மதுரை சென்ற அனுபவங்களாக...
‘கோயில்களின் நகரம்’ மற்றும் ‘தமிழ்நாட்டின்
கலாச்சாரத் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் மதுரைக்கு (20.12.2025) நானும் என் தோழி என்னுடன் கல்லூரியில் பணியாற்றும்
பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் சென்றோம். நாங்கள் கடந்த
2017 – ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு
அல்லது மூன்று முறை சென்று வருவோம். இந்த ஆண்டு நாங்களும் மற்றொரு சகோதரி முசிறி அரசு கல்லூரியில் பணியாற்றும்
தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பாக்கியரதி அவர்களும் சேர்ந்து சென்றோம். இந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாகவும், புது அனுபவமாகவும் இருந்தது. இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த முறை மதுரையில் ஒத்தக்கடையில் உள்ள யோகநரசிம்மர் கோவில், ப்ரத்தியங்கரா
தேவி, முருகன்
கோவில், மதுரை
மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய
கோவில்களுக்கு மட்டும் தான்
சென்றோம். மதியம் 2மணிக்கு மேல் சிவா டெக்ஸ்டைல் என்ற புதியதாக ஆரம்பித்துள்ள
கடைக்குச் சென்றோம். 4.30 மணி வரை சேலைகள் வாங்கினோம். பின்பு மதிய உணவை ஓட்டலில் சாப்பிட்டுத் திருச்சிக்குக் கிளம்பிவிட்டோம்.
டிசம்பர் 20 ந் தேதி காலை 7.00 மணிக்கு திருச்சியிலிருந்து மதுரைக்குக் கிளம்பினோம். போகும்
வழியில் எங்கள் தோழி கொண்டுவந்த கொழுக்கட்டையை காலை உணவாக எடுத்துக்
கொண்டோம். மதியம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மதியம் புளிசாதம்,
உளுந்த வடை வாங்கி சாப்பிட்டோம். அனைத்து கோவிலையும் தரிசித்ததால் எங்களுக்கு
மகிழ்ச்சியாகவும் மனம் திருப்தியாகவும் அமைந்தது.
ஒத்தக்கடை (யோகநரசிம்மர்
கோவில்)
மதுரை -
திருச்சி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 12 கி.மீ.
தொலைவில் ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள யானைமலை அடிவாரத்தில் யோக நரசிங்கர் கோயில்
அமைந்துள்ளது. கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின்
பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இக்கோயிலின் மூலவராக யோக நரசிம்மர்
மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார்
தெற்கு பார்த்தும் அமர்ந்துள்ளனர். கோயிலில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரின் சன்னதி
தனியாக உள்ளது. யோக நரசிம்மர் கோயிலின் முகப்பில் அழகான குளம் அமைந்துள்ளது. இது, நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய
கோயிலாகும்.
ஒத்தக்கடை (முருகன்
கோவில், பிரித்தியங்கரா
தேவி)
மதுரை ஒத்தக்கடை பகுதியில் யானைமலை அருகில் சிறிய குன்றின் மேல்முருகன்
கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமான
பிரித்தியங்கரா தேவி ஆலயம் உள்ளது. இந்த பிரித்தியங்கரா தேவியிடம் வேண்டிக் கொண்டால்
நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
மீனாட்சி அம்மன்
கோயில்
மதுரையின் நடுவே
அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.
இச்சிவன் கோயிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர்.
இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயில்
தமிழ்நாட்டில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின்
மூலக்கோயிலாக உள்ளது. இத்தலத்தில் முதல் பூசை, அம்பிகை
மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோயில் உயரமான சுவர்களால் சூழப்பட்டுள்ளது. கோபுரங்கள், உள்ளே தூண்கள், நெடுவரிசை
மண்டபங்கள், புனித குளம், சிறிய
சன்னதிகள் மற்றும் மையத்தில், சுந்தரேஸ்வரர் மற்றும்
மீனாட்சிக்கு இரண்டு முக்கிய சன்னதிகள் உள்ளன. 14 கோபுரங்களில்
மிக உயரமான தெற்கு கோபுரம் ,
170 அடி (52 மீ) க்கும் அதிகமாக உயர்கிறது.
மதுரை தெப்பக்குளம்
மதுரை
தெப்பக்குளம் என்பது, மதுரையில்
உள்ள புகழ்பெற்ற வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் ஆகும்; இது 17-ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கரால்
கட்டப்பட்ட பெரிய கோயில் குளமாகும், ஆண்டுதோறும் தை
மாதத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழாவிற்குப் பெயர் பெற்றது. சுமார் 16 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாட்டின் மிகப்பெரிய கோயில்
குளங்களில் ஒன்றாகும். குளத்தின் நான்கு பக்கங்களிலும்
கிரானைட் படிக்கட்டுகள் உள்ளன, நடுவில் மைய மண்டபமும் உள்ளது. வைகை நதியுடன் நிலத்தடி கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
நிறைவாக,
இம்முறை
நாங்கள் மதுரைக்குச் சென்றது மிகவும் மகிழ்வாகவும், புத்துணர்வாகவும்
அமைந்தது. ஏனென்றால் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் இருவரையும் அருகில் இருந்து
பார்த்தோம். எங்கள் தோழியால் இந்த வாய்ப்பு கிடைத்தது. நமக்குக்
கிடைத்த வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும்
மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நிரந்தமில்லாத வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழாமல், நம் வாழ்வை மகிழ்வாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அப்பொழுது
தான் உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கும்.





Comments
Post a Comment