அதியமான் - ஔவையார்
தாய்மைக்கும், அதற்கு அடிப்படையான பெண்மைக்கும் மதிப்பளித்துப் போற்றியது
பண்டைய தமிழகம். தெய்வத்தைத்
திருமகளாகவும், கலைமகளாகவும், அம்மையப்பனாகவும்
வழிபடும் மரபுடையது. சங்க காலத்தில் பெண்பாற் புலவர்களில் தலைசிறந்து விளங்கியவர்
ஔவையார்.
ஔவை
என்னும் சொல் – தாய், அம்மை, தவப்பெண் முதலிய
பொருள்களை உடையது. அம்மை என்பதன் திரிபாகிய அவ்வை என்ற சொல்லுடன் சிறப்புணர்த்தும்
விகுதியாக ஆர் விகுதி சேர்ந்து அவ்வையார் (அம்மையார்) என்னும் சொல் பெண்களில் உயர்ந்தோரைக் குறிக்க வழங்கியது. ஔவையார் என்னும்
பெயரில், வெவ்வேறு காலத்தில்
மூன்று நல்லிசைப் புலவர்கள் விளங்கியுள்ளனர். மூவரும் மூவேந்தர்களாலும் போற்றப் பெற்ற சிறப்புடையவர்கள்.
முதலாமவர்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சங்க காலப் புலவர். இரண்டாமவர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சுந்தரமூர்த்தி
நாயனார் காலத்தில் வாழ்ந்தவர். மூன்றாமவர் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் காலத்தில்
வாழ்ந்தவர். இவர் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம், நல்வழி ஆகிய
நீதி நூல்களை இயற்றியவர் என்பர். உலகம் உய்ய உயர்நூல் படைத்தப் புலவர் பெருமக்கள் தம் வாழ்க்கைக்
குறிப்புகளை எழுதி வைக்கவில்லை. ஆதலால் எந்தப் பழம் புலவரைப் பற்றிய சரியான வரலாறு கிடைக்கவில்லை.
ஔவையார்
ஒருவரோ? பலரோ? அறியோம். ஆயினும் அவர்கள்
பாடிய பாக்களின் கருத்துக்களே முக்கியமாக நாம் போற்றத்தக்கவை. புறநானூற்றில்
பாடிய ஔவையாரின் கருத்துக்களையும், சிறப்புக்களையும் காண்போம்.
ஔவையாரின் பாடல்கள்
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் சங்க இலக்கியங்களில் மொத்த பாடல்களின் எண்ணிக்கை 2381, பாடிய புலவர்களின் எண்ணிக்கை 473. இவர்களுள் பெண்பாற் புலவர்கள் முப்பதின்மர். பெண்பாற் புலவர்களுள் அதிகம் பாடியவர் ஔவையார் ஆவர். முப்பதின்மர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 156 பாக்கள். ஔவையார் மட்டும் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 59 பாக்கள். எட்டுத்தொகை நூல்களான புறநானூற்றில் 33 பாடல்களும், குறுந்தொகையில் 15 பாடல்களும், அகநானூற்றில் 4 பாடல்களும், நற்றிணையில் 7 பாடல்களும் ஔவையார் பாடியுள்ளார்.
புறநானூற்றில்
பாடிய புலவர்கள் 156 பேர் பாடியுள்ளனர். பெண்பாற் புலவர்கள் 15 பேர். அதில் அதிகப் பாடல்களைப் பாடியவர் ஔவையார் ஒருவர்தான். கடையெழு வள்ளல்களுள்
ஒருவனும், நெல்லிக் கனி
ஈகையால் பெரும்புகழ் பெற்றவனும் ஆகிய அதியமான் நெடுமானஞ்சியைப் பற்றி அதிகம் பாடியுள்ளார். 33 பாடல்களில்
அதிகமான பாடல்களை அதியமானைப் பற்றிய பாடல்களும், 3 பாடல்கள் மட்டும் அதியமான் மகன் பொகுட்டெழினியைப் பற்றியும்
பாடியுள்ளார். நெடுமானஞ்சியைப்
புகழ்ந்த வாயால் பிற மன்னரைப் புகழ்ந்தறியா நாவுடையவர் ஔவையார். அவனுக்கு அரசவைப்
புலவராகவும், நல்லமைச்சராகவும், உயிர்த் தோழியாகவும், அரசியல் தூதராகவும்
இருந்து அரும்பணியாற்றிப் பெரும்புகழ் பெற்ற நல்லிசைப் புலவர் ஆவார்.
முதல் சந்திப்பு
இன்றைய
தருமபுரி அன்றைய தகடூர். தகடூரைத் தலைநகராகக் கொண்டு கொங்கு நாட்டின் ஒரு பகுதியை
ஆண்டு வந்தான் அதியமான் நெடுமானஞ்சி. ‘அதியமான்’ என்பது குடிப்பெயர். ‘நெடுமானஞ்சி’ என்பது இயற்பெயர். இவன் சிறந்த வீரனாகவும், புலவர், பரணர், விறலியர், முதலிய கலைஞர்களுக்கு வரையாது வழங்கும் வள்ளலாகவும் பெரும்
புகழ் பெற்று விளங்கினான். புறநானூற்றில் 30
பாடல்கள் பெற்ற பெருமைக்குரியவன்.
