Skip to main content

தொலைநோக்கு (புத்தக மதிப்புரை)

 

தொலைநோக்கு

 (புத்தக மதிப்புரை)

           

இன்று நாம் புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சிக்காக, தொலைநோக்கு என்னும் தலைப்பில் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பார்ப்போம். இப்புத்தகத்தைச் சென்னை, அய்யனார் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள்.

முனைவர் ஆ. மணவழகன் சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்தவர். சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின்இளம் தமிழ் அறிஞர் என்ற விருதினைப் பெற்றவர். தற்பொழுது எஸ்.ஆர். எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இத்தகைய சிறப்புமிக்க ஆசிரியரின் நூலான தொலை நோக்கு என்னும் ஆய்வு நூலில், இக்கால சமூகத்  தேவைகளையும், பழந்தமிழர் சமூகச் சிந்தனைகளையும் ஒருங்கே கொண்டு விளக்கும் வகையில் இந்நூலை இயற்றியுள்ளார்.

பழந்தமிழர் இலக்கியப் பதிவுகளைக் கொண்டு, அக்காலச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களால் முன்னெடுக்கப்பட்ட தொலை நோக்குச் சிந்தனைகளை முதன்மை நோக்கமாகவும், இன்றைய, மற்றும் நாளைய தலைமுறைத் தொலைநோக்குத் திட்டத்தினை வரையறைகளை மதிப்பீடு செய்வதைத் துணைமை நோக்கமாகவும் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.

தொலை நோக்குஎன்பதுநேற்றைய பட்டறிவை அடித்தளமாகக் கொண்டு, இன்றைய தொழில்நுட்பத்  திறத்தால், நாளைய சமூகநலனுக்குத் தேவையானவற்றைச் சிந்தித்தலும், அவற்றை முன்னெடுத்து செயலாக்கம் செய்ய முனைதலும்ஆகும்.

இந்நூலில் ஆசிரியர்   தொலை நோக்கு, அடிப்படைத் தேவைகளின் நிறைவில் தொலைநோக்கு, தொலை நோக்கில் தனி மனிதர்குடும்பம்- அரசு என்ற மூன்று தலைப்புக்களின் வழி  பழந்தமிழ் இலக்கிய செய்திகளையும், இன்றைய நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டு சிறப்பாகப் படைத்துள்ளார். ஆகையால் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தொலை நோக்கு

தொலைநோக்கு என்பதற்கு எதிர்காலத்தில் ஏற்பட வேண்டிய நலனைக் கருத்தில் கொண்ட கணிப்பு, முன்யோசனை நிறைந்த பார்வை என்று விளக்கமளிக்கிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (.592)

            தொலை நோக்கு என்ற சொல்லிற்கு  நீண்ட காலத் திட்டமிடல்என்றும், அதற்கு எதிர்ப்பதமாகக்  குறுகிய காலத் திட்டமிடல் என்றும் வழங்குவர். இந்தத் திட்டங்கள் குறித்துக் கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கலாம். பழந்தமிழகத்தில் தன்னை நாடிவரும் வறியவரின் பசித்த வயிற்றுக்கு உணவிட்டு, அவர்களின் களைப்பை நீக்கி, ஆடை நல்கி, பொது இல்லாகிய தற்காலிக இருப்பிடத்தில் தங்க வைத்து வேண்டுவன செய்தல் குறுகிய கால திட்டமாகவும், அவ்வகை வறியவரின் வறுமையை முற்றிலும் போக்கும் வகையில் அவர்களுக்குப் பரிசிலாகப் பொன்னும், பொருளும், நிலமும் வழங்கி அனுப்பி வைத்தல் நீண்ட காலத் திட்டமாகவும் அமைகிறது. குறுகிய காலத் திட்டத்தை முதலுதவி என்பதாகவும், நீண்டகாலத் திட்டமிடுதலாகிய தொலைநோக்கை  நிரந்தர நலம் பேணல் என்றும் கொண்டால் இவற்றின் வேறுபாடும் பயனும் எளிதில் புலனாகும்.

தொலைநோக்குச் சிந்தனைகளின் வரையறை

·         ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் தற்போதைய நிலையினை மனதில் கொண்டு, எதிர்காலத்தில் ஏற்பட வேண்டிய நன்மைகளைச் சிந்தித்தல், திட்டமிடுதல்.

