Skip to main content

பெருந்தலைவர் காமராசர்

 

பெருந்தலைவர் காமராசர்

 

          காமராசர், தமிழகத்தின் முதலமைச்சராக 1954 – ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் பொறுப்பேற்றார். முதல்வரான பின்னும் முன்பிருந்த சென்னை திருமலைப் பிள்ளை வீதியில் இருந்த வாடகை வீட்டிலேயே தொடர்ந்து தங்கினார். காமராசரின் நெருங்கிய நண்பரும், தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக இருந்தவருமான ரா. கிருஷ்ணசாமி நாயுடு ஒரு நாள் பெருந்தலைவரை அவருடைய வீட்டில் சந்தித்தபோது, ‘உங்கள் தாயார் விருதுநகரில் தனியாக வாழ விரும்பவில்லை. நீங்கள் அனுமதித்தால் உங்கள் வீட்டின் ஒரு மூலையில் எந்தச் சிரமமும் தராமல் எஞ்சிய காலத்தை உங்கள் முகத்தைப் பார்த்தபடி கழித்துவிடுவதாகக் கண்ணீர் ததும்பச் சொல்கிறார். அவரை அழைத்து வரலாமா? என்று கேட்டார்.

          ‘எனக்கு மட்டும் தாயின் மீது பிரியம் இல்லையா? தந்தை இல்லாத பிள்ளையாய் எவ்வளவு துயரப்பட்டு என்னை அம்மா வளர்த்திருப்பார். பாசத்தில் அவரை நான் பக்கத்தில் வைத்துக் கொண்டால், அவரைப் பார்க்க அடிக்கடி பத்துப் பேர் வருவார்கள். ‘அத்தையைப் பார்க்க வந்தேன். ஆத்தாவைப் பார்க்க வந்தேன்’ என்பார்கள். ஏதாவது ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள, ‘முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசுகிறேன்’ என்று அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். அதனால்தான், அம்மா ஊரிலேயே இருக்கட்டும் என்கிறேன். அவர்கள் தேவைக்குத்தான் மாதம் ரூபாய் 130 அனுப்புகிறேனே,’ என்று பதிலளித்தார் பெருந்தலைவர்.

          முற்றும் துறந்த ஆதிசங்கரரும், பட்டினத்தாரும் கூடத் துறக்க விரும்பாத உறவு, தாயின் உறவு. அந்தத் தாயின் உறவையும் பொதுவாழ்க்கைத் தூய்மைக்காகத் தள்ளி வைத்த அதிசயமான தலைவர் காமராசர்.

          காமராசர் முதலமைச்சரான போது, தன்னுடைய அமைச்சரவையில் ஏழு பேரை மட்டும் சேர்த்துக் கொண்டார். தலித்துக்களின் மாபெரும் தலைவர் இரட்டைமலை சீனிவாசனின் பேரன் பரமேஸ்வரன் என்பவர் அந்த ஏழு அமைச்சர்களில் ஒருவர். சமூகநீதியைச் செயற்படுத்துவதற்காகவே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காமராசர். அந்த தாழ்த்தப்பட்ட அமைச்சரிடம் அறநிலையத் துறையை அளித்தார்.

          ஒரு தாழ்த்தப்பட்ட அமைச்சரிடம் ஆலயங்களை நிர்வாகம் செய்யும் அறநிலையத்துறையைக் காமராசர் அளித்தபோது. சில உயர்சாதிக்காரர்களின் உதடுகள் அவருக்கெதிராக உச்சரித்தன. அந்த விஷமத்தனமான விமர்சனங்களுக்குப் பதிலளித்த பெருந்தலைவர், ‘முதலில் மனிதர்களைத் தொட்டால் தீட்டு என்பார்கள். இப்போது சாமியைத் தொட்டால் தீட்டு என்கிறார்கள். கருவறைக்குள் போகும் உரிமை அவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரரை மந்திரியாக்கிவிட்டால், எந்த நாலாஞ் சாதியை உள்ளே விடமாட்டோம்னு சொன்னார்களோ, அதே நாலாஞ்சாதிக்காரருக்குப் பரிவட்டம் கட்டிப் பூரண கும்ப மரியாதையுடன் அவர்கள் பணிவோடு கோவிலுக்குள் அழைத்துப் போவார்கள் என்று தான் பரமேஸ்வரனை நான் வேண்டுமென்றே இந்து அறநிலையத் துறைக்கு அமைச்சராக்கினேன்’ என்றார். வாய்வேதம் பேசாமல் சமூகநீதிக்குச் செயல்வடிவம் தந்த தலைவர் காமராசர்.

