Skip to main content

தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள் (புத்தக மதிப்புரை)

 

தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள்

 

இன்று (3.07.2025) நாம் புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சிக்காக, தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள் என்னும் தலைப்பில் காந்தி கிராமியப் பல்கலைக் கழகம், முனைவர் .பிச்சை, அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பார்ப்போம். இப்புத்தகத்தைச் சென்னை, தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டுள்ளார்கள். முதல் பதிப்பு 1983- ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதமும், இரண்டாம் பதிப்பு 2002 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும் வெளியிட்டுள்ளார்கள்.

தமிழர்களின் விளையாட்டுக்களை அறிந்து கொள்பவர்கள் அனைவருக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்  என்பதில் ஐயமில்லை. இந்நூலில் உள்ள மொழிவழிப் பொழுது போக்குகள் என்னும் கட்டுரை மொழியியல் என்னும் இதழில் வெளியிடப்பட்டது. மேலும் கிட்டிப்புள், பாவையர் ஆடும் பல்லாங்குழி, மஞ்சு விரட்டு ஆகிய கட்டுரைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தினமணிச் சுடரில் வெளிவந்த கட்டுரைகள் ஆகும்.

தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள் என்னும் இந்நூலில் விளையாட்டுசில அடிப்படைக் கருத்துக்கள், உடல்வளக் கல்வியின் வரலாறு, சங்க கால விளையாட்டுக்கள், மொழிவழிப் பொழுது போக்குகள், பாவையர் ஆடும் பல்லாங்குழி, கீர்த்தி மிக்க கிட்டிப்புள், மறத்தமிழரின் மஞ்சுவிரட்டு, விளையாட்டும் அமைப்பியல் கொள்கையும், ஆடுபுலி ஆட்டத்தின் வாழ்வும் வரலாறும் என்னும் ஒன்பது தலைப்புக்களில்  ஆசிரியர் இயற்றியுள்ளார்.

விளையாட்டு- அடிப்படைக் கருத்துக்கள்

   விளையாட்டு மனிதனின் உடன் பிறப்பு ஆகும். மனித சமுதாயம் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது அச்சமுதாயம் ஆடிய விளையாட்டும் ஆகும். விளையாட்டு சமுதாயத்தை இயக்கியும் ஊக்கப்படுத்தியும், ஒழுங்குப்படுத்தியும் வருகின்றது.

       விளையாட்டு என்பதை ஆங்கிலத்தில் Play, game, sport என்னும் சில சொற்கள் புழக்கத்தில் இருப்பதைப் போல, தமிழிலும் ஆடல், ஆட்டு, ஆட்டம், கூத்து, விளையாட்டு போன்ற சொற்கள் காணப்படுகின்றன.

சங்க கால விளையாட்டுக்கள்

       சங்க காலத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தினார்கள். வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றைச் சார்ந்தே அவர்களின் தொழில் அமைந்திருக்கிறது. ஆகவே அவர்களுக்கு நிறைய ஓய்வு இருந்தது. அவர்கள் இனக்குழு சமுதாய அமைப்பைப் பெற்றிருந்தமையால் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழக வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளும், இளையோரும் முதியோரும் விளையாடி இன்புற்றனர். பல விளையாட்டுக்களை ஐந்திணை மக்களும் விளையாடினர். அவ்விளையாட்டுக்கள் வட்டாட்டம், கிச்சுக் கிச்சுத் தாம்பலம், கழங்காடல், பந்தாட்டம், ஓரை, ஊஞ்சல், நீர் விளையாட்டு, மல்லாட்டம், ஏறுகோள், வல்லாட்டம், கழைக்கூத்து, சிறுதேர் உருட்டல் போன்ற விளையாட்டுக்கள் ஆகும்.