அதியமான்
புகழைக் கேள்வியுற்ற ஔவையார் அவனை நேரில் கண்டு பாடிப் பரிசில் பெற விரும்பி, தகடூர் அரண்மனைக்குத்
தன் உறவினருடன் வந்தார். அதியமான அரசியல் வேலை மிகுதியாலும், சூழ்நிலையாலும்
அவருக்கு எளிதில் காட்சியளிக்காமல் அவரை நன்கு உபசரிப்பதற்குரிய ஏற்பாடு மட்டும் செய்திருந்தான்.
ஔவையாரை
அரண்மனையில் உள்ள அனைவரும் நன்கு உபசரித்துப் போற்றி வந்தனர். மன்னனை மட்டும்
காண இயலவில்லை. ஒவ்வொரு நாளும்
வாயிற்காவலன் இனிமையாகப் பேசி ஏதேனும் ஒரு காரணம் கூறித் தடுத்துக் கொண்டே இருந்தான். மன்னன் சூழ்நிலை
உணராத ஔவையார் வெறுப்புற்றுச் சினந்து, வாயிற் காவலனிடம் கூறுகின்றார்.
”வாயிலோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!
கருமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்னறி யிலன் கொல்? என்னறியவன் கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை யுலகமும் அன்றே; அதனால்
காவினெங் கலனே; சுருக்கினெங் கலப்பை
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே!
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!” (புறம் -206)
இப்பாடலை வாயில் காப்போனும்
புரிந்து கொண்டான்.
அக்காலப்
புலவர்களின் தன்மானங் குன்றாப் பரிசில் வாழ்க்கையும், உவமை, உருவகங்களுடன் பாடும் ஔவையாரின் புலமை நலத்தையும் இப்பாடல்
விளக்குகிறது.
புலவர்
பெருமாட்டியின் வெறுப்பையும், சினத்தையும் அறிந்த வள்ளல் அதியமான் உடனே வந்து சிறப்பித்துப்
போற்றினான். பின் அவரது
புலமை நலத்தையும், பண்பையும் உணர்ந்து அரசவைப் புலவராகவும், நல்லமைச்சராகவும்
இருக்க வேண்டினான். அவன் வேண்டுகோளுக்கு இணங்கி உற்ற நண்பியாகவும் விளங்கினார்.
அமிழ்தக்கனி
ஈன்ற அதியன்
ஒரு
நாள் அதியமான் நெடுமானஞ்சி வேட்டைக்குச் சென்றிருந்த பொழுது மலைச்சரிவு ஒன்றிலிருந்த
நெல்லி மரத்திலிருந்து அரிய நெல்லிக்கனி ஒன்றை மிக முயன்று பெற்றான். அக்கனி, தன்னையுண்டாரை
நீண்ட நாள் வாழ்விக்கும் தன்மையது என்பதையும் முனிவரால் உணர்ந்தான். அருந்தமிழ்
புலவர் பெருமாட்டியான ஔவையாரை நீண்ட நாள் வாழ்வித்து, வண்டமிழை மேலும் வளப்படுத்த விரும்பினான்.
தாய்மொழிப்
பற்று மிக்கத் தக்கோனாம் வள்ளல், அமிழ்தக் கனியின் சிறப்பை ஔவையாருக்கு உணர்த்தாது, கனியை மட்டும்
அன்புடன் கொடுத்து உண்பித்தான். முன்பே கனியின் சிறப்பை ஔவையார் உணர்ந்திருந்தால், தாமுண்ணாது, தம்மை போன்ற
பல தமிழ்ப் புலவர்களையும், கலைஞர்களையும், ஏழை எளியோரையும் வாழ்விக்கும் வள்ளல்களே உண்பித்திருப்பார்.
அமிழ்தக்
கனியை உண்டபின், அதன் சிறப்பை
உணர்ந்த ஔவையார் வியந்து, மகிழ்ந்து நெஞ்சம் நெகிழ்ந்து கொடைமடத்தால் சிறந்த வள்ளலை,
”பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே” (புறம், 91)
இப்பாடலில் அதியமானது வெற்றிச்
சிறப்பையும், கொடைச் சிறப்பையும்
கூறி நன்றிப் பெருக்கால் எழுந்த வாழ்த்தையும் உணர்த்துகிறார்.
அதியமான்
தன் அருங்கொடையால் ஔவையாரை நீண்ட நாள் வாழ்வித்தான். அருந்தமிழ் மூதாட்டி ஔவையார் தமிழ்மொழி உள்ளனவும், சிவபெருமான்
உள்ளனவும், அதியமான் புகழ்
பாட்டில் நிலைபெறச் செய்துவிட்டார்.
தன்
வாழ்வு கருதாது, தமிழ் வாழ்வும், தமிழ்ப் புலவர்
வாழ்வும், கருதி அமிழ்தக்
கனியீந்த வள்ளல் அதியமானுக்குத் தேவர் வாழ அமிழ்தீந்து தான் நஞ்சருந்தித் தீதின்றி
இருந்த சிவபெருமானை உவமை காட்டியது சிறப்பானதாகும்.
”உதவி செயபட்டார் சால்வின் வரைத்து” (குறள்-105)
என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப, உதவி செய்யப்பட்ட
ஔவையாரின் சால்பிற்கேற்ப, உதவிய வள்ளல் அதியமானின் புகழும் உயர்ந்து நிலைத்துள்ளது.
