Skip to main content

தஞ்சை சரசுவதிமகால் நூலகம் (புத்தக மதிப்புரை)

 

தஞ்சை சரசுவதிமகால் நூலகம்

தஞ்சை மராட்டிய மன்னர்களின் நூலகப் பணிகள்

புதுகைப் பண்பலை 91.2 சமுதாய வானொலி (புத்தக மதிப்புரை) நிகழ்ச்சியில் உரையாற்றிய கட்டுரை

இன்று நாம் புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சிக்காக, தஞ்சை சரசுவதி மகால் நூலகம் தஞ்சை மராட்டிய மன்னர்களின் நூலகப் பணிகள்என்னும் தலைப்பில் முனைவர் ஆ.குணசேகரன் அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பார்ப்போம். இப்புத்தகத்தைத் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளார்கள்.

நூலாசிரியர் முனைவர் .குணசேகரன் அவர்கள் நூலகப் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். சென்னை மறைமலையடிகளார் நூலகத்தில் பல்லாண்டுகளாகப் பணியாற்றி பின்னர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தில் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூலகத்தில் சிறப்புநிலை நூலகராக 21 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து சிறப்பான நூலகர் என்ற பெயர் பெற்றுள்ளவர். இத்தகைய சிறப்புடைய நூலாசிரியர் தஞ்சை மராட்டிய மன்னர்களின் நூலகப் பணிகள் என்னும் தலைப்பில்  முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதற்காக இவர் பலதரப்பட்ட தரவுகளை தேடித் திரட்டி 262 பக்கங்களில் தொகுத்துத் தந்திருப்பது இவருடைய பேருழைப்பைக் காட்டுகின்றது.

இந்நூலுக்கு தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் .சுந்தரமூர்த்தி அவர்கள் சிறந்ததொரு அணிந்துரை வழங்கியுள்ளார்கள்.

இந்நூலில் நூலும் நூலகமும், தஞ்சை சரசுவதி நூலகத் தோற்றமும் வளர்ச்சியும், தஞ்சை மராட்டிய அரசும் நூலகமும், இரண்டாம் சரபோஜியின் நூலகப் பணிகள், இரண்டாம் சிவாஜியும் அவருக்குப் பின்னரும் சரசுவதி மகால் நூலக வளர்ச்சி என்ற ஐந்து தலைப்புகளில் சரசுவதி மகாலின் வரலாறு, பண்பாடு, அச்சுப் பணிகள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ள உதவும் வகையில் அமைந்துள்ளது.

        உலகில் மிகப் பெரியத் தொன்மையான நூலகமாக தஞ்சை சரசுவதி மகால் நூலகம் விளங்குகின்றது. வேறு எங்கும் கிடைக்காத, அரிய நூல்களும், ஓலைச் சுவடிகளும், காகிதச் சுவடிகளும், அச்சு நூல்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்புமிக்க இந்நூலகம் நீண்ட காலமாகத் தஞ்சை மன்னர்களின் குடும்பச் சொத்தாக இருந்து வந்தது. தற்பொழுது இந்நூலகம் பொதுநூலகமாக மாற்றப்பெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்தியாவிற்கு வருகின்ற பார்வையாளர்களைக் கவர்ந்து வரும் பெருமைமிக்க இந்நூலகம் பல்துறை அறிஞர்களின் ஆய்வுக்குப் பயன்படும் நூலகமாக விளங்கி வருகிறது.

தஞ்சாவூர் - விளக்கம்

            செந்தமிழ் நாடாகிய சோழநாட்டின் தலைநகர் தஞ்சாவூர் ஆகும். சோழ வளநாடு நீர்வளம் மிக்கது. நீர் மிகுதியாக பாய்வதால் வயல்கள் எப்பொழுதும் குளிர்ச்சி பொருந்தியதாக மாறின. அவை தண்+செய் =தண்செய் எனப்பட்டன. தண்செய் என்ற பெயரே தஞ்சை என மாறியது என்பர்.

·         சோழநாடு சோறுடைத்து என்பதற்கிணங்க பிறநாடுகளில் பஞ்சம் முதலியன ஏற்பட்டால் மக்கள் இங்குதான்தஞ்சம்புகுவர். மக்கள் தஞ்சம் புகுந்த இந்நகருக்குப் பெயர் தஞ்சஊர் தஞ்சாவூர் ஆயிற்று என்பர்.