       சங்க கால விளையாட்டுக்கள் எளிமையானவை. அவற்றைப் பொழுது போக்கிற்காக ஆடினர். போட்டி மனப்பான்மை அதிகமாக இல்லை. பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் ஈடுபட்டனர். உடல் வளத்தையும் உவகையையும் நட்புணர்ச்சியையும் பெருக்குவதாகவே அக்கால விளையாட்டுக்கள் அமைந்தன. இவற்றில் பெரும்பாலானவை இன்றும் கிராமப் புறங்களில் காணப்படுகின்றன. காலத்திற்கேற்ப கருவிகள் மாறிவிட்டாலும் அவற்றின் செயல் அடிப்படை இன்றும் மாறாமல் இருக்கின்றது.

பயிற்சிக் கூடங்கள்

         தற்காலத்தில் உடல்பயிற்சிக் கூடங்கள் இருப்பதைப் போல உடல்வளக் கலையில் பயிற்சி பெறுவோருக்குச் சில பயிற்சிக் கூடங்கள் இருந்திருக்க வேண்டும். தமிழில் உள்ள போரவை, முரண்களரி போன்ற சொற்கள் பழங்காலத்தில் பயிற்சிக் கூடங்கள் உள்ளதைச் சுட்டுகின்றன. பட்டினப்பாலைமுரண்களரியில்பட்டினப் பாக்கத்து மறவர்களும் மருவூர் பாக்கத்து மறவர்களும் சண்டை செய்ததைப் பற்றி விளக்குகின்றது. களரி என்னும் சொல் இன்றும் கேரளாவில் வழக்கில் உள்ளது. உடல்வளக் கலையைக் கற்பிக்கும் ஆசிரியர்களைக்களரிப் பணிக்கர்என்று அழைக்கின்றனர்.

தொடக்க விழா

            குழந்தைப் பருவம் உடலியக்கச் செயல்கள் நிறைந்த பருவம். அதனால், இளமையிலே உடல்வளக் கலைப் பயிற்சியில் சிறுவர்களை ஈடுபடச் செய்தனர். சங்க காலத்தில் இப்பயிற்சிக்கு வழிபாட்டுத் தொடக்க விழா நடத்தியுள்ளார்கள். ‘பூந்தொடை விழாஎன்னும் பெயரில் விழா நடத்தப்படுவதை அகநானூறு குறிப்பிடுகின்றது. வில் பயிற்சியைத் தொடங்கும் முதல் நாளில் புதுமணல் இட்டு, விழாப் போல நடத்தினார்கள்.

ஆடவர் விளையாட்டுக்கள்

    பெருமையும் வீரமும் ஆடவரின் இரண்டு கண்கள் ஆகும். போரில் வெற்றி பெற உடல்வலிமை இன்றியமையாதது. அதனால் உடல் வளத்தைப் பெருக்கும் போர்ப் பயிற்சிக்கும் அடித்தளமான விளையாட்டுக்களை ஆடவர்கள் விளையாடினார்கள். ஏறுதழுவுதல், மல்லாட்டம், கவண்கல் தெரித்தல், வில் தெரித்தல், வேல் எறிதல், நீந்துதல் ஆகிய விளையாட்டுக்களில் ஈடுபாடு கொண்டனர். புகழுக்காக உயிரைக் கொடுக்கும் தீர மறவர்களின் தன்மையைப் பொன்முடியார் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என பாடியுள்ளார்.

இடைக்காலம்

   சங்க காலத்திற்குப் பின் வேற்றுப் பண்பாட்டின் குறுக்கீடு ஏற்பட்டதால் அறிவு வளர்ச்சியையும், ஒழுக்கத்தையும் மிகுதியாக வலியுறுத்துகின்ற நோக்கும் போக்கும் தோன்றின.

