பெண்ணே உன் வாழ்க்கை உன் கையில்!
ஒளி – இருள், பகல் – இரவு, மலை-மடு, ஆக்கம் – அழிவு, தோற்றம் – மறைவு, என்பன போன்ற
இருமைகள் உலகை இயக்குகின்றன. உலகின் உயிரோட்டம் உயிரினங்களின் ஆண் – பெண் எனும்
இருமையால் இயங்குகின்றது.
இவ்வுலகில் இயற்கையாகத் தோன்றியது உலகம், இயற்கையாக தோன்றிய இவ்வுலகில், ஓர் அறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிரினங்கள் இயற்கையின் போக்கில் சூழலுக்குக் கேற்ப வாழ்க்கையை நடத்துகிறது. அவ்வுயிர்களினால் இந்த உலகம் மாற்றம் அடையாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் இருந்தது.
ஆனால் மனித உயிர்களாகிய நாம் இயற்கையாக உருவான இவ்வுலகத்தையும், ஆண் – பெண் என்று சரிநிகர்
சமமாக வாழாமல், ஆணுக்குப் பெண்
அடிமை, பெண்ணுக்கு ஆண் அடிமை என்றும் ஆண் தான் மூலதனம் என்றும் நம்
முன்னோர்கள் உருவாக்கியுள்ளனர். ஆணுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்கள் ஆண்கள் வழி வாழவேண்டும் என்றும் மாற்றி விட்டோம். இம்மாற்றம் மனித சமூகத்தைத்
தவிர எந்த உயிரினங்களிலும் இல்லை.
நம்
முன்னோர்கள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என்று அனைவரும் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம்
கொடுத்து அவர்களுக்கு ஆணாதிக்க மனநிலையை உருவாக்கிவிட்டனர். நம்நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிப்பப்படும் நாடகங்களும், திரைப்படங்கள், சிறுகதை, நாவல், நாடகம் என்று அனைத்தும் ஊடகங்களும்
இதையே வலியுறுத்துகின்றன.
ஒரு நாடு நன்கு முன்னேற வேண்டுமானால் குடும்பம்
ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதற்கு நான் பெரிது நீ பெரிது என்ற ஈகோ இருந்தால் குடும்பமும்
முன்னேறாது. நாடும் முன்னேறாது. எனவே அடிமைத்தனம், போட்டி, பொறாமை இல்லாமல்
அவரவர் வேலையை பொறுப்புணர்ந்து செய்தால் குடும்பமும் நாடும் முன்னேறும். ஊடகங்கள் அனைத்தும் இக்கால குழந்தைகளுக்கு மனதில் பதியும் வண்ணம் நல்ல கருத்துக்கள் கொண்டு நிகழ்ச்சிகள் வழங்க வேண்டும்.
அக்காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை
இருந்தது. அப்பொழுது தாத்தா- பாட்டி, பெரியப்பா -பெரியம்மா, சித்தப்பா- சித்தி, அத்தை
- மாமா, அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று வாழ்ந்தார்கள். அக்கம்பக்கம் வாழ்பவர்களும் சாதி, மதம் வேற்றுமையின்றி முறை வைத்து தாத்தா, பாட்டி, அத்தை, மாமா என்று பழகி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். ஆகையால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக பாதுகாப்புடன் இருந்தார்கள். பாலியல் வன்கொடுமை நாம் பார்த்ததில்லை. கேட்டதில்லை. ஆனால் இன்றைய நிலையில்
பாலியல் கொடுமை அதிகமாக உள்ளது. முற்காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது இன்று
அதிகளவில் நடைபெறுகிறது. இச்செய்தி எல்லாம் படிக்கும்போதும், கேட்கும்போது மனம் பாரமாக
உள்ளது. அம்மாக்கள் பெண்பிள்ளைக்கு அறிவுரைக் கூறுவது போல் ஆண்பிள்ளைகளுக்கும் கூறுவேண்டும்.
பாலியல் பிரச்சனைகளுக்குச் சட்டம் கடுமையானதாக
இருக்க வேண்டும். தண்டனை அதிகமானால் தவறுகள் குறையும். எனவே பாராபட்சம் பார்க்காமல்
கடுந்தண்டனை வழங்கவேண்டும். எதிர்வரும் சமுதாயத்திற்கு நல்ல வளமான வாழ்க்கையை அமைத்துக்
கொடுப்போம். எனவே ஆண்கள் பெண் பிள்ளைகளைப் பொறுப்புணர்வுடன் நடத்த வேண்டும்.
எங்கள் காலத்தில் அம்மா அப்பாவிடம் பயம் இருந்தது. நம் அப்பா, அம்மாவிற்குக் கெட்ட பெயர் வரக்கூடாது என்று முன் எச்சரிக்கையுடன் இருப்போம். ஆண்பிள்ளைகளிடம் அதிகம் பேசமாட்டோம். தொட்டுப் பழக மாட்டோம். ஆனால் இன்று தொடுதல் சர்வ சாதாரணமானதாக ஆகிவிட்டது. இந்த நிலை மாறவேண்டும். நமக்கு சரிநிகர் சம உரிமை வேண்டும் தான். அதை நாம் கல்வியில், முன்னேற்றத்தில், வேலையில், தொழிலில், காட்ட வேண்டும். தொட்டுப் பேசுவதிலோ, Love. Bestie. Living என்று வாழ்க்கை என்று வாழக் கூடாது.
பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள
வேண்டும். முள் மேல் சேலை பட்டாலும், சேலை மேல் முள் பட்டாலும் சேலைக்குத்தான் சேதம்
முள்ளுக்கு இல்லை. எனவே அதை மனதில் கொண்டு நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
வாழ்வது ஒரு வாழ்க்கை அதை சிறந்த முறையில் வாழ்வோம். அடுத்தவர் பொறாமை கொள்ளுமாறு
வாழ்வோம். ஒவ்வொரு நிமிடமும் நமக்கு பொக்கிஷம். அதை வீணடிக்காமல் மகிழ்ச்சியாக வாழ்!
பிறரை மகிழ்வித்து மகிழ்!
பெண்ணே
உன் வாழ்க்கை மற்றவர் கையில் இல்லை!
உன் வாழ்க்கை உன் கையில்!
அனைத்துச்
சகோதரிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!
Comments
Post a Comment