·         ஒரு குறிப்பிட்ட மொழி, இனம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து எல்லாச் சமூகத்திற்கும் ஏற்புடையதாக, அமைவது சிறப்பாகும்.

·         எண்ணங்களும், அதன்வழிச் சிந்தனைகளும் இனத்திற்கு இனம், நாட்டிற்கு நாடு மாறுபடுகின்றன. இவ்வேறுபாடுகளைக் கடந்து சமூக முன்னேற்றம் ஒன்றையே மனதில் கொண்டு சிந்தனைகளும், செயல்பாடுகளும், எல்லா சமூகத்திற்கும் பொதுவாக அமைதல்.

·         தொலைநோக்கு, சமகாலச் சமுதாயத்திற்கு உடனடிப் பயனை விளைவிக்கும் என்றாலும், அதன் முழுப்பயனை எதிர்கால சமுதாயத்திற்கு வழங்கிச் செல்கிறது.

அடிப்படைத் தேவைகளின் நிறைவில் தொலைநோக்கு

          ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு, நிலையான இருப்பிடம், தேவையான உடை என்பன தவிர்க்க இயலாதனவையாகும். இவற்றிற்கு இன்றைய சமூகநிலை, மக்கள்தொகை, மற்றும் இயற்கை மூலதனம் ஆகியவற்றை மனதில் கொண்டு, இன்றைய தொலைநோக்கு வல்லுநர்கள் திட்டத்தினை முன்வைக்கின்றனர். அதேவேளையில் இவ்வகை அடிப்படைத் தேவைகள் காலம் காலமாக தொடர்கின்ற நிலை என்பதால் நம்முடைய முன்னோர்களின் சமூக செயல்பாடுகளில் காணப்படும் தொலைநோக்கு சிந்தனைகளை மீட்டுருவாக்கம் செய்து ஏற்புடையனவற்றை இன்றைய சமூகத்திற்கு முன்மொழிவதும் தேவையாகிறது.

உணவு

        பசியில்லா மனிதரிடத்து ஆரோக்கியமான உடலும், மனமும், சிந்தனைகளும் வெளிப்பட்டு நிற்கும்.  அவ்வகையான சிந்தனை கொண்ட சமூகம் வளர்ச்சிப் பாதைக்கான வழிகளை அமைப்பதில்  முனைப்புக் காட்டும். எனவே பசியும் பிணியும் பகையும் நீங்கிய, வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி என இளங்கோவடிகளும், ‘பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்திஎன சாத்தானாரும் வாழ்த்துவர்.

            தொல்காப்பியரும் கருப்பொருளைப் பட்டியலிடும்போது தெய்வம் உணாவே மாமரம் புள் பறை என்று தெய்வத்திற்கு அடுத்த நிலையில் உணவை வைத்திருப்பதோடு மெய்தெரி வகையின் எண்வகை உணவின் செய்தியும் வரையார்என்று உணவின் வகைகளையும் சுட்டுவார்.

அனைவருக்கும் உணவு என்கிற ஒரு நிலை எந்தவொரு நாட்டிலும் வளமான வாழ்வுக்கு ஒரு முக்கிய காரணி ஆகும். இதை உண்மையான வளர்ச்சியடைந்த நாடுகளுமே அலட்சியப்படுத்த இயலாது. இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாட்டில் வானிலைத் தடுமாற்றங்களும், இயற்கை சீற்றங்களும் இருந்தாலும் இயன்ற வகையில் மக்களுக்கு உணவு வழங்கும் பணியை இடைவிடாது பேணிக் காப்பதே பெருங்கடமை என்கிறார் அ..ஜெ.அப்துல்கலாம்.

·         பண்பாட்டு அடிப்படையில் நிரந்தரத் தீர்வாக- பரிசில், ஈதலை ஊக்குவித்தல், பெற்ற பெருவளம் பெறாதோர்க்கும் வழங்கல், உடைமையைப் பங்கிட்டுக் கொடுத்தல்.

·         அறிவியல் அடிப்படையில் நிரந்தர தீர்வாக -  மூலதனத்தைக் காத்தல், மழைவளம் காத்தல், நீர்நிலைப் பாதுகாப்பு, மலை மற்றும் கடல் வளம் பேணல், மண் வளம், வேளாண் குடியைக் காத்தல், உணவுப் பொருள் பாதுகாப்பு, பண்டமாற்று, வாணிகம்.