          ஒருநாள் தேசியக் கவிஞர் எஸ்.டி.சுந்தரம், முதல்வர் காமராசரைச் சந்தித்தார்.

          ‘ஐயா! உங்கள் ஆட்சியில் அணைக்கட்டுகள், பள்ளிக் கூடங்கள், சாலைகள், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று யோசித்து, யோசித்து உருவாக்கி இருக்கிறீர்கள். மக்கள் எதையும் மறக்கக் கூடியவர்கள். உங்கள் சாதனைகளை என்றும் மக்கள் நினைவில் நிறுத்துவதற்காக ஒரு ‘நியூஸ் ரீல்’ எடுத்தால் நல்லது’ என்றார் எஸ்.டி.சுந்தரம்.

          ”நாம் ரோடு போட்டோம். அதன்மேல் தானே மக்கள் அன்றாடம் நடக்கிறார்கள். பள்ளிக்கூடம் கட்டினோம். அதில் தானே அவர்களுடைய பிள்ளைகள் படிக்கிறார்கள். அணைகளைக் கட்டினோம். அந்தத் தண்ணீரில் தானே விவசாயம் செய்கிறார்கள். இதில் வேறு விளம்பரப் படம் எதற்கு வீண் செலவு?’ என்று கவிஞரின் கருத்தை மறுத்தார் கர்மவீரர்.

          கொஞ்ச நேரம் தயங்கிய சுந்தரம், ‘மூன்று லட்ச ரூபாய் இருந்தால் போதும் ஐயா! தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க உதவுகிறாற்போல் நல்ல செய்திப்படம் எடுத்து விடலாம்’ என்றதும், ‘அடப்பாவி! படமெடுக்கும் மூன்று லட்சத்தில் இன்னும் பத்து ஊர்களில் நான் பள்ளிக்கூடம் கட்டுவேனே. பிள்ளைகள் படிக்க வழி சொல்லாமல் ‘நியூஸ் ரீல்’ எடுக்கச் சொல்கிறாயே? முதலில் இங்கிருந்து நடையைக் கட்டு’ என்று கொதித்தார். அந்தக் கறுப்பு காந்தி, அப்படியொரு தலைவரை இப்பொழுது பார்க்க முடியுமா?

          விருதுநகரில் சுலோச்சன நாடார் தெருவில் உள்ள வீட்டில்தான் கர்மராசரின் தாய் சிவகாமி அம்மையாரும், தங்கை நாகம்மாளும் வாழ்ந்து வந்தனர். அந்த வீட்டில் குடிநீர்க் குழாய இல்லை. அடுத்த தெருவில் இருந்த ‘முனிசிபாலிட்டி’ குழாயில் வரிசையில் நின்று தண்ணீர் பிடிப்பதற்கு நாகம்மை சென்றிருந்தபோது, காமராசர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை மந்திரியாக இருந்த மஜீத், சிவகாமி அம்மையாரைக் காண அங்கு வந்தார். பேச்சின் இடையில் ‘நாகம்மாள் எங்கே?’ என்று கேட்டார். பக்கத்துத் தெருவில் தண்ணீர் பிடிக்கச் சென்றிருப்பதாக அறிந்து வருந்தினார். உடனே குழாய் இணைப்புக்கு வழி செய்துவிட்டு, மஜீத் கோட்டைக்குத் திரும்பினார்.