அதியமானின்
வீரம்
ஒரு
சமயம் வேற்று நாட்டு வேந்தன் அவைக்கு ஔவையார் சென்றிருந்த பொழுது, அவன் அவரை நோக்கி, உங்கள் நாட்டில்
போர் செய்யும் வீரரும் உளரோ? என்று கேட்டான். அதற்கு ஔவையார் கூறும் வீரமும், நயமும் மிகுந்த பதில்: மணிமேகலை என்னும் ஒட்டியாணம் என்னும் இடையணியால் அழகுடன்
உயர்ந்த பக்கத்தையுடைய அல்குலையும், மடப்பத்தையும், மைத்தீட்டிய கண்களையும் ஒளிமிக்க அழகிய நெற்றியையும் உடைய
விறலியே! உங்கள் நாட்டில்
என்னோடு போர் செய்யும் வீரரும் உளரோ? என கேட்கும் வேந்தே! கூறுகிறேன் கேள்.
அடிக்கும்
கோலுக்கும் அஞ்சாது சீறியெழும் நாகப்பாம்பு போன்று போருக்கு அஞ்சாத இளமையும், வலிமையும் மிக்க
வீரர் பலர் எம் நாட்டில் உள்ளனர். அது மட்டுமா?
”பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தண்கண் கேட்பின்
அதுபோரென்றும் என்னையும் உளனே” (புறம் -89)
ஊர் மன்றத்திலுள்ள மரத்தில்
கட்டப்பட்டுள்ள மத்தளத்தின் மீது காற்றினால் அசையும் மரக்கிளை மோதி ஓசை எழுப்பினாலும்
போர் முரசு ஒலிக்கிறதெனக் கருதி, மகிழும் எம் தலைவனும்(அதியாமானும்) இருக்கிறான்.
இப்பாடல்
ஔவையாரின் இளமை நலம், புலமை நலம், அஞ்சாமை, செய்ந்நன்றி மறவாமை ஆகிய அனைத்தையும் விளக்கும் சிறந்த பாடலாகும். இங்ஙனம் அதியமானின்
வீரத்தையும், படைபலத்தையும், பகைவரிடம் கூறி
பல போர்களையும், போர்க்கொடுமைகளையும்
தடுத்து வந்த நல்லிசை மெல்லியலார், ஒரு சமயம் அதியமானுக்கே அவன் வீரத்தை உணர்த்திப் போர் செய்யத்
தூண்டும் நிலையும் ஏற்பட்டது.
ஒரு
பெரும் போரில் வெற்றிபெற்ற உடனே அடுத்து ஒரு பெரும் போரும் காத்திருந்தது. ஏற்கனவே களைத்திருக்கும்
தன் வீரர்களுக்கு மேலும் தொல்லை கொடுக்கத் தயங்கினான் அதியமான். போர் செய்யாவிட்டால்
தன் நாடு அழிக்கப்படும் என்பதையும் உணர்ந்து வருந்தினான். இந்நிலை உணர்ந்த புலவர் பெருமாட்டியார் அதியனை நோக்கிக் கூறுகிறார்.
வீரர்களின்
தலைவனே! புலி சினந்தெழுந்தால்
மான் கூட்டம் எதிர்நிற்குமா? கதிரவன் சினந்து காய்ந்தால் இருள் எதிர் நிற்குமா? சேற்றில் பதிந்த
பாரவண்டியைக் கரை சேர்க்கக் கருதும் ஊக்கமும், வலிமையும் பொருந்திய எருதுகளுக்குக் கடக்க முடியாத துறைகளும்
உண்டோ? நீ சினந்து
போர்க்களம் புகுந்தால், உன்னை எதிர்க்கும் பகைவரும் உளரோ? (புறம்-90 வது பாடல்) என்று கூறுகிறார்.
”அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு சூழ்ச்சி சொல்லிய
அரிமணல் ஞெமரக் கற்பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ” (புறம் -90)
என்னும் உவமையும்,
”மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து” (குறள்-624)
என்னும் குறட்பாவின் விளக்கமாகும்.
இங்ஙனம்
பலரும் போற்றிப் பாடிய உவமையை ஔவையாரும் நயமுடன் விளக்கி வேறு இரு உவமைகளையும் சேர்த்துப்
பாடி சோர்வுற்ற அதியமானுக்கு ஊக்கமூட்டினார். அதியமானும் வீறுகொண்டெழுந்து போரிட்டு பகைவரை விரட்டினான்.
தூது
தூதில் பலவகை உண்டு. அவற்றுள் காதல் தூதும், அரசியல் தூதும் முக்கியமானவை. இலக்கியத்தில் புகழ் பெற்றவை காதல் தூது பற்றி பல தனிச் சிற்றிலக்கியங்களே
தோன்றியுள்ளன. நளவெண்பாவில்
அன்னம் விடு தூது, நற்றிணையில் நாரை விடுதூது (70), அகநானூற்றில் நண்டு விடு தூது (170) குறுந்தொகையில் வண்டு விடு தூது (312) சிறப்பான பகுதியாகும். சுந்தரமூர்த்தி நாயனாருக்காகச் சிவபெருமானே ஊடல் தீர்க்கும்
தூது சென்றுள்ளார்.
இதிகாச
இலக்கியங்களில் அரசியல்தூது, சிறப்பான இடம் பெருகிறது. கண்ணன் தூது, அனுமன் தூது, அங்கதன் தூது, வீரபாகு தூது முதலியன குறிப்பிடத்தக்கவை.
