Skip to main content

விருந்தோம்பல் (புத்தக மதிப்புரை)

  விருந்தோம்பல் (புத்தக மதிப்புரை) (முனைவர் வெ. இறையன்பு )             புத்தக மதிப்