பந்து விளையாட்டு

     சங்க காலத்தில் மகளிரின் விளையாட்டாக இருந்த பந்து விளையாட்டு பெருங்கதைக் காப்பிய காலத்தில் போட்டி விளையாட்டாக அமைந்ததை அறிகிறோம். பெண்களின் ஆடை, தோற்றம், பந்தைப் பிடிக்கும் திறமை, விளையாட்டின் உச்சக் கட்டம், அதற்கான விரைவு ஆகியவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

மற்போர்

            பல்லவர் காலத்தில் மற்போர் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும். நரசிம்மவர்மன் என்னும் பல்லவ மன்ன்ன் இக்கலையில் தேர்ச்சி பெற்று, அதனால்மாமல்லன்என்னும் பட்டப் பெயரைப் பெற்றான். அறுபத்து நான்கு கலைகளில் மற்போரும் ஒரு கலையாகக் கூறப்படுகின்றது. இடைக் காலச் சோழர் காலத்தில் மல்லர்கள் இலங்கைக்குச் சென்று பொருந்தியதாகச் சான்றுகள் கிடைக்கின்றன. ஆகவே மற்போர் நல்ல உடல்வளக் கலையாக முழுமை பெற்றது.

சிரமச் சாலைகள்

        இடைக்காலத்தில் மல்யுத்தம், முஷ்டியுத்தம் போன்றவை கற்பிக்கப்படும்சிரமச் சாலைகள்இருந்தன. பழைய சொல்லாகிய களரிஎன்பதே சுருடிஎன்று இடைக்காலத்தில் மாறியிருக்க வேண்டும். மேலும், சோழர்கள் காலத்தில் இளவரசர்களுக்குப் படைப்பயிற்சி அளிக்க சாலைகளும் சத்திரங்களும் இருந்தன என்றும் வரலாற்றாசிரியர் என்.சுப்ரமணியன் குறிப்பிடுகின்றார்.

விற்போர்

           தஞ்சை மாவட்டத்தில் அண்மையில் கரந்தையென அழைக்கப்படும் கரந்தட்டான் குடியில் சிவன் கோவிலின் கருவறை மேற்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு ஒன்று விற்போரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டு இராஜராஜ சோழனின் 24 – ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டது. இந்த விற்போர் அரங்கன் காரியான சோழவிச்சாதர முத்தரையன் என்பவனுக்கும் காரிக்குளிப்பாகை என்பவனுக்கும் நடைபெற்றது. இதில் குளிப்பாகை இறந்துவிட்டான் என்று கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. சேக்கிழாரின் பெரியபுராணம் மற்போர், விற்போர், வாட்போர் ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

கஜசாஸ்திரம்

       பழங்காலத்தில் யானைப் போரும் பல்லவ சோழர் காலத்திலும் தொடர்ந்தது. யானைப்படை நான்கு வகைப் படைகளில் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. யானையைப் பற்றிய நூல்களும் இயற்றப்பட்டன. அவை கஜசாஸ்திரங்கள் என்று அழைக்கப்பட்டன. பல்லவ மன்னன் ஒருவன் இதில் தேர்ச்சி பெற்றுச் சிறப்புப் பட்டங்களும் பெற்றிருந்தான்  என்பதை குருமூர்த்தி என்பவர் சுட்டிக் காட்டுகின்றார்.

யோகப் பயிற்சி

       அறநூல்களும் தத்துவ நூல்களும் தோன்றிய காலக் கட்டங்களில் யோகாசனப் பயிற்சிகளும் தமிழகத்தில்  வளர்ச்சிப் பெறத் தொடங்கின. பூசை வழிபாடும் திராவிட இனத்திற்கு உரியதாக மொழியியல் அறிஞர் பேரறிஞர் சுனித் குமார் சட்டர்ஜி கூறுகிறார். சிவனை யோக வடிவில்ஆலமரத்தடியில் அமர்ந்திருப்பது போல காண்பது தமிழர் மரபு. எனவே தான் ஆலமர்செல்வனை தட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள். மாணிக்கவாசகரும், தென்னாடுடைய சிவனே போற்றி என்று பரவுகின்றார். ஆகவே திருமூலர் காலந்தொட்டு யோகப் பயிற்சியும் உடல்வளக் கலையின் பிரிவாக வளர்ந்திருக்க வேண்டும்.