          காமராசர் காதில் இந்தச் செய்தி விழுந்ததும், அமைச்சரை அழைத்தார். ‘என் வீட்டுக் குழாய் இணைப்புக்கு முறைப்படி நான் ’முனிசிபாலிட்டி’ யிடம் விண்ணப்பம் கொடுத்தேனா? பதினெட்டு ரூபாய் கட்டணம் கட்டினேனா? எப்படி வந்தது சொன்னேனா? என் வீட்டைப் பார்க்க சொன்னேனா? 24 மணி நேரத்திற்குள் அந்தக் குழாய் இணைப்புத் துண்டிக்கப்பட வேண்டும். பதவியைப் பயன்படுத்தி அவரவர் வீட்டு வேலையைப் பார்த்தால் நாடு உருப்பட்ட மாதிரிதான்’ என்று கடும் கோபத்துடன் கண்டித்தார்.

          உடனே குழாய் இணைப்பு அறுப்பட்டது. மீண்டும் முதல்வரின் தங்கை குடத்துடன் அடுத்த தெருவில் தண்ணீருக்காக வரிசையில் நின்றார். காமராசரின் வாழ்க்கை முறை இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விட்டது.

          1967- ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் காமராசர் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சீனிவாசன் என்ற மாணவர் தலைவரிடம் தோற்றார். இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவராக இருந்து, இரண்டு முறை பிரதமர்களை உருவாக்கி, ‘கிங் மேக்கர்’ என்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட தமிழன், உள்ளூர்த் தமிழர்களால் – செக்கிற்கும், சிவலிங்கத்திற்கும், வித்தியாசம் தெரியாதவர்களால் மாணிக்கத்திற்கும், கூழாங்கல்லுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களால் பேதம் தெரியாத மனிதர்களால் தோற்கடிக்கப்பட்ட போது தமிழகமே கண்ணீரில் மூழ்கியது.

          பத்திரிக்கையாளர்கள் ஆழ்ந்த கவலையுடன் காமராசரைச் சந்தித்தனர். ‘உங்கள் தோல்வி குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டனர். ‘தேர்தலில் நான் தோற்றேன். ஜனநாயகம் ஜெயித்துவிட்டது’ என்று சிரித்துபடி சொன்னார் பெருந்தலைவர்.

          ‘நீங்கள் தோற்றதற்கும், ஜனநாயகம் வென்றதற்கும் என்ன சம்பந்தம்?’ என்று அவர்கள் கேட்டனர்.

          ‘சம்பந்தம் இருக்குன்னேன்... ஒரு மாநில முதல்வராய் இருந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்த என்னை ஒரு மாணவன் தோற்கடிக்க முடியும்னா, அதுதானே ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி. இந்த ஜனநாயக உரிமை எல்லோருக்கும் கிடைக்கணும் தானே நான் ஒன்பது வருஷம் ஜெயிலில் இருந்தேன்’ என்று முகம் மலர்ந்தபடி சொன்னார்.

·        இந்திய சுதந்திரப் போரில் 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசம்.

·        12 ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர், 5 முறை சட்ட மன்ற உறுப்பினர்.

·         4 முறை நாடாளுமன்ற உறுப்பினர். 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வர்.

·        5 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர். 2 முறை இந்திய பிரதமர்களை உருவாக்கிய ஒரே தமிழர். இத்தனை பெருமைகளுக்குப் பின்பும் தனி வாழ்வில் அந்த மனிதருக்கு மிஞ்சியது 60 ரூபாய், 10 கதர் வேட்டி சட்டை.

          காமராசர் கண்மூடினார். அவர் வாழ்ந்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக் கொண்டார். அவர் பயன்படுத்திய காரைக் கட்சி எடுத்துக் கொண்டது. அவருடைய உடலை நெருப்பு எடுத்து கொண்டது. அவரது பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது.

பார்வை நூல்

1.  தமிழருவி மணியன், மறக்க முடியாத மனிதர்கள், கற்பகம் புத்தகாலயம், தியாகராய நகர், சென்னை -600 017.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...