நீர் மேலாண்மை
(புத்தக
மதிப்புரை – பகுதி 95)
(ஒலிப்பரப்பிய
நாள் – 16.04.2025, நேரம் – மாலை -3.30 மணி)
புதுகை பண்பலை
91.2 சமுதாய வானொலி புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சிக்காக நீர் மேலாண்மை என்னும் தலைப்பில் அமைந்த புத்தகத்தின் பற்றிப் பேசிய கட்டுரையின் தொகுப்பாகும்.
பெருமாங்குப்பம் சா.சம்பத்து அவர்கள் எழுதிய புத்தகத்தை வேலூர், இரேணுகாம்பாள் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள்.
நூலாசிரியர் தமது முன்னுரையில் இப்புத்தகத்தை எழுதி முடிக்க எடுத்துக் கொண்ட
காலம் பத்து ஆண்டுகள், காலம் வழங்கிய கருத்துக் கொடையே இந்நூல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நூல் பூமியும், அதில் வாழும் உயிர்களும் போற்றப்படவேண்டும் என்ற ஆவலின் விளைவாக
உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் வாழ்வை
பேணுதல், நதிநீர் பிரச்சனை, இந்தப் பூமியை
வருங்காலத் தலைமுறையினர் வாழ்வதற்குத் தகுந்ததாக பாதுகாத்துக் கொடுத்தல் என பலவகையான தளங்களில்
கருத்துக்களை வழங்கியுள்ளது.
நிலம்
பழமை உயிரனங்களின் பரிணாம வளர்ச்சியே மனித இனம் என்கிறது உலக உயிர்க் கொள்கை. இந்த அமைப்பு
முறையை,
”மண் திணிந்த நிலனும்
நிலனேந்திய
விசும்பும்
விசும்பு
தைவரு வளியும்
வளித்
தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை” (புறம்,2)
என்ற புறநானூற்றுப் பாடலில்
அணுக்குள் செறிந்த நிலமும், நிலத்தொடு வளிமண்டலமும், வானோடும் காற்றும், காற்றால் தீயும், தீ குளிர்ந்து நீரும் தோன்றின் எனத் தமிழனின் அறிவியல் சிந்தனையினைக்
காணலாம்.
நிலப்பரப்பின்
தன்மைகள்
பாறைகளின் மேற்பரப்பானது வானிலை, காலநிலை, ஈரப்பதம், வெப்ப ஏற்ற இறக்கங்கள், ஆகியவற்றால்
சிதைவுற்று மண் நிறைந்த நிலப்பரப்புடன் காலப்போக்கில் உருவானது.
”எட்மண்ட ஹார்லி எனும் அறிஞர் கடல் உப்பினை ஆய்வுக்குட்படுத்தி ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகளுக்கு
முன் தோன்றிய இந்த பூமி 12 ஆயிரத்து 960 கிலோ
மீட்டர் விட்டமுடையது” என அறிவித்துள்ளார்.
உலகில் 43 நாடுகள் நிலப்பரப்பாலும், 98 நாடுகள் கடலாலும் சூழப்பட்டவையாகும்.
நீரின் தன்மைகள்
”நாடக ஆசிரியர் சேக்ஸிபியர் அவர்கள் தனது படைப்பு இலக்கியத்தில் ஒரு கதாப்பாத்திரத்தின்
வழி தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உன்னத உறவின் மேன்மையை தேன் போன்றதன்று, அது தூய நீரைப்
போன்றதாக இருக்க வேண்டும் எனும் விழைவைப் பதிய வைத்து அதனூடே தேன் ஒரு நிலையில் திகட்டி
விடும். நீர் என்றால்
காலமெல்லாம் திகட்டாமல் நின்று நிலைபெறும் என்பார்”
நீரின் தூய்மைத் தன்மையை உறவின் உதாரணத்திற்கு எடுத்து கையாண்ட காலம் அது. ஆனால் இன்று
உலகமே மாசுப் பெட்டகமாக மாறிவிட்டது.
நீரின் ஆற்றல்
நாம் உயிர்த்திருப்பதற்கு ஆதாரமாக உள்ள நீர் மருந்து உற்பத்தி, மருத்துவ சிகிச்சை
மறை, அணு உலைகளில்
யூரேனியம் செறிவூட்டல், இயந்திர உற்பத்தித் துறை, முதலிய துறைகளில் நீரின் ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.