·         தண்சாய் என்பது ஒருவகைக் கோரையின் பெயர். அத்தண்சாய்க் கோரை மிகுந்துள்ள இடம்தஞ்சைஎனப்பட்டது என்பர். அருகில் மாணாங்கோரை, தண்டாங்கோரை எனச் சில ஊர்கள் உள்ளன.

·         தஞ்சாறை என்பதே இந்நகரின் பழம்பெயர் என்பர் சிலர். ‘ஆறைஎன்றால் கோட்டை, மதில், அரண் என்று பொருள் கொள்வர். தஞ்சாறை என்ற பெயரே தஞ்சாவூர் ஆயிற்று என்றும் கொள்வர்.

·         பல்லவர் கல்வெட்டு, முத்தரையர் கல்வெட்டு, ஆழ்வார்கள் பாடல், திருநாவுக்கரசர் தேவாரம், விசயலாயன் கல்வெட்டு ஆகிய தொன்மையானவற்றில்தஞ்சைஎன்ற பெயரே காணப்படுகின்றது. ஏறக்குறைய முதல் பராந்தகன் காலத்தில்தான்தஞ்சாவூர்என்று பெயர் வழங்கத் தொடங்கியது என்பர்.

நூலகப் பணிகள்

            மனிதனின் அறிவு வளர்ச்சிக்கும், பண்பாட்டுச் சிறப்பிற்கும், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு நூல்களை உருவாக்குதல், படியெழுத்தல், அட்டவணைப் படுத்தல், பல நிலைகளில் பாதுகாத்தல், பயன்படுத்துவோருக்கு உரிய வகையில் நூல் வழங்குதல் போன்ற பலவும் நூலகப் பணிகளாகும்.

        சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது தஞ்சை சரசுவதி மகால் நூலகம். தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சிகாலத்தில் இந்நூலகம் வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக, இரண்டாம் சரபோஜி மன்னர் தமது பன்மொழிப் புலமையாலும், மேனாட்டுக் கல்வியால் பெற்ற அறிவாலும் இந்நூலகத்தினை நூலகவியல் முறைப்படி வளர்ச்சி அடைவதற்கு வகை செய்தார்.

நூலும் நூலகமும்

          நூல் மற்றும் நூலகம் பற்றி ஆராயும்பொழுது, முதலில்  நூல் உருவாவதற்கு அடிப்படையானசுவடிஅறியவேண்டுவது மிகவும் தேவையாகும். சுவடி என்னும் சொல் கையால் எழுதிய நூலைக் குறிப்பது.

            தோடே மடலே ஓலை என்றா

              ஏடே இதழே பாளை என்றா

              ஈர்க்கே குலையென தேர்ந்தன பிறவும்

              புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்” (தொல் – 9,88)

என்னும் தொல்காப்பிய நூற்பா தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்பன புறத்துக்காழுடைய பனை, தெங்கு, கமுகு, முதலியவற்றின் இலையாகிய உறுப்பினைக் குறிக்கும் மரபுச் சொற்களாகும் என்பதை எடுத்துக் கூறுகிறது.

     எழுதப்பெற்ற ஏடுகளும் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ் என்னும் பெயர்களால் சுட்டப் பெறுவதை இலக்கியங்களிலும் வழக்காற்றிலும் காண முடிகிறது.

            இவற்றுள் பெரும்பாலும் கடிதவடிவில் எழுதப்பெற்றவை மடல், ஓலை என்ற பெயர்களைப் பெறுகின்றன. நூல் வடிவில் அமைந்தவை ஏடு என்ற பெயரை பெறுகின்றன. இவை ஆகுபெயர்கள். சுவடி என்பது காரணப் பெயராக அமைகின்றது.

புத்தகம்

      புதிய கருத்துக்களைத் தன்னகத்துத் தாங்கி நிற்பதாலும், அக்கருத்துக்களை உள்ளத்தில் பதிய வைப்பதாலும் நூல் என்பதே புத்தகம் என்னும் வேறு பெயரையும் பெறுகிறதுபுத்தகம் என்னும் சொல் பொத்தகம் என்பதன் வழிவந்த சொல். பொத்துதல், பொருத்துதல், சேர்த்தல், தைத்தல், மூட்டுதல், மூடுதல் என்று பொருளில் சொல்லாராய்ச்சியாளரின் கருத்தாகச் சுட்டுவர்.

