கோத்தர் இனமக்களின் வாழ்வியல் நெறிகள்
பழங்குடிகள்
என்றால் பழமையானக் குடியைச் சார்ந்த குடிமக்கள் என்று பொருள். இன்று பழங்குடி
மக்கள் என்றால் நாகரிகமற்ற, வெளியுலக மக்களோடு தொடர்பு கொள்ள விரும்பாத, கல்வியறிவில்லாத
மக்கள்; என்பது நம்
கண்முன் நினைவுக்கு வருகின்றது. இந்நிலை இன்று அரசின் பெருமுயற்சியால் வெகுவாக
மாறிக் கொண்டிருக்கிறது.
`Tribe’ என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில் ‘பழங்குடி’ என்று மொழி
பெயர்த்துள்ளனர். பரிமேலழகர் ‘பழங்குடி’ என்னும் சொல்லுக்கு தொன்று தொட்டு வருகின்ற
குடியின்கட் பிறந்தார் என்று குறிப்பிடுகிறார். ‘பழங்குடி’ என்ற சொல்லுக்கு
இணையாகத் தமிழில் ‘மலைவாழ் மக்கள்’, ‘இனக்குழு மக்கள்’, ‘ஆதிவாசிகள்’ எனப் பல்வேறு
சொற்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாய்வின் வழி நீலகிரி மாவட்டத்தில் வாழ்கின்ற
கோத்தரின பழங்குடி மக்களின் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைகின்றது.
கோத்தர்கள்
நீலகிரி
மலைப் பகுதியில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், காட்டு நாயக்கர், பணியர் முதலிய ஆறு பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.
அவற்றில் சிறிய அளவில் வாழ்கின்ற பழங்குடி மக்கள் கோத்தர்கள் ஆவர். இவர்கள் தங்களை
‘கோ’ என்று
கூறிக் கொள்கின்றனர். கோ என்றால் இரும்பு பொருட்களைச் செய்பவர் என்று பொருள்படும்.
இவர்கள் நீலகிரி மலைப் பகுதிகளில் ஏழு
இடங்களில் மட்டுமே வாழ்கின்றனர். இவர்களின் குடியிருப்புகள் கோத்தகிரி, குன்னூர், உதகமண்டலம், கூடலூர்
ஆகிய வட்டங்களில் அமைந்தள்ளன.
கோத்தர்களின்
பூர்வீகம் குறித்தச் செய்திகள் அதிகமாகக் காண முடிவதில்லை. கர்நாடக மாநிலத்தில்
உள்ள லிங்கயாத்களும், கட்டுக்காரர்களும் கோத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
நீலகிரி கோத்தப் பழங்குடியினரும் மேலே கூறப்பட்ட கர்நாடகப் பழங்குடியினரும் சைவ
சமயத்தைச் சார்ந்தவர்கள் என பிருக்ஸ் கூறுகிறார். கோத்தர்கள் முதலிய மைசூரிலுள்ள
கொல்லிமலையில் வந்து வாழ்ந்ததாக தர்ஸ்டன் குறிப்பிடுகிறார். இவ்வாறு இவர்களைக்
குறித்து மானிடவியலார்களும், இனவரைவியலளர்களும் பல்வேறு கருத்துக்களை முன்
வைக்கின்றனர். இதனை ‘கோமொழி’ அல்லது
கோத்தமொழி என்று கூறுவர். பழங்குடிகளில் அதிகளவில் மரபு அறிவினைக் கொண்டவர்கள்
கோத்தர்களே ஆவர். ஏனெனில் அவர்களே அறிவு சார்ந்த பல்வேறு கலைகளைச் செய்துள்ளமை
செய்து வருகின்றமை காண முடிகின்றது.
தொழில்கள்
பழங்குடி
மக்கள் பொதுவாகக் காட்டுப் பொருட்களைச் சேகரித்தல், வேளாண்மை செய்தல், தேனெடுத்தல், கலைத் தொழில்கள் செய்தல், ஆடுமாடுகள் மேய்த்தல், வேட்டையாடுதல் முதலிய தொழில்களையே செய்கின்றனர்.
