மதுரை சென்ற அனுபவங்களாக...
தூங்கா நகரமாகிய மதுரைக்கு (12.06.2025)
நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும்
சென்றோம். நாங்கள் கடந்த 2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று
முறை சென்று வருவோம். இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில்
பணியாற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம்.
இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும், புது அனுபவமாகவும் இருந்தது. இதை உங்களுடன்
பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில்
உள்ள யோகநரசிம்மர் கோவில், ப்ரத்தியங்கரா தேவி, முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன்
கோவில், திருமோகூர் காளமேக பெருமாள் கோவில், பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள கூடல்
அழகர் கோவில் ஆகிய கோவில்களுக்குச் சென்றோம்.
சூன் 12 –ம் தேதி காலை 7.30 மணிக்கு திருச்சியிலிருந்து
மதுரைக்குக் காரில் கிளம்பினோம். போகும் வழியில் காலை சிற்றுண்டியை எடுத்துக் கொண்டோம். மதியம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மதியம் அன்னதானம் உணவினை சாப்பிட்டோம். மதுரையில் பன்
பரோட்டா வாங்கி கொண்டு மாலை 5.30 மணியளவில் கிளம்பி திருச்சிக்கு இரவு 7.30 மணிக்கு
வந்துவிட்டோம். அனைத்து கோவிலையும் தரிசித்ததால் எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் மனம்
திருப்தியாகவும் அமைந்தது.
ஒத்தக்கடை
(யோகநரசிம்மர் கோவில்)

மதுரை -
திருச்சி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 12 கி.மீ.
தொலைவில் ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள யானைமலை அடிவாரத்தில் யோக நரசிங்கர்
கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல மதுரை மாட்டுத்தாவணி பேருந்து
நிலையத்திலிருந்து பேருந்து மற்றும் சிற்றுந்து வசதி உள்ளது.
கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக்
குடைந்து அமைக்கப்பட்டதாகும். இக்கோயிலின் மூலவராக யோக நரசிம்மர் மார்பில்
மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார்
தெற்கு பார்த்தும் அமர்ந்துள்ளனர். கோயிலில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரின் சன்னதி
தனியாக உள்ளது. யோக நரசிம்மர் கோயிலின் முகப்பில் அழகான குளம் அமைந்துள்ளது. இது, நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய
கோயிலாகும்.
ஒத்தக்கடை (முருகன் கோவில், பிரித்தியங்கரா தேவி)
மதுரை ஒத்தக்கடை பகுதியில் யானைமலை அருகில்
சிறிய குன்றின் மேல்முருகன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் மிகவும் சக்தி வாய்ந்த
தெய்வமான பிரித்தியங்கரா தேவி ஆலயம் உள்ளது. இந்த பிரித்தியங்கரா தேவியிடம் வேண்டிக்
கொண்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
திருமோகூர்
(காளமேக பெருமாள் கோவில்)
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.
மதுரைக்கு வடக்கே 12 கி.மீ. தொலைவில் ஒத்தக் கடை அருகே திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.
இக்கோயிலிலுள்ள மூலவர்
காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான
கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார். இக்கோவிலின் கம்பத்தடி
மண்டபத்திலுள்ள இராமர்,
சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர்,
மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக் கொண்ட
ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின்
உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில்,
சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியரின் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகின்றன.
மீனாட்சி அம்மன் கோயில்

மதுரையின் நடுவே
அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இச்சிவன் கோயிலின்
மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். இக்கோயிலை மதுரை
மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயில் தமிழ்நாட்டில் உள்ள 366
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக்கோயிலாக உள்ளது.
இத்தலத்தில் முதல் பூசை, அம்பிகை மீனாட்சிக்கே
செய்யப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோயில் உயரமான சுவர்களால்
சூழப்பட்டுள்ளது. கோபுரங்கள்,
உள்ளே தூண்கள், நெடுவரிசை மண்டபங்கள்,
புனித குளம், சிறிய சன்னதிகள் மற்றும் மையத்தில், சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சிக்கு இரண்டு முக்கிய சன்னதிகள் உள்ளன. 14
கோபுரங்களில் மிக உயரமான தெற்கு கோபுரம் , 170 அடி (52 மீ) க்கும் அதிகமாக உயர்கிறது.
மதுரை பெரியார்
பேருந்து நிலையம் (கூடல் அழகர் கோவில்)
கூடல் அழகர் என்று வணங்கப்படும் விஷ்ணுவின் 108 புனிதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக்
கோயில் ஒரு கிரானைட் சுவரால் சூழப்பட்டுள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் நுழைவாயிலைக்
குறிக்கிறது. பிரதான தெய்வத்திற்கு கூடுதலாக, கூடல் அழகரின்
மனைவியான மதுரவல்லி தேவியின் சன்னதியும் உள்ளது. கிருஷ்ணர், ராமர்,
லட்சுமி மற்றும் நாராயணர் போன்ற தெய்வங்களின் சிறிய சன்னதிகளையும்
இங்கே காணலாம். மாங்குடி மருதனின் மதுரை காஞ்சி, கலித்தொகை,
பரிபாடல் மற்றும் சிலப்பதிகாரம் போன்ற இலக்கியப் படைப்புகளும்
கோயிலைக் குறிப்பிடுகின்றன. இந்தக் கோயில் புராணக்கதைகளால் நிறைந்துள்ளது.
நிறைவாக,
இம்முறை நாங்கள் மதுரைக்குச்
சென்றது மிகவும் மகிழ்வாகவும், புத்துணர்வாகவும் அமைந்தது. இளமைக் காலங்களில் நமக்கு
பீச், பார்க், நமக்கு பிடித்த ஆடை, அணிகலன்கள் என்று வாங்கக் கடைகளுக்குச் செல்லத் தோன்றும். ஆனால்
தற்பொழுது நண்பர்களுடன் இது போன்று கோவிலுக்குச் சென்று வருவது நன்றாகத் தான் உள்ளது.
நமக்குக் கிடைத்த வாழ்க்கையை
ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள
வேண்டும். நிரந்தமில்லாத வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழாமல், நம் வாழ்வை மகிழ்வாக
மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அப்பொழுது தான் உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும்.
Comments
Post a Comment