            புத்தகம் படிக மாலை குண்டிகை பொருள்சேர் ஞான

                                                                         (கம்பராமாயணம், பாலகாண்டம், 32)

             பொத்தகமும் ஞானத்து முத்திரையும்” (பெருங்கதை-118)

போன்ற பாடலடிகள் புத்தகம்,  பொத்தகம் என்ற சொற்கள் நூலைக் குறிப்பதைக் காட்டுகின்றன.

நூல்

            நூல் என்ற சொல்லுக்குத் தொல்காப்பியர் செய்யுளியலில்,

            நூல் எனப்படுவது நுவலுங்காலை

              முதலும் முடிவும் மாறுகோள் இன்றித்

              தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி

              உள்நின்று அகன்ற உரையொடு பொருந்தி

              நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே” (செய்யுளியல், 164)

இவ்வாறு தொகுத்தும் வகுத்தும் பொருள் விளக்கி நிற்கும் பொருண்மை நோக்கி நூல் என்னும் சொல் பெருவழக்காய் வழங்கி வருவதைக் காண்கிறோம்.

நூலகம்

     எல்லா மாநிலங்களிலும் மாவட்ட மைய நூலகங்களையும், ஊரக நூலகங்களயும், பலப்படுத்த வேண்டிய முயற்சிகள் டைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் 1972- ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் நூலகத்துறை தனித்துறையாக்கபட்டது. நூலகப்பணிகள் பல சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

  பொதுநிலையில் நூலகம் என்பது எல்லாரும் நூல்களைப் பயன்படுத்தத்தக்க அளவில் அமைந்த மையம் என்ற நிலை சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு சில மேலைநாடுகளில் தோன்றியது. இந்நிலை, நம்நாட்டில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியுள்ளது. அதற்கு முன்னர் அவ்வப்போது இருந்த ஆட்சி அமைப்புகளுக்கேற்ப நூலக அமைப்புகளும் இருந்தன என்பதை வரலாறு  சுட்டுகின்றது. இந்திய நூலக வரலாற்றில் சங்க காலம், சமய காலம், இசுலாமியர் காலம், ஆங்கிலேயர் காலம், இந்திய விடுதலை காலம் எனப் பிரித்துக் காணுமிடத்துப் பல செய்திகள் ஆய்வுக்கு உரியனவாகின்றன.

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

    தஞ்சை சரசுவதி மகால் நூலகம் கலாசார ஒற்றுமைக்கும் கல்வி வளர்ச்சிக்கும் உரிய சிறப்பான படைப்புகள் பலவற்றை ஆயிரம் ஆண்டுக்கால எல்லையில் தொடர்ந்து உருவாக்கிப் பாதுகாத்து வந்துள்ள தனிப்பெருமையைப் பெற்றுள்ள நூலாகமாகும்.

சோழர்கால சரசுவதி பண்டாரகம்

   தஞ்சை சரசுவதி பண்டாரம் கி.பி.1122 முதல் இருந்ததாக ஜே.எம்.சோமசுந்தரம் குறிப்பிடுகின்றார்.இந்நூலகம் தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி துவங்குவதற்கு முன்பு இருந்ததாகவும் கே.ஆர்.சுப்பிரமணியம் குறிப்பிடுகின்றார். சோழர் காலப் பழமை கொண்ட இந்நூலத்திற்கு இரண்டாம் சரபோஜி மன்னரின் நினைவாகதஞ்சை மகாராசா சரபோசி சரசுவதி மகால் நூலகம்என்று அவருடைய பெயரைச் சூட்டி, நிர்வாகக் குழு 1918- இல் அறக்கட்டளை நிறுவனமாக்கி  ஏற்றுக் கொண்டது. மகால் என்று அழைக்கும் வழக்கம் மராட்டிய மன்னர்களின் காலத்தில் ஏற்பட்டதாகும். இந்நூலகத்தில் நாயக்கர் காலத்திற்கு முற்பட்ட பழமைவாய்ந்த சுவடிகள் பல உள்ளன என்று ஏ.சி,பர்னல், பி.பி.எஸ்.சாஸ்திரி ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

