தமிழக முத்துக்கள்
சிப்பி என்பது கடலில் வாழும் பிராணி. சிப்பிகளில்
முத்துக்கள் உண்டாயின. முத்து அதிக விலை மதிப்புள்ளது. முத்து இரத்தினங்களில் ஒன்றாகும்.
ஆறுகள் கடலிலே கலக்கிற புகர் முகத்திலே பெரும்பாலும் முத்துச் சிப்பிகள் உண்டாயின.
சிப்பிகளைப் போல் சங்குகளும் கடலில் உண்டாயின. இடம்புரிச் சங்குகளை விட வலம்புரிச்
சங்குகள் அதிக விலை பெற்றது. நீரினுள் மூழ்கிப் பயின்றவர்கள் நீருள் மூழ்கிச் சிப்பிகளையும்
சங்குகளையும் கரைக்கு மேல் கொண்டு வருவார்கள். கொண்டுவரப்பட்ட சிப்பிகளில் முத்துக்கள்
கிடைத்தன. சங்குகளை வளைகளாக அறுத்து விற்றார்கள். சங்கு வளைகளை அக்காலத்து மகளிர் கைகளில்
அணிந்தனர். வலம்புரி வளைகளைச் செல்வச் சீமாட்டிகளும் அரசிகளும் அணிந்தார்கள். செல்வரும்
அரசரும் முத்துக்களை அணிந்தார்கள்.
கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கையை அரசாண்ட
முதல் சிங்கள அரசனான விசயன், பாண்டிய அரசனுடைய மகளை மணம் செய்து முடிசூடி அரசாண்டான்.
அவன் பாண்டிய அரசனுக்கு ஆண்டுதோறும் இரண்டு நூறாயிரம் (இரண்டு இலட்சம்) பொன் மதிப்புள்ள
முத்துக்களைச் செலுத்திக் கொண்டிருந்தான் என்ற இலங்கையின் பழைய வரலாற்றைக் கூறுகிற
மகாவம்சம் என்னும் நூல் கூறுகிறது. (மகாவம்சம் 7 – ஆம் அதிகாரம் 72-73)
பழங்காலத்தில் பல இடங்களில் முத்துக்கள்
கிடைத்தன. ஆனால், அவை எல்லாவற்றையும் விடப் பாண்டிய நாட்டு முத்துக்கள் உலகப் புகழ்
பெற்றிருந்தன.
பாண்டிய நாட்டின் கிழக்குக் கரையில் இருந்தது
கொற்கைக் கடல் கீழ்க்கடல் (வங்காளக் குடாக் கடல்) கொற்கைப் பட்டினத்தின் அருகில் உள்ளே
குடைந்து புகுந்து உள் கடலாகக் குடாக் கடலாக
– அமைந்திருந்தது. கொற்கைக் கடல், குடாக் கடல் என்பதை யவனர் எழுதி வைத்துள்ள பழைய குறிப்புக்களிலிருந்து
அறிகிறோம். கொற்கைக் குடாக்கடலின் சுற்றிலும் கரைமேல் அங்காங்கே பரதவர் (மீன் பிடிப்போர்)
ஊர்கள் இருந்தன. கொற்கைப் பட்டினமும் இந்தக் குடாக் கடலில் கரைக்கு அருகில் இருந்தது.
கொற்கைக் குடாக் கடலில் முத்துச் சிப்பிகளும் இடம்புரி, வலம்புரிச் சங்குகளும் கிடைத்தன.
மேலும் கொற்கைப் பட்டினம் துறைமுகப் பட்டினமாகவும் இருந்ததால், அயல்நாட்டுக் கப்பல்கள்
வாணிகத்தின் பொருட்டு வந்தன. இக்காரணங்களால் கொற்கைப் பட்டினம் செல்வம் படைத்த நகரமாக
விளங்கிற்று. மேலும், தாமிரபரணி ஆறு அக்காலத்தில் கொற்கைப் பட்டினத்துக்கு அருகில்
கொற்கைக் குடாக் கடலில் சென்று விழுந்தது. ஆறுகள் கடலில் கலக்கிற இடத்தில் முத்துக்கள்
சிப்பிகள் அதிகமாக உண்டாயின. பாண்டி நாட்டு இளவரசர்கள் கொற்கைப் பட்டினத்தில் தங்கி
வாழ்ந்தார்கள்.