கடல் நீரில் வந்து கலக்கும் பொருட்களால் அதன் தன்மை மாறுபடுகிறது. கடல்நீர் உப்புக்
கரிப்பதற்கு இந்த மாற்றமே காரணம்.
”நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா
தாகி விடின்” (குறள்
-17)
என்று நீர்ச் சுழற்சியில்
பிறழ்ச்சி ஏற்படின் நெடுங்கடல் நீரின் தன்மையும் மாறும் என்பதை குறள் வழி புலனாகிறது.
கடல் நீருக்குள் உள்ள எரிமலைகள் வெளியிடும் எரிமலைக் குழம்புகளில் இருக்கும்
தாது உப்புகளும், கடல் வாழ் உயிரினங்கள் இறந்து மக்கி அதனால் அமைவுறும் தாதுக்களும்
கடல் நீர் உப்புக் கரிப்பதற்குக் காரணமாகிறது.
காற்று
மலர்கள் மலர்தல், மகரந்தம் இடம் பெயர்தல், கடலில் பாய்மரக் கப்பல் பயணித்தல், மின் ஆற்றல்
பெறுதல் எனக் காற்றின் தனி செயல்களை நாம் நிரல் படுத்தலாம்.
கீழ்த் திசையிலிருந்து வீசும் காற்றினைக் ‘கொண்டல்’ என்றும், வடக்கிலிருந்து வீசும் காற்றை ‘வாடை’ என்றும், தென்திசையிலிருந்து வீசும் காற்று ‘தென்றல்’ என்றும், மேற்கிலிருந்து
வீசும் காற்றை ‘கோடை’ என்றும், காற்று வீசும்
திசையை பொறுத்து அதற்கு அடைமொழி இட்டு அழைத்தவன் தமிழன்.
காற்றின் இயக்கத்தைக் கண்டறிந்த தமிழன், காற்றின் துணைகொண்டு மழைமேகம் மற்ற இடங்களுக்கெல்லாம் நீரை
கொண்டு போய் சேகரிக்கின்றது என்பதை உணர்த்திடும் முகமாக,
”கடல் முகந்து கொண்ட கமஞ்சூல் மா மழை
சுடர்
நிமிர் மின்னொடு வலன் ஏர்பு…” (அகம்,
43)
எனும் அகநானூற்றுப் பாடலில்
கதிரவனின் வெப்ப ஆற்றலுக்கு ஆட்பட்ட பெருங்கடல் நீர் ஆவியுற்றுப் பின்னர் கருமேகங்களாய்
உருவெடுத்து மின்னலொளி வீசி வலப்பக்கமாய எழும்பி செல்கிறது என்று குறிப்பிடுகிறது.
ஈரக் காற்றானது குறிப்பிட்ட திசையிலிருந்து குறிப்பிட்ட இடத்தை நோக்கி சென்று
மழையைத் தருவதே பருவமழை எனலாம். இந்தியாவில் வடகிழக்குப் பருவ மழை, தென்மேற்குப்
பருவமழை என இரு பருவ மழைக் காலங்கள் உள்ளன.
செயற்கை மழை
2016 – ஆம் ஆண்டு சூன் மாதத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநில மராத்வாடா
பகுதிகளில் செயற்கை முறையில் சில்வர் அயோடைடு எனும் வேதிப் பொருளை வானோடம் மூலம் விண்ணில்
தூவி மழையைத் தோற்றுவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் 1970 -களில் நிலவிய வறட்சியின் போது இம்முறை பின்பற்றப்பட்டது.
நீர்க்கலன்
‘நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருக’ எனும் பாடல்
நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கு வேண்டிய நீர் நிலைகள் பெருக காண்பாயாக என்று பாண்டியன்
நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் கேட்டுக் கொண்டதைப் புறநானூறு பாடல் வழி அறியலாம்.
”காடுகொன்று நாடாக்கிக்
குளங்தொட்டு
வளம் பெருக்கிப்
பிறங்கு
நிலைமாடத் துறந்தை போக்கிக்
கோயிலொடு குடிநிறீஇ”
என்று பட்டினப்பாலையில்
கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழமன்னனுக்கு நீர் ஆளுமை பகர்கிறார்.
