நம்பிக்கைக்கு மரணமில்லை!
வாழ்க்கையில் வெற்றியடைந்த அனைவரும் தோல்வியில் ஆரம்பித்து, மனதை ரணப்படுத்தும் போராட்டங்களுக்குப் பிறகுதான் சாதிக்கிறார்கள். சிக்கலான சந்தர்ப்பங்களில்தான் அவர்களின் இன்னொரு முகம் அவர்களுக்கு அறிமுகமாகிறது. கனவு காண்பவர், அதைச் செயல்படுத்த ஆரம்பிப்பதற்கு உந்து சக்தி, தகிக்கும் ஆசை தான். குழப்பத்துடனோ, சோம்பேறித் தனமாகவோ அல்லது குறிக்கோள் இல்லாமலோ இருந்தால் கனவுகள் பலிக்காது.
ஜான் பன்யன்
மதம் பற்றி வெளியிட்ட சில கருத்துக்களுக்காகச்
சிறையில் தள்ளப்பட்டவர் ஜான் பன்யன். கடுமையான தண்டனையின் கொடுமைகளை அனுபவித்த பிறகு
அவர் எழுதிய ‘பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ்’ என்ற புத்தகம்தான் ஆங்கில இலக்கியத்தின்
தலை சிறந்த படைப்புக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஓ.ஹென்றி
ஒ ஹென்றியோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ்
சிறைச்சாலையின் துயரங்களை அனுபவித்த பிறகு தான் தனது மூளையில் உறங்கிக் கிடந்த மேதையைக்
கண்டுபிடித்தார் ஓ.ஹென்றி. ஒரு பக்கம் துயரச் சுமை அழுத்தும் போது, அவரின் இன்னொரு
முகம் அவருக்கு அறிமுகமாகியது. நாடு கடத்தப்பட்ட பரிதாபமான கிரிமினலாக இருந்தாலும்
தமது கற்பனை வளத்தைப் பயன்படுத்தி தனக்குள் மறைந்திருந்த ஒரு மகத்தான எழுத்தாளரைக்
கண்டுகொண்டார்.
சார்லஸ் டிக்கன்ஸ்
வண்ணம் பூசிய பாத்திரங்கள் மீது லேபிள்
ஒட்டுபவராக வாழ்க்கையை ஆரம்பித்தவர் சார்லஸ் டிக்கன்ஸ். அவரின் முதல் காதல் தோல்விதான்.
அவருடைய ஆன்மாவுக்குள் ஊடுருவி உலகத்தின் தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவராக அவரை
உருமாற்றியது அவரது காதல் துயரம்தான். டேவிட் காப்பர் ஃபில்ட் என்ற அவரது முதல் நாவல்
உருவாகக் காரணமாக அமைந்தது. இதுவும் அவரின் அடுத்தடுத்த படைப்புகளும் அவரது வாசகர்களை
இந்த உலகத்தை செழிப்பானதாகவும் சிறந்ததாகவும் காண வைத்தது.
ஹெலன் கில்லர்
பிறந்த கொஞ்ச நாளிலேயே கண் தெரியாமல்,
காது கேட்காமல், வாய் பேச முடியாமல் போனவர் ஹெலன் கெல்லர். இந்தக் கொடுமையான துயரத்திலும்
தனது பெயரை சாதனை வரலாற்றுப் பக்கங்களில் அழுத்தம் திருத்தமாக பதித்துவிட்டார். தோல்வியை
நிஜம் என்று ஏற்றுக் கொள்ளும் வரை யாரையுமே எப்போதும் தோற்கடிக்க முடியாது என்பதற்கு
அவர் வாழ்க்கை முழுவதும் சான்றாக அமைந்தது.
பித்தோவனுக்குக் காது கேட்காது.
மில்டனுக்கோ கண் தெரியாது. ஆனால் இவர்கள் புகழ் காலம் உள்ளவரை நிலைத்திருக்கிறது.
தாங்கள் கண்ட கனவுக்கு ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையாக வடிவம் கொடுத்த பெருமை பெற்றவர்கள்
இவர்கள்.
தாமஸ் ஆல்வா
எடிசன்
மின்சாரம் மூலம் இயங்கக் கூடிய ஒரு விளக்கு
பற்றி கனவு கண்டவர் தாமஸ் ஆல்வா எடிசன். பத்தாயிரம் தடவைக்கு மேல் தோல்வி அடைந்தாலும்
தன் கனவை நனவாக்கும் முயற்சியை மீண்டும் மீண்டும் ஆரம்பித்தார். கண் முன்னே சாதித்துக்
காட்டும், தன் கனவை கைவிட்டு விடாமல் உறுதியாக இருந்தார். காணும் கனவை நிஜமாக்கிக்
காட்டுபவர்கள் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை.
வீலன்
சிகரெட் விற்பனை நிலையங்களை அமெரிக்கா
முழுவதும் அமைப்பது பற்றி கனவு கண்ட வீலன், அதை நனவாக்கிக் காட்டினார். இன்று யுனைட்டெட்
சிகரெட் ஸ்டோர்ஸ் என்ற அவரது நிறுவனம் அமெரிக்காவின் முக்கிமான இடங்களில் எல்லாம் பரவியுள்ளது.
ரைட் சகோதரர்கள்
காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கக் கூடிய
ஓர் மிஷின் பற்றி ரைட் சகோதரர்கள் கனவு கண்டார்கள். அந்தக் கனவு எவ்வளவு சக்தி வாய்ந்த்து
என்பதற்கான சான்றை இன்று நாம் பார்க்கிறோம்.
மார்க்கோனி
ஆகாய வெளியில் கண்ணுக்குப் புலப்படாத சக்தியைப்
பயன்படுத்திக் கொள்ளும் ஒரு முறை பற்றி கனவு கண்டார் மார்க்கோனி. அது பலிக்காமல் போகவில்லை
என்பதை ஒவ்வொரு ரேடியோவும், டி.வி பெட்டியும் இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால்
மார்க்கோனி சந்தித்த அனுபவம் அலாதியானது. ஒயரோ அல்லது வேறு எந்த மாதிரியான தொடர்போ
இல்லாமல் காற்றின் மூலம் அனுப்பக்கூடிய ஒரு கோட்பாட்டை கண்டு பிடித்துவிட்டதாகவோ அறிவித்த்தும்
மார்க்கோனிக்குக் கிடைத்த பரிசு பைத்தியகாரன் என்ற பட்டம். அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு
அழைத்துக் கொண்டு போய் மருத்துவ பரிசோதனை செய்தார்கள்.
நிறைவாக,
ஒன்றை விரும்புவதற்கும், அதைப் பெறுவதற்கு தயாராக இருப்பதற்கும் வித்தியாசம்
உண்டு. ஒன்றை அடைய முடியும் என்ற நம்பிக்கை வரும் வரையில் யாருமே அதற்காக தயாராக இருக்க
மாட்டார்கள். பெறும் ஆசையோ அல்லது விருப்பமோ மட்டும் இருந்தால் போதாது. மனது முழுவதும்
நம்பிக்கை நிறைந்திருக்க வேண்டும். நம்பிக்கை வருவதற்கு திறந்த மனதுடன் இருப்பது மிகவும்
அவசியம். திரைப்போட்டு மூடிக் கொண்ட மனதில் நம்பிக்கையும், துணிச்சலும் பிறக்காது.
பார்வை நூல்
1. மனம் தரும் பணம்- நெப்போலியன் ஹில், தமிழில் – மு.சிவலிங்கம்,
கண்ணதாசன் பதிப்பகம், சென்னை – 600 017.
Comments
Post a Comment