மேற்கண்ட இலக்கியப் பதிவுகளின் வழி பழந்தமிழர் உணவு தேவையின் நிறைவிற்கு அவர்களின் தொலைநோக்குச் செயல்பாடுகள் முக்கிய காரணங்களாகின்றன.

உணவுப் பாதுகாப்பும் பதப்படுத்தலும்

           தேவைக்கு அதிகமான உற்பத்திப் பொருள்களையும், போக்குவரத்திலும், வாணிகத்திலும் எஞ்சிய உணவுப் பொருள்களைப் பாதுகாக்கவும், பதப்படுத்தி மாற்றுப் பொருளாக வாணிகம் செய்யவும் உணவுப் பாதுகாப்பும், பதப்படுத்தலும் கட்டாயமாகின்றன. இந்நுட்பத்தினைப் பழந்தமிழக மக்களின் முக்கிய செயல்பாடுகளாகும். ஏறக்குறைய ஓராண்டிற்குத் தேவையான உணவுத் தானியங்களை வீணாகாத வண்ணம் பதப்படுத்திப் பாதுகாத்து வைத்திருக்கும் உணவு தானியம்பழம்பல் உணவுஎன்று பெரும்பாணாற்றுப்படை நூலின் வழி அறியலாம். இவ்விதம் நெல் ஆண்டு முழுவதற்கும் பதப்படுத்தப்பட்டுச் சேமிக்கப்பட்டது. இதனை

            விண்டு புரையும் புணர்நிலை நெடுங்கூட்டுப்

          பிண்ட நெல்லின் தாய் மனை

என்ற நற்றிணை பாடல் வழி காணமுடிகிறது.

உடை

            உடைகள் ஒரு சமுதாயத்தின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வெளிக்காட்டுவதாக அமைகின்றன. உணவுக்கு அடுத்தபடியாகப் பழந்தமிழர் தமது உடைகளின் தேவைகளில் முக்கியக் கவனம் கொண்டிருந்தனர். ஆடையில்லா மனிதன் அரை மனிதன்’ ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பன போன்ற தமிழர்தம் பழமொழிகள் அவர்கள் உடைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.

            அகத்தால் அழிவு பெரிதாயக் கண்ணும்

           புறத்தால் பொலிவுறல் வேண்டும் எனைத்தும்

           படுக்கை இலராயக் கண்ணும் உடுத்தாரை

           உண்டி வினவுவார் இல்  (பழமொழி நானூறு -329)

என்ற பழமொழி நானூற்றுப் பாடல் வழி உடுத்தும் உடையே ஒருவரின் நிலையை வெளிக்காட்டும் அளவீடாகும் என முறைசெய்து உடையின் தேவையை அறிவுறுத்துகிறது.

            பழந்தமிழர் உடையின் நிறைவிற்காக மூலப் பொருள் உற்பத்தி, நெசவுத் தொழில், உடை வாணிகம் என்று உடையின் தேவையில் தன்னிறைவிற்கு மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்குச் செயல்பாடுகள் குறித்து பழங்கால இலக்கியங்களின் வழி  தெரியவருகின்றன.

உறையுள்

            மனிதன் சேர்ந்து வாழவும், தம் உடைமையைப் பாதுகாக்கவும், இனத்தை விருத்தி செய்து கொள்ளவும் பாதுகாப்பிற்கும் உறையுள் இன்றியமையாத ஒன்றாகும். பழந்தமிழர் பாடல்களில் தமிழர் தங்கி வாழ்ந்த இடங்கள் பற்றிய செய்திகள் பல உள்ளன. அவை அகம், இல், இல்லம், உறையுள், உறைவிடம், கல்லளை, குடில், குரம்பை, குறும்பு, நெடுநகர், புக்கில், மனை, மாடம் எனக் குறிக்கப்படுகின்றன. வாழும் சூழல், காலநிலை, தொழில்நிலை, உணர்வுநிலை என்பவற்றிற்கேற்ப இருப்பிடங்களின் தன்மைகள் வேறுப்பட்டன.

            பழந்தமிழ் சமூகம் உறையுள் தேவைக்குக் கொடுத்த முக்கியத்துவமும், அத்தேவையை நிறைவேற்றுவதில் மேற்கொள்ளப்பட்ட பல்முனைத் தொலை நோக்குச் செயல்பாடுகளும் அவர்களின் திணைசார் குடியிருப்புகளின் வழி அறிந்து கொள்ளலாம்.