நீர் நிலைகளை அவைகளின் அமைவிடம், பரப்பளவு, நீர் பெறும் தன்மை, பயன்பாட்டின் வகைப்பாடு போன்றவற்றைப் பொறுத்து குளம், குட்டை, கயம், கேணி, ஊருணி, கண்மாய், ஏந்தல், கரணை, தடாகம், வட்டம், பொய்கை, மடு, கலிங்கல், ஏரிகள், அணைகள் என்று அமைத்துப் பாதுகாத்தனர்.
தொன்றுதொட்டு தண்ணீரின் முக்கியத்துவத்தையும், நீர்ப்பாசனத்தின் இன்றியமையாமையையும் உணர்ந்திருந்த காரணத்தினால்
தான் நிலங்களின் நடுவிலும், மலையடிவாரங்களிலும், ஊருக்கு அருகிலும் குளங்கள் அமைத்து நீர் ஆதாரத்தைப் போற்றியுள்ளனர்
நம் முன்னோர்கள்.
”ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு” (குறள்,215)
என இதற்குச் சான்று பகர்கிறது
திருக்குறள்.
தஞ்சை ஓலை ஆவணங்களில் குளம், ஏரி, கலிங்கல், ஓடை, மடு, கயம், ஆறு, கிணறு, போன்ற நீர்ச்
சேமிப்புத்தளங்கள் தமிழகமெங்கும் காணப்பட்டதாகக் குறிப்புள்ளது.
அணைகள்
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில், திட்டக் குழுவின் பரிந்துரைகளின் படி தமிழ்நாட்டில்1947 முதல் 1967 ஆண்டிற்குள்
கீழ்பவானி அணை, மேட்டூர் அணை, அமராவதி அணை, பரம்பிக்குளம் அணை, வைகை அணை, சாத்தனூர் அணை, கிருஷ்ணகிரி அணை எனப் பல அணைகள் கட்டப்பட்டன.
ஆங்கிலேயர் காலத்தில் அணைகளுக்கு ஈடாக நீரை தடுத்து நில நீர் அளவை கூட்டவும், வெள்ளத்தைக்
கட்டுப்படுத்தவும் மணல் மேடுகள் அமைக்கப்பட்டது.
கல்லணை
வியத்தகு கோயில்களை மட்டும் கட்டிக் கொண்டிருந்த அன்றைய காலத்தில் விவசாயத்திற்காகக்
கரிகால் பெருவளத்தான் கி.பி. முதலாம் நூற்றாண்டில் கல்லணையைக் கட்டித் தமிழர்களைப் பெருமைப்படுத்தியது
போற்றத்தக்கது.
சர்.ஆர்தர் காட்டன்
என்பவர் ”இயற்கையின்
போக்கைக் கணித்து உருவாக்கப்பட்ட இந்த அணையின் தொழில் நுட்பத்தை, கல்லணையைக்
கட்டிய முன்னோர்களை நான் மனதார வணங்குகிறேன்” என்று கூறியுள்ளார்.
போர்டு ஸ்மித் என்பவர் ”பாறைகள் இல்லாத தஞ்சைப் பகுதியில் கல்லணை கட்டப்பட்டதை எண்ணி வியந்து சிறந்த சாதனை” என்கிறார். ஏனென்றால் ஆற்றுப்படுகையில் அணை கட்டும் தொழில் நுட்பம் 19 – ஆம் நூற்றாண்டின்
இறுதியில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்த அணையை அவர் ’கிராண்ட் அணைகட்’ என்று வெகுவாகப்
பாராட்டினாராம்.
கவிஞனால் உருவான
அணை
அப்துல் காஸிம் ஹசன் அலி எனும் பிர்தௌசி
எனும் கவிஞன் ஈரான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் நகரத்தில் விவசாயக் குடும்பத்தில் (கி.பி.935 – கி.பி.1020) பிறந்தவன். அந்நாட்டு பேரரசன்
சுல்தான் முகம்மதுவின் நம்பிக்கைக் குரியவர்.