மல்லிகச் செட்டி

          நாயக்கர் காலத்தில் மல்லாட்டம் போன்ற விளையாட்டுக்கள் செல்வாக்குப் பெற்றன. ‘மல்லகச் செட்டிஎன்னும் இனத்தார் மற்போர்க் கலையைக் கற்பிக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் இலங்கைக்கும் சென்று இக்கலையைப் போதித்தனர். உரிமரம் ஏறுதல், சிலம்பாட்டம், வண்டி ரேஸ், இளவட்டக்கல் போன்ற விளையாட்டுக்கள் நாயக்கர் காலத்தில் தோன்றியிருக்க வேண்டும். இவ்விளையாட்டுக்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் தற்பொழுதும் வழக்கில் இருந்து வருகின்றன.

தற்காலம்

இந்திய மக்களின் விளையாட்டுக்கள்

            இந்தியா பல இனங்களையும் சாதிகளையும் மதங்களையும் மொழிக் குடும்பங்களையும் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. மொழியில் பலவகை மொழிகள் இருக்கும் நாட்டைப் போல பலவகையான விளையாட்டுக்களிலும் ஒற்றுமைக்கூறுகள் காணப்படுகின்றன. வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பையும் அடிப்படையாகக் கொண்ட கிராமியச் சமுதாயத்தில் சில சிக்கலான, போட்டி விளையாட்டுக்களும் உள்ளன. ஆனால் மலைச் சாதியினரின் விளையாட்டுக்கள் எளிமையானதாகவும், முறையான அமைப்பில்லாததாகவும் போட்டிப் பண்பின்றியும் காணப்படுகின்றன.

         சடுகுடு, கிட்டிப்புள், சிலம்பம், மாட்டுப் பந்தயம், பொய்க்கால் நடை, தாயம், பல்லாங்குழி, அம்மானை, ஆடுபுலி ஆட்டம் போன்ற விளையாட்டுகள் ஆகும்.

மேனாட்டு விளையாட்டுக்கள்

            17 – ஆம் நூற்றாண்டில் வணிகத்துக்காக வந்த ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களின் ஆட்சியை அபகரித்தனர். அவர்கள் கல்வி முறையையும் புகுத்தினர்.

உடற்பயிற்சி படிப்புகள்

         உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சான்றிதழ் பெற்ற உடற்பயிற்சி ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு பெற்ற உடற் பயிற்சி ஆசிரியர்கள் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் உடற்பயிற்சி இயக்குநர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.

பயிற்சிக் கல்லூரிகள்

            தமிழ்நாட்டில் சென்னை, அண்ணாமலைநகர், காரைக்குடி, கோயம்புத்தூர் ஆகிய நான்கு நகரங்களில் உடற்பயிற்சிக் கல்லூரிகள் இயங்குகின்றன. இவைகள் சான்றிதழ், பட்டப்படிப்பு, மேற்பட்டப்படிப்பு ஆகிய வகுப்புகளை நடத்துகின்றன. சென்னையில் உள்ள நந்தனம் உடற்பயிற்சிக் கல்லூரியில் ஆராய்ச்சி செய்வதற்கும் வசதி உண்டு. இக்கல்லூரிகள் அனைத்து விளையாட்டுக்களையும் கற்பிக்கின்றன. கபடி, கோ கோ போன்ற நாட்டுப்புற விளையாட்டுக்கள், மல்யுத்தம், குத்துச் சண்டை, கராத்தே, சிலம்பம், யோகாசனம் போன்ற விளையாட்டுக்களைக் கற்பிக்கும் தனியார் உடற்பயிற்சிக் கூடங்களும் உள்ளன.

விளையாட்டுப் பயிற்சித்துறை

        தமிழக உடல்வளக் கல்வி வரலாற்றில் 1979 – ஆம் ஆண்டு தான் இளைஞர் விளையாட்டுப் பயிற்சித் துறை ஆரம்பிக்கப்பட்டது. இத்துறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு விளையாட்டு அலுவலர் பணியாற்றுகின்றனர். இவர் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஒன்று அல்லது இரண்டு ஊரக விளையாட்டு மையங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார். இதற்கு தமிழக அரசு நிதியுதவி செய்து வருகின்றது.

