பழங்காலத்து எழுதுகருவிகள்
இந்த
காலத்தில் உலகம் முழுவதும் காகிதத் தாளும் பேனாவும் எழுதுகருவிகளாகப் பயன்பட்டு வருகின்றன. இவை எழுத்து
வேலைக்குப் பெரிதும் வாய்ப்பாகவும் எளிதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால், காகிதத்தாள்
வருவதற்கு முன்பு, பழங்காலத்தில் இதுபோல எழுத்து கருவிகள் இல்லை. பழங்காலத்தில்
உலக மக்கள் எவ்விதமான எழுதுகருவிகள் பயன்படுத்தி வந்தார்கள் என்பதைக் காண்போம்.
களிமண் சுவடிகள்
சிறிய
ஆசியா தேசத்தில் யூப்ரெடிஸ், டைகிரிஸ் ஆறுகள் பாய்கிற இடத்தில் இருந்த கால்டியா, ஸைரியா நாட்டு
மக்கள், ஆதிகாலத்தில்
களிமண்ணை எழுது கருவியாகப் பயன்படுத்தினார்கள். களிமண்ணைப் பிசைந்து சிறு சிறு பலகைகளைப்போல் அமைத்து, அப்பலகையின்
ஈரம் உலர வைத்துப் புத்தகமாக உப்யோகிப்பார்கள். அவர்கள் எழுதிய எழுத்துக்களுக்குக் கூனிபார்ம் எழுத்து என்று
பெயர் கூறுவர். அவர்கள் எழுதிய
களிமண் சுவடிகளைப் புத்தக சாலையில் வைத்துப் போற்றினார்கள். சமீப காலத்தில்
பூமியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு உள்ளன. அந்த களிமண் சுவடிகள் மேல்நாட்டுக் காட்சி சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.
பேபரைஸ் புத்தகம்
பண்டைய காலத்தில் நாகரிகம் பெற்று வாழ்ந்த
மக்கள் எகிப்தியர்கள். அவர்கள் எழுது கருவியாகப் பயன்படுத்திய பொருள் பேபரைஸ் ஆகும்.
பேபரைஸ் என்னும் இச்சொல் இப்போதும் ‘பேபர்’ என்று காகிதத் தாளுக்கு வழங்கப்படுகிறது.
ஆனால் எகிப்தியர் கையாண்ட பேபரைஸ் வேறு. இப்போதைய
பேபர் வேறு. பேபரைஸ் என்பது எகிப்து தேசத்துச் சதுப்பு நிலங்களிலும், தண்ணீர்த் தேக்கமுள்ள
இடங்களிலும் வளர்ந்த ஒருவகைக் கோரைச் செடியின் பெயர். இந்தக் கோரை, பத்து அல்லது பதினைந்து
அடி உயரம் வளரும். இக்கோரைத் தாள்களை அறுத்து வந்து, பட்டையை உரித்து ஒரே அளவாக நறுக்கிப்
பதப்படுத்தி, வெயிலில் வைத்து உலர்த்துவார்கள். காகிதம் போன்று இருந்த இக்கருவிக்கும்
பேபரைஸ் என்னும் அக்கோரையின் பெயரே வாய்த்தது.
இவ்வாறு பதப்படுத்தப்பட்ட பேரைஸ் தாள்களை
ஒன்றோடொன்று ஒட்டிச் சேர்த்து, நீண்ட சுருளையாகச் செய்வார்கள். பெரிய சுருளில் 20 தாள்கள்
ஒட்டப்பட்டிருக்கும். பேபரைஸ் தாள்கள் பற்பல அளவுகளில் அக்காலத்துக் கடைகளில் விற்கப்பட்டன.
அவை இரண்டு அங்குல அகலம் முதலாகப் பதினைந்து அங்குல அகலம் வரையில் இருந்தன.
இந்தப் பேபரைஸ் தாள்களில் எழுதுவதற்கு ஒரு
வகைப் பேனா பயன்பட்டது. இப்பேனா நாணற் செடிகளின் தண்டினால் செய்யப்பட்டது. நாணற் குழாய்களைச்
சுமார் 6 அங்குலம் நீளமுள்ள துண்டுகளாக வெட்டி, அதன் ஒரு முனையைக் கூர்மையாகச் சீவிக்
கூரின் நடுவைச் சிறிது பிளந்து விட்டால் அது நேர்த்தியான பேனாவாக அமையும். இந்தப் பேனாக்களினால்
கறுத்த மை கொண்டு பேபரைஸ் தாள்களில் பண்டைய எகிப்தியர் எழுத்து வேலைகளைச் செய்து வந்தார்கள்.