பராந்தகச் சோழன்

            பராந்தகச் சோழன் தஞ்சையில் ஆட்சிபுரிந்த காலம் கி.பி.907-952 ஆகும். இக்காலத்தில் மாதவர் என்ற அந்தணர் ருக்வேத பாஷ்யம் என்ற நூலினை எழுதினார். இந்நூலில் பராந்தகனை ஜகதேகவீரன்என்று குறிப்பிடுகின்றார். இந்த ஓலைச் சுவடி கிரந்த எழுத்தில் நல்ல நிலையில் இந்நூலகத்தில் உளளது. தேவாரம், திருவெம்பாவைப் பாடல்களைக் கோயில்களில் பாட அறக்கட்டளை ஏற்படுத்தியிருந்தான் என அறியமுடிகின்றது.

இராஜராஜன்

            இராஜராஜன் காலத்தில் புலவர் கருவூர்த்தேவரின் இசைப்பாடல்கள் சைவத் திருமுறையில் சேர்க்கபட்டுள்ளன. இவன் அவைக்களத்தில் இருந்த வடமொழிப் புலவர் சவர்ணன் நாரணபட்டாதித்தன் எழுதிய வடமொழி நூல் இராஜராஜ விஜயம் ஆகும். இராஜராஜேஸ்வரம் என்ற தமிழ் நாடகம் அரண்மனையில் நடித்துக் காட்டப்பட்டது. இதன் மூலம் இராசராசனின் நாடகக் கலையார்வத்தினை அறிய முடிகிறது.

முதலாம் இராசேந்திரன்

            முதலாம் இராசேந்திரன் காலத்தில் அவைக்களப் புலவர் திரிலோசன சிவாச்சாரியார். சித்தாந்த சாராவளி என்னும் வடமொழி நூலினை இயற்றினார். இம்மன்னன் கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்று வந்தபோது அங்கிருந்த புகழ்பெற்ற சைவ ஆச்சாரியர்களான ஈசான சிவபண்டிதர், சர்வசிவ பண்டிதர் ஆகியோரைச் சைவ சமய வளர்ச்சிக்காகத் தஞ்சைக்கு அழைத்து வந்தான் என்று சித்தாந்த சாராவளி உரை குறிப்பிடுகின்றது.

            இம்மன்னன் காலத்தில் கல்வெட்டுக்களைப் புதுப்பித்தல், படியெடுத்தல், அவற்றினை பனையோலைகளில் எழுதுவித்து மீண்டும் கல்லில் பொறித்தல் போன்ற செயல்கள் செய்யப் பெற்றதைச் சாசனக் குறிப்புக்களால் அறிகின்றோம்.

முதலாம் குலோத்துங்கன்

         கி.பி.1071-1120 வரை தஞ்சையை முதலாம் குலோத்துங்கன் ஆட்சிபுரிந்தான். இவன் ஆட்சிகாலத்தில் தஞ்சையில் கல்விவளம் பெற்றது. இவன் தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகியவற்றினை நன்கு அறிந்தவன். இவன் ஆட்சிக் காலத்தில் சரசுவதி பண்டாரத்தில் தமிழ், வடமொழி மற்றும் தெலுங்குமொழிச் சுவடிகள் இடம் பெற்றதை அறிய முடிகின்றது.

இரண்டாம் இராஜராஜன்

          இரண்டாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் தஞ்சையை ஆண்ட இரண்டாம் இராஜராஜன் தமிழ் வடமொழி இரண்டிலும் புலமைமிக்கவன். ஒட்டக்கூத்தர் இம்மன்னன்  மீது உலா பாடியுள்ளார்.

மூன்றாம் குலோத்துங்கன்

            இரண்டாம் இராஜராஜனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவன். மூன்றாம் குலோத்துங்கன் இவன் சைவ நெறியில் சிறந்த ஈடுபாடு கொண்டவன். இம்மன்னனின் விருப்பத்திற்கு ஏற்ப்ப் புகழ்பெற்ற சைவ ஆச்சாரியார் சீகண்ட சம்புவின் மகன் ஈசுவரசிவனார் சித்தாந்த ரத்னாகரம் என்னும் நூலினை இயற்றினார்.

