தன்மானத் தலைவர்
பெரியார்
தந்தை பெரியார் அவர்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டதன் விளைவு, என்னை அவரைப் பற்றிய நூல்களைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. அதன் விளைவே இக்கட்டுரை. இக்கட்டுரை அவருடைய சுருக்கமான வரலாறாக அமைந்துள்ளது. அவரைப் பற்றி நாமும் தெரிந்து கொள்ளவேண்டும். எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்தப் பதிவு.
தந்தைப் பெரியார் வாழ்க்கை வரலாறு
பெரியார்
ஈரோட்டில் வெங்கட்ட நாய்க்கர் – சின்னத்தாயம்மாள் ஆகியோரின் மகனாக 1879 – ஆம் ஆண்டு செப்டம்பர் 17 – ஆம் நாள் பிறந்தார். பெரியாரின்
தந்தை தொடக்கத்தில் ஏழ்மையில் உழன்றவர். கூலி வேலை செய்தவர். தாயார் சிறிய அளவில் மளிகைக் கடை வைத்தார். அது இருவர்
உழைப்பில் நாளடையில் பெரிய மண்டியாக மாறியது. பெரியார் பிறப்பதற்கு முன்பே அவருடைய தந்தை பெருவணிகராக உயர்ந்தார். வீட்டில் செல்வம்
பெருகியதோடு, கடவுள் பக்தியும்
கரை புரண்டது. தன்னுடைய ஆறாவது
வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட பெரியார், கல்வியில் கவனம் செலுத்தவில்லை. நான்காம் வகுப்புடன் அவருடைய பள்ளிப் படிப்பு முடிந்தது. வீட்டுக்கு
அடங்காத விடலைப் பிள்ளையாக வளர்ந்தவர் பின் மண்டியில் உடன் வைத்துக் கொண்டார் வெங்கட்ட
நாய்க்கர். தன் 12 – வது வயதில்
வணிகத்தில் கால் பதித்த பெரியார், அதில் பெரிய தேர்ச்சி பெற்றார்.
வெங்கட்ட
நாய்க்கர் வைணவ சம்பிரதாயத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவர். அவரைத் தேடி வரும் பாகவதர்களிடமும், பண்டிதர்களிடமும்
புராணங்கள், இதிகாசங்கள், சாத்திரங்களில்
படிந்திருக்கும் மூடக் கருத்துகளை எதிர்த்தும் மறுத்தும் பெரியார் தன் இளம் வயதிலேயே
கடும் விமர்சனங்களை வைத்தார். பத்தொன்பது வயதில் அவர் பதின்மூன்று வயது நாகம்மையை மணந்தார். பார்ப்பனர்கள்
சாப்பிடும் இடத்தில் பெரியார் நுழைந்ததால், உணவு தீட்டுப்பட்டு விட்டதாகக் குறைப்பட்டுக் கொண்டதைக் கேட்ட
வேங்கட்ட நாய்க்கர் மகனுடைய முகத்தில் காறி உமிழ்ந்து செருப்பால் அடித்தார். மனக்காயமுற்ற
பெரியார், துறவுக்கோலம்
பூண்டு காசிக்குச் சென்றார். அங்குப் போலித் துறவிகளின் பொய்ம்மை வேடத்தை நேரில் கண்டு
நெஞ்சம் புண்பட்டார். ஆந்திராவுக்கு திரும்பி வந்த பெரியாரை அவருடைய தந்தை தேடிச்
சென்று பாசம் பொங்க ஆரத் தழுவி அரவணைத்து மீண்டும் ஈரோட்டுக்கு அழைத்து வந்தார்.
