அறம் செய விரும்பு!
மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அறிவையும் ஆற்றலையும் பெற்றிருப்பதில்லை.
ஊனமில்லாமல் உலகில் அனைவரும் பிறப்பதில்லை. பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் சிறந்த
கல்வியும், வாழ்க்கைச் சுகங்களும் இயல்பாக வந்து வாய்ப்பதுமில்லை. திறமையும், வாய்ப்பும்
நிறைந்தவர்களிடம் செல்வம் சேர்கிறது. இரண்டும் இல்லாத மனிதர்களோடு வறுமை வாழ்கிறது.
இருப்பவன் இல்லாதவனைப் பராமரிக்க வேண்டும்.
கற்றவன் கல்லாதவனின் கண் திறக்க வேண்டும். தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்கு மிஞ்சியதைத்
தானே மனம் உவந்து இல்லாதவனுக்குத் தரவேண்டும். சமூகத்தின் மேடு பள்ளங்களைச் சமன்படுத்த
மதங்கள் கண்டுபிடித்த மனிதநெறிதான் தானம். இதுதான் மனிதநேயத்தின் நல் அடையாளம்.
கைநீட்டி யாசிப்பவனுக்குப் போடுவது பிச்சை.
கேட்காதபோது ஒருவன் தேவையறிந்து ஓடிச் சென்று உதவுவது தானம். பிச்சை சமூகத்தின் சாபம்.
தானம் மனிதர் வழங்கும் வரம்.
`Neither a borrower not a lender be’ என்பது
ஷேக்ஸ்பியரின் வாசகம். ‘கடன் வாங்காதே’ – கடன் கொடுக்காதே’ என்பதற்கும் மேல் இதில்
சிந்திக்க இடமுண்டு. திரும்பப் பெறும் நோக்கில் தற்காலிமாகத் தருபவனுக்கும், பெறுபவனுக்கும்
ஆங்கிலத்தில் `lender’ என்றும், `borrower’ என்றும் பெயர். தற்காலிகமாகத் தருவதும்,
பெறுவதும் தானமாகாது. எதையும் தற்காலிமாகத் தராதே – பெறாதே என்று ஷேக்ஸ்பியர் ஏன் சொல்லியிருக்கக்
கூடாது?
”வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு
முரசுடைச் செல்வம் – தழங்கருவி
வேய்முற்றி
முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
நாய் பெற்ற தெங்கம் பழம்”
என்கிறது பழமொழி
நானூறு.
ஒருவனிடம் செல்வம் இருந்தால் அதை அடுத்தவருக்கு
வழங்க வேண்டும். தானும் அனுபவிக்க வேண்டும். இரண்டும் செய்யாமல் பெட்டியில் வைத்துப்
பூட்டி மகிழ்ந்தால், அச்செல்வம் தானும் தின்னவியலாமல், பிறருக்கு தர விரும்பாமல் நாய்
உருட்டிப் பார்க்கும் தேங்காய்க்குச் சமம். இந்தச் சிந்தனை எத்தனை செல்வந்தரிடம் போய்
சேர்ந்திருக்கிறது? இருப்பவன் இல்லாதவனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதானே காந்தியடிகள்
தர்மகர்த்தா கொள்கை. இதை எத்தனைக் காந்தியச் செல்வர்கள் கடைப்பிடிக்கின்றனர்?
மேலும், திருமூலர்,
”படமாடக் கோவில் பரமர்க் கொன்றீயின்
நடமாடக்
கோயில் நம்பர்க்கங்கு ஆகா
நடமாடக்
கோயில் நம்பர்க் கொன்றீயின்
படமாடக் கோயில் பரமரக்கங் காமே!”
வாரியார் சுவாமிகள்
பாமரர்க்கும் புரிகிறாற் போல் இதற்கு எளிய விளக்கம் தருகிறார். ‘இறைவனுக்கு நிவேதித்த
சர்க்கரைப் பொங்கல் ஏழை வயிற்றுக்கு வராது. ஏழைக்கிட்ட சர்க்கரைப் பொங்கல் ஏழை உள்ளத்தில்
இருக்கும் இறைவனுக்கும் சேரும். தபாலைத் தலைமைத் தபால் நிலையத்தில் சேர்த்தால் தெருவிலுள்ள
தபால் பெட்டிக்கு வராது. ஆனால் தெருவிலுள்ள தபால் பெட்டியில் இட்டால் அது தலைமை நிலையத்தில்
சேரும்”
நடமாடும் மனிதக் கோயில்களின் துயர் துடைக்கச்
சொல்கிறது திருமந்திரம்.
பார்வை நூல்
1.
மனமும் மனிதனும்
- தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், தியாகராய நகர், 5 – ஆம் பதிப்பு 2014, சென்னை
– 600 017.
Comments
Post a Comment