கோத்தர்கள் கைவினைக் கலைஞர்களாக விளங்குவதினால் பல்வேறு விதமான தொழில்களைச்
செய்கின்றனர். இவர்கள் மிகவும் கடுமையான உழைப்பாளிகளாக உள்ளனர். எனவே ஆண்கள், பெண்கள்
எல்லோரும் பயிர்த்தொழில் செய்கின்றனர். மேலும் கைவினைத் தொழில்களான மன்பாண்டம்
செய்தல், கொல்லுத்தொழில், தச்சுத்
தொழில் முதலிய கலைத் தொழில்களைச் செய்கின்றனர்.
கட்டடக்கலை
கோத்தர்கள்
குடியிருக்கும் ஊரினை கோக்கால் என்று கூறுகின்றனர். இவர்கள் ஏழு இடங்களில் தங்கள்
குடியிருப்புகளை அமைத்துள்ளனர். அவை கோத்தகிரி (போர்காட் கொக்கால்), கீழ்
கோத்தகிரி (கிளார்ட் கோக்கர்ஸ்), திருச்சிக்கடி (திச்காட் கோக்கர்ஸ்) கொல்லிமலை (கொல்மேல்
கோக்கால்), சேலூர்
கோக்கால் (குர்கோஜ் கோக்கால்), குந்தா கோக்கால் (கல்காச் சோக்கால்) என்பனவாகும்.
இவர்கள் ஊரினை மூன்றாகப் பாகுபடுத்தியுள்ளனர். அவை மேகேர், நட்கேர், கீகேர் என்பனவாகும். கேர் என்பது தெருவினைக்
குறிப்பிடுவதாகும். எனவே மேல் தெருவை கீகேர் என்றும் கூறுகின்றனர். ஒவ்வொரு
ஊரிலும் இப்பகுப்பு முறை காணப்படுகிறது.
இவர்கள்
வீட்டினை ‘பய்’ என்று
கூறுகின்றனர். வீடுகள் இடைவெளிகளின்றி நேர்வரிசையாகக் காணப்படுகின்றன. முன்பு
இயற்கையாக அவர்களின் சுற்றுப்புச் சூழலில் கிடைத்த காட்டுக் கம்புகளையும்
புற்களையும் கொண்டு வீடுகளை கட்டி வாழ்ந்தனர். பின்னர் வீட்டின் சுற்றுப்புறச்
சுவர்களை மண்ணால் அமைத்து அதன் மீது மாட்டு சாணத்தினால் அழகுபடுத்திக் கொண்டனர்.
இச்சுவர்களில் குறுகிய காலத்தில் விரிசல்கள் ஏற்பட்டமையால் காட்டுக் கம்புகளை
வரிசையாக அடுக்கி கட்டி அதனுள் மண்ணை வைத்துப் பூசி சுவர்களை எழுப்பினர். அதன்பின்
மண்ணை நெருப்பில் வேகவைத்தால் அவை எளிதில் உடையாமல் உறுதியாக இருப்பதை அறிந்த
பிறகு, அவர்களே
செய்த செங்கற்களையும், ஓடுகளையும் கொண்டு ஒட்டு வீடுகளைக் கட்டிக் கொண்டனர்.
இவர்களின் வீடுகளில் முன்னால் திண்ணை போன்ற அமைப்பு உள்ளது. இஃது மக்கள் வந்த
அமர்வதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. இத்திண்ணையானது ஓய்வு எடுப்பதற்கும், புதைப்
பிடிப்பதற்கும், படுத்து
தூங்கவும் பயன்படுத்துகின்றனர்.
தற்போது
நாகரீக மாற்றத்தால் பலவீடுகளின் மன் இருந்த திண்ணைகளில் சுவர் எழுப்பப்பட்டு
உள்ளன. இவர்களின் குடியிருப்புகள் விலங்குகள் மற்றும் இயற்கை சீற்றங்களினால்
இடையூறுகள் வராத மேட்டுப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இவர்களின் கட்டடக்கலை
மரபும், அதற்கு
அவர்கள் பின்பற்றிய நவீன தொழில்நுட்பம் நமக்கு புலனாகிறது. தற்பொழுது இவர்களுக்கு
அரசாங்கம் வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் அவ்வீடுகளும் இவர்களின்
விருப்பம் போன்று ஒன்றோடொன்று இணைந்து வரிசையாகக் காணப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கதாகும். இவைகள் இவர்களின் மரபு அறிவினைப் பறைச்சாற்றுவதாக உள்ளது.