இத்தூதுக்களின் முடிவு பெரும் போரும் பேரழிவுமே. போரைத் தவிர்த்து, சமாதானத்தை உண்டாக்கிய ஔவையாரின் தூது சங்க இலக்கியத்தில் தனிச் சிறப்புடையது. இதிகாசத் தூதுக்கள் நூற்றுக்கணக்கான பாடல்களில் விரித்துக் கூறப்படுகின்றன. ஒன்பதடிகளே கொண்ட ஒரு சிறிய ஆசிரியப்பாவில் அதிலும் ஐந்தடிகளிலேயே ஔவையாரின் சமாதானத் தூது அமைந்து, வெற்றி பெற்று தமிழ் இலக்கிய வரலாற்றில் அழியாப் புகழ்பெற்று விளங்குகிறது.
வள்ளல்
அதியமான் சிறந்த வெற்றி வீரனாயினும், வீண் போரையும், வீணழிவையும் விரும்பாதவன். பிறர் நலமே போற்றி வாழ்பவன். புதிதாக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவனும், போர் அனுபவம்
இல்லாதவனுமாகிய தொண்டைமான், அதியமான் புகழ் கண்டு அழுக்காறு கொண்டு, அவன் மீது போர்
தொடுக்க எண்ணிப் போர்க் கருவிகளைத் திரட்டினான்.
இதையறிந்த அதியமான், தொண்டைமானின் அறியாமையையும், அதனால் இருபக்கத்து வீரர்களுக்கும் நேர இருக்கும் வீண் தொல்லைகளையும் எண்ணி வருந்தி, அவற்றைத் தவிர்க்க எண்ணி, அன்பும் அறிவும் ஆன்ற சொல்வன்மையும் வாய்ந்த ஔவையாரைத் தூது அனுப்பினான். தூது வந்த நல்லிசை மெல்லியலாரைத் தொண்டைமான் வரவேற்றுச் சிறப்பித்தான். செருக்குடன் ஏராளமான போர்க்கருவிகளைத் தொகுத்து வைத்திருந்த படைப்பலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்று காட்டினான்.
தூது
வந்த புலவர் பெருமாட்டியார் புன்னகையுடன் கூறுகின்றார். அரசே இங்கிருக்கும் தங்கள் போர்க்கருவிகள் யாவும் அழகாகச்
செய்யப்பட்டு நெய் பூசப்பட்டும், மயில் தோகை அணியப்பட்டும் மாலை சூட்டப்படும் அரண்மனையில்
புத்தம் புதியனவாகவும், பாதுகாவலாகவும் வைக்கப்பட்டுள்ளன. இருக்கும் காலத்தில்
பலருக்கும் வயிராற உணவு கொடுத்தும் நிறைய இல்லாத காலத்தில் இருப்பதைப் பலரோடு பகுத்துண்டு
வறியோர்ப் போற்றும் பண்புடையவன் அதியன். அவனுடைய கூர்மையான வேல், எப்பொழுதும் பகைவரைக் குத்துவதால் நுனியின் கூர் மழுங்கியும், இரத்தக்கறை
படிந்தும், சிதைந்தும்
கொல்லன் உலைக்களத்தில், செப்ப ஞ் செய்வதற்காகப்
புழுதியில் கிடக்கின்றன.
”இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன்நகர் அவ்வே, அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுறுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்,
உண்டாயில் பதம் கொடுத்து
இல்லாயின் உடனுண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எம்கோமான் வைதறுதி வேலே” (புறம்-95)
தொண்டைமான்
போர்ப்பயிற்சி இல்லாதவன். ஆதலால் கருவிகள் புத்தம் புதியனவாக போர்க்களமே காணாதவயாக
உள்ளன. அதியனோ பல போர்களில்
வெற்றி கண்டவன். ஆதலால் அவனுடைய
கருவிகள் எப்பொழுதும் சிதைந்து, அடுத்தப் போருக்குத் தயார் செய்வதற்காக கொல்லன் உலைக் களத்தில்
கிடக்கின்றன. அவனோடு போர்
செய்தால் தொண்டைமான் தோற்பது உறுதி என்னும் கருத்தைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும்
வஞ்சப் புகழ்ச்சி அணிநயத்துடன் கூறித் தொண்டைமானை உணர வைத்தார். உண்மையுணர்ந்த
தொண்டைமான் போரெண்ணத்தைக் கைவிட்டுச் சமாதானம் பேசினான். ஔவையாரின் தூது வெற்றி பெற்றது.
அதியமானின்
வீரச் சிறப்பு, கொடை சிறப்பு, ஔவையாரின் புலமைச்
சிறப்பு, நன்றியுணர்வு
முதலிய அனைத்தையும் உள்ளடக்கியது. இப்பாடல், போர் வெறிகொண்ட மன்னனிடம் ஒரு பெண் தூது சென்று வெற்றி பெற்றதும்
ஔவையாரைத் தவிர பிறரில்லை.
பண்டைய தமிழ்
மரபு
முதல்
மகன் பிறந்த சில நாட்களில், தந்தை போர்க்கோலத்துடனும், சான்றோர் சூழவும் சென்று அவனைக் காணவேண்டும் என்பது பண்டைய
தமிழ் மரபு. உலகில் பிறந்த
மகன் முதன் முதலாகத் தன் தந்தையைக் காணும் பொழுது, அவன் நெஞ்சில் தந்தையின் வீரவடிவமும், வீரமும் பதிய
வேண்டும் என்பது வழக்கம். அக்காலச் சூழ்நிலை போர் மறவரையே பெரிதும் விரும்பியது.
