Skip to main content

‘கவிஞாயிறு’ தாரா பாரதி

 

                                     

         ‘கவிஞாயிறு தாரா பாரதி’ அவர்களின் பிறந்த தினம் (26.02.2025) இன்று அவரைப் பற்றி பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

      கவிஞர் தாரா பாரதி பிறந்த ஊர் மற்றும் பெற்றோர்கள்

கவிஞர் தாராபாரதி அவர்கள் 1947- ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 26- ந் தேதி  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குவளை என்ற சிற்றூரில் பிறந்தார்.

  பெற்றோர் - துரைசாமி - புஷ்பம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

கவிஞர் தாரா பாரதியின் இளமைப் பருவம் மற்றும் பள்ளிப்படிப்பு

·  தொடக்கக் கல்வியை குவளையில் பயின்றார், உயர் கல்வியை கீழ்க்கொடுங்காலூரில் நிறைவு செய்தார்.

·        இளங்கலை வரலாறு, முதுகலையில் தமிழிலும் பட்டம் பெற்றார்.

·        ஆசிரியர் பயிற்சியினை ராணிப்பேட்டையிலும், சைதாப்பேட்டை கல்வியியல் கல்லூரியிலும் பயின்றார்.

·        மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்சியை மைசூரில் பெற்றார்.

·        அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், கூடுவாஞ்சேரி போன்றவற்றில் 34 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

திருமண வாழ்க்கை மற்றும் பிள்ளைகள்.

திருமண வாழ்க்கை - 1974-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 22- ந் தேதி சந்தானலட்சுமியை மணம் செய்துகொண்டார்.

 மகன்கள்: விவேகானந்தன், லோகுதுரை.

 மகள்: ஆண்டாள்.

தாரா பாரதி எவ்வாறு தமிழ் இலக்கியத் துறையில் பங்கு பெற்றது.

·  இளம் வயது முதல் கவிதையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். குறிப்பாக பாரதியின் கவிதைகள் இவரை வெகுவாக ஈர்த்தன. தன் பெயரில் உள்ள ராதாஎன்பதைத் தாராஎன்று மாற்றியும், பாரதியின் மீது கொண்ட பற்றால் அப்பெயரை இணைத்தும் தாராபாரதிஎன்ற பெயரில் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

·    இவரது சகோதரர்களான துரை. சீனிவாசன் (கவிஞர் மலர்மகன்), புலவர் துரை. மாதவன் இருவரும் இவரது கவிதைகளை வாசித்து மேலும் எழுத தூண்டு கோலாக இருந்தனர்.

·     இலக்கிய வீதிஅமைப்பு இவரது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தது. தொடர்ந்து பல கவிதைகளை எழுதினார். தாராபாரதியின் அனைத்துக் கவிதைகளையும் தொகுத்து 'கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்' என்ற பெயரில்  வெளியிட்டுள்ளது.

கல்விப் பணிகள்

·        தாம் பணியாற்றிய பள்ளிகளில் மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தி உழைத்தார். மாற்றுத் திறனாளி மாணவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தினார். அவர்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

·    மாணவர்கள், தங்களது பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் பல போட்டிகளை அறிமுகப்படுத்தினார்.

· புதிய பாடத்திட்டத்தின் உயர்மட்டக் குழுவில், ஆசிரியர் கையேடுகள் தயாரிப்பில், வினா வங்கி உருவாக்கத்தில் பங்கு பெற்றார்.

·    சென்னைத் தொலைக்காட்சியின் கல்வி ஒலிபரப்புகள், எல்லோர்க்கும் கல்வி, சான்றோர் சிந்தனை, கவிதைத்துளி, கவியரங்கங்கள், கவிதைப் பட்டிமன்றம், வள்ளுவர் காட்டும் வழி, காண்போம் கற்போம், வாழ்க்கைக் கல்வி எனப் பல சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.

தாரா பாரதி அவர்கள் பெற்ற விருதுகள் மற்றும் சாதனைகள்.

· இவரது பணிகளைப் பாராட்டி சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன்விருதைத் தமிழக அரசு அளித்துள்ளது.

·        இவரது நினைவாக தாராபாரதி ஹைக்கூ விருது' ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

·        தமிழக அரசு இவரைப் பற்றிய கட்டுரைகளை பள்ளி மாணவர்களின் பாட நூலில் இடம் பெறச் செய்துள்ளது. இவரது கவிதைகள் சிலவும் பாட நூலில் இடம் பெற்றுள்ளன.

·        அந்தத் தலைப்பாகைக் கவிஞனின் கவிதைகளைப்  படித்துக் கவிஞனானவன் நான்என்று தன்னைப் பற்றிக் கூறிகொண்டவர் தாராபாரதி. இலக்கிய நயமிக்க கவிதைகளையும், இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் பல கவிதைகளையும் படைத்தவர்.

1.  தாரா பாரதியைப் பற்றி பிற அறிஞர்கள் பாராட்டிய விதம்.

