அறிவும் படிப்பும் – பெரியார்!
அக்கிராசனர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!
கல்வி என்பதைப் பற்றி நமது மக்கள் பெரும்பாலும்
புத்தகப் படிப்பையும், குருட்டு உருப்போட்டுத் தேர்வுகளில் தேறிவிடுவதையும் கல்வி என்று
கருதிக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, ஆங்கிலத்தில் பி.ஏ., எம்.ஏ., படித்துப் பட்டம்
பெற்றவர்களையும் தமிழ்ச் சங்கத்தில் படித்து வித்துவான் பரீட்சை பாஸ் பண்ணி பட்டம்
பெற்றவர்களையும் கல்வியாளர் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் ஏதோ ஒரு வித்தையில்,
அதாவது குருட்டு உருப்போட்டு ஒப்புவிக்கக் கூடிய ஒரு வித்தை அல்லது ஒரு சாதனத்தில்
தேர்ந்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது அலமாரியில் உள்ள புத்தகங்களைப் போல்,
இவர்களும் தங்கள் மனத்தில் பல விஷயங்களைப் பதிய வைத்திருக்கும் ‘ஒரு நகரும் அலமாரி’
என்றுதான் சொல்ல வேண்டும்.
படிப்பு வேறு, அறிவு வேறு என்பதை ஞாபகத்தில்
பத்திரமாய் வைத்துக் கொள்ளுங்கள்.
நமது தமிழ்ப் பண்டிதர்கள் நிலையே அப்படிக்
கூட முடியவதில்லை. அவர்களுக்கு உள்ள படிப்பு முட்டாளாவதற்கு முதல் தர மருந்து போன்றது.
புராணங்களைத் தவிர, அவர்களுக்கு வேறு படிப்பே கிடையாது. இலக்கணம், நீதி நூல் என்று
சிலவற்றைப் படிப்பார்கள். ஆனால், அவைகளும் ஆரம்பமும் மூடத்தனமாகவே இருக்கும். மத்திய
பாகமோ உலக வாழ்க்கைக்குப் பயன்படாததாகவும் அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு
ஆதாரமானதாகவும் இருக்கும். ஆங்கிலம் படித்த பட்டதாரிகள் என்பவர்களுக்காகவது அறிவாளர்களாவதற்கு
ஏற்ற பல நூல்கள் உண்டு. தமிழ்ப் பட்டதாரிகளுக்கோ மடையர்கள் ஆவதற்கேற்ற நூல்களே உண்டு.
அதாவது அவை பெரிதும் வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் என்று சிலவும் கூட்டி இவைகளை
உருப்போட்டுப் பரீட்சை கொடுத்தவர்களாவார்கள். ஆகவே ஆங்கிலப் பட்டதாரிகளிடம் எதிர்பார்க்கும்,
அதாவது அறிவியல் புத்தகங்கள் படிக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்த அளவுத் தமிழ் பட்டம்
பெற்ற பண்டிதர்கள் என்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே, மனிதன் முழுமூடனாக வேண்டுமானால்
புராணங்களையும் இதிகாசங்களையும் படித்துப் பண்டிதனாக வேண்டியதுதான் என்பதற்கிணங்கத்தான்
நமது படிப்பும், அறிவும் இருக்கின்றது. தமிழ்ப் பண்டிதர்கள் என்பவர்களுடைய யோக்கியதையை
நான் பார்த்த பிறகு மக்களை அறிவுக்காக – தமிழைப் படி என்று சொல்லுவது மிக்க மோசமான
காரியம் என்றே எனக்குத் தோன்றுகின்றது. ஏனென்றால், அவர்களுக்குப் பொது அறிவு ஏற்படும்படியான
படிப்புக்குத் தமிழில் ஆதாரங்களே இல்லை என்பதுதான். வடமொழி ஆதாரங்களே தமிழில் மொழிபெயர்க்கப்
பட்டுப் பல வேஷங்களுடன் திகழ்கின்றனவேயன்றி, மக்களுக்கு அறிவும் சுயமரியாதை உணர்ச்சியும்,
உண்டாகும்படியானவைகள் அல்ல. ஆகவே மக்களுக்கு அறிவு வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால், உலக
இயலை அறிய சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வேண்டும்.
(கொடைக்கானலில், 20.07.1930 ம் நாள்
காஸ்மாபாலிட்டன்
வாசகசாலைத் திறப்புவிழாவில்
சொற்பொழிவு,
குடி அரசு 27.7.1930)
தலைவரவர்களே! தோழர்களே! தாய்மார்களே!
ஒருவன் எவ்வளவோ படித்திருக்கலாம். பட்டம்
படிப்பு எல்லாம் படித்திருக்கலாம். பலே அறிஞன், புத்திசாலி என்று பேசப்படலாம். எல்லாம்
அனுபவப் படிப்பை விட மட்டரக மானவைகளே. வக்கீல் படிப்புப் படித்துவிட்டால், அறிவாளி
என்று கூறமுடியாது. வக்கீலுக்கு எதை எதை எப்படி எப்படிப் புளுகினால் கேஸ் ஜெயிக்கும்
என்பதில் மட்டும் தான் சாமர்த்தியம் இருக்கலாம். ஒரு வழக்கு பொய்யானது என்று தனக்கே
தெரியும். அந்த வழக்கை மெய் என்று தீர்ப்புக் கூறும்படி என்னென்ன தில்லுமுல்லுகள்.
புரட்டுகள் செய்ய வேண்டுயோ அவைகளை மட்டும் கற்றிருந்தால் போதும். பொய் கூறுவதைத் துணிந்து
ஓங்கி அடித்து உண்மையைப் போல் கூறுகிற வக்கீல்கள் தாம் பெரிய வழக்கறிஞர்கள் என்று போற்றப்படுகிறார்கள்.
ஆதலால், வக்கீல்களும் அறிவாளிகள் என்று கூறுவதற்கில்லை. அதேபோல், பள்ளிக்கூடங்களிலும்
கலாசாலைகளிலும் வாத்தியார்களும் புரொபசர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அறிவும்- ஏட்டுக்குள்
இருப்பதை மட்டும் தெரிந்திருப்பார்கள். உலக விஷயம் தெரியாது! உலக அறிவே முக்கியமானது.
உலகத்துடன் பழகியவர்களுக்குத்தான் பொது அறிவு
வளர முடியும்.
(சிதம்பரம்
அண்ணாமலை நகரில், 19.02.1956ல்
சொற்பொழிவு, ‘விடுதலை’ 10.03.1956)
Comments
Post a Comment