அதியமானுக்கு
முதல் மகன் பொகுட்டெழினி பிறந்த சில நாட்களில், அவன் போர்க் கோலத்துடனும், ஔவையாருடனும் மகனைக் காணச் சென்றான். அப்பொழுது அவன்
கொண்டிருந்த போர்க்கோலத்தை வருணிக்கிறார்.
”கையது வேலே, காலன் புனைகழல்,
மெய்யது வியரே, மிடற்று பசும்புண்,
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தொட்டு
வெட்சி மாமலர், வேங்கையொடு விரைஇச்
அரியிடும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல
இன்னும் மாறாது சினனே அன்னோ!
உய்ந்தன ரல்லர் இவன் உடற்றியோரே!
செறுநர் நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பானாவே” (புறம்-100)
இப்பாடல் அதியமானின் போர்க்கோலத்தைச்
சிறப்பாகப் புனைந்து காட்டுவதோடு, பிறந்த முதல் மகனை ஆவலோடு நோக்கும்போதும், பகைவரைச் சினந்து
நோக்கிய கண்ணின் சிவப்பு மாறாத் தன்மையை வியப்புடன் விளக்குகிறது. சினம் மாறாத
தன்மைக்கு ‘வரிவயம் பொருத
வயக்களிறு‘ தக்க உவமையாகும். அதியமான சேர
மரபினராதலின் பனம்பூ (போந்தை) கூறப்பட்டது.
கையறுநிலை
அன்பிற்குரியோர், நல்ல தலைவர், சான்றோர், வள்ளல் முதலியோர் இறந்து விட்டால்,
வருந்திப் பாடுவது கையறு நிலையாகும். இத்துறை பொதுவியல் திணையைச் சார்ந்தது (கையறுதல்
– செயலறுதல்) துயர மிகுதியால் இன்னது செய்வதெனப் புரியாது, எந்தச் செயலும் செய்யாது
– வருந்துவதே கையறுநிலையாகும். செயலாற்றப் பயன்படுவது கை. எனவே வருத்தத்தால் செயலற்ற
நிலை கையறு நிலை எனப்படும்.
பல்வேறு நல்லோர் இறப்புக்காகப் பல்வேறு புலவர்கள்
பாடியனவாகப் புறநானூற்றில் நாற்பத்தொரு கையறுநிலைப் பாடல்கள் உள்ளன. அவற்றுள் அதியமான்
நெடுமானஞ்சியின் இறப்புக்காக ஔவையார் பாடியனவாக மூன்று கையறுநிலைப் பாடல்கள் (231,
232, 235) உள்ளன.
அதியமான் நெடுமானஞ்சிக்கும், சேரநாட்டு வேந்தன்
சேரமானுக்கும் நடைபெற்ற பெரும் போரில் நெடுமானஞ்சி விழுப்புண் ஏற்று விரமரணம் அடைந்தான்.
அப்பொழுது வருந்திய சான்றோர்களுள் ஔவையார் தலை சிறந்தவர். அவர் பாடிய கையறுநிலைப் பாடல்,
”எறிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற
விறகின் ஈம ஒள்ளழல்
குறிகினும்
குறுகுக! குறுகாது என்று
விசும்புற
நீளினும் நீங்க! பசுங்கதிர்த்
திங்கள்
அன்ன வெண்குடை
ஒண்ஞாயிறு
அன்னோன் புகழ்மா யலவே” (புறம்-231)
‘குறையல் என்ன
கரிபுற விறகு’ என்பதால் அக்காலத்தில் எரிந்து அணைந்த மரத்துண்டுகளையே ஈம விறகாகப் பயன்படுத்தினர்
என்பதும், குறுகாது சென்று விசும்புற நீளினும் நீங்க’ என்பதால் உடலோடு வானுலகு செல்லும்
நம்பிக்கை இருந்தது என்பதும் புலப்படுகின்றன. ‘புகழ் மாயலவே’ என்பதால் பூத உடல் மறைந்தாலும்
புகழுடல் என்றும் மறையாது நிலைத்திருக்கும் என்பதை நிலைநாட்டுகிறது.
இறுதி இரண்டு அடிகளில் திங்களும், ஞாயிறும்
முரண்தொடையாக அமைத்து இன்பம் பயக்கின்றன. வெண்கொற்றக் குடைக்குத் திங்களும், அதியமானின்
புகழொளிக்கு ஞாயிற்று ஒளியும் உவமைகளாக அமைந்து துயருற்ற நிலையிலும், புலமை நயம் குன்றாது
பாடும் ஔவையாரின் புலமை நயத்தை வெளிப்படுத்துகின்றன.
நடுகல் வழிபாடு
பண்டையத் தமிழர், நாடு காக்கும் போரில்,
விழுப்புண் பட்டு வீரமரணம் அடைந்த வீரருக்குக் கல்லெடுத்து அதில் அவருடைய பெயரும்,
வீரச் செயல்களும் குறித்து விழா கொண்டாடுவர். மயில் தோகை சூட்டி, மதுவும், புலாலும்
வைத்துப் படைப்பர். இவ்வழக்கப்படி வந்தப் பழக்கங்களே மதுரை வீரசாமி, பெரியண்ணசாமி போன்ற
தெய்வ வழிபாடுகள். இவ்வகையில் மதுரையில் வீரச்செயல் புரிந்த கற்பரசி கண்ணகிக்குச் செங்குட்டுவன்
சிலையெடுத்து விழா கொண்டாடியது ஒரு புதுமையாகும். கண்ணகி வழிபாட்டால் மாரி (மழை) பொழிந்த்தாகவும்,
கண்ணகி வழிபாடே மாரியம்மன் வழிபாடாயிற்று என்றும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி கூறுவர்.