இலக்கியம், இலக்கணம், காவியம், கணக்கு கடிதம் முதலிய எல்லாம் பேபரைஸ் தாள்களில் தான்
எழுதப்பட்டன.
தோல் புத்தகம்
எகிப்து
நாடு வெப்பமுள்ள நாடு. அதை விட வெப்பம் குறைந்த கிரேக்கம், இத்தாலி முதலிய
தேசங்களில் பேபரைஸ் விரைவில் கெட்டுப் போனபடியால், அந்நாட்டார் வேறு எழுது கருவிகளைத் தேடலாயினர். மிருகங்களின்
தோல்கள், பேபரைஸிக்குப்
பதிலாக உபயோகப்படுத்தப்பட்டன. எகிப்து தவிர ஏனைய மத்தியதரைக் கடல் ஓரத்திலுள்ள நாட்கள்
தொன்று தொட்டு தோலை எழுது கருவியாக வழங்கி வந்தன. பிறகு பேபரைஸ் உபயோகப்படுத்தப்பட்டது. பேபரைஸ் விரைவில் கெட்டுப் போவதைக் கண்ட பிறகு, இவர்கள்
தோலையே மீண்டும் எழுது கருவியாகப் பயன்படுத்தினர்.
வெள்ளாடு அல்லது செம்மறியாட்டின் தோலை நன்கு
பதப்படுத்தி எழுது கருவியாகப் பயன்படுத்தினார்கள். இதற்கு மெம்ரெனா (Membrana) என்று
பெயர் வழங்கினர். ஆட்டுத் தோலைச் சுண்ணாம்பு நீரில் ஊற வைத்து, மயிர்களைக் களைந்து
விட்டு, மறுபுறத்தில் உள்ள சதைப்பற்றுகளையும் நீக்கி மரச்சட்டத்தில் மேல் உலர வைத்து,
சீமைச் சுண்ணத்தினாலும் செருவகைக் கல்லினாலும் தேய்த்து மெருகு ஏறச் செய்வார்கள். இது
நேர்த்தியான எழுது கருவியாகவும், இருபுறத்திலும் எழுதக் கூடியதாகவும் இருந்தது. இதை
விட நேர்த்தியான எழுதுகருவி, கன்றுக்குட்டியின் தோலினால் செய்யப்பட்டது. இது வெல்லம்
என்று பெயர் பெற்றது. இது ஆட்டுத் தோலினால் செய்யப்பட்ட எழுது கருவியை விட மிக நேர்த்தியாகவும்,
அழகும் மெருகும் உள்ளதாகவும் இருந்தது. கன்றுக்குட்டித் தோல் என்னும் பொருளுடைய ‘வெல்லம்’
என்னும் லத்தீன் மொழிச்சொல் பிறு ஏனைய மிருகங்களின் தோல்களினால் செய்யப்பட்ட எழுது
கருவிகளுக்கும் வழங்கப்பட்டது.
பட்டும் மூங்கிலும்
ஆதிகாலத்தில் சீனதேசத்தார் மூங்கிற் பட்டைகளின்
மேலே எழுதி வந்தனர். பிறகு பட்டுத்துணி நெய்யும் தொழில் சீன தேசத்திலே தோன்றியது. அப்பொழுது
அவர்கள் பட்டுத் துணிகளை எழுதுகருவியாகக் கொண்டனர். துகிலிகையினால் மையைத் தொட்டு ஓவியம்
எழுதுவது போல, அவர்கள் பட்டுத் துணியிலும் மூங்கிற் பட்டையிலும் எழுதி வந்தார்கள்.
பிறகு காகிதம் செய்யும் முறையையும் அவர்களே கண்டுபிடித்தார்கள். அப்போது காகிதத்தில்
எழுதும் பழக்கம் ஏற்பட்டது. அதனால் காகித்த் தொழிற்சாலைகள் சீன நாட்டில் ஏற்பட்டன.