மொழிவழிப் பொழுதுபோக்குகள்

   வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் மொழியை உருவாக்கினான். தனது கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் தெரிவிக்கும் செய்திப் பரிமாற்றக் கருவியாக மொழியைப் பயன்படுத்தினான். நாளடைவில் பேச்சுமொழியையும் எழுத்து மொழியையும் பல்வேறு சூழ்நிலைகளில்துறைகளில் தகவல் தொடர்புக்கும், பொழுது போக்கிற்கும் பயன்படுத்தி வருகின்றான். பின்பு எழுத்தை அடிப்படையாகக் கொண்டு கணினி, இணையம் என்று உருவாக்கும் அளவில் வளர்ச்சி அடைந்து விட்டான். இன்றைய காலக்கட்டத்தில் மொழியைப் பயன்படுத்திப் பொழுது போக்க உதவும் சில மொழி விளையாட்டுக்கள் மொழியியல் கண்ணோட்டத்தில் விளக்கப்படுகின்றன.

எது பெரிது

          ஓர் ஒலி இயல்பான மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதனை அளபெடை என்பர். பொருளின் தன்மைக்கும் சொல்லின் ஒலிப்பளவுக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. வலிய பெரிய விலங்கு புலியைச் சுட்டும் சொல் இரண்டு எழுத்துக்களால் ஆனது. எளிய சிறிய பிராணி எறும்பைச் சுட்டும் சொல் நான்கு எழுத்தில் அமைந்துள்ளது. ஆனால் குழந்தைகள் ஒலிக்கும் பொருளுக்கும் அளவு அடிப்படையில் தொடர்பு உண்டு என்று எண்ணி ஏமாறுகின்றனர்.

            .கா குழந்தைகளிடம்நூறே பெரிதா?’ அல்லது தொண்ணூறே பெரிதாஎன்று கேட்ட்டால் சில குழந்தைகள் தொண்ணூறே என்று பதில் கூறும். எண்ணிக்கையில் தொண்ணூற்றைக் காட்டிலும் நூறு பெரிதாக இருந்தாலும்,  ஒலியளவில் தொண்ணூறு நூறைக் காட்டிலும் பெரிது. என்று எண்ணிக் குழந்தைகள் கூறும் பொழுது கேட்பவருக்கு உவகை தோன்றுகின்றது.

மொழி மரபு

            ஒரு பிரிவினர் ஒரு பெயரைச் சொல்ல, அதற்குப் பொருத்தமான வினைச் சொல்லையோ, அதனோடு தொடர்புடைய மற்றொரு சொல்லையோ மற்றொரு பிரிவினர் சொல்ல வேண்டும். தவறாகச் சொல்பவர் விளையாட்டிலிருந்து நீக்கப்படுவர். இவ்விளையாட்டுத் தமிழகப் பள்ளிகளில் விளையாடப்படுகிறது.

1.    காக்கா பற பற

2.    குருவி பற பற

3.    பருந்து பற பற

4.    கொக்கு பற பற

5.    வாத்து பற பற

 மேலே தரப்பட்டுள்ள தொடர்களில் ஐந்து பெயர்ச் சொற்களும் பறவையினத்தைச் சார்ந்தவை. ஆனால் முதல் நான்கு மட்டும் தான் பறக்கும் இயல்புடையவை. வாத்து பறவையினத்தைச் சேர்ந்த்தாக இருந்தாலும் பறக்கும் தன்மையற்றது. இருப்பினும் பறவையே.

            ஒரு விளையாட்டில் குழந்தைகள் கவனமாக ஈடுபடுவதையும் கேட்கும் திறனையும் சோதிப்பதற்கு இவ்விளையாட்டு உதவும்.