வேளாண்மை
கோத்தர்கள்
முற்காலத்தில் காடுகளை அழித்து சாமை, இராகி ஆகியவற்றைப் பயிரிட்டு வந்தனர். பின்னர் நீலகிரி
மலையில் தேயிலை, காபி
முதலிய பணப்பயிர்களின் வருகையால் இத்தகைய விவசாயம் காணாமல் போயிற்று. தற்போது
கிழங்குகள், அவரை, கேரட்
முதலியவற்றை பயிரிட்டு வருகின்றனர். இவர்கள் பயிர் செய்வதற்கு மண்ணைப் பயிரிட்டு
பதப்படுத்துகின்றனர். அதற்கு மண்வெட்டி (கைகௌட்), கொட்டு (குதாய்), கடப்பாறை (பார்) முதலியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
பயிர்களுக்கு இடையே வளருகின்ற களைகளை அகற்றுவதற்கு சிறிய அளவிலான களைக்
கொட்டியினைப் (கல்குதாய்) பயன்படுத்துகின்றனர்.
அறுவடை
செய்வதற்கு அரிவாள் (குடுகில்) மற்றும் புல்கத்தி (கண்கத்தி) முதலியவற்றை
பயன்படுத்துகின்றனர். பயிர்களுக்கு மாட்டின் எருவினையும் காட்டுத் தளைகளையும்
பயன்படுத்துகின்றனர். இவர்கள் பழைய மரபுத் தன்மையுடன் நவீன தொழில் நுட்பத்தையும்
சேர்த்து விவசாயம் செய்கின்றனர்.
மரத்தின்
பயன்பாடுகள்
கோத்தர்கள்
மரத்தின் பயன்பாட்டினை நன்கு தெரிந்து வைத்துள்ளனர். எனவே மரங்களைப் பயன்படுத்தி
தங்கள் வீடுகளுக்குத் தேவையான பொருட்களைச் செய்வதிலும் தேர்ச்சி பெற்றவர்களாக
உள்ளனர். வீடுகளுக்குத் தேவையான நிலை (தாருகம்), கதவு (வால்), முதலிய நவீன வேலைப்பாடுகளுடன் காணப்படுவது
குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் மரங்களை அறுப்பதற்கு வாள் (ஏர்வாள்) மரப்பலகையினை
மட்டமாக அறுப்புத்தடம் தெரியாமல் பளப்பளப்பாக ஆக்குவதற்கு சீவுளி (எள்புள்ப்)
பயன்படுத்துகின்றனர். இது இரும்பினால் செய்யப்பட்டதாகும். இதில் ஒரு சிறிய சில்
(நால்கு) காணப்படும். முரங்களை ஒன்றொன்று இணைப்பதற்கு துளைகள் இட்டு அதனுள்
சேருமாறு கழுத்தடித்து மரஆணிகள் மூலம் இணைக்கின்றனர். இதற்கு உளி (மள்வ்), சுத்தியல்
(மிட்க்) முதலிய கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.
இவர்களின் வீடுகளில் சமவெளிப் பகுதியில் உள்ள வீடுகளில்
காணப்படுவது போன்ற மாடிகள் காணப்படுகின்றன. இம்மாடிகளுக்கு ஏறிச் செல்வதற்கு
மரத்தினால் செய்யப்பட்ட ஏணியைப் பயன்படுத்துகின்றனர். மேலும் இவர்கள் வீடுகளில்
மரத்தினால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இருக்கைகள் (குக்குஸ்குடு)
பல்வேறு வடிவங்களில் தற்போது காணப்படுகிறது. இஃது அவர்களின் மரத்தொழில் செய்யும்
தொழில்நுட்பத்தைப் பறைசாற்றுவதாக உள்ளது. முன்பு காடுகளிலிருந்து மரங்களை வெட்டி
வந்தனர். மரங்களை வெட்டுவதற்கு அரசு தடை விதித்தமையால் தற்போது சமவெளிப்
பகுதியிலிருந்து மரங்களை வெட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பிளைவுட்
வகைப் பலகையை விலைக்கு வாங்கி வந்து மரத்திற்குப் பதிலாகப் பயன்படுத்துகின்றமையைக்
காணமுடிகிறது.