பெரியார் ஈரோடு நகர்மன்றத் தலைவராக 1917
முதல் 1919 வரை பணியாற்றினார். தன்னுடைய ஈடிலாப் பொதுவாழ்வில் அவர் வகித்த அரசு அதிகாரம்
சார்ந்த பதவி இது ஒன்றுதான். காங்கிரஸ் தலைவர் வரதராஜீலு நாயுடுவும், ராஜாஜியும் வற்புறுத்தியதால்
காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார். காந்தியத் தலைமையேற்று
ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்தவர், ஈரோடு நகர்மன்றத் தலைவர் பொறுப்பிலிருந்தும்,
தான் வகித்த 29 பதிவிகளிலிருந்தும் விலகினார். ஆண்டுக்கு இருபதாயிரம் ரூபாய் வருவாய்
தந்த வணிக நிறுவனங்களை இழுத்து மூடினார். பதவிக்காகவும் பணத்துக்காகவும் அரசியல் உலகில்
அடியெடுத்து வைப்பவர்களைத்தான் இன்று நாம்
காண முடியும். ஆனால், பெரியார் அரசியலில் நுழையும்போதே பதவிகளையும், பண வருவாயையும்
துச்சமெனத் தூக்கி எறிந்தார்.
போராட்ட வாழ்க்கை
பெரியார் தன்னுடைய 1919 முதல் 1925 வரை தமிழ்
மண்ணில் காங்கிரஸையும், கதர் இயக்கத்தையும் வெகுமக்களிடம் கொண்டு சேர்த்தார். தொடக்கத்தில்
பெரியாரைப் போல் காங்கிரஸை வளர்த்தவர்கள் வேறு யாருமில்லை. தமிழ்நாட்டில் கதரைப் பரப்பிய
பெருமை அவருக்கே உண்டு. தீண்டாமைப் பேயை ஓட்ட அவர் பட்டப் பாட்டை எல்லோரும் அறிவர்’ என்றார் பெரியாருடன் சேர்ந்து காங்கிரஸை
வளர்த்த திரு.வி.க.
காந்தியடிகள் வலியுறுத்திய மதுவிலக்கு, தீண்டாமை
ஒழிப்பு, அந்நியத் துணி புறக்கணிப்பு, நீதிமன்றப் புறக்கணிப்பு, கதரைப் பரப்புதல்,
இந்துஸ்தானி மொழியைப் பரப்புதல் என்று அனைத்து நிர்மாணத் திட்டங்களையும் நெஞ்சார ஏற்று,
அவற்றைத் தமிழ் மண்ணில் வளர்த்தெடுப்பதை ஒரு வேள்வியாக முழு அர்ப்பணிப்புடன் நடத்திய
நாயகர் நம் பெரியார். மதுவை ஒழிக்க சேலம் தாதம்பட்டியில் தனக்குச் சொந்தமான 500 தென்னை
மரங்களை ஒரே நாளில் தோளிலும் சுமந்து ஊர்தோறும் சென்று கதரைப் பரப்பினார். நீதிமன்றப்
புறக்கணிப்புக்காக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வரவேண்டிய பெருந்தொகையை விட்டுக்கொடுத்தார்.
(இன்றைய மதிப்பீட்டில் ரூ.50கோடி)
நேருவின் தந்தை மோதிலால் நேரு 1962 – இல்
ஈரோடுக்கு வந்தபோது, தம் சொந்த செலவில் அவரைக் கொண்டு இந்திப் பள்ளியைத் திறக்கச் செய்தார்.
மகாத்மா காந்தியின் லட்சியங்களைப் பின்பற்றிய பெரியார்தான் 1925 – இல் காங்கிரஸை விட்டு
வெளியேறினார்.
வைக்கம் நகர் போராட்டம்
ஈழவர், புலையர் போன்ற தாழ்த்தப்பட்டவர்கள்
கேரளாவில் வைக்கம் நகரில் உள்ள வைக்கத்தப்பன் மகாதேவர் கோயிலின் நான்கு வாயில்களை நோக்கி
வரும் வீதிகளிலும் நடக்கக் கூடாது என்று தடுக்கப்பட்டனர். நீதிமன்றமும், முக்கிய அரசு
அலுவலகங்களும் அந்தப் பகுதிகளில்தான் இருந்தன. வழக்கறிஞர் மாதவன் ‘ஈழவர்’ என்பதால்
வழக்காட அந்த வீதியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கேரள காங்கிரஸ் தலைவர்கள் போராட
முடிவெடுத்தனர். சத்தியாக்கிரகம் தொடங்கியது. ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன், டி.கே.மாதவன்
போன்றோர் கைதுசெய்யப்பட்டதும்... போராட்டத்தை வளர்த்தெடுக்க வழியற்றுப் போனது. ஜார்ஜ்
ஜோசப்பும், கேசவ மேனனும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியாரே வைக்கம் போரில்
தலைமையேற்க வேண்டும் என்று கடிதம் எழுதினார். பெரியார் உடனே வைக்கம் சென்றார். போராட்டத்தைப்
பெரிதாக வளர்த்தார். ஒரு மாதம் சிறை சென்று மீண்டவர். மேலும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார்.