வினாவுக்குள் விடை

            மாணவர்கள் சில வினாக்களை விரைவுடன் கேட்பார்கள். அவற்றிற்கு உடனே பதில் சொல்ல வேண்டும். அக்கேள்விகளுக்கு விடை அவற்றினுள்ளே இருக்கும். கேள்விக்குள்ளே விடையைத் தேடாமல் பெரும்பாலோர் வெளியே ஏதாவது ஒன்றைச் சிந்திப்பர். இவ்வுத்தி அடிப்படையில் எழுந்த செய்யுளைச் சித்திரக் கவிகளுள் ஒன்றாகக் கூறுவர். மொழியுணர்வு மிக்கவர்கள் இவ்வுத்தியைக் கண்டுபிடித்து விடையைச் சொல்லிவிடுவார்கள். .காட்டாக,

1.    எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?

2.    கம்பராமாயணத்தை எழுதியவர் யார்?

3.    நந்திக் கலம்பகம் யார் மேல் பாடப்பட்டுள்ளது?

இக்கேள்விகளுக்கு விடை கேள்விக்குள்ளேயே இருப்பதைக் காணலாம்.

மேலும், பல மொழி விளையாட்டுகளாக செந்தமிழும் நாப் பழக்கம், இரகசிய மொழி, குறுக்கெழுத்துக் கட்டம், எழுத்து மாறிப் பொருள்கோள், சொல்லாக்கம், விடுகதை, பட்டப்பெயர்கள் என்று பல விளையாட்டுக்கள் உள்ளன.

விளையாட்டும் அமைப்பியல் கொள்கையும்

          என்னும் தலைப்பில்

            மனிதனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் ஓர் அமைப்புக்குட்பட்டது. மனிதன் பயன்படுத்துகின்ற மொழிக்கும் அதன் மேல் கட்டப்படுகின்ற யாப்புக்கும் அமைப்புக்கள் உண்டு. இலக்கிய வகைகளை ஒப்பிடல், உள்ளடக்க ஆய்வு, ஒரு பண்பாட்டின் தனித்தன்மை போன்றவற்றை அறிய இன்று அமைப்பியல் ஆய்வு பயன்படுத்தப்படுகின்றது.

பிராப்பின் அமைப்பியல் முறை

            விளாடிமிர் பிராப் என்னும் ருஷ்ய நாட்டு அறிஞர் 1928 – ஆம் ஆண்டில் நாட்டுப்புறக் கதைகளின் உள்ளமைப்பு என்னும் நூலை வெளியிட்டார். இவர்தான் முதன் முதலில் கதைகளை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்தார். இவர் கதைப்பின்னலின் அமைப்புக் கூறான செயல் என்பதன் அடிப்படையில் ருஷியக் கதைகளை ஆராய்ந்தார். செயல்களைத் தொடர் உறவில் வைத்து விளக்கியது இவரின் அமைப்பியல் முறையின் தனிச்சிறப்பாகும்.

லெவிஸ்டிராசு அமைப்பியல் முறை

     கிளாடெ லெவிஸ்ராசு பிரெஞ்சு நாட்டு அறிஞர். இவர் அமைப்பு மொழியியல் கோட்பாட்டின் அடிப்படையில் புராண மரபுக் கதைகளை விளக்கி ஆராய முற்பட்டார். எவ்வாறு மொழியின் அமைப்பை ஒலியன், உருபன், தொடரன் என்று பகுத்து ஆராய்கின்றோமோ அவ்வாறே நாட்டுப்புற மற்றும் புராணமரபுக் கதைகளைச் சில உடகூறுகளாகப் பகுத்து, அவற்றுக்கு இடையே உள்ள உறவுத் தொகுதியை விளக்க வேண்டும் என்று கூறினார். இவர் அமைப்புக் கூறுகளுக்கு இடையே உறவைக் காணாமல், ஒத்த அமைப்புக் கூறுகளுக்கு இடையே உள்ள மேல்கீழ் உறவைக் காண்பது இவரது அமைப்பியல் முறையின் தனித்தன்மையாகும்.