கொற்கையில் உண்டான பாண்டிநாட்டு முத்து உலகப்
புகழ் பெற்றிருந்தது. அக்காலத்தில் பாண்டிநாட்டு முத்து பேர் பெற்றிருந்தது. ரோம் தேசத்து
நாகரிக மகளிர், பாண்டி நாட்டு முத்துக்களை விரும்பி அணிந்தார்கள்.
பழங்காலத்துத் தமிழ் மகளிர் சிலம்பு என்னும்
அணியைக் காலுக்கு அணிந்தார்கள். சிலம்பு குடைச்சலாக அமைக்கப்பட்ட அணி. அதனுள்ளே பரற்கற்களை
இட்டு அதனை அணிந்த மகளிர் நடக்கும்போது ஓசையுண்டாகும். பாண்டிய அரசர்களுடைய இராணிகளாகிய
பாண்டிமா தேவியர், தாங்கள் அணிந்திருந்த சிலம்புகளின் உள்ளே முத்துக்களைப் பரற்கற்களாக
இட்டிருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
கொற்கைக் கடலிலே முத்துக்களும் சங்குகளும்
கிடைத்ததைச் சங்க இலக்கியங்களும் கூறுகின்றன. ‘முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை’
என்று நற்றிணை (23) கூறுகிறது.
”இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர் நடைப் புரவி கால்வடுத் தபுக்கும்
நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை” (அகம்,130)
முத்துக் குளிக்கும் போதும் சங்கு குளிக்கும்போதும் சங்கை ஊதி முழங்கித் தெரிவித்தார்கள்
என்பதைச் சேந்தன் கண்ணனார் கூறுகிறார்.
”இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி
வலம்புரி
மூழ்கிய வான்திமில் பரதவர்”
ஒலிதலைப்
பணிலம் ஆர்ப்பக் கல்லெனக்
கலிகெழு
கொற்கை எதிர்கொள இழிதரும்
குலவு
மணல் நெடுங்கோட் டாங்கண்
உவக்காண
தோன்றுமெஞ் சிறுநல்லூரே” (அகம், 350)
உலகப் புகழ் பெற்ற பாண்டிநாட்டு முத்துக்களைத்
தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் புகழ்ந்து பேசுகின்றன.
ரோமாபுரியிலிருந்தும் எகிப்து தேசத்திலிருந்தும்
வாணிகத்தின் பொருட்டுக் கப்பலில் வந்த யவன மாலுமிகள், மரக்கலங்களில் பொன்னைக் கொண்டு
வந்து தமிழ் நாட்டிலிருந்து முக்கியமாக மூன்று பொருள்களை வாங்கிக் கொண்டு போனார்கள்.
அவர்கள் வாங்கிக் கொண்டு போன மூன்று பொருள்கள் சேரநாட்டு மிளகும், கொங்கு நாட்டு நீலக்
கற்களும், பாண்டிநாட்டு முத்துக்களும் ஆகும்.
பிற்காலத்தில் கி.பி பத்தாம் நூற்றாண்டில்
பெயர் பெற்ற கொற்கைக் குடாக் கடல் மணல் தூர்ந்து மறைந்து போயிற்று. தாமிரபரணி ஆறு பாய்ந்ததனால்
அதன் வழியாக வந்த மண்ணும், கடல் அலைகள் கொண்டு வந்து தூர்த்த மணலும் சேர்ந்து, சிறிது
சிறிதாக நாளா வட்டத்தில் கொற்கைக் குடாக் கடல் மண்கொழித்து மறைந்த போயிற்று. ஆகவே,
பெயர் பெற்ற துறைமுகமாக இருந்த கொற்கைப் பட்டினம், பிற்காலத்தில் பழைய சிறப்பு இல்லாமல்
இப்போது குக்கிராம்மாகக் காட்சியளிக்கிறது. கொற்கைப் பட்டினத்திலிருந்து கடல் இப்போது
ஐந்து மைல் தொலைவில் அகன்று போயிருக்கிறது. எனவே கொற்கைக் குடாக் கடல் அக்காலத்தில்
நிலத்தினுள் ஐந்து மைல் உள் புகுந்திருந்தது என்பது தெரிகிறது.
இக்காலத்தில் மலையாள நாடாக மாறிப் போன சேர
நாடு பண்டைக் காலத்தில் தமிழ்நாடாக இருந்தது. தமிழ்நாடாக இருந்த சேர நாட்டைச் சேரமன்னர்கள்
அரசாண்டார்கள். சேர நாட்டின் பழைய வரலாற்றுக் குறிப்புகள், பழைய தமிழ் நூல்களில் காணப்படுகின்றன.
