மொழி வழிச்
சிந்தனைகள்
மக்களை மாக்களிலிருந்து பிரித்துக் காண்பிப்பது மொழி. அத்தகைய சிறப்புடைய
மொழி என்பது அழகிய மலர் போன்றது. அம்மலர் சூடினால் அழகாக இருக்கும். நுகர்ந்தால்
மணமாக இருக்கும். அதைப் பிழிந்தால் நல்ல மருந்து கிடைக்கும். பயன்படுத்தாமல் பூட்டி வைத்தால் சருகாகும். தமிழும் அப்படிதான்
பூட்டி வைத்தால் சருகாகும்.
அறிவியலும்
தமிழும்
காணாப் பொருளைச் சொன்ன தமிழுக்குக் காணும் பொருளை ஆராய்தல் முடியாதா? நமது குறையை
மொழியை மீதேற்றுதல் மன்னிக்க முடியாதது. தமிழில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அறிவியல் கருத்துக்கள்
அரும்பியிருந்தும் அத்துறையை முறையாக வளர்த்துக் கொள்ள தவறிவிட்டார்கள். தமிழுக்கு அறிவியல்
புதிதன்று, அறிவியலுக்கும்
தமிழ் புதிது அல்ல. நூற்றுக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே தமிழில் அறிவியல் கருத்துக்கள்
நடைபயின்றதுண்டு.
·
தாவரவியலை எடுத்துக்
கொண்டால், மூவாயிரம் ஆண்டுகட்கு
முன்னர் தொல்காப்பியத்தில் செடி, கொடிகளுக்கு உயிர் உண்டென உணர்த்தியது. அது போலவே வள்ளல்
பாரியும், முல்லைக் கொடியின்
துன்ப நிலை உணர்ந்து நெடுந்தேரினை நிறுத்தினான். இங்ஙனம் இருந்தும் தமிழில் தாவரவியல், தத்தவ நூல்கள்
வளரவில்லை. நாம் வளர்க்கவுமில்லை.
·
புறநானூற்றுக்
காலத்தில் வாழ்ந்த புலவர் ”வலவன் ஏவா வான ஊர்தி” என்று குறிப்பிடுகிறார். இன்றைய விஞ்ஞானம் புறநானூற்றுத் தமிழன் கண்ட அளவிற்கு முன்னேறவில்லை. ஏனெனில், இன்று ஆளோட்டும்
விமானமே இருக்கிறது.
·
கம்பர், இராவணன் வானவீதி
வழியே பூத்தேரில் சென்றதாகச் சொல்லுகிறார்.
·
திருத்தக்கதேவர், ”மயிற்பொறி” என்ற பெயரால்
வானஊர்தியைப் பற்றி விளக்கிக் கூறுகிறார்.
இக்கருத்துக்களை
முன்னோர் வழிப்பெற்ற தமிழர்கள் அவற்றைப் பார்த்து ரசித்தனர். நடைமுறைக்குக்
கொண்டு வர மறுத்தார்கள். அக்கருத்துக்கள் கொண்ட பாடல்களை ரசித்தனர். அனுபவத்திற்கு
கொண்டு வரவில்லை. கவிஞரின் அறிவையும், முயற்சியையும் நம்பாத பிற்போக்கு மனம் படைத்த மதவாதிகள் இராவணன்
வானவீதியில் பறந்ததற்குக் காரணம் அவன் சிவபெருமானிடம் பெற்ற வரமே என்று சமாதானம் கூறி
மனித முயற்சியை அறியாமையில் ஆழ்த்தினர்.
கையில் வெண்ணெயை
வைத்துக் கொண்டு நெய்க்கு அழும் கதையாக முடிந்தது.