‘அதியமான் நெடுமானஞ்சிக்கும் சிலையெடுத்து
விழா கொண்டாடினர். மது வைத்துப் பூசித்தனர். அப்பொழுது ஔவையார் வருந்திப் பாடிய பாடல்,
”இல்லாகியரோ, காலை மாலை!
அல்லாகியர்
யான் வாழும் நாளே!
நடுகல்
பீலி சூட்டி, நார் அரி
சிறுகலத்து
வகுப்பவும் கொள்வன் கொல்லோ
கோடுயர்
பிறங்கு மலை செழீஇய
நாடு
உடன் கொடுப்பவும் கொள்ளா தோனே” (புறம்-231)
முதலிரு அடிகள்
அதியமான் பிரிவால் ஔவையார் படும் துயரை வெளிப்படுத்துகின்றன. அதியமான் இல்லாது வாழும்
நாளும், ஆயுளும் பயனற்றவையாகும். அடுத்த இரு அடிகள் பண்டையோரின் நடுகல் வழக்கத்தை உணர்த்துகின்றன.
”நல்லமர்க்கடந்த நாணுடை மறவர்
பெயரும்
பீடும் எழுதி அதர்தொறும்
பீலிசூட்டிய
பிறங்குநிலை நடுகல்” (அகம்-67)
என்று அகநானூற்றில்
67 – ஆம் பாடலிலும் வருகிறது. நடுகல்லைத் தெய்வமாக்கி, அக்கல்லுக்குரிய வீரன் விரும்பும்
உணவை வைத்துப் படைப்பதும் பண்டைய வழக்காகும்.
அதியமான் நெடுமானஞ்சி பிறருக்குக் கொடுத்துப்
பழக்கம் உண்டேயொழிய, பிறரிடமிருந்து பெற்றுப் பழக்கம் இல்லை. நாடு கொடுத்தாலும், வேண்டாம்
என்பவன் சிறுகலத்து மதுவையா பெறுவான்? என்னும் வினாவின் மூலம், அவனது பெருந்தன்மையைப்
புலப்படுத்தி அத்தகைய நல்லோன் இல்லாது வாழும் நாள் பயனற்றதெனத் துயர மிகுதியை இப்பாடல் புலப்படுத்துகிறது.
ஒன்றுபட்டால்
உண்டு வாழ்வு
”ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை
நீங்கில்
அனைவர்க்கும் தாழ்வே”
என்று பாடினார்
பாரதியார். 20 – ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாரதமக்கள், பாரதியார் பாடலை உள்ளத்தே
ஏற்றப் போற்றி, ஒன்றுபட்டு அந்நியர் ஆட்சியுடன் போராடிச் சுதந்திரம் பெற்றனர்.
ஈராயிரம் ஆண்டுகட்டு முன்பே, ஔவையாரும்,
பிறசங்கச் சான்றோரும், ஒற்றுமையின் மேன்மையைத் தமிழ் வேந்தருக்கும், தமிழ்ச் சமுதாயத்திறகும்
உணர்த்தினர். பண்டைய மூவேந்தரும், குறுநில மன்னரும் அடிக்கடித் தம்முள் போரிட்டு வந்தனர்.
ஒரு சமயம் சேரமான் மாரி வேண்கோவும், பாண்டியன்
கானப்போர் தந்த உக்கிரப் பெருவழுதியும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும் ஓரிடத்தே
ஒன்றுபட்டிருக்கக் கண்ட ஔவையார் பெரிதும் மகிழ்ந்தார். அவர்கள் மூவரும் இன்று போல்
என்றும் ஒற்றுமையுடன் திகழவேண்டுமென ஔவையார் வாழ்த்திப் பாடியபாடல்,
”நாகத்து அன்ன பாகார் மண்டிலம்
தமவே
ஆயினும் தம்மொடு செல்லா;
வேற்றோர்
ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்,
ஏற்ற
பார்ப்பார்க்கு ஈங்கை நிறையல்
பூவும்,
பொன்னும் புனல்படச் சொரிந்து
பாசிழை
மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரரி
தேறல் மாந்தி, மகிழ்சிறந்து
இரவலர்க்கு
அருங்கலம் அருகாது வீசி
வாழ்தல்
வேண்டும் இவண் வரைந்த வைகல்
வாழ
செய்த நல்வினை யல்லது
ஆழுங்காலைப்
புனைபிறிது இல்லை
ஒன்று
புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப்
புரைய காண்தக இருந்த
கொற்ற
வெண்குடைக் கொடித்தேர் வேந்தீர்!
யானறி
அளவையோ இதுவே வானத்து
வயங்கித்
தோன்றும் மீனினும் இம்மெனப்
பரந்து
இயங்கு மாமழை உரையினும்
உயர்ந்து
மேந் தோன்றிப் பொலிகறும் நாளே!” (புறம்-367)
வினைப்பயனில்,
பண்டைய சான்றோர் அனைவருக்கும் தளராத நம்பிக்கையுண்டு ஔவையாருக்கும் உண்டு. பார்ப்பார்க்கு
உதவலும், இரவலர்க்கு ஈதலும் மறுமைக்கு உதவுவன. இவை சங்கப் புலவர்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளன.
