தீபாவளி திருநாள் வாழ்த்துகள்!
அனைத்து நண்பர்கள், மற்றும்
தமிழ் சொந்தங்களுக்குத் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள். தீபாவளி பண்டிகையின் சிறப்பினையும், நம் முன்னோர்கள் கொண்டாடிய விதத்தினையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன்.
”வானம் பொய்யா வளத்தைப் பெற்று
அறநெறி வாழ்வை அன்புடன் காத்து
பற்றற்ற வாழ்வை பரிவுடன் வாழ்ந்து
இல்லற வாழ்வில் நல்லறம் கொண்டு
விருந்து போற்றி விருப்புடன் வாழ்ந்து
நன்றி மறவா நன்மொழி காத்து
எல்லா வளமும் இனிதுடன் பெற்று
தீபஒளி திருநாளாம் இன்று
நல் மக்களோடு தீதின்றி வாழ்க!
என்று கூறி,
தீபாவளி திருநாளாம் இன்று நாம் அனைவரும் புத்தாடை
உடுத்தி, இனிப்பு பலகாரங்கள் என்று மகிழ்வுடன் ”யாதும்
ஊரே யாவரும் கேளீர்” என்ற பாடலுக்கேற்ப போல நாடு, மதம், மொழி கடந்து கொண்டாடுகிறோம்.
மக்களின் வாழ்வில் சோர்வினைப் போக்கி இன்பமும், புத்துணர்ச்சியும்
ஊட்டுவன விழாக்கள். மனித இனத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே
விழாக்களின் முக்கிய நோக்கமாகும். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி, மறுமலர்ச்சி
ஆகியவற்றை அச்சமுதாயம் காலங்காலமாக கொண்டாடும் விழாக்களின் வழியாகவே அறியலாம்.
விழாக்கள்
‘விழா’ என்பது விழைந்து
செய்வது; விரும்பிச் செய்வது; மனைவி
மக்கள் சுற்றம் என்று சேர்ந்து இருப்பது;
புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் தருவது; வாழ்ந்த வரலாற்றை நினைவு கூர்வது; வாழ்கின்ற வாழ்வை
ஆராய்வது; எதிர்கால வாழ்வுக்குத் திட்டம் தீட்டுவதும் ஆகும்.
சங்க
காலத் தமிழர்கள் கொண்டாடிய விழாக்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில்
கிடைக்கின்றன. அவற்றுள் சில சமயம் தொடர்பானவை. வேறு சில சமூகம்
தொடர்பானவை. விழாக்களில் ஆடலும்,
பாடலும் இடம்பெற்றன. பாணர், கூத்தர் முதலிய
கலைஞர்கள் விழாக்களில் ஆடியும் பாடியும் மக்களை மகிழ்வித்தனர்.
விழா மரபுகள்
விழா, ஓர் இனமக்களின் மொழி,
கலை, இலக்கியம், பண்பாடு,
நாகரிகம், வரலாறு, அரசியல்,
சமுதாயம் முதலியவற்றை வெளிபடுத்துவதாக
அமைதல் வேண்டும். அம் மக்களுக்கு உரிமை உணர்வையும், விடுதலை
வேட்கையையும் உணர்த்துவதாக இருத்தல் வேண்டும்.
விழாக்களை
வளர்பிறை மற்றும் மதி நிறைந்த நாட்களில் தொடங்கியதை அகநானூறு கூறகிறது. (அகம்.பா.எ.141.) வெறியாட்டில் வேலன் விழா ஆற்றுவோனாகச்
சுட்டப்படுகிறான். சங்ககாலத்தில் குயவர்கள் விழாக்களில் முக்கியப் பங்கு வகித்தனர்;
என்பதை,
‘‘மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி
பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன்
இடுபலி நுவலும் அகன்றலை மன்றத்து
விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்’’ (நற்றிணை,
293)
என்று நற்றிணை பாடல்
தெரிவிக்கிறது.