உணர்வு மொழி
தமிழ்
ஓர் இனம் சிந்தனையால், செயலால், செல்வத்தால் செழித்து வளரத் தாய்மொழியே துணை செய்கிறது. அதற்கு கற்கின்ற
கல்வி தெளிவுடையதாக இருக்கவேண்டும். அதனால் சிந்தனையும், திறமையும் வளம் பெறுகின்றன. நம்முடைய தலைமுறையினரை அறிவியல் துறையில், பொருளியல் துறையில், தொழில் துறைகளில்
சிந்தனையில் வளர்ப்பது தலையாய கடமை. இக்கடமையை முறையாக செய்து முடிக்கப் பயிற்சி மொழி தாய்மொழியாகவே
இருக்க வேண்டும். சிந்தனை ஊற்று தாய்மொழியால் திறக்கப் பெறுகிறது.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில மொழியின் மூலம் அறிவியல், தாவரவியல், பொருளியல் படித்த
ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கில் வெளிவந்துள்ளனர். அவர்களில் பலர் அத்தகைய ஆசிரியத் துறைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களில்
பலருக்கு அவர்கள் பயின்ற துறையில் சுவையில்லை. அன்றாட வாழ்க்கையில் அந்த கண்ணோட்டம் அமையவில்லை. அத்துறையில்
அவர்கள் ஆராயவுமில்லை. காரணம், அவர்கள் பயிற்சி, சிந்தனை வழிப்பட்டதல்ல. ஏதோ அவர்கள் படித்தார்கள். தேர்வுக்கும் தொழிலுக்கும் பயன்பட்டது. அப்பயிற்சியைச்
சிந்தனை மொழியாகிய தாய்மொழியில் பெற்றிருந்தால் தொடர்ந்து சிந்திருத்திருப்பார்கள். ஆராய்வார்கள். அதனால் அவர்களுக்கும்
பயனுண்டு. அவர்களை ஈன்றெடுத்த
நாட்டிற்கும் பயனுண்டு.
கவிஞன் பாரதி, ”யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், இளங்கோவைப்
போல் பூமிதனிலே யாங்கணுமே பிறந்ததில்லை” என்று பாடுகின்றார். இக்கவிஞர்கள் கவிஞர்கள் ஆனவர்களல்ல, கவிஞர்களாக
பிறந்தார்கள். அங்ஙனம் பிறப்பதற்கு
சூழ்நிலை தமிழகத்தில் இருந்தது. அதுபோல நாம் விஞ்ஞானிகளை ஆக்க விரும்பவில்லை. விஞ்ஞானிகளாகப்
பிறக்க விரும்புகின்றோம். அதற்குரிய சூழ்நிலையைத் தமிழகத்தில் உண்டாக்க வேண்டுமானால், பயிற்சி மொழியைத்
தாய்மொழி ஆக்க வேண்டும்.
தாய்மொழி வாயிலாகப் பெறும் அறிவு உழுத நிலத்தில் மழை பெய்தது போல, பிறமொழி மூலம்
பெறும் அறிவு பாறை நிலத்தில் மழை பெய்தது போல, தாய்மொழி மூலம் பெறும் அறிவு, அளவில் சிறியதாக இருப்பினும் தன்னியல்பான சிந்தனையின் வழி
மேலும் சிறந்த வளர வாய்ப்புண்டு! அது ஊற்றுக் கேணி போல. பிறமொழி மூலம் பெறும் அறிவு அளவில் பெரிதாக இருந்தாலும், சிந்தனை சிறக்க
வழியில்லாததினால் நீர் நிறைத்து வைக்கும் குளம் போலவே அமையும். அது மேலும்
வளர வாய்ப்பில்லை.
அண்மைக் கால கவிஞன் தமிழன்னையின் திருமேனியில் சில பல அணிகள் இருப்பதாகக் கவிதை
செய்துள்ளான். அன்னை மீதுள்ள
அணிகலன்கள் அனைத்தும் நம்முடைய பாட்டன் காலத்திலும், முப்பாட்டன் காலத்திலும் படைக்கப்பட்ட இலக்கியங்கள். நம்முடைய தலைமுறையில் நிறையக் கதைகள் செய்திருக்கிறோம். என்று பெருமை
பேசிக் கொள்ளலாம். அவர்கள் நிலை இரங்கத்தக்கது.
உலகில் மற்ற இனங்களோடு நாமும் பெருமை பெற்று வாழவேண்டுமென்று விரும்பினால், வாழ்க்கைக்குரிய
அறிவியல், பொருளியல், தொழிலியல், உளவியல், சமூகவியல் என
அத்தனை துறைக்கலைகளையும் வளர்க்க வேண்டும். அதற்குத் தாய்மொழி, பயிற்சி மொழியாக இருப்பது பெரிதும் உதவி செய்யும்.