தூஸ் நகரில் ஓடும் நதியின் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலங்களில் நகரின் சில
பகுதிகளை அழித்துவிடுவதுண்டு. அந்நதியின் குறுக்கே அணையைக் கட்டுவது என்பதைத் தன் வாழ்க்கையின்
குறிக்கோளாகக் கொண்டிருந்த பிர்தௌசிக்கு காலம் கனிந்தது. 33 ஆண்டு கால அரண்மனை வாழ்க்கையின் பயனாக இதுவரை வாய்மொழி இலக்கியமாக
மட்டும் போற்றப்பட்டு வந்த பாரசீகப் பாரம்பரியம் பாரசீக இதிகாசம் ஆனது. செம்மொழித் தகுதியும் பெற்றது. 60 ஆயிரம் ஈரடிப் பாக்களுக்கு 60,000 தங்கக் காசுகளை பிர்தௌசியின் மறைவிற்குப் பிறகு அவனது ஒரே
மகளிடம் சீர்வரிசைகளுடன் ஒப்படைக்கப்பட்டது.
இப்பணம் தான் தூஸ் நகரத்தை அடிக்கடி சீர் குலைக்கும் அந்நகர நதியில் ஒரு பேரணையை
எழுப்ப உதவியது. தந்தையின் கனவு
மகளால் நிறைவேறியது.
தடுப்பணைகள்
தடுப்பணைகள் என்பது நீரோடும் பாதைகளின் குறுக்காக நீரோட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி
நிலத்தடி நீரை உயர்த்தவும், மண் அரிப்பைத் தடுக்கவும் எழுப்பப்படும் சிறு சிறு தடைச்
சுவர்கள் கொண்ட கட்டமைப்பு ஆகும்.
1990 – ஆண்டில் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா, சட்ச்சைச் சேர்ந்த விவசாயிகள் அந்நாட்டு அரசுடன் இணைந்து
கடந்த 10 ஆண்டுகளில் 1,05,000 தடுப்பணைகளைச்
சுமார் 1,480 கோடி ரூபாயில்
அமைத்துள்ளனர்.
1999- ஆண்டில் ராஜ்கோட்டைச் சேர்ந்த சமூக சேவகர் மன்சுக் சுவகியா
ஜீனாகட்டில் உள்ள ஜம்கா கிராமத்தில் உருவாக்கிய தடுப்பணைதான் ஒரு திருப்புமுனையை உருவாக்கியது. அக்கிராம மக்களே
பணம் சேகரித்து இரண்டு மாதங்களில் 52 தடுப்பணைகள் அமைத்தனர். 15 ஆண்டுகளாகப் பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் திட்டத்திற்குச்
செயல்வடிவம் தந்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இவை நீர் மேலாண்மையில் அவர்கள் கண்ட வெற்றியின் அடுத்த நிலை
ஆகும்.
கடல்
கடல் சந்திரனும் சூரியனும் மாறி மாறி முகம் பார்த்துக் கொள்ளும் கண்ணாடி. உலை மீனுக்காக
அலைவாணர்கள் வலை விரிக்கும் வீரக்களம் இது. காலவெள்ளம் தோற்றுவித்த நீலப் பள்ளம்.
கடல்தான் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. இராமனை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. புகழ்பெற்ற
தமிழ்ப் பேரரசர்கள் கடல் மூலம் வணிகத்திலும், வீரத்திலும் கடல் பயணம் மேற்கொண்டு முதன் முதலாகப் பல நாடுகளை
வென்றெடுத்த வரலாற்றை உலகிற்குப் பறை சாற்றியது.
உலகில் உள்ள பெருங்கடல்களை 5 வகைகளாகப் பிரிக்கின்றனர்.
1. ஆர்க்டிக் வட பெருங்கடல்
2. அண்டார்டிக் தென் பெருங்கடல்
3. மத்திய பசிபிக் பெருங்கடல்
4. அட்லாண்டிக் பெருங்கடல்
5. இந்துமாக் கடல்
இந்தியக்
கடற்கரையின் நீளம் 6000 கி.மீ. அந்தமான் நிக்கோபர் மற்றும் இலட்சத்தீவு கடற்கரைகளையும் சேர்த்தால் அதன் நீளம்
7516 கீ.மீ.ஆகும்.