பெரியாரின் மனைவி நாகம்மை சகோதரி கண்ணம்மாள் இருவரும் வைக்கம் போரில் ஈடுப்பட்டனர்.
மறுபடியும் பெரியாருக்கு ஆறு மாதச் சிறைவாசம் கிடைத்தது.
திருவனந்தபுரம் சிறையில் பெரியார் இருந்த
கோலத்தைக் கேரள காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் தன் சுயமரியாதையில்
குறிப்பிட்டிருக்கிறார். ‘கால்களில் விலங்கு; தலையில் குற்றவாளிக்கான சிறைத் தொப்பி,
கழுத்தில் கைதி எண் பலகை; கொலையாளிகள், கொள்ளைக்காரர்களுடன் சிறை வேலை – இவை தான் கேரளாவின்
தாழ்த்தப்பட்டோருக்காகப் பெரியார் பெற்ற பரிசுகள். முதிர்ச்சியும், பெருந்தன்மையும்,
அனுபவமும், ஆர்வமும், தேசப்பற்றும் கொண்ட பெரியாரைப் போல் கேரளத்தில் ஒருவர் உண்டா?
இந்த மாநில மக்களுக்காக அயல்மாநிலத்திலிருந்து இவ்வளவு பெரிய தலைவர் வந்து போராடியதில்,
இங்குள்ளவர்களுக்கு மான உணர்வும், வெட்கமும் எழவில்லையா? என்று குமுறுகிறார் கேசவ மேனன்.
வைக்கம் கோவில் வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் தலைநிமிர்ந்து நடக்கும் உரிமையைப் பெற்றுத்
தந்து, வைக்கம் வீரராய்த் தமிழகம் திரும்பினார் பெரியார். வைக்கம் போர் தந்த ஊக்கத்தில்தான்
தாழ்த்தப்பட்டோர் பொதுக்கிணற்றில் தண்ணீர் பெற ‘மஹத்’ சத்தியாக்கிரகத்தை நடத்தியதாக
அம்பேத்கார் குறிப்பிட்டார்.
கள்ளுக்கடை மறியல் போராட்டம்
பெரியாரின் ஈரோட்டு வீட்டில் மகாத்மா காந்தி
தங்கிய போதுதான் கள்ளுக்கடை மறியல் திட்டம் உருவானது. அந்தப் போராட்டத்திலும் பெரியார்,
நாகம்மாளும், கண்ணம்மாளும் மறியல் செய்து கைதாயினர். கள்ளுக்கடை மறியலை நிறுத்தும்படி
வெள்ளை அரசு வற்புறுத்தியபோது, ‘கள்ளுக்கடை மறியலை நிறுவத்துவது என் கையில் இல்லை...
அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்கள் கையில்தான் உள்ளது’ என்றார் காந்தி. ஆனால், வைக்கம் சத்தியாகிரகம்
குறித்துத் தன்னுடைய இதழில் எழுதிய பல கட்டுரைகளில் ஒரு இடத்திலும் பெரியாரின் பங்களிப்பை
மகாத்மா பதிவு செய்யாமல் புறக்கணித்த செயல் அவருடைய தன்மைக்கும், தகுதிக்கும் நேர்மாறானது.
இந்தி எதிர்ப்புப் போராட்டம்
வெள்ளையர்ஆதிக்கத்தின் போது சென்னை மாகாணத்தில்
1937 – இல் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை அமைத்தது. ராஜாஜி உயர்நிலைப் பள்ளிகளில்
இந்தியைக் கட்டாயப் பாடாமாக்கத் திட்டமிட்டார். பெரியாரின் தலைமையில் இந்தி எதிர்ப்புப்
போர் உருவானது. தமிழகமெங்கும் ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!’ என்ற முழக்கம் எதிரொலித்தது.