காகிதத்தில் அச்சடிக்கும் முறையையும் சீனர்களே
கண்டு பிடித்தார்கள். ஆனால், தனித்தனி அச்செழுத்துக்களை அவர்கள் உண்டாக்கவில்லை. புத்தகத்தின்
ஒவ்வொரு பக்கத்தையும் மரப்பலகையில் எழுத்துக்களைச் செதுக்கி அச்சிட்டார்கள். ஆகவே,
ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு மரப்பலகை எழுத்துக்கள் செதுக்கி அச்சிடப்பட்டன.
ஓலைச்சுவடிகள்
எகிப்தியர், கிரேக்கர், ரோமர், யூதர் முதலிய
இனத்தார் பண்டைக் காலத்தில் பேபரைஸ் தாளையும் விலங்குகளின் தோல்களையும் எழுது கருவியாக
வழங்கி வந்த காலத்தில், நமது நாட்டார் பனையோலையினால் செய்யப்பட்ட ஓலைச் சுவடிகளில்
நூல்களை எழுதி வந்தார்கள். பனையோலைகளை ஒரே அளவாக நறுக்கி, ஒன்றாகச் சேர்த்து, இரண்டு
மரச்சட்டங்களை இருபுறங்களிலும் நீண்ட பக்கமாக அமைத்து, அவைகளின் ஊடே இரண்டு துளைகளை
அமைத்துக் கயிறு கொண்டு சுற்றிக் கட்டிய சுவடிகள் தாம் ஓலைச் சுவடிகள். இப்பனையோலை
ஏடுகளில் இரும்பினால் அமைந்த எழுத்தாணிகளினால் வரைவார்கள். இத்தகைய ஓலைச்சுவடிகளை இந்தியா,
பர்மா, இலங்கை முதலிய கீழை நாடுகளில் முற்காலத்தில் வழங்கி வந்தன. நமது நாட்டு ஓலைச்
சுவடிகளில் முற்றுப்புள்ளி முதலிய குறியீடுகள் அமைக்கப்படவில்லை.
கற்பாறையும்
செப்பேடும்
மலைப்பாறைகளிலும் கருங்கற் பலகைகளிலும் பழங்காலத்து
அரசர் தங்களுடைய ஆணைகளையும் வெற்றிச் சிறப்புக்களையும் எழுதி வைத்தார்கள். அதுபோல,
செப்பேடுகளிலும் சாசனங்களை எழுதி வைத்தார்கள். பாறைகளையும் செப்பேடுகளையும் பொது மக்கள்
எழுது கருவிகளாகப் பயன்படுத்தவில்லை. அரசர்களும், சிற்றரசர்களும் மட்டுமே இவற்றைப்
பயன்படுத்தினார்கள். பாறைக் கற்களிலும் செப்பேடுகளிலும் எழுதி வைத்தார்கள். அந்த எழுத்துக்கள்
அழிந்து மறைந்து போகாமல் நிலைபெற்று இருக்கின்றன.
இயந்திரக் காகிதம்
காகிதப் பட்டறையில் கையினால் கடதாசியை அக்காலத்தில்
செய்து வந்தார்கள். ஆகவே அக் கடதாசிகள் தடித்தன வாயும் முரடாகவும் இருந்தன. பிறகு
19 – ம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்பு, பிரான்ஸ் தேசத்தில் மெஷின் லூயிஸ் நிக்கோலஸ்
ராபர்ட்டால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு 1806 – இல் ஹென்றி
மற்றும் சீலி ஃபோர்ட்ரைனியர் ஆகியோரால் பிரிட்டனில் காப்புரிமை பெற்றது.
காகிதத் தொழில் செம்மைப்படுத்தப்பட்டது போல,
நாணற் குழாய் பேனாக்களுக்குப் பதில் குவில்பேனா என்னும் இறகுப் பேனா வந்து, அதற்கு
பின் நிப்பு உள்ள முட்பேனா உண்டாகி, இப்போது பௌண்டன் பேனாவும், வழக்காற்றில் இருந்து
வந்தது. நாம் இப்போது சாதாரணமாக வழங்கி வருகிற பேபர், பேனாக்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன் இருந்த மக்கள் காண்பார்களானால் எவ்வளவு வியப்பும், மகிழ்ச்சியும் அடைவார்கள்.
பார்வை நூல்
1.
வேங்கடசாமி.
மயிலை.சீனி - நுண்கலைகள், நாம் தமிழர் பதிப்பகம், சென்னை – 600 005.
Comments
Post a Comment