கடல்நீரைச்
சுத்திகரித்துக் குடிநீராகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது உலகம். குறிப்பாக, பாலைப் பிரதேசங்களை உள்ளடக்கிய அரபு நாடுகள் தம் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி
செய்து கொள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் பெரிய பெரிய தொழிற்சாலைகளை நிறுவியுள்ளது.
இந்தத்
திட்டத்தின் செயல்பாட்டால் வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள் நில தாதுக்களாக மறு
சுழற்சியும் செய்யப்படுகிறது.
சூரியன், சந்திரன், பூமி ஆகியவற்றின்
சுழற்சியால் விளையும் ஈர்ப்பு விசையே கடல் அலைக்கு வழிகோலுகிறது. பௌர்ணமி தினங்களில்
சந்திரன் நெருங்குவதால் கடல் அலைகள் துள்ளியெழும். இந்தக் கடலலையும், அலை தழுவும்
கடற்கரை மணலும் தமிழரின் பண்பாட்டுத்
தளமாகவும், பொருள் நிலையை உயர்த்தும் வணிகத்தளமாகவும் அமைந்துள்ளது.
”வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர் பரப்பவும்
அளந்து அறியாப் பல பண்டம்....”
(பட்டினப்பாலை ,126 – 131)
எனும் பட்டினப்பாலையில்
மலையை நனைத்த கடல்நீர் மீண்டும் கடல் புகுதல் போலக் கடலினின்று நிலத்திற்கும், நிலத்திலிருந்து
கடலுக்குமாக அளத்தற்குரிய பண்ட வாணிபம் கடற்கரையில் நடந்தேறியதை நமக்கு அறிவிக்கிறது.
‘ஆழம்’ மற்றும் ‘அமைதி’ எனும் சொல்லுக்கும் ஒரே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் கடல். பல நிலைகளில்
ஒப்புமைப் புலமாகவும் காட்டப்பட்டிருக்கிறது. ‘கடலிலும் பெரிய கண்கள் அம்ம!’ என்று சீதையின் பரந்த கண்களை வியந்து கூறுகிறார் கம்பர்.
துன்பம் குடிகொண்ட இவ்வுலகத்தில் ‘மக்கள் சிந்திய கண்ணீர் கடல் நீரினும் அதிகமாயிருக்கும்’ என்றார் புத்தர்.
இவ்வாறு கடலானது அது தவழும் தாய்மடியை மழைத்தூறலால் நனைத்து நன்றி சொல்ல மறப்பதில்லை.
இத்தகைய சிறப்பும் செல்வமும் கொண்ட கடலின் இயல்பு நிலை திரியாமல் காப்பது நம்
கடமை
சுற்றுச் சூழல் மட்டுமன்றி உலக வெப்பமயமாதல் காரணமாகவும் பவளப் பாறைகள் அழியத்
தொடங்கிவிட்டது. 1998 – ஆம் ஆண்டு இந்தியப்
பெருங்கடல் பகுதியின் வெப்பநிலை வழக்கத்தைவிடக் கூடுதலான அளவில் சுமார் மூன்று மாதங்கள்
நிலவியதால், அவ் வெப்ப வேறுபாட்டைத்
தாங்க இயலாமல் 90 சதவீதப் பவளப்பாறைகள்
அழிவிற்கு உள்ளானதாகப் பிரிட்டன் வார்விக் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த கடல் உயிரியலாளரான
சார்லஸ் ஷெப்பர்ட் கூறினார்.
கடலைப் போற்றிப் பாதுகாக்க உலகம் முன்வரவேண்டும். கடல் ஒரு பெரும் நீர்வெளி மட்டுமல்ல. கடலில் தான்
கொடிய வெப்பம் சமாதானம் காண்கிறது. கடல்தான் மழைக்கு நாற்றங்கால்.
நீரும் விவசாயமும்
மனித நாகரிகம் வளர்வதற்கு விவசாயமே அடிப்படை. ஆரம்பக் காலங்களில் விலங்குகளை வேட்டையாடிப் பசியைப் போக்கிய மனிதன் பின்பு
காய்கனி கிழங்குகளை உணவாக உட்கொண்டான்.
