Skip to main content

திருச்செந்தூர் சென்ற அனுபவங்களாக…

 

திருச்செந்தூர் சென்ற அனுபவங்களாக…

            திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாங்கள் செல்ல வேண்டும் என்று கடந்த ஆறு மாதங்களாகத் திட்டமிட்டோம். அதற்கான நேரம் நேற்று (சனிக் கிழமை)தான் ( ஆகஸ்டு 16.08.2025) எங்களுக்கு அமைந்தது. நானும், என்னுடன் பணியாற்றும் தோழி உதவிப் பேராசிரியர் முனைவர் வா.ரா.விஜயலட்சுமி, உதவிப் பேராசிரியர் சச்சின் அவர்கள் மற்றும் முசிறி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் முனைவர் பாக்கியரதி அவர்கள், மற்றும் அவர்களின் சகோதரி  என ஐந்து பேரும் இணைந்து காரில் பயணம் செய்து திருச்செந்தூருக்குச் சென்று வந்தோம். அந்த பயண அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

            திருச்சியிலிருந்து சனிக்கிழமை காலை 6 மணிக்கு கிளம்பினோம். மதுரைக்கு அருகில் ஆரியபவன் ஹோட்டலில் காலை சிற்றுண்டியை முடித்தோம். பின்பு தூத்துக்குடி வழியாகத் திருச்செந்தூருக்கு 12 மணிக்குச் சென்று விட்டோம். அங்கு எதிர்பார்க்க முடியாத படி கும்பல் அதிகமாக இருந்தது. திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் நடந்த போது இருந்த கூட்டத்தை விட இன்று அதிகமாக இருந்ததாகக் கூறினர்.

            சனிக் கிழமை கிருஷ்ண ஜெயந்தி மற்றும் அஷ்டமி திதி, கிருத்திகை என்பதால் மிகவும் கூட்டமாக இருந்தது. நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் நாங்கள் கடற்கரையில் சிறிது நேரம் நீராடி விட்டு, பின் பகல் 2 மணியளவில் வரிசையில் நின்றோம். மாலை 6 மணிக்கு தான் சாமியைப் பார்த்தோம். நான் கூட்டத்தைப் பார்த்தவுடன் சாமியைப் பார்க்காமல் சென்று விடலாம் என்றுக் கூறினேன். ஆனால் பார்த்து விடலாம் என்று பாக்கியரதி அவர்கள் கூறி நான்கு மணி நேரம் வரிசையில் நின்று தரிசித்து வந்தோம்.

பிறகு திருநெல்வேலிக்கு இரவு 8 மணிக்கு நெல்லையப்பர் கோயிலுக்கும் சென்று வந்தோம். நன்கு தரிசித்து வந்தோம். இது ஒரு நல்ல அனுபவம்.



திருச்செந்தூர்

                                                    


அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். முருக கடவுள் தேவ சேனாதிபதியாக வடிவெடுத்து, தீமையின் வடிவிலான சூர பத்மனை சம்ஹாரம் செய்த திருத்தலம். தமிழர்கள் இந்த நிகழ்வினை ஆண்டுதோறும் சம்ஹார திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். முருகப்பெருமான் பழந்தமிழ் இலக்கியங்களில் சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றார். சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திருத்தலம் முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் திருச்சீரலைவாய் என சான்றோர்களால் அழைக்கப்பட்டது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது ஸ்தலங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்

·         திருத்தலத்தில் உள்ள இறைவன் நெல்லையப்பர், சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.

·         இத்தலத்தில் உள்ள அம்பாள் காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.

·         கோயிலில் ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள் உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும்.

திருநெல்வேலி – ஊரின் பெயர் வரக் காரணம்

முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராகத் திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியைச் சோதிக்கச் சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் இறைவனின் நைவேத்தியத்திற்காகத் தினமும் வீடு வீடாகச் சென்று நெல் சேகரித்து வருவார். ஒருநாள் சேகரித்த நெல்லைச் சன்னதி முன் உலரப் போட்டுவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழைத் தண்ணீரில் நெல் நனைந்துவிடப் போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்.

மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர், இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தைக் காணவிரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் ஆச்சரியப்பட்டார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார்.

நிறைவாக,

            திருநெல்வேலி கோயிலின் எதிரில் திருட்டுக் கடை அல்வா, நேந்திரம் சிப்ஸ் வாங்கிய பின்பு தான் நாங்கள் இரவு நேர உணவினை முடித்து விட்டு இரவு 10 மணிக்குக் கிளம்பினோம். திருச்சிக்கு விடியற் காலம் 3 மணி வந்து சேர்ந்தோம். இந்த நாள் மிகவும் இனிமையானதாகவும், மறக்க முடியாத நாளாகவும் அமைந்தது.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...