ஆலன் டன்டீஸின் அமைப்பியல் முறை

            ஆலன் டன்டீஸ் அமைப்பியல் முறையைக் கடுமையாக விமர்சித்துக் குறைகளையும் குழப்பங்களையும் சுட்டிக்காட்டினார். இவர் பிராப்பின் அமைப்பியல் முறையைப் பின்பற்றி அதை விரிவு படுத்தினார். இவர் தாம்சன் பயன்படுத்திய கதைக்கூறை எடுத்துக் கொண்டு, கதைக்கூறன் எனப் பெயரிட்டு அழைத்தார். மேலும், மொழியியலில் பயன்படுத்தும் ஒலியன் மற்றும் மாற்றொலி கோட்பாட்டின் அடிப்படையில், கதைக்கூறுகளையும் வேறுப்படுத்திக் காட்டுகின்றார்.

தமிழகத்தில் அமைப்பியல் ஆய்வு

            முதன்முதலில் தமிழில் அமைப்பியல் ஆய்வைத் தொடங்கி வைத்த பெருமை கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையைச் சேரும். பேராசிரியர் வி..சுப்பிரமணியனின் தலைமையில் தா.வே.வீராசாமி, பா.ரா.சுப்பிரமணியன், கே.பி.எஸ்.ஹமீது ஆகியோர் ஆரம்பித்து வைத்தார்கள். பெரும்பாலோர் இலக்கிய மரபான புராணக் கதைகளையே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். மதுரைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் எம்.முத்துச்சண்முகம் பிள்ளையும், அவரது மாணாக்கர்களும் முற்கால மற்றும் நாட்டுப்புற இலக்கிய ஆராய்ச்சியில் அமைப்பியல் முறையை மேற்கொண்டனர்.

            அமைப்பியல் முறையை நாட்டுக்கதை, புராணக்கதை போன்ற கதைகளுக்கு மட்டுமே பெரும்பாலும் வெளிநாட்டு ஆய்வாளர்களும் பயன்படுத்தியுள்ளனர். இம்முறையை விளையாட்டு போன்ற மொழி சேராத நாட்டுப்புற அம்சங்களுக்குப் பொருத்தி அதிகமாக ஆராயவில்லை. தமிழரின் மரபு விளையாட்டுக்களை அமைப்பியல் நோக்கில் ஆராய்வதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது என்பது வெளிப்படை.

ஆடுபுலி ஆட்டத்தின் வாழ்வும் வரலாறும் எனும் தலைப்பில்,

            ஆடுபுலி ஆட்டம்பதினைந்தாம் புலிஎன்னும் பெயரிலும் தமிழகக் கிராமங்களில் வழங்கப்படுகிறது. இது ஆடவர்களுக்கே உரிய விளையாட்டு. இதனை முதியவர்கள் பொது இடங்களில்குறிப்பாக சத்திரம் சாவடிகளில் விளையாடுவர். இவ்விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் விளையாடுபவரின் அறிவுத் திறனைச் சார்ந்ததாகும். இரவு, பகல், எந்நேரத்திலும் எப்பருவத்திலும் இதனை விளையாடலாம். இதனை விளையாட இருவர் வேண்டும். பண்டை காலத்தில் வல்லாட்டம் என்பதோடு தொடர்புடையது. இன்றைய செஸ் விளையாட்டிற்கு இணையான அறிவு விளையாட்டாகும்.

நிறைவாக,

         தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள்என்னும் இந்நூல் தமிழரின் விளையாட்டுக்களை விளக்கவியல் முறையில் விளக்கும் அறிமுக நூலாகும். ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள்விளைஎன்றால்விருப்பம்என்று பொருள் கொண்டுவிரும்பியாடும் ஆடும் விளையாட்டுஎன விளக்குகின்றார். இளமையில் விளையாடும் விளையாட்டுப் பயிற்சி முதுமையில் வினை செய்வதற்கு வேண்டும் தோழமை உணர்வையும், மனத்திட்பத்தையும், அறிவு நுட்பத்தையும் பயக்கும்.  இத்தகைய சிறப்பினைக் கொண்ட நூலை ஆசிரியர் அ.பிச்சை அவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் படைத்துள்ளார்.

            புத்தகங்களை படிப்பது நமது அறிவை வளர்க்கும், புத்தகங்களைப் பகிர்வது அறிவை பரப்பும்       

 

 

 

           

             

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...