பிற்காலத்தில் காட்டுப் புல்வகைகளைச் சமைத்து வளர்ந்த மனிதன், கால ஓட்டத்தில்
காடுகளில் இயற்கையாக வளர்ந்திருந்த இனம் அறியாத் தானியங்களைக் கல்கருவிகள் கொண்டு அரைத்து
உண்ணும் முறையைக் கண்டுபிடித்தான். அதற்கும் சில ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் உணவு தானியங்களை
விளைவிக்கக் கற்றுக் கொண்டான்.
விவசாயம் மனித சரித்திரத்தில் காட்டுமிராண்டியாக, நாடோடியாக அலைந்து திரிந்த மனிதன் ஓரிடத்தில் நிலையாக வாழ
மாற்றத்தை ஏற்படுத்தியது.
கி.பி. 629 -இல் இந்தியாவிற்கு
வந்த சீன யாத்திரிகன் அளித்திருக்கும் நற்சாட்சிப் பத்திரத்தில் பெரும்பாலான இந்தியர்கள்
நிலத்தை உழுதுப் பிழைக்கின்றார்கள். அரசனுக்குச் சொந்தமான நிலத்தைப் பயிரிடுவோர் விளைவதில் ஆறில்
ஒரு பங்கை அவனுக்கு வரியாக விரும்பிச் செலுத்துகிறார்கள் என்று சான்று பகன்றுள்ளார்.
தமிழன் ”வேளாண் அறிவியல் நுணுக்கம், உழைப்பாற்றல், இயற்கை வழி
ஒழுகுதல்” போன்ற உன்னத
மேலாண்மைப் பண்புகளால் மிளிர்ந்திருக்கின்றான் என்பதற்கு இதற்குத் தக்கச் சான்று. சில சாகுபடி
நிலங்களில் காணி நிலத்திற்கு 35 கலம் விளைச்சல் கொடுத்ததாக
ஆவணங்கள் அறிவிக்கின்றன.
நெல், கம்பு, கேழ்வரகு, துவரை, பச்சைப் பயறு, உளுந்து, காராமணி, கொள்ளு போன்ற பயிர்
வகைகள் தென்னிந்தியாவில் பயிரிடப்பட்டதாகத் தஞ்சாவூர் ஓலைச்சுவடிகள் கூறுகின்றன.
உலகில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 203 சதவீதம் இந்தியாவில் உள்ளது. தமிழகத்தில்
2003-2004 ஆம் ஆண்டுகளில் 37.5 சதவீதமாக குறைந்துவிட்டது. ஆக ‘தண்ணீர் இல்லா வேளாண்மையும், தான் உழாத நிலமும்
தரிசு’ என்னும் பழமொழிக் கிணங்க , கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 20 இலட்சம் எக்டேர் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளது.
சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா
போன்ற நதிகளை ஒட்டிய பசுமை நிலங்கள் புதிய குடியிருப்புப் பகுதிகளாக மாறிவருகிறது. தமிழ் நாட்டில்
சென்னை, மதுரை மட்டுமன்றி
கோவை, நெல்லை, திருச்சி, தஞ்சை, குடந்தை போன்ற
நகரங்களை ஒட்டிய பகுதியிலும் இதே நிலை தான். நிலப்பறிப்பு என்பது விளைநிலச் சுருக்கத்தின் அடுத்த நிலை.
உழைப்பாளியின் உள்ளம் மகிழ்ச்சியினால் நிரம்பினால் தான் நம் வயிற்றுப் பள்ளம்
உணவால் நிரம்பும்.
அவனை வாழ வைத்துப் பாருங்கள். வாழ்வில் வசந்தம் வற்றாமல் வீசும்.
மழை நீர் சேகரிப்பு
”நீர் இல்லா நாடு
நிலவு இல்லா முற்றம்”
மழையை வரவேற்கும் மனமும், மழை நீரைக் காக்கும் கடமையும், அதைக் கையாளும் ஆளுமையும் இன்றியமையாதது.
அதை உணர்ந்து தமிழன் கயம், வாவி, தடாகம், பொய்கை, குட்டம், கோட்டகம், குளம், கிடங்கு, ஏரி என விதவிதமான
நீர் நிலைகளை நிறுவி நீர் மேலாண்மையைப் போற்றினான்.
