பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
பொங்கல் திருநாள்
·
தமிழர்களுக்கு உழைப்பின் பயனை கொண்டாடும் திருநாள்,
·
இயற்கைக்கும் விவசாயிக்கும் நன்றி
செலுத்தும் நாள்
·
தமிழர்களின் பண்பாடு, ஒற்றுமை, மனிதநேயம் ஆகியவற்றை
உலகிற்கு எடுத்துரைக்கும் நாள்.
பொங்கல் திருநாளின்
சிறப்பு
பொங்கல் என்பது அறுவடைத்
திருநாள். வயல்களில் விளைந்த நெல்லை அரிசியாக மாற்றி, புதிய பானையில் பால் பொங்கச் செய்து, சூரியனுக்கும்
இயற்கைக்கும் நன்றி கூறும் நாளாகும் . "பொங்கலோ பொங்கல்" என்ற
மகிழ்ச்சிக் குரல், இல்லங்களிலும் மனங்களிலும் மகிழ்ச்சியை
நிரப்பும் நாள்.
பொங்கலுக்குத் தலைநாள் போகி பண்டிகை. போகி என்றால் இந்திரன். அவன் மேகங்களை இயக்கும்
இறைவன். தமிழ்நாட்டார் பழங்காலத்தில் விளைநிலங்களை
இறைவனாக வைத்து வணங்கினார்கள். சோழ நாட்டில் இந்திர
விழா இருபத்தெட்டு நாள் கொண்டாடப்பட்டது.
”பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க”
என வானவரை வழிப்பட்டார்கள். அக்காலத்தில் சிறப்பாக
நடைபெற்ற அத்திருநாள், இப்பொழுது குன்றிக் குறுகி ஒரு
நாள் பண்டிகையாக நடைபெறுகின்றது.
பொங்கல் புதுநாள்
போகிப்
பண்டிகையை அடுத்து வருவது பொங்கல் புதுநாள்; அந்நாளில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ நிகழும்; வீட்டிலுள்ள பழம் பானைகள் விடைபெறும்;
புதுப் பானைகளில் பொங்கல் வைத்துப் பால் பொங்கும் பொழுது, ”பொங்கலோ பொங்கல்” என்னும் மங்கல ஒலி எங்கும்
ஒலிக்கும். அப்பொழுது பெண்கள் குரவையாடுவர்; பிறகு ”பூவும் புகையும் பொங்கலும்” கொண்டு
இல்லுறைத் தெய்வத்தை வணங்குவர். அனைவரும் வயிரார உண்டு மகிழ்வர்.
மாட்டுப் பொங்கல்
பொங்கலுக்கு
அடுத்த நாள் நிகழ்வது மாட்டுப் பொங்கல். நாட்டுப்
புறங்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவர். முற்காலத்தில் மாடு செல்வமாக
மதிக்கப்பட்டது. மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்னும் பொருள் உண்டு. நமக்காக
நிலத்தில் அறுவடை காலத்தில் களத்து நெல்லைக் களஞ்சியத்தில் சேர்ப்பது மாடு. மாடு
இல்லையென்றால் பண்ணையும் இல்லை. பயிர்த் தொழிலும் இல்லை.
‘அறந்தரு
நெஞ்சொடு அருள் சுரந்து ஊட்டும்’ பசுக்களை
ஆதரிக்கவேண்டும் என்பது தமிழர் கொள்கை. கழனியில் பணி செய்யும் காளை மாடுகளும், கறவை மாடுகளும் நோயின்றிச் செழித்து வளர்வதற்காக நிகழ்வது மாட்டுப் பொங்கல்.
இனி வரும் காலங்களில் விவசாயம் பெருக வேண்டும். விளைநிலங்களை வீட்டு
மனைகளாக மாற்றாமல் உழவுத் தொழிலை போற்ற வேண்டும். நம் நாட்டின் இயற்கை கொடுத்த மண்வளம், மலை வளம், கனிம வளம்
ஆகியவற்றைப் பாதுகாத்து வருங்கால சந்ததியினர் கையில் ஒப்படைக்க வேண்டும்.
காணும் பொங்கல் –
உறவினர்கள் ஒன்றுகூடி
மகிழ்ச்சியைப் பகிரும் நாள். இந்த நான்கு நாட்களும் தமிழர்களின் வாழ்க்கையில்
ஒவ்வொரு அம்சத்தையும் பிரதிபலிக்கின்றன.
இன்றைய நவீன
காலத்தில் பொங்கல்
இன்றைய நவீன வாழ்க்கை
முறையிலும் பொங்கல் திருநாள் தனது முக்கியத்துவத்தை இழக்கவில்லை. நகரங்களில்
வசிப்பவர்களும் தங்கள் ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் பொங்கலைக் கொண்டாடுகின்றனர்.
இது பண்பாட்டை காக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
நிறைவாக
பொங்கல் திருநாள்
தமிழர்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த திருவிழா. உழைப்பின் பெருமை, இயற்கையின் அவசியம், உறவுகளின் இனிமை ஆகியவற்றை
நினைவூட்டும் இந்தத் திருநாளை மனமாரக் கொண்டாடுவோம். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும்,
இன்பமும் பெருகட்டும்.
உயிர்காக்கும்
உணவை தரும்
உழவருக்குத்
திருநாள்
நான் என்னும்
எண்ணம் இன்றி
நாமெனும் உறவுகள்
யாவும்
கூடி மகிழும்
நாள்!
பொங்கல் திருநாள் !
என்று கூறி மீண்டும் உலகில் உள்ள
அனைத்துத் தமிழ் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
Comments
Post a Comment