மூவேந்தர் ஒருங்கியிருந்த காட்சிக்குப் பார்ப்பார்
வளர்க்கும் முத்தீ உவமையாக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆயுறுக்கு விண்மீன்களின் எண்ணிக்கையும்
பெருமழையின் துளிகளும் உவமையாக்கப்பட்டுள்ளன.
மூவேந்தரின் ஒற்றுமைக்குப் பாடப்பட்ட இப்பாடலின்
கருத்தைப் பிற்கால வேந்தர்களும், குறுநில மன்னர்களும் பின்பற்றாததால் ஏற்பட்ட அந்நிய
படையெடுப்புகளையும் தமிழகமும், பாரதமும் உற்ற இழிநிலையையும் உலகம் அறியும்.
நாடு
எது சிறந்த நாடு? நிலவளம், நீர்வளம், கனிவளம்
முதலிய வளங்கள் மட்டும் மிக்க நாடு சிறந்த நாடாகும். எல்லா வளங்களும் இருந்தாலும் அவற்றைப்
பயன்படுத்துவாரும், பிறருக்குப் பயன்படச் செய்வாரும் இல்லாத நாடு நாடாகுமா? கொலை, கொள்ளை
முதலியன செய்யும் தீயவர் இருக்கும் நாடு நல்ல நாடாகுமா?
”தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும்
சேர்வது நாடு” (குறள்-731)
என்பார் திருவள்ளுவர்.
குறையாத விளைச்சலை உண்டாக்கும் உழவர்களும், கல்வி, கேள்வி, ஒழுக்கங்களில் சிறந்த சான்றோரும்,
துய்ப்பதாலும், பிறர்க்கு உதவுவதாலும், குறையாத செல்வமுடைய செல்வரும் சேர்ந்து வாழ்வதே
சிறந்த நாடு என்பது தெய்வப் புலவர் கருத்தாகும்.
குறையாத விளைச்சலை யாரால் உண்டாக்க முடியும்?
அயராத உழைப்பும், அதற்கேற்ற உடல்வளமும் உடைய உழவர்களால் உழவு போற்றும் ஆண்களால் தான்
முடியும். கல்வி, கேள்வி, ஒழுக்கங்களில் சிறந்த சான்றோர் ஆண், பெண் இருபாலருள்ளும்
இருப்பர். பெண்களின் சால்பு வீட்டிற்கும், ஆண்களின் சால்பு நாட்டிற்கும் பெரும்பாலும்
பயன்படும். நாடெங்கும் திரிந்து தொண்டு ஆற்றுவதில் ஆண்களே மிக்கவர். சங்கச் சான்றோருள்ளும்
பெண்பாலரைவிட ஆண்பாலரே எண்ணிக்கையில் மிக்கவர். இன்றும் நாட்டுத் தொண்டு செய்யும் நல்லோருள்
ஆண்களே எண்ணிக்கையில் மிக்கவர்.
எனவே இயற்கை வளம் குறைந்திருந்தாலும், நிறைந்திருந்தாலும்,
ஆண்களே உழைப்புக்கு அஞ்சாதவராயும், நல்லவராயும் இருக்கும் நாடு உயர்வடையும். இயற்கைவளம்
நிறைந்திருந்தாலும், ஆண்கள் சோம்பேறிகளாகவும், தீயவர்களாகவும் இருந்தால் நாடு தாழ்வடையும்.
அடிமையும் மிடிமையும் ஓங்கிப் பாழ்படும்.
இத்தத்துவத்தை, ஈராயிரம் ஆண்டுகட்டு முன்பே,
பெண்பாற் புலவராகிய ஔவையார் நன்கு விளக்கிப் பாடியுள்ளார்.
”நாடாக ஒன்றோ, காடாக ஒன்றே
அவலாக
ஒன்றோ; மிசையாக ஒன்றோ;
எவ்வழி
நல்லவர் ஆடவர்;
அவ்வழி
நல்லை; வாழிய நிலனே” (புறம்-187)
இளமைத் திறம்
மிக்கவனை ஆடவன் என்பது இயல்பு வாழ்வில் பெறவேண்டிய தன்மைகளையெல்லாம் பெறுவதற்கேற்ற
பருவம் இளமைப் பருவமே ஆகும்.
இளமையில் சிறந்த வளமையும் இல்லை என்பது போல
அவ்வளமைக்குச் சிறப்பு நற்பண்பும், நற்செயலும் ஆகும். எனவே இளமை, நற்பண்பு, நற்செயல்
மூன்றும் நிரம்பிய ஆடவராலேயே நாடு நலமும, வளமும், புகழும் பெற்று ஓங்கும்.
கற்பனைத் திறன்
ஔவையின் கற்பனைத் திறனை பிறநூகளில் நுழையாமல்
புறநானூற்றின் வழி அறிந்து கொள்ளலாம். உவமையின் புதுமையில் இலக்கியத்தின் ஓரு யுகத்தைக்
கணக்கிடலாம். அதிலுள்ள உணர்ச்சி ஆழத்தில் ஒரு புலவரின் கற்பனைத் திறனை மதிப்பிடலாம்.