இரும்பின்
பயன்பாடுகள்
கோத்தர்கள்
தான் தோடர், படகர், இருளர், குறும்பர்
முதலிய மலைவாழ் பழங்குடி மக்களுக்குத் தேவையான கைக்கோடாரி, புல்லரிவாள், சுத்தி முதலியவற்றைச் செய்து கொடுத்துள்ளனர். இவர்கள்
சமவெளிப் புகுதிகளிலிருந்து இரும்புத் தாதுக்களை வாங்கி அதனை உலையில் இட்டு பழுக்க
காய்ச்சி கருவி பொருட்களைத் தயார் செய்துள்ளனர். தற்போது கடைத்தெருக்களில்
கிடைக்கும் பழைய இரும்பினை வாங்கி வந்து கருவிகளைச் செய்கின்றனர்.
இவர்கள்
இரும்பினைத் தீயில் பழுக்கக் காய்ச்சி அதனை அடித்துக் கருவியாக வடிவமைக்கும்
தொழில் நுட்பத்தையும் தெரிந்து வைத்துள்ளனர். இவர்கள் இரும்பு தொழில் செய்யும்
கொல்லப் பட்டறையை கோலேல் என்று கூறுகின்றனர். இவர்கள் இரும்புத் தொழில் கருவிகளாக
கூடம் (தபட்க்), சுத்தியல்
(மிட்க்) முதலியவற்றைப் பயன்படுத்துகின்றனர். இதனை ‘பண்’ என்று கூறுகின்றனர். இவர்கள் முன்னோர்கள் ஆரம்பகாலத்தில்
சில பாறை கற்களை உலையில் இட்டு இரும்புத் தாதுக்களைத் தயார் செய்துள்ளதாகக்
கூறுகின்றனர். இத்தொழில் தற்போது யாருக்கும் தெரியவில்லை என்று கூறுகின்றனர்.
மண்பாண்டங்கள்
கோத்தரினப்
பெண்களில் சிலர் மண்பாண்டங்களைச் செய்வதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு
குடியிருப்புகளிலும் இரண்டு மூன்று குடும்பங்கள் மண்பாண்டத்தொழில் செய்வதைக்
காணமுடிகிறது. இவர்கள் பானைகளை உருவாக்கும் சக்கரம் இரும்பாலான ஆரங்களைக் கொண்டதாக
இருக்கின்றது. இஃது வீட்டின் முன் பாவப்பட்டிருக்கும். கல்லில் பொருத்திச்
சுழற்றிப் பானையினை உருவாக்குவர். இவ்வாறு பாவப்பட்ட கல்லை கதிரடிக்கும் களமாகவும்
பயன்படுத்துவர். தற்போது இத்தகைய கல்லை காண முடிவதில்லை. மாறாக இரும்பு இராட்டினை
(தையிர்கள்) கையால் சுற்றி தேவையான பானையினைத் தயார் செய்கின்றனர்.
இவர்கள்
மண்பாண்டங்கள் செய்வதற்கு கருப்புநிற மண்ணான களிமண் (பெலிஷ் மண்), வெள்ளைநிற மண்
(ஜயிர் மண்), ஆற்று மணல்
இவை மூன்றையும் சேர்த்து நீர் விட்டு குழைத்துப் பானை செய்வதற்குப்
பயன்படுத்துகின்றனர். இராட்டில் வைத்து பானை செய்தபின் அறுத்து எடுத்து சிறிது
உலர்ந்த பின் அடிப்பகுதியை சரிசெய்கின்றனர். அடிப்பகுதியினைச் சரிசெய்ய
உள்பகுதியில் கல்வைத்து வெளிப்பகுதியினைப் பலகையினால் அடித்து வடிவமைக்கின்றனர்.