தொலை நோக்கில் தனி மனிதன்குடும்பம்அரசு

          ஒரு தேசத்தின் முன்னேற்றம் என்பது, அந்நாட்டு மக்கள் எவ்விதம் சிந்திக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். சிந்தனைகளே செயல்பாடுகளாக உருமாறுகின்றனஎன்பார் ..ஜெ.அப்துல்கலாம். இ்க்கருத்து, ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது நாடு என்றில்லாமல், உலகின் எல்லா நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஏற்புடையதாகும். எந்தவொரு சிந்தனையும், திட்டமும் மக்கள் ஒத்துழைப்பின்றி செயலாக்கம் பெறுதல் கடினமானகிறது. ஒரு வேளை செயலாக்கம் பெற்றாலும், அதன் முழுப்பயனும் அச்சமுதாயத்தைச் சென்றடைவதென்பது இயலாமற் போகிறது. ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுக்கு உடைமையாளர்களாக விளங்கும் மக்களைக் கொண்ட சமுதாயமே தம்முடைய வெற்றிப்பாதையில் தொய்வின்றி வீறுநடை போடுகிறது.

          சமூக முன்னேற்றத்தில் அரசின் பங்கு முதன்மையாக் கருதப்படுகிறது. இதனை உணர்ந்தே,

          நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே

             மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” (புறம்-186,1-2)

என்றனர் பழந்தமிழ்த் தொலைநோக்காளர்.

தனிமனிதன்

          ஒரு சமூகம் என்பது செயற்பாடுடைய ஒரு குழுவாகும். தனி மனிதர் பலரால் உருவாக்கப்பட்டிருப்பினும், சமூகம் என்ற நிலையிலேயே அது தொழிற்படுகிறது. சமூக அமைப்பில் தனிமனிதர்களின் நலன்கள் சமூக நலன்களுக்குக் கீழாகவே அமைகின்றன.

          தனக்குத்தானே தேவைகளை நிறைவு செய்துகொள்ள மனிதனால் இயலாது. இதற்காக அவன் பிறரைச் சார்ந்து வாழவேண்டியவனாகிறான். இந்தச் சார்புத்தன்மை ஒவ்வொரு மனிதனையும் சங்கிலியால் இணைப்பது போல இணைத்து வைத்துவிடுகிறது. ஆக, சமூகம் என்பது னிதனின் கூட்டு வாழ்க்கை என்றாகிறது.

          இல்வாழ்க்கையின் தன்மையே ஒருவரை சமுதாயத்தில் இனங்காண வைக்கிறது. மனங்கள் ஒத்து வாழ்வதற்குத் தேவையான குணங்களைச் சுட்டுவதோடு, வேண்டாத குணங்களாக, நேயமின்மை, இரக்கமின்மை, தன்னை வியத்தல், புறமொழி கூறுதல், வன்சொல், மறவி, சோம்பியிருத்தல், தன் குடியுயர்வை எண்ணி மகிழ்தல், பணிவுடைமை மறத்தல், ஒப்பிட்டு நோக்கல்’ (தொல்-1220) என்பவற்றையும் தொல்காப்பியர் பட்டியலிடுகின்றார். மனிதநேயம் போற்றும் எச்சமுதாயத்திற்கும் இத்தன்மை ஏற்புடையது.

          இதன்வழி, பண்டைச் சமூகத்தின் தனிமனிதத் தொலைநோக்குகளாக, விருந்தோம்பல், கொடை, பரிசு வழங்கல், உடைமையை வறியவர்க்கு உரியதாக்குதல், தனிமனித ஒழுக்கம், அறநெறிக்குட்பட்ட வாழ்க்கை முறை, தன் முயற்சியால் வாழ்தல், பொருளீட்டுதல், தீவினைக்கு அஞ்சுதல். உயிர் இரக்கம், தனி மனித ஆளுமை ஆகியவை சிறப்பிடம்  பெறுகின்றன.

குடும்பம்

          சங்கப்பாடல்களில்குடும்பம்என்ற சொல் பயன்பாட்டிவ் இல்லை. ‘கடும்புஎன்ற சொல்லே கூட்டு வாழ்க்கையைக் குறித்து நின்றதை உணர முடிகிறது. ‘கருங்கலை கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்’ (நற்.119) என்ற நற்றிணைப் பாடல் தரும் செய்தியால் மலையாட்டினத்தின் கூட்டு வாழ்வுகடும்புஎன அறியப்படுகிறது. ‘நேரிழை கடும்பு உடைக கடுஞ்சூல் தங்குடிக்குஎன்பதில் மனிதருடைய கூட்டு வாழ்க்கையைக்கடும்புஎன்னும் சொல் குறித்தது தெரிகிறது. ஆனால் திருக்குறள் காலத்தில் குடும்பம் என்ற சொல் பயன்பாட்டில் வழங்குகிறது.

          இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்

            குற்ற மறைப்பான் உடம்பு” (குறள் - 1029)

என்ற குறளில் குடும்பம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதைக் காணலாம். சங்க காலத்தில் குடும்பம் என்ற சொல் இல்லையாயினும், குடும்ப அமைப்பு இல்லாமலில்லை. குடும்ப அமைப்பின் சிறப்பும், சமூக முன்னேற்றத்தில் குடும்பத்திற்கான தொலைநோக்குச் சிந்தனைகளும்  இலக்கியத்தில் சுட்டப்படுகின்றன.

அரசு

          ஒரு சமுதாயத்தின் மக்கள் வெவ்வேறு கொள்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும். அவர்களை ஒழுங்கு பெறச் செய்து ஒரு அரசின் கீழ் உட்படுத்துதல் வேண்டும். இத்தகைய அமைப்பைக் கொண்டு வர நாடும் நாட்டிற்கு அரசும் தேவை. மேலும் நாட்டின் அரசு தலைசிறந்த நல் அமைப்புடனும் நீதிநெறிகளுடனும் தகுந்த முடிவுகளை எடுக்கும் ஆற்றலுடைய ஒரு நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

          அரியகற்று ஆக அற்றார் கண்ணும் தெரியுங்கால்

             இன்மை அரிதே வெளிறு” (குறள் - 503)

என்று சமூகத்தின் உயர்ந்தோர் என்பதற்காக, அவர் சொல்லும் கருத்துக்களை அப்படியே ஏற்க வேண்டியதில்லை. அதனையும் ஆய்விற்கு உட்படுத்தி நல்லதன் நலன் நாடவேண்டும் என்பர் வள்ளுவர். எனவே கல்வியறிவு, நற்செயல்பாடு. ஒழுக்கநெறி, மனிதநேயம் போன்றவையே ஒருவரை சமூகத்தில் புகழ்பெற வைக்கும். செல்வவளம், குடிப்பிறப்பு. போன்றவற்றைக் காரணம் காட்டி சமூக சமத்துவம் மறுக்கப்பட்ட நிலை அற்றைநாளில் காணப்படவில்லை என்பது இதன்வழி தெளிவாகிறது.

          ஒரு நாடு நல்ல நாடாக வளர்ச்சிபெற வேண்டுமெனில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர், பிணியின்மை, செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்குஎன்ற குறளில் தெரிவித்துள்ளது. நாட்டில் பாதுகாப்பு, நோயி்ன்மை, செல்வம், கல்வி அறிவு, தொழில் நுட்ப வளர்ச்சி இருந்தால் நாடு நல்ல வளர்ச்சி அடையும்என்று ..ஜெ. அப்துல்கலாமின் கருத்து இங்குச் சுட்டத்தக்கது. மேற்கண்ட சான்றுகளின் வழி பழந்தமிழகத்தில, தனிமனிதர், குடும்பம், அரசு என்ற மூவகை அமைப்பின் செயல்பாடுகளிலும் சமூக தொலைநோக்குக் காணப்படுவதை அறியமுடிகிறது.

      நூலாசிரியர் மணவழகன் ஐயா அவர்கள் எழுதிய இந்நூல் இக்கால சமூக தொலைநோக்கின் தேவை, பழந்தமிழர் சமூக தொலைநோக்குச் சிந்தனைகளையும் ஒருங்கே விளக்கும் வகையில்தொலைநோக்குஅமைந்துள்ளது. இந்நூல் மாணவர்களுக்குப் பயன்தரும் நூலாக அமைந்துள்ளது. 

நிறைவாக,

          எட்வின் பெர்சி என்பவர்காலம் என்னும் பெருங்கடலில் நம்மை கரை சேர்க்கும் கலங்கரை விளக்கம் புத்தகங்கள்என்று கூறுகிறார். நாமும் புத்தகங்களை வாசிப்போம். வாசிப்பை நேசிப்போம்.

 

           

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

         

 

 

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...