தாராபாரதியின் கவிதைகளை உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் கவிதையின் மூலம் பாராட்டியுள்ளார்.

தலைசிறந்த கவிஞரிவர் என்ப தாலும்
சாதிக்கும் திறனுடையார் என்ப தாலும்
நிலைத்த புகழ் இக்கவிஞர் பெறுவார்; வெள்ளி
நிலாஉலகும் பாராட்டும் எதிர்கா லத்தில்

· கவிஞர் ஈரோடு தமிழன்பன் “கவித்துவ வல்லமையும், கருத்துத் தெளிவும் நம்பிக்கை தரும் அளவிற்குத் தாராபாரதியிடம் விரவியுள்ளனஎன்று மதிப்பிட்டிருக்கிறார்.

·  இலக்கிய உலகில் இனியவன்எளிய சொற்களால் எழுச்சியூட்டும் இவரது கவிதை வரிகளில் - மொழி வளர்ச்சிக்கும், சமுதாய மேம்பாட்டிற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும், உலக சமாதானத்திற்குமான உரத்த சிந்தனைகள் தெரிகின்றனஎன்று  குறிப்பிட்டுள்ளார்.

தாரா பாரதியின் நூல்கள்.

கவிதை நூல்கள் -8

·        புதிய விடியல்கள்

·        இது எங்கள் கிழக்கு

·        திண்ணையை இடித்துத் தெருவாக்கு

·        விரல்நுனி வெளிச்சங்கள்

·        பூமியைத் திறக்கும் பொன்சாவி

·        இன்னொரு சிகரம்

·  விவசாயம் இனி இவர் வேதம் 

(வேளாண் செம்மல் புலம்பாக்கம் முத்துமல்லா வரலாறு)

·        கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்

உரைநடை நூல்கள் -2                        

·        பண்ணைப்புரம் தொடங்கி பக்கிங்காம் வரை

·        வெற்றியின் மூலதனம்

மறைவு

2000 – ஆண்டு மே மாதம்  13-ந்தேதி அன்று கவிஞர் தாராபாரதி காலமானார். அவரது மறைவிற்குப் பின் தமிழக அரசு அவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

கவிஞர் தாரா பாரதி பிறந்த நாளில்  இளைஞர்களுக்குக் கூறிய அறிவுரைகள்

கவிஞர். தாராபாரதியின் படைப்புகள், செயல்கள் அனைத்தும் இளைஞர்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அவருடைய புகழ் மிக்கக் கவிதைகளில் இளைஞர்களுக்கு உரிய தன்னம்பிக்கைக் கவிதையாக இக்கவிதையைக் கூறலாம்.

வேலைகளல்ல, வேள்விகளே! என்ற தலைப்பில் அமைந்த கவிதை,

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்!
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் - உன்
கைகளில் பூமி சுழன்று வரும்!
தோள்கள் உனது தொழிற்சாலை - நீ
தொடுமிட மெல்லாம் மலர்ச்சோலை!
தோல்விகள் ஏதும் உனக்கில்லை - இனி
தொடுவா னம்தான் உன்எல்லை!
விரக்தி என்னும் சிலந்தி வலைக்குள்
வேங்கைப் புலிநீ தூங்குவதா? - நீ
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று
எங்கே கிழக்கெனத் தேடுவதா?
மூலையில் கிடக்கும் வாலிபனே - தினம்
முதுகில் வேலையைத் தேடுகிறாய்!
பாலை வனம்தான் வாழ்க்கையென - வெறும்
பல்லவி எதற்குப் பாடுகிறாய்?
மண்புழு வல்ல மானிடனே - உன்
மாவலி காட்டு வானிடமே!
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே - இவை
வேலைக ளல்ல; வேள்விகளே!

என்று சிறப்பானதொரு கவிதையைப் படைத்துள்ளார்.

மேலும், ஒரு சிறந்த நிகழ்வினை இங்கு உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமைக் கொள்கிறேன். ‘ஆசிரியப் பணி என்பது ஓர் அறப்பணி’  என்றும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பணி என்றும் அப்பணியைச் சிறப்பாக செய்தால் ஒரு சமுதாயம் எந்தளவு முன்னேறும் என்பதும் இந்நிகழ்வால் அறிந்து கொள்ளலாம்.

செங்கற்பட்டு அருகே உள்ளபரனூர் என்னும் சிற்றூரில் உள்ள பள்ளியில் தாராபாரதி பணிபுரிந்தார். பள்ளியில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை ஆசிரியர் தாராபாரதி கவனித்துக் கொண்டிருந்தார்.

டேய் சேகர்என்னும் குரல் கேட்கிறது. பார்த்தால் அந்த ஊர் நாட்டாமை. ‘டேய் சேகர், உங்க அப்பன எங்கே தேடியும் காணல, நான் சீக்கிரமா பட்டணத்துக்குப் போவணும், நீ வந்து எனக்கு முகச்சவரம் செய்து விட்டுப் போடாஎன்கிறார் நாட்டாமை. தேர்வு எழுதி கொண்டிருந்த சேகர், கண்களில் அச்சம் மிளிர ஆசிரியரைப் பார்க்கிறான்.