மூன்றாம் இராஜராஜன்

            மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக்குப் பின் மூன்றாம் இராஜராஜ சோழன் (கி.பி 1216-1256) ஆட்சிப் பொறுப்பேற்றான். இம்மன்னன் சைவநெறி வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன்.

            சோழர்களால் சரசுவதி நூலகததில் பாதுகாக்கப்பட்ட சுவடிகளில் கிரந்த எழுத்துச் சுவடிகள் மிகவும் முக்கியமானவையாகும். தமிழக வரலாற்றினை அறிவதற்கு இச்சுவடிகள் உறுதுணையாக இருக்கின்றன. இதனைப் போன்றே வடமொழிச் சுவடிகளும் இன்றியமையாதனவாகக் கருதப்படுகின்றன.

தஞ்சையில் நாயக்கர்கள் ஆட்சியும் சரசுவதி நூலகமும்

            மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் சந்திரசேகரனுக்கும் தஞ்சையை ஆட்சி செய்த சோழமன்னன் வீரசேகரனுக்கும் ஏற்பட்ட போரில் பாண்டிய மன்னன் கேட்டு கொண்டதற்கேற்ப விசயநகர மன்னன் நாகமநாயக்கரின் தலைமையின் கீழ் ஒரு படையைத் தஞ்சைக்கு அனுப்பினான்.

தஞ்சையில் சேவப்ப நாயக்கரின் ஆட்சி கி.பி1532 – இல் ஏற்பட்டது. இந்நாயக்கர் ஆட்சியில் தஞ்சை சமய வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் புகழ் பெற்று விளங்கியது. நூலகத்தில் இருந்த ஆயிரக்கணக்கான வடமொழி வேதசாஸ்திரம், புராணம், காவியம், வைத்தியச் சுவடிகளைக் கண்ணுற்ற தீட்சிதர் அவற்றினைப் பாதுகாக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இம்மன்னர் காலத்தில் சரசுவதி நூலகம் சிறந்த வளர்ச்சியை எட்டியது. மேலும் சுவடிகளையும் பழைய சுவடிகளையும் படியெடுத்துப் பாதுகாக்கத் தேர்ந்த எழுத்தர்கள் நியமிக்கப்பட்டனர்.

தஞ்சை மராட்டிய அரசும் நூலகமும்

          தஞ்சையில் நாயக்கர் ஆட்சி முடிவுற்ற பின்னர் ஏற்பட்ட மராட்டிய போசன வம்ச மரபினரின் ஆட்சி குறிப்பிடத் தக்க ஒன்றாகும். ‘ஏகராஜ மகாராஜஎன அழைக்கப் பெற்ற ஏகோஜி கி.பி 1676 – ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் இயல், இசை, நாடகக் கலைகளை வளர்ப்பதில் பெரிதும் ஆர்வம் கொண்டு விளங்கினார். கலை இலக்கிய நூலாக்கத்திலும் இவர் பெரும் பணிகளைச் செய்துள்ளார்.

இவருக்குப் பின் கி.பி.1684 – இல் ஆட்சிப் பொறுப்பேற்ற இவருடைய மூத்த மகன் இரண்டாம் சகஜியின் நூலகப்பணிகளும் குறிப்பிடத்தக்கனவாம். கி.பி 1712 – இல் ஆட்சிக்கு வந்த முதலாம் சரபோஜி நூல்களை இயற்றுவதிலும், புலவர்களை ஆதரிப்பதிலும், பல நூல்களை உருவாக்கி நூலகத்தில் சேர்ப்பதிலும் மிகுந்த ஆர்வங் கொண்டு பணியாற்றியுள்ளார்.

 இவரை அடுத்த ஆட்சிக்கு வந்த முதலாம் துளஜாவும் (1729-1739) சிறந்த புலமையும் மருத்துவ அறிவும் கொண்டு பல நூல்களை இயற்றியும் பல நூல்களை இயற்றியும் பல நூல்களைப் பாதுகாக்கும் நூலகத்தினை வளர்த்துள்ளார். இவ்வாறே இரண்டாம் ஏகோஜி. இரண்டாம் துளஜா ஆகிய மராட்டிய ஆட்சியாளர்களின் நூலகப்பணிகளும் மிகவும் குறிப்பிடத்தக்கன.