தமிழ்நாட்டில் மானமுள்ள சுத்தத் தமிழ் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை உலகம்
உணர இதைவிட வேறு வாய்ப்பு கிடைக்காது. பொதுமக்களே இளைஞர்களே... தயாராகுங்கள்’ என்று
குடியரசு இதழில் பெரியார் எழுதினார். இந்தி எதிர்ப்புப் போர் 1940 – இல் வெற்றி பெற்றது.
நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர்
கழகம் என்று பெரியாரின் பொதுவாழ்க்கைப் பயணத்தில் நடத்திய போராட்டங்கள் கணக்கற்றவை.
இந்து மத அறநிலையப் பாதுகாப்பச் சட்டம், கோயில் நுழைவுச் சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச்
சட்டம் போன்றவற்றில் பெரியாரின் பங்களிப்பு அதிகம். பெண்ணுரிமைக்கு அவரைப் போல் போராடிய
அரசியல் தலைவர் வேறொருவர் இல்லை. வருணாசிரம தர்மத்தை அவரைப் போல் யாரும் மூர்த்தண்யமாகவும்,
முற்றாகவும் எதிர்த்தவரில்லை.
பெரியாரின் பார்வையில் மூன்று பேய்கள்; கடவுள்
– மதம் – சாஸ்திரம், சாதி, ஜனநாயகம். அவரைப் பொறுத்தவரை ஐந்து மோசமான நோய்கள் – பார்ப்பனர்,
பத்திரிக்கை, அரசியல், கட்சி, தேர்தல், சினிமா. ஆயிரம் போராட்டங்களைப் பெரியார் நடத்தியிருந்தாலும்
வன்முறைக்கு அவர் சிறிதும் இடம் தந்ததில்லை.
பெரியாரின் கடைசி பேருரை
வருண ஒழிப்புப் பற்றிச் சென்னை தியாகராயநகரில்
1973 டிசம்பர் 19 – ஆம் நாள் ஆற்றிய உரைதான் அவருடைய பெருவாழ்வின் கடைசி பேருரை. மூத்திரச்
சட்டியுடன், குடலிறக்க நோய் தந்த கடும் வலியுடன் தன்னுடைய 94 – ம் வயதில் தமிழகத்தில்
பட்டித்தொட்டி எங்கும் மக்களின் மூடநம்பிக்கையை அகற்ற மேடைதோறும் முழங்கிய பெரியாரைப்
போன்ற மக்கள் நலன் சார்ந்த ஒரு தலைவரை உலகம் முழுவதும் தேடினாலும் காண இயலாது.
நிறைவாக,
·
பெரியாரின்
அனைவருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்ற பெருங்கனவைக் காமராசர் நனவாக்கினார்.
·
சுயமரியாதைத்
திருமணம் சட்டப்படி செல்லுபடியாக வேண்டும் என்ற அவருடைய ஆசையை அண்ணா நிறைவேற்றினார்.
·
தாழ்த்தப்பட்டோரும்
கோயில் அர்ச்சகராக வேண்டும் என்ற அவரது இறுதி விருப்பத்தைக் கலைஞர் நிறைவேற்றினார்.
‘இடையறாச் சேவை, சமத்துவ நோக்கம், சுதந்திர உணர்ச்சி, நட்புரிமை, தாட்சண்யமின்மை,
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமை, அஞ்சாமை, ஊக்கம், சோர்வின்மை, சளிப்பின்மை, எடுத்த
வினையை முடிக்கும் திறன், கரவு - சூழ்ச்சியின்மை
முதலியவை அவர்தம் வாழ்வாக அரும்பி, மலர்ந்து, காய்ந்து, கனிந்து, நிற்கின்றன. பெரியார்
தனக்கென வாழாப் பிறர்க்குரியவர்’ என்றார் திரு.வி.க.
இன்னொரு ஓர் ஆயிரம் ஆண்டுகள் நடந்து முடிந்தாலும் இன்னொரு பெரியாரைத் தமிழினம்
காண்பதரிது.
பார்வை நூல்
1.
தமிழருவி மணியன்,
மறக்க முடியாத மனிதர்கள், கற்பகம் புத்தகாலயம், தியாகராய நகர், சென்னை -600 017.
Comments
Post a Comment