ஏனெனில், உணவு கொடுத்து
உயிர் காப்பது அன்றைய மன்னர்களின் கடமையாக இருந்தது. இன்றேல் புலவர்கள் பழிப்பர். மன்னர்களோ பழிக்கு அஞ்சுவர். இதைத்தான் ‘மழை பிணித்(து) ஆண்ட மன்னவன்’ என்கிறார் இளங்கோவடிகள்.
ஆற்றிலிருந்து ஏரிக்கும், ஏரியிலிருந்து கண்மாய்க்கும, கண்மாயிலிருந்து
கரணைக்கும், கரணையிலிருந்து தாங்கல், தாங்கலிலிருந்து ஏந்தல், ஏந்தலில் இருந்து ஊருணி, ஊருணியிலிருந்து குளம், குளத்திலிருந்து குட்டை என நீர்ச்சங்கிலியாய் நீர்நிலைகளை
அமைத்து நீரைப் போற்றியுள்ளனர்.
ஆனால் இன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் தனி நபர் நீர் சேமிக்கும் திறன் 3000 முதல் 6000 கியூபிக் மீட்டராக
உள்ள நிலையில், இந்தியாவில்
அது 262 கியூபிக் மீட்டராகவே
உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேசிய நீர்
மயமாதல்
நம் நாட்டில் வடக்கே சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற வற்றாத ஜீவ நதிகளும் நர்மதை, தபதி, கோதாவரி, கிருஷ்ணா போன்ற
மத்திய நதிகளும், தெற்கே காவிரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளும் விவசாயத்திற்கும், குடிநீருக்கும்
உயிர் நாடியாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
இவ்வாறு ஒட்டு மொத்த இயற்கை ஆதாரங்கள் வழி நாம் பெறும் நீரின் அளவில் குறைந்தது 35 விழுக்காடு
வீணாகக் கடலைத் தேடி ஓடுகிறது. நிலம் உறிஞ்சுதல், ஆவியாதல், இதர வழிகளில்
வீணாதல் போக மிகக் குறைந்த அளவே நேரடிப் பயன்பாட்டிற்கு உட்படுகிறது.
இந்த நீர்வளக் குறைவைப் போக்கி, மேலாண்மையில் தன்னிகரற்று விளங்க இந்திய பிரதமர் பண்டிதர்
ஜவஹர்லால் நேருவின் காலத்திலிருந்தே பல்நோக்கு வரைவுகள்
ஏற்படுத்தப்பட்டது.
தாமோதர் அணைத் திட்டமும், பக்ரா – நங்கல் திட்டமும் குறிப்பிடத்தக்கன.
இவை எல்லாவற்றிற்கும் தேசம் கண்ட தீர்வுதான் தேசிய நீர்வழிச்சாலை இணைப்புத்
திட்டம்.
நிதி, தொழில் நுணுக்கம், மின்சக்தி, மக்கள் ஒத்துழைப்புப்
போன்ற எல்லாநிலையிலும் பின்னடைவு கண்டதால் இதுவரை முன்னெடுக்க முடியாமலே இத்திட்டம்
உறங்குகிறது.
சுற்றுசூழல்
நாகரிக வளர்ச்சி தோன்றிய நாள் முதல், இயற்கை வளங்களால் இன்புற்று வாழப் பழகிய மனிதன், சூழலியல் பற்றிய
அறிதல் இன்மையால், பூமிக்குத் தான் ஏற்படுத்தும் இன்னல்களை மறந்தான்.
பொருளாதார சிந்தனையில் மட்டும் மூழ்கிப் பூமியின் ஆற்றலை, அதிசயங்களை
அழிக்க முற்பட்டுவிட்டான்.
மேலை நாடுகளில் உதித்தத் தொழிற்புரட்சிக்குப் பின் மாந்தர்களின் இயற்கைச் சுற்றுச்சூழலை
அழிக்கும் திறன் பெருமளவில் வளரச்சியடைந்து விட்டது.
அதனால் இன்று நிலவளம், நீர்வளம், தாவரங்கள், செடிகொடிகள், பறவையினங்கள், விலங்கினங்கள் என மெல்ல மெல்ல இழந்து வருகிறோம்.