இத்திறம் ஔவையாரிடம் ஏற்றமடைந்தே உள்ளது. இவரது உவமை நலத்தைக் குறுந்தொகையிலுள்ள உவமை
நயத்திற்கு ஒப்பிடலாம்.
உவமை, பொருளைப் புலப்படுத்தல் என்பது தொல்காப்பியர்
கருத்தாகும். அதற்கு மக்கள் காணாத, கருதாத உவமைப் பொருள்களைக் கொண்டு விளக்குவதால்
உள்ள அறிவும் உருமாறிக் குழம்பிவிடும். ஔவையார் மூவேந்தரும் ஒருங்கிருந்த காட்சியை
‘மூத்தீப்புரைய’ என்கிறார். தீயின் ஆற்றலைச் சொல்லல் மரபு. முத்தீக் காட்சி தூயகாட்சி,
நற்காட்சி, இவர்கள் ஒன்றியருப்பதும் நற்காட்சியே என்று ஔவையார் உவமை அமைத்துப் பாடியுள்ளார்.
இரக்கம், அவலம் இவற்றைத் தூண்டும் பாடல்களிலும்
இவர் ஏற்றமுற்றே இருக்கிறார். அதியன் இறந்ததும் அவர் மனமார இரங்கும் ‘சிறியகட் பெறினே’
என்ற பாடல் அவலம் நிறைந்ததாகும். கபிலரையும், கம்பரையும் இவ்விடத்தே கூட்டி ஒப்பிட்டு
நோக்க வேண்டும். கலையில் அவலத்தை வெளிப்படுத்த ஆற்றல் வேண்டும். வாழ்வில் நேரில் பிறரை
அழவைத்து விடலாம். நகைக் க வைத்தல் அருமை. ஆனால் கலையில் அழவைத்தல் சிறந்த புலவரால்
மட்டுமே முடியும்.
சான்றோர் கூட்டத்தில் அதியமானைப் பற்றி பேச்செழுந்த
பொழுது, அவனோடு பல்லாண்டுகள் நெருங்கிப் பழகி, அவன் பண்புநலம் முழுவதும் உணர்ந்த ஔவையார்
அவன் பண்புகளை நினைவுக் கூர்ந்து வருந்திப் பாடிய நெடும்பாடல் கற்போர் நெஞ்சையும்,
கேட்போர் நெஞ்சையும் உருக வைக்கும் தன்மையுடையது.
அதியமான் நெடுமானஞ்சி சிறியளவு மது கிடைத்தால்
அவனைச் சூழ்ந்திருந்த எமக்குக் கொடுத்து விடுவான். நிறைய கிடைத்தால், எமக்கு முதலில்
கொடுத்து யாமருந்தி மகிழ்ந்து பாடக்கேட்டு, அவனும் அருந்தி மகிழ்வான். அத்தகைய வள்ளல்
இப்பொழுது இல்லையே. சோறு குறைவாக இருந்தாலும், நிறைய இருந்தாலும் பலரோடு பகுத்துண்ணும்
பண்பாளன் மறைந்து விட்டானே! புலால் விருந்து நடைபெறும் போதெல்லாம் எமக்கு கொடுத்து,
அம்பும் வேலும் பாய்கின்ற போர்கள் எல்லாம் அவன் நிற்பான். மனைவியின் கூந்தலைத் தடவியதால்
மலர் மணமிக்க தன் கையால், புலால் நாறும் எம் தலையையும் அன்புடன் தடவும் நல்லோனை இழந்து
விட்டோமே! என்றும்,
”அரும்தலை இரும்பாணர் அகல்மண்டைத்துளை
உரீஇ
இரப்போர் கையுளும் போகி,
புரப்போர் புண்கண் பாவை சோர
அம்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று, அவன்
அருநிறத்து
இறங்கிய வேலே
ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லொ?” (புறம்-235)
இப்பாடல் அதியனின் பகுத்துண்ணும் பண்பு, ஈகைச் சிறப்பு, வீரமாண்பு, அவன் இறப்பினால் பாதிக்கப்பட்டோர் ஔவையாரின் பேரிரக்கம், பெருந்துயரம், இரவலரின் முந்தைய நிலை, பிந்தைய நிலை ஆகிய அனைத்தையும் மிக உருக்கத்தோடு விளக்குகிறது. அதியமான் மார்பில் பாய்ந்த வேல் பாணர், இரவலர், சுற்றத்தார், புலவர் ஆகியோர் வாழ்விலெல்லாம் பாய்ந்து விட்டது என்பதை உணர்த்தும் பகுதி மிகநயமான பகுதியாகும்.
நிறைவாக,
சங்க காலத்தில் வாழ்ந்த ‘ஔவையார்’ என்னும்
நல்லிசை மெல்லியலார் நுண்மாண் நுழைபுலம் மிக்கவராயும், உயர்ந்த கருத்துக்களைச் சிறந்த
உவமை நயத்துடன் பாடும் பாத்திரம் வல்ல பாவலராகவும், சிறந்த அரசியல் தூதராகவும், வள்ளல்
அதியனின் பெறுதற்கரிய நெல்லிக்கனி கொடுத்தும் சிறப்பிக்கப் பெற்றவராகவும், அவரின் கற்பனைத்
திறத்தையும், புறநானூற்றுப் பாடல்கள் விளக்குகின்றன. இதன் மூலம் தமிழுக்கும், தமிழகத்திற்கும்
சிறந்தத் தொண்டாற்றியவர் ஔவையார் என்றும் அறியலாம்.
Comments
Post a Comment