இவ்வாறு இவர்கள் சட்டி (குங்க்), பானை (ஆராட்டு), உலை மூடி (முச்சன்), முதலிய பல்வேறு வகையான மண்பாண்டப் பொருட்களையும்
செய்கின்றனர். தற்போது அழகியல் வேலைப்பாடுகளான மனித உருவங்கள் பொம்மை வடிவ பல்வேறு
பொருட்களையும் செய்கின்றமை காணமுடிகிறது. இவர்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல் பிற
மலைவாழ் பழங்குடி மக்களுக்கும் இப்பானைகளை விற்பனை செய்கின்றனர். இவர்கள் செய்யும் பானைகள் சமவெளிப் பகுதி
மக்கள் செய்யும் பானைகளை விட உறுதியானதாக இருப்பதாகத் தகவலாளிகள் கூறுகின்றனர்.
கோத்தரினப்
பெண்களின் வாழ்வியல்
கோத்தரினத்தில்
பெண் வயதுக்கு வந்தவுடன் தலைமுடியினை முடிந்து கொண்டை கட்டும் வழக்கம் உள்ளது.
கொண்டைக கட்டுகள் என்பது பெண் பருவம் அடைந்து விட்டாள் என்பதை அறிவிக்கும்
குறியீடாகப் பயன்படுகிறது. திருமணமான பெண்கள் தலையில் ‘மண்டூக்’ என்னும் கொண்டை வளையினைப் பயன்படுத்துகின்ற வழக்கம்
உள்ளது. இதனை நறுமணம் மிக்க ஒருவகை தாவரத்தின் இலையினை ‘ட’ வடிவில் துணியினால் வளைத்து சுற்றித் தயார்
செய்கின்றனர். இதனை அணியாமல் கணவனுக்கு தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது என்ற
கட்டுப்பாடு உள்ளது. பெண்கள் வீட்டிற்கு விலக்காகும் காலங்களில் பெண்கள் மண்டுக்கை
தலையில் அணிவதில்லை. உடனே அவர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் தனி வீட்டிற்கு
சென்று விட வேண்டும் என்பது நியதியாக உள்ளது. மண்டூக்கில் இருக்கும் தாவரத்தின்
வாசனை ஆண்களை வசப்படுத்தும் தன்மை கொண்டது என்று கூறுகின்றனர்.
நிறைவாக,
கோத்தரினப்
பழங்குடி மக்களின் பண்பாட்டில் நவீன வளர்ச்சியை விட மரபு சார்ந்த அறிவு அதிக
பயன்பாட்டினைப் பெற்று விளங்குகின்றது. ஆனால் சமவெளிப் பகுதி மக்களிடம் கொண்ட
தொடர்பின் காரணமாக மரபு சார்ந்து அவர்கள் செய்து வந்த செயல்கள் அனைத்தும் மறைந்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது
ஒவ்வொரு நாட்டிலும் பழங்குடிகள் புணரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த
கொத்தடிமை ஒழிப்பின் வாயிலாக எண்ணற்றப் பழங்குடி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சமூகநல அமைப்புகளும் விழிப்புணர்வு கல்வி புகட்டி வருகின்றன. கிறிஸ்தவ
நிறுவனங்களும் இவர்களின் வளர்ச்சியில் சிறப்பாகப் பங்காற்றி வருகின்றன. அவற்றில்
இவர்களின் கல்விப் பணியும், மருத்துவப் பணியும் குறிப்பிடத்தக்கனவாகும்.
துணை நின்ற
நூல்கள்
1. அருணாச்சலம், -
நாட்டுப்புறவியல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1992.
2. ஆறுமுகம், அ – நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும், தேன்தமிழ்ப்
பதிப்பகம், சேலம், 1988.
3. ரெஜித்குமார். டாக்டர்.த, நா – நாட்டுப்புற இயல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ஆகஸ்டு -2022.
----
Comments
Post a Comment