அதுமட்டுமன்றி, இந்த உலகத்திற்கு அடிப்படைக் காரணிகளாக விளங்கும் நீர், காற்று, வெப்பம் அவைகளின்
இயல்பு நிலையிலிருந்து திரிபுபெறத் துவங்கிய நாள் முதல் மனித இனம் பல்வேறு சிக்கல்களுக்கு
ஆட்பட்டுத் திணருகிறது.
சுற்றச்சூழல்
விழிப்புணர்வு
நம்மைத் தாக்கி வருத்தும் பலவிதத் தீமைகளுக்கெல்லாம் அவைகள் பற்றிய விழிப்புணர்வு
இன்மையே காரணமாகிறது. இவ்விதம் நாம் வாழும் இப்பூமி பற்றிய விழிப்புணர்வு அற்று வாழ்வதால் தான் புவியின் தன்மை
கெடும் நிலை உருவானது.
சுற்றுச் சூழல் விளைவுகளைக் குறைக்க உயிரி எரிபொருள் தொழில்நுட்பத்தைக் கையாளுவது, பழைய இயந்திரவியலிலிருந்து
செம்மையான இயந்திரவியல் முறையை நடைமுறைப் படுத்துவது, சூரிய சக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்வது, நீராற்றலைப்
பேணுவது முதலிய பல்வேறு உள்நாட்டுக் கட்டமைப்பு முறைகளை முழுவீச்சில் செயல்படுத்த முனைந்து
வருகிறது இந்தியா.
புவி வெப்பமயமாதல்
இயற்கையின் மாறிவரும் சூழலை அறிந்தும், இயற்கையின் தாக்குதல்களை அனுபவித்தும், தொடர்ந்து இயற்கைக்கு
எதிராக நாம் ஊறு விளைவித்ததால் ‘இயற்கைப் பேரிடர்’ உருவாகிறது. ஆனால் நாம்
அதற்கான காரணத்தை மறக்கிறோம்.
இந்த நிலை மாற வேண்டும்.
2011 – ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முன்னாள் அமெரிக்கத்
துணை ஜனாதிபதி அல்கோர் என்பவர் புவிவெப்பம் அளவில் உயர்ந்து கொண்டே போவதை எண்ணி ‘இந்தப் பூமியை
இதயம் போல் பாதுகாக்க வேண்டும்’ எனும் வேண்டுகோளை
விடுத்தார்.
உயர்ந்து வரும் உலக வெப்பத்தைக் கருத்தில் கொண்டுதான் பிப்ரவரி 2 – ம் நாளை ‘உலக ஈர தினம்’ என்று அழைக்கின்றனர்.
விழிப்புணர்வால் உலக வெப்பமயமாதலைக் கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் அனைத்தும்
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இல்லையேல் பருவநிலை மாற்றமடைவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
இவ்வாறு, பருவநிலை மாறுபாடு, சுற்றுச்சூழல்
சீர்கேடு, பூமி வெப்பமயமாதல்
வானிலை, போன்றவற்றினால்
உலக உயிர்கள் அனைத்தும் இவ்வுலகில் வாழ வழியில்லாமல் போகும். நாம் வேற்று கிரகங்களில் நீரைத் தேடிக் குடிப்புகும் முயற்சியில் ஈடுபட நேரிடும். இவற்றைக் கருத்தில் கொண்டு வானம் வழங்கும் நீர்க்கொடையை உரிய
முறையில் சேமித்து நீர் மேலாண்மையை உருவாக்குவது மிக மிக இன்றியமையாதது ஆகும்.
இதுவரை பொறுமையாக நீர் மேலாண்மை என்னும் புத்தகத்தின் மதிப்புரையைக் கேட்ட அனைத்து
வாசகர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
”ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஆயிரம்
சிறைச்சாலைகள்
மூடப்படும்”
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிக்கேற்ப
நாம் அனைவரும் வாசிப்பை நேசிப்போம்.
நிறைவாக, இத்தகைய அரியதொரு வாய்ப்பினை நல்கிய புதுகைப் பண்பலை 91.2 சமுதாய வானொலி
நிலையத்திற்கு எனது நன்றியினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
Comments
Post a Comment