அகநானூற்றில் அமாவாசை நாளில்
விளக்கேற்றி வழிபடும் வழக்கம் குறித்து இடம்பெற்றுள்ளது. அக்காலத்தில்
இவ் வழிபாட்டுக்குத் தீபாவளி என்ற பெயர் இல்லையென்றாலும், அதே
போன்று பண்டிகை கொண்டாடப்பட்டிருப்பது,
”மழைகால் நீங்கிய மகாவிசும்பில்
குறுமுயல் மறுநிலம் கிளர்மதி
நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிரல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம”
என்று அகநானூற்று
பாடல்வழி நக்கீரர் பாடுகிறார்.
‘அறுமீன் சேரும் அகலிருள்
நடுநாள்’ என்பது அமாவாசை நாளைக் குறிப்பிடுகிறது.
நவீனமயமாக மாறிக்கொண்டு வரும் தற்போதைய காலத்தில், பண்டிகைகள் கொண்டாட்டங்களாக மாறிக்கொண்டு வருகின்றன.
பண்டிகைக் காலம் வரும்போது நமக்கு விடுமுறை கிடைக்கிறது என்பது மட்டுமல்ல; உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்கள்
என்று நல்லுறவுகளைப் பேணுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.
காலைக்
குளியல்
தீபாவளி
அன்று சூரிய உதயத்திற்கு முன்னர்,
எண்ணெய் தேய்த்து விடிவதற்குள் குளித்து விட வேண்டும் என்பதற்கு
காரணம், சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி
அதிகரிக்கும்.
காற்று
மாசுபாடு
தீபாவளி என்பது மகிழ்ச்சி, கொண்டாட்டம் மற்றும் ஒற்றுமைக்கான நேரம். இருப்பினும்,
பண்டிகைகளுடன், நமது சுற்றுச்சூழலில், குறிப்பாக காற்றின் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் நாம் கவனத்தில்
கொள்ள வேண்டும். தீபாவளியின் போது காற்று மாசுபாட்டிற்கு மிக முக்கியமான
காரணங்களில் ஒன்று பட்டாசுகளின் பயன்பாடு ஆகும்.
பட்டாசுகள் காற்றின் தரத்தை பாதிக்கின்றன என்றும்
அவை வளிமண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும்
ரசாயனங்களையும் வெளியிடுகின்றன. தீபாவளியின் போது பொதுவாக வெளியிடப்படும் சில மாசுகள்.
·
சல்பர் டை ஆக்சைடு
·
நைட்ரஜன் டை ஆக்சைடு
என்ற இந்த மாசுபடுத்திகள் காற்றின் தரத்தை குறைத்து மாசு அளவை அதிகரித்து, நீண்ட கால சுகாதார அபாயங்களை
ஏற்படுத்துகின்றன. குறிப்பாக குழந்தைகள், முதியவர்களுக்கும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதைத் தவிர்ப்பதற்கு நாம் கடைபிடிக்க வேண்டிய
செயல்களாக,
·
பட்டாசு
அதிகமாக வெடிப்பதைத் தவிர்க்கவும்.
·
தீபாவளி
அன்று இரவில், காற்றின் தரம் மிக மோசமான
நிலையை அடைகிறது. வெளியில் செல்லும்போது முகமூடி அணியுங்கள். உங்கள் சுவாச
மண்டலத்தைப் பாதுகாக்க நுண்ணிய துகள்களை வடிகட்டக்கூடிய முகமூடியை அணியுங்கள்.
இந்த எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், காற்று மாசுபாட்டின் எதிர்மறையான தாக்கத்தை
குறைத்து, பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையை
மகிழ்வுடன் கொண்டாடி, நம்மையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்போம்.
நிறைவாக,
தீபாவளி திருநாளாம் இன்று
புன்னகையில் தொடங்கி,
மகிழ்ச்சியில் முடியட்டும்!
சிந்தனையில் தொடங்கி
செயலில் வெற்றி கிட்டட்டும்!
துன்பம் நீங்கி
இன்பம் பிறக்கட்டும்!
அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தீபாவளி நல்வாழ்த்தினைக் கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
Comments
Post a Comment