பாண்டிய நாட்டுக் கொற்கைக் கடலிலே உண்டான
முத்துக்கள் உலகப் புகழ் பெற்றவை. தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் பாண்டிநாட்டு முத்துக்களைப்
புகழ்ந்து பேசுகின்றன. பாரத தேசத்திலும் ரோமாபுரியிலும் பண்டைய காலத்தில் பாண்டி நாட்டு
முத்துக்கள் புகழ் பெற்றிருந்தன. ரோமாபுரிச் சீமாட்டிகள் தங்கள் நாட்டுப் பொன்னைக்
கொடுத்துத் தமிழ்நாட்டு முத்துக்களைப் பெற்றுக் கொண்டார்கள். மேல்நாட்டு யவனக் கப்பல்கள்
தமிழ்நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து, ஏனைய பொருள்களோடு முத்துக்களையும் எடுத்துக்
கொண்டு போயின.
பாண்டிய நாட்டு முத்துக்கள் உண்டான அதே காலத்தில்,
மேற்குக் கடற்கரையிலே, சேர நாட்டிலும் முத்துக்கள் உண்டாயின. பாண்டிய நாட்டு முத்துக்களைப்
போல், சேர நாட்டு முத்துக்களும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிறப்பும் மதிப்பும்
பெற்றிருந்தன. இதற்குத் தமிழ் நூலில் மட்டுமல்லாமல் வடமொழி நூலிலும் சான்று கிடைக்கின்றது.
பதிற்றுப் பத்து நூலில் சேர அரசர்களைப் பற்றியும்,
முத்துக்கள் பற்றிய செய்தியும் கூறப்படுகிறது. பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தில் கபிலர்,
செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் சேர மன்னனைப் புகழ் பாடுகிறார். அதில், சேரநாட்டுப்
பந்தர் என்னும் ஊர் முத்துகளுக்கும், கொடுமணல் என்னும் ஊர் பொன் நகைகளுக்கும் பேர்
பெற்றிருந்தன என்று கூறுகிறார்.
”கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப்
பெயரிய பேரிசை மூதூர்க்
கடனறி மரபில் கைவல் பாண!
தெண்கடல் முத்த மொடுநன்கலம் பெறுகுவை”
என்று (7 –
ஆம் பத்து, 7 – ஆம் செய்யுள்) பாடுகிறார். சங்க காலத்தில் பந்தர் என்னும் ஊர் சேரநாட்டுக்
கடற்கரையில் இருந்ததென்பதும் அவ்வூர்க் கடலில் முத்துக் குளிக்கபட்டதென்பதும் தெரிகின்றன.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்தவராகக்
கருதப்படுகிற கௌடல்லியர் தமது அர்த்தசாஸ்த்திரத்திலே, சேர நாட்டில் முத்து உண்டானதைக்
கூறியுள்ளார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்தவராகக் கருதப்படுகிற
கபிலரும், அரசில் கிழாரும் சேரநாட்டில் பந்தர் என்னும் பட்டினத்தில் முத்துக் குளிக்கும்
இடம் இருந்ததைப் பதிற்றுப்பத்தில் கூறியுள்ளனர். இவற்றிலிருந்து, இன்றைக்கு இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே சேர நாட்டில் முத்துச் சலாபம் இருந்த செய்தி தெரிகிறது.
சேரநாட்டின் தலைநகரமான பழைய வஞ்சி மூதூர்
(கருவூர்) இப்போது கொடுங்கலூர் (ஆங்கிலத்தில் Granganur) என்னும் பெயருடன் ஒரு சிறு
கிராமமாகக் காட்சியளிக்கிறது. பழைய துறைமுகமாகிய முசிறி மறைந்து போயிற்று. பிற்காலத்தில்
கடற்கரை ஓரமாகப் புதிதாக அமைந்த நீர்நிலைப் பகுதியில் இப்போது கொச்சித் துறைமுகம் காட்சியளிக்கிறது.
பழையன கழிந்து புதியன புகுந்தன. ஆனால், பழைய, தமிழ் இலக்கியங்கள் பழைய சிறப்புக்களை
நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த பழைய செய்திகளையெல்லாம் அண்மைக்காலத்தில் தோன்றிய
மலையாள இலக்கியங்களில் காண முடியாது.
பார்வை நூல்
1.
வேங்கடசாமி. மயிலை.சீனி - நுண்கலைகள், நாம் தமிழர்
பதிப்பகம், சென்னை –
600 005.
Comments
Post a Comment