ஆசிரியர் தாராபாரதி, நாட்டாமையிடம் சென்றுதேர்வு முடியட்டும். பின் அனுப்புகிறேன்என்கிறார். அதற்கு அந்த நாட்டாமை, ‘ஆமா இந்தப் பய பரீட்சை எழுதி என்ன கிழிக்கப் போறான். அவனை அனுப்பய்யா முதல்லஎன்று கூச்சலிடுகிறார்.

ஆசிரியரும் குரலை உயர்த்திஉங்க மகன் இளங்கோவும் இங்கு தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறான். அவன் தேர்வு எழுதும்போது பாதியிலே அழைத்துப் போக உங்க மனம் ஒப்புமா? உங்க மகனுக்கு ஒரு நியதி. நாவிதர் மகனுக்கு ஒரு நியதியா? இங்கே என்ன நடந்தாலும் அவனைத் தேர்வு எழுதி முடிக்கும் வரை என்னால வெளியே அனுப்ப முடியாதுஎன்றார்.

ஆசிரியக் கவிஞன் கண்களில் தெரிந்த கனல் நாட்டாமை வாயை அடக்கியது. நாட்டாமை வெளியேறினார். தேர்வு முடிந்து பள்ளி மாணவர்கள் கிளம்பி கொண்டிருந்தார்கள். அப்போது சேகரின் தந்தை கலங்கிய கண்களுடன் பதற்றத்துடன் ஓடி வருகிறார்.‘அய்யா, நாட்டாமை கூப்பிட்டதும் என் மவனை அனுப்பியிருக்கலாமே. இனி அவரை எதிர்த்துகொண்டு எம் மவனை நான் எப்படி படிக்க வைக்க முடியும். என்று அழுகிறார்.

அவரது கண்ணீரைத் துடைத்த ஆசிரியர், ‘உங்க மகன், இனிமேல் என் மகன். அவனை என் வீட்டிற்கு அழைத்துச் சென்று செங்கற்பட்டில் படிக்க வைக்கிறேன். இந்த ஊரில் எவரும் படிக்காத அளவுக்கு அவனை படிக்க வைத்து உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன். அப்பொழுதுதான் இந்தச் சாதி மணி அடிக்க முடியும்என்று சொல்லிவிட்டு சேகரை அழைத்துச் சென்றார்.

சேகர் தாராபாரதியின் வளர்ப்பிலேயே எம்.காம்., பி.எட் படித்து முடித்தார். சேகருக்கு தகுதியான வேலையும் பெற்றுத் தந்தார். தாரா பாரதியும் அவரது துணைவியும் முன்னின்று சேகருக்குத் திருமணமும் நடத்தி வைத்தார்.

தமிழ்ப்பற்று, சமுதாய மேம்பாடு, தேசிய உணர்வு, உலக மனித நேயம் என்று நான்கு திசைகளிலும் தம் சிறகை விரித்தப் பாரதியைத் தாய் தந்தையாகவும் பிற கவிஞர்களை வழிகாட்டியாக வரித்துக் கொண்டு பாடிய ஒப்பற்ற கவிஞர்.

தமிழகம் உனது அன்னை நிலம்

தமிழகம் உனது தண்டுவடம்

தமிழ் உன் மூச்சின் மூலதனம்நீ

தடைகள் தகர்க்கும் காளையினம்

என்று பாடுகிறார்.

        ஆண்டான் அடிமை உறவாக இருந்த ஆண், பெண் உறவை சரிநிகர் சமமாக நட்புறவாக்க முனைந்தவர் பாரதியார். அவர் வழியில்கவிஞாயிறுதாரா பாரதி எழுதிய கவிதையாக,

          அரிச்சு வடிக்கும் பெண்கள்

           அரிச்சுவடி க்கும் கண்கள்

           அரிசி உலை இறக்கும் கை

           அணு உலையை திறக்கும் கை

என்று பாடுகிறார்.

          இவர் எழுத்துக்கு எரிமலை கூடத் தோற்றுப் போகும். அத்தனை உணர்ச்சிக் கனல் பற்றி எரியும் பாக்கள் இவரது படைப்பாகும். இளைஞர்களின் உயர்வுக்கு உறைவிடம் கொடுத்த உள்ளம். இந்தப் பாவலன் கவிதை  வெல்லமாகவும் இனிக்கும். தீமைகள் அனைத்தையும் எரிக்கும்.

பார்வை நூல்கள்

1.  1. தமிழ் வளர்த்த சான்றோர்கள் – பிரேமா அரவிந்தன், பாக்கியம் பதிப்பகம், தெற்கலங்கம், தஞ்சாவூர் – 613 001.

2.        2.  விக்கிப் பீடியா, இணையதளம்.

         

 

 

  

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...