ற மூவகை
உடல்களையும், இவற்றின் காரணமாக ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் அழித்து
அருள் புரிகிறார் என்பது தெள்ளத் தெளிவாக உணரலாம்.
பார்வை நூல்
1.
சங்க கால இறைநெறியும்
வாழ்வியல் நெறியும் – புலவர் சக்தி தரும நடராசன், சரஸ்வதி பதிப்பகம், வேலூர் முதன்மைச்சாலை, ஆர்க்காடு – 632 503, முதற் பதிப்பு, 2017.
Comments
Post a Comment