இரண்டாம் சரபோஜியின் நூலகப் பணிகள்(1798-1832)

            ஆங்கிலேயரின் தலையீட்டால் 1798 – இல் அமரசிம்மருக்குப் பதிலாக ஆட்சிப் பொறுப்பேற்ற சரபோஜியின் ஆட்சி ஓராண்டு மட்டுமே நீடித்தது. 25.10.1799 இல் தஞ்சையில் ஆட்சியுரிமையைக் கிழக்கிந்திய கம்பெனியார் எடுத்துக் கொண்டனர். அதற்குப் பதிலாக மன்னருக்கு ஓய்வுதியமாக ஆண்டுக்கு மூன்று இலட்சமும், அரசின் வருவாயில் ஐந்தில் ஒரு பங்கும் அளிக்கப்பட்டன. சரபோஜி பெயரளவிலேயே மன்னராக நியமிக்கப்பட்டார். அரசின் நிர்வாகப் பொறுப்பு இல்லாத்தால் தாம் பெற்ற ஆங்கில அறிவின் காரணமாகப் பல நூல்களைப் படித்து மேலைநாட்டு முறையில் கலைகளை வளர்ப்பதிலும் நூலத்தினைப் போற்றிக் காப்பதிலும் இவர் தமது வாழ்நாளினைக் கழித்தார்.

சரபோஜியின் இளமைக்காலம்

      துளஜா 1787 –இல் இறக்கும் தருவாயில் தங்கள் 9 வயது மகனான சரபோஜியை உமது கையில் ஒப்படைக்கின்றேன் என்றார். சரபோஜியின் சுவீகாரம் பற்றி தஞ்சையில் 12 பண்டிதர்களிடம் விசாரிக்கப்பட்டபோது சுவார்ட்ஸ் தஞ்சையில் இருந்தார்.

மேனாட்டினர் வருகை

            சரபோஜி மன்னரின் ஆட்சிக்காலத்தில் பல மேனாட்டினர் தஞ்சைக்கும் அவர் நடத்திய பள்ளிகளுக்கும் வருகைபுரிந்து தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். அவற்றின் வாயிலாக மன்னரின் கல்விப்பணி, இலக்கியப்பணியுடன் இணைந்த நூலகப்பணி மற்றும் அவரின் ஆங்கிலப் புலமையையும் நாம் அறிய ஏதுவாகின்றது. அவ்வாறு வந்தவர்களில் லார்டு வாலண்ஷியா, பிஷப் ஹீபர், சென்னை கவர்னர் கேப்டன் சால்மினார், கமாண்டர் ஹிசி, கேப்டன் ஜான் பிபியி, ஜான் பிளாக் பர்ன், ஆர்ச்டிகான் ராபின்சன், கோல்காப் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

சரபோஜியின் ஆட்சி

            இவரது ஆட்சி போரின்றி அமைதியானதாகவும் அண்டை நாடுகளோடு நல்லுறவுடனும் அமைந்தது. நாட்டின் நிர்வாகத்தினையும் பாதுகாப்பினையும் ஆங்கிலேயர்களே பார்த்துக் கொண்டதால் மன்னர் தமது முழு நேரத்தினையும் கல்விப் பணி, இலக்கியப் பணி, கலைப்பணி, நூலகப்பணி ஆகியவற்றில் கழித்தார்.

சரபோஜியின் கல்விப்பணி

        மராட்டியர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தஞ்சையில் அனைவருக்கும் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்றே கூறலாம். சரபோஜி மன்னர் ஆட்சிக்கு வந்தபோது ஆங்கிலப் பள்ளிகள் மிகவும் அரிதாக இருந்தன. அவை வெவ்வேறு நாட்டினைச் சேர்ந்த கிறித்துவ மடங்களின் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்டன.

            மராட்டிய மன்னர்களால் தோற்றுவிக்கப் பெற்ற கல்வி நிலையம் இவர்காலத்தில்நவ வித்யா கலாநிதிசாலாஎனப் பெயர் மாற்றம் பெற்றது. இங்கு ஆறு மொழிகள் கற்பிக்கப் பெற்றன என்பர். இப்பள்ளி சரசுவதி பண்டாரத்தில்தான் இருந்தது.

