தாய்மொழியின் மகத்துவம்!
தாய்மொழி மக்களுக்கு விழி போன்றது. தாய்மொழியின்
வழியில்தான் ஓர் இனம் வளர்ச்சி பெற முடியும். தமிழர்கள் நீடித்து நல்வாழ்வு பெற முடியாமல்
போன காரணங்களாக வாழ்க்கையில் அடிக்கடி பிறமொழிகளின் நுழையும், அவ்வழி அயலவர்களின் ஆட்சியும்
ஆகும்.
தாய்மொழியின்
மகத்துவம்
தாய்மொழி வழியில் தான் ஓர் இனம் சிறந்த தெளிவான
ஆழமான, தன்வயப்பட்ட அறிவைப் பெற முடியும். இது மறுக்கவோ மறக்கவோ முடியாத உளவியல் சார்ந்த
உண்மையாகும். தாய்மொழி வாயிலாகப் பெறும் அறிவானது உழுத நிலத்தில் மழை பெய்தது போல,
பிறமொழி மூலம் பெறும் அறிவு பாறை நிலத்தில் மழை பெய்தது போல, தாய்மொழி மூலம் பெறும்
அறிவு – அளவில் சிறியதாக இருப்பினும் – தன்னியல்பான சிந்தனையின் வழி மேலும் சிறந்து
வளர வாய்ப்பண்டு.
இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் அடித்தளம்
மொழி வழி உரிமையும் சிந்தனையும் ஆகும். உலகியல் வாழ்வுக்கும் அறிவிற்கும் பன்மொழிப்
பயிற்சி கட்டாயம் தேவைதான். ஆனால், பயிற்சி மொழி எந்தச் சூழலிலும் தாய்மொழியாகவே இருத்தல்
வேண்டும். வாய்க்கால்களின் வழியாகத் தண்ணீர் ஓடி வரலாம். அங்ஙனம் ஓடிவரும் தண்ணீர்
வாய்க்காலுக்காக அல்ல – வயலுக்காகவே. அது போல நாம் பன்மொழி பயிலலாம். ஆனாலும், தாய்மொழியாகிய வயலை வளப்படுத்துதலே
பன்மொழிப் பயிற்சி.
நாட்டு மக்களின் சிந்தனை ஊற்றை அடைத்து விட்டால்,
நாட்டிலே தேனாறும் பாலாறும் ஓடினாலும் பலனில்லை. மனிதனின் உரிமைக்கும் உணர்வுக்கும்
மொழி ஊற்றுக்கால் போல; தாய்மொழி வாயிலாக இயல்பாக எண்ணுகிறோம் – இயல்பாகச் சிந்திக்கிறோம்
– இயல்பாகவே பேசுகிறோம். அயல்மொழி வாயிலாக இயல்பான எண்ணம், சிந்தனை, பேச்சு இருக்க
முடியாது. அயல்மொழிகளில் படிப்பது போலிக் கால்களால் நடப்பது போன்றது. சொந்த மொழியில்
படிப்பது சொந்தக்காலில் நடப்பது போல, சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில்
ஒன்றைச் சொல்லி ஆணையிட்டுப் பாருங்கள். அவர்களின் உள்ளுணர்வையும் ஊக்கத்தையும் கவனியுங்கள்.
வெளிநாடுகளில் சென்று சுற்றிவர ஆங்கிலம்
வேண்டும் என்கிறார்கள். ஆனால் குருஷேவும், புல்கானினும், எலிசபெத் இளவரசியும், எடின்பர்க்கோமகனும்
இந்தியாவுக்கு வந்த போது இந்தியையும், தமிழையும் படித்துக் கொண்டா வந்தார்கள். எனவே
உலக உறவுக்கு ஆங்கிலம் தான் தேவை என்பது இல்லை.
தாய்மொழி, ஆயிரம் ஆண்டுகாலப் பயிர். பாரம்பரியம்
உள்ள மொழி முற்போக்குக் கருத்துக்கள், எண்ணங்களுடன் வளர்ந்த மூத்த மொழி.
”இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம்
செய்து விடல்”
என்று கூறும்
இனிய பண்பாட்டு மொழி. மனிதனின் உரிமைக்கு மொழி ஊற்றுக் கோல் போல, தாய்மொழி வாயிலாக
இயல்பாக எண்ணுகிறோம். அயல்மொழி வாயிலாக அது இயலாத ஒன்றாகும்.
தமிழ்மொழி ஓர் அதிசய மொழி! அந்த மலரைச்
சூடினால் அழகாக இருக்கும், நுகர்ந்தால் மணமாக இருக்கும், அதைப் பிழிந்தால் நல்ல மருந்து
கிடைக்கும். மணம் தரும் வாசனை திரவியம் கிடைக்கும். இத்தகைய சிறப்புமிக்க மொழியை நாம்
பயன்படுத்தாமல் பூட்டி வைத்தால் சருகாகும்.
நம் மொழியைக் காப்போம்! வளர்ப்போம்!
எதிர்காலச் சந்ததியினரின் கையில் ஒப்படைப்போம்!
பார்வை நூல்
1.
மொழிவழிச் சிந்தனைகள்
– தவத்திரு குன்றக்குடி அடிகளார், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், சென்னை – 15.
Comments
Post a Comment