தாய்மொழிச்
சிந்தனை
நம் நாட்டில் மொழிவழி, பண்பாட்டின் வழி, சிந்திக்கச் சுதந்திரம் வேண்டும். அந்தச் சுதந்திரம்
இல்லையென்றால், இந்த நாட்டை
சுதந்திர நாடு என்று சொல்லுவதிலோ, நாம் ஆளுகின்றோம் என்று சொல்லுவதிலோ பொருளில்லை.
இந்த நாட்டில் நெய்வேலியில் நிலக்கரியையும், சேலத்தில் இரும்பையும், எண்ணற்ற கருவிகளையும் உற்பத்தி செய்கிறோம். இவற்றை அனுபவிக்க
மனம் படைத்த மனிதர்களைப் படைக்கவில்லையென்றால் என்ன பயன்? அவற்றை யார் அனுபவிப்பது?
நாட்டு மக்களின் சிந்தனை ஊற்றை அடைத்து விட்டால், நாட்டிலே தேனாறும், பாலாறும் ஓடினாலும் பலனில்லை. தாய்மொழியில் ஒன்றைச் சொல்லி ஆணையிட்டுப் பாருங்கள். அவர்களின் உள்ளுணர்வுகளையும், ஊக்கத்தையும்
கவனியுங்கள்.
ஆட்சியின் பேரால், வைதிகத்தின் பேரால், மொழியின் பேரால் ஒவ்வொரு காலத்திலும் நாம் ஒவ்வொரு மொழியைச்
சுமந்து வந்திருக்கிறோம். இன்று ‘ஒருநாடு’ ‘ஒருமைப்பாடு’ என்று பெயரால் இந்தியைச் சுமந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆங்கிலேயன், அவனுடைய ஆட்சிச் சக்கரம் செவ்வனே நடக்க, நமக்கு குமாஸ்தா
வேலை செய்வதற்குரிய படிப்பைக் கொடுத்தான். நம்மவர்களும் வேலை பெறுவதற்காக ஆங்கிலத்தைப் படித்தார்கள். எனவே இன்று
அவர்கள் தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா? என்று கேட்கின்ற நிலையில் இருக்கின்றோம். ஆங்கிலக் கல்வி
வெள்ளையன் வைத்துப் போன அடிமை முத்திரை. இன்னும், அந்த அடிமை முத்திரையையே சுமந்து கொண்டிருக்க வேண்டும் என்று
கருதலாமா? உலகத்தின் முன்னே
நம்மை ஒரு தனிப் பெரும் சக்தியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற பேராசை இளைஞர்களுக்கு
வேண்டும். தன்னியல்பாகப்
பெருமித உணர்வோடு வாழ்வேன் என்ற உணர்ச்சி இளைஞர்களுக்கு வரவேண்டும். நடப்பதற்குரிய
காலை இழந்தாலும் இழக்கலாம். நமக்கு எண்ண, சிந்திக்க, ரசிக்க, அழ, சிரிக்கப் பயன்படுகின்ற தாய்மொழியை இழக்க முடியாது.
தாய்மொழி, ஆயிரம் ஆண்டுகாலப் பயிர். நமது தாய் மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரியம் உள்ள மொழி. முற்போக்குக் கருத்துக்கள், எண்ணங்களுடன் வளரத்த மூத்த மொழி,
” இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம்
செய்து விடல்”
என்று குறள் இனிய பண்பாட்டு
மொழியை உணர்த்துகின்றது.
ஆட்சிமொழி
இந்திய ஆட்சி மொழிச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது. தமிழன் தன்னுடைய
தாய் மொழியைக் காப்பாற்றி வளர்க்க வேண்டும் என்ற உறுதியில்லாமல் பதவி, பணம் கருதித் தாய்மொழிப் பற்றை இழப்பானாகில் ‘ மெல்லத் தமிழினிச்
சாகும்’ என்ற கவிஞன்
கூற்று உண்மையாகிவிடும்.
பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் நாட்டில் ஆட்சி மொழிச் சிக்கல் தவிர்க்க
முடியாதது. 782 மொழிகளுக்கு
மேற்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் இந்தியக் கூட்டாட்சியில் வாழ்கின்றனர். அவற்றுள் காலத்தாலும், கருத்தாலும்
சிறந்தவைகளைப் பேசுகின்ற மக்கள் தொகையின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்திய தேசிய
மொழிகள் 14 என்று அரசு
முடிவெடுத்துள்ளது. தமிழும் இந்தியத் தேசிய மொழியேயாகும். பல்வேறு மொழியினர்
வாழும் கூட்டாட்சிக்கு எப்படியும் தொடர்பு மொழி, பொது மொழி தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. அத்தகு பொதுமொழியாக
இந்தியைத் தேர்ந்தெடுத்தது கொள்கையளவில் நமக்கு முரண்பாடோ, மறுப்போ இல்லை. ஆனாலும் ஒரு பெரிய நாட்டுக்கு ஒரு மொழிதான் ஆட்சிமொழியாக
இருக்க வேண்டும் என்ற கருத்தில் எவ்வளவு நியாயம் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். ஐரோப்பிய நாடுகள்
பலவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பல மொழிகள் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. அது போல ஏன்
நம்முடைய நாட்டில் மொழி இனங்களின் தலைமை மொழிகளையாவது ஆட்சிமொழி ஆக்கக் கூடாது என்று
கேட்கத் தோன்றுகிறது. மேலும், இந்தி பேசாத மாநில மக்களின் முன்னேற்றத்திற்கு என்ன உத்திரவாதம்
இருக்கிறது.
டில்லியில் தமிழா? ஆங்கிலமா? இந்தியா? என்ற சண்டைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஏனோ தமிழகத்தில், தமிழா? ஆங்கிலமா? என்ற கேள்விக்குக்
கொடுக்கப் பெறவில்லை?
தமிழர்களிடத்தில் தாய்மொழி உணர்ச்சி போதிய அளவு உருப்பெற்று வளரவில்லை. தமிழே என்ற
இலட்சிய நோக்கம் உரம் பெற்றாலன்றித் தமிழுக்கும் எதிர்காலமில்லை! தமிழர்க்கும்
எதிர்காலமில்லை.
தமிழின் எதிர்காலம்
இந்திய அரசியல் சட்டத்தின்படி மாநிலங்களின் ஆட்சிமொழி மாநில மொழியேயாகும். அதையொட்டி உயர்திரு
காமராசர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது, தமிழகத்தின் ஆட்சிமொழி ‘தமிழ்’ என்று சட்டம் செய்தார்கள். நடைமுறைக்குக் கொண்டு வருவதிலும் அக்கறை காட்டினார்கள். ஆனாலும் வளர்ச்சி
மெதுவாக இருந்தது. இப்பொழுது திடீரென்று ஆங்கிலத்தை இணை ஆட்சிமொழியாக ஆக்கச்
சட்டம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன வந்தது?
ஆங்கிலம் வளர்ந்த, உலகறிந்த அறிவியல் மொழி. உலகில் பலர் பேசுகின்ற மொழி. ஆங்கில அறிவும் நுட்பமும் அருந்தமிழை வளர்க்க உதவும். ஆனாலும் ஆங்கிலமே
எல்லாமும் ஆகிவிடக்கூடாது. ஆதலால் தமிழகத்தில் தமிழிலேயே ஆட்சிமொழி நடைபெற வேண்டும். இது சுதந்திரம்
வழங்கிய உரிமைகளில் ஒன்று. மத்திய ஆட்சியில் ஆங்கிலம் ஆட்சிமொழியாக நீடிக்கும். ஆதலால் இங்கும்
ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அவர்கள் இந்தி வந்துவிடும்
என்ற அச்சத்தால் இதை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்கள்.
பார்வை நூல்
1. மொழிவழிச் சிந்தனைகள் - தவத்திரு குன்றக்குடி
அடிகளார், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், சென்னை.
Comments
Post a Comment