            மன்னர் சரபோஜி தம் பெண்ணின் திருமணத்தின் போது மராட்டிய நூல்களைத் தம் மாப்பிள்ளைக்குச் சீர்வரிசையாகத் தந்தார். மாதவசுவாமி மராட்டியில் எழுதிய மகாபாரதத்தின் மொழிபெயர்ப்பைத் திருமணப் பரிசாக அளித்தார். நூல்களைப் போற்றும் மன்னரின் மாண்பு இவற்றால் நன்கு புலனாகும். காசியாத்திரைக்குச் சென்ற போதும் நூல்களைச் சேகரித்து அனுப்பி நூலகத்தை வளப்படுத்தினார்.

            மன்னரின் நூலகத்திற்கு வருகைதந்த அயல்நாட்டறிஞர் வாலென்ஷியா நூலக அமைப்பைப் பார்த்து வியந்து போற்றினார் என்பர். இவர் காலத்தில் தான் நூலகப் பணிகள் செம்மையாக்கப்பெற்றன. அச்சு நூல்களும் வண்ணப் படங்களும் சேர்க்கப் பெற்றன. நூலகத்தை நன்கு உருவாக்குவதையே முதன்மை நோக்கமாக்க் கொண்டு வாழ்ந்தவர் சரபோசி மன்னர். பன்மொழிப் புலவர்களையும் போற்றிப் பாராட்டி அரிய நூல்களை உருவாக்குவதற்கு உதவினார்.

            மேலைநாட்டுக் கல்விமுறையை  பெற்றிருந்தமையால் இவர் காலத்தில் நூலகம் மறுமலர்ச்சியைப் பெற்றது. மருத்துவம், அறிவியல் தொடர்பான பல நூல்களும், படங்களும், வண்ண ஓவியங்களும் சேர்க்கப் பெற்றன. இவரைத் தொடர்ந்து வந்த பல மன்னர்களும் நூலக வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டனர்.

இரண்டாம் சிவாஜியும் அவருக்குப் பின்னரும் சரசுவதிமகால் நூலக வளர்ச்சி

          இரண்டாம் சரபோஜி மன்னருக்குப் பிறகும் அவர்வழி வந்தவர்களால் சரசுவதி மகால் நூலகம் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. இரண்டாம் சிவாஜி இதற்கான ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்துள்ளார். இவர் காலத்திலும் நூலாக்கப் பணிகள் பல நடைபெற்றுள்ளன.

இரண்டாம் சிவாஜி (1832-1855)

            சரபோஜி மன்னரின் மறைவுக்குப் பின் அவரது மகன் இரண்டாம் சிவாஜி 21.3.1832 இல் பட்டமெய்தினார். இவர் சரபோஜிக்கும் அவரது இரண்டாவது மனைவி அகல்யாபாய்க்கும் கி.பி.1808 – ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தம் தந்தையைப் போலவே கலையார்வம் கொண்ட சிவாஜிக்கு அரண்மனையிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது. டேனியல் கொலேப் என்பவர் ஆங்கிலம் கற்பித்தார். சிவாஜியின் படிப்பினைக் கவனிப்பதற்காகவே நாகலிங்கம் பிள்ளை என்பவர் நியமிக்கப் பெற்றார்.

            மருத்துவம், இசை ஆகிய கலைகளில் ஈடுபாடு கொண்ட இம்மன்னரின் ஆட்சிக் காலத்தில் தன்வந்திரி மகால் நல்ல வளர்ச்சிநிலையை அடைந்தது. சரசுவதி மகாலும் நல்லமுறையில் பாதுகாக்கப்பட்டது.

சிவாஜி கால சரசுவதி மகால் நூலகம்

          பன்மொழிப் புலமை கொண்ட சிவாஜி தெலுங்கு மொழியில் அன்னபூர்ண பரிணயம் என்னும் நாடகத்தினையும் மராட்டியில் நடேசவிலாசம் எனும் நாடகத்தினையும் இயற்றினார். உபாக்யானம், மார்க்கண்டேய சரித்திரம் என்னும் நிரூபனங்களும் இவர் இயற்றியவை ஆகும்.

    நூல்களைப் புதுப்பித்தல், பாதுகாத்தல், நூல் வழங்குதல் போன்ற செயல்பாடுகள் மராட்டியர்களின் நூலக மற்றும் நூலகப் பணியாளர்களின் பொறுப்புள்ள பணித்திறன் மன்னர்களால் போற்றப் பட்டதையும் காண்கிறோம். அக்கால முறைப்படி நீதிமன்றங்களின் செயல்பாட்டிற்கும், தீர்ப்புகள் பல வழங்குவதற்கும் இந்நூலகத்திலிருந்த நூல்கள் பயன்பட்ட நிலைகளையும் அறிகிறோம். மராட்டிய மன்னர்களின் தனிப்பட்ட சொத்தாக விளங்கிய இந்நூலகம் பொது நூலகமாக மாற்றம் பெற்ற வரலாறு மிகவும் குறிப்பிடத்தக்கது.

            ஆங்கில அரசிடமிருந்து இந்நூலகத்தினைக் காப்பாற்றியதில் இராணி காமாட்சியின் பங்கு பற்றிய வரலாறுகள் குறிப்பிடத்தக்கன.

    ஆங்கிலேயரின் அட்டவணைப்பணி, கம்பெனியார்கள் காலத்தின் அட்டவணைப் பணி, பின் வந்த சுவடிவிளக்க அட்டவணைப்பணி போன்றவை இந்நூலகத்தின் அருமை, பெருமைகளை விளக்குவனவாக உள்ளன. இங்குள்ள மோடி ஆவணங்கள் வேறு எங்குமே கிடைக்காதனவாம். இத்தகைய அரிய அறிவுக்கருவூலத்தை இன்றைய நவீன நிலையில் சிறப்பாகப் பாதுகாத்துவரும் நிர்வாக அமைப்பு, அரிய சுவடிகளை அச்சில் பதிப்பித்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்க பணியாகும்.

         பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப மன்னர் குடும்பத்தினரின் ஆதரவுடன் இந்நூலகம் பொதுச் சொத்தாக மாற்றப்பட்டதால் இன்று பன்மொழி ஆய்வு நூலாக உலக அளவில் முன்னிலையில் நிற்பது நம் தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்.

நிறைவாக,

    இந்தியாவின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றான தஞ்சை தென்னகத்தின் மிகச்சிறந்த கலைக்கும் பண்பாட்டிற்கும் இலக்கியத்திற்கும் பல நூற்றாண்டுகாலப் பெரும்புகழ் பெற்று விளங்கிவரும் நகரமாகும். இயற்கையான அமைதிச் சூழலின் காரணமாகக் கல்வி, பக்தி, கலைகளுக்குரிய சிறந்த நிலப்பகுதியாக அமைந்துள்ளது. இப்பகுதியை ஆண்ட சோழ, நாயக்க, மராட்டிய மன்னர்களும் இவற்றிற்கு வளம் சேர்த்தனர். சோழர்கள் படைத்த கோயில்களும், சிற்பங்களும் ஓவியங்களும் தனிப்புகழுக்குரியன ஆயினும், அவர்கள் காலத்தில் நூலாக்கப் பணிகளும் நூல் பாதுகாப்புப் பணிகளும் வரலாற்றுப் புகழ் வாய்ந்தன. இதன் காரணமாகத் தஞ்சை சரசுவதி மகால் நூலகம் உலகின் அறிவு நூற்களஞ்சிய மையங்களில் ஒன்றாகவும், மிகப்பெரிய சுவடி ஆய்வு நூலகமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க நூலினை முனைவர் ஆ. குணசேகரன் அவர்கள் வரலாற்று அடிப்படையில் ஆராய்ந்து சிறப்பாக அளித்துள்ளார். இந்நூல் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

            சுவாமி விவேகானந்தர் ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்று கூறியுள்ளார். எனவே நாம் அனைவரும் வாசிப்பை நேசிப்போம் என்று கூறி, இத்தகைய நல்லதொரு வாய்ப்பினை நல்கிய புதுகை பண்பலை 91.2 சமுதாய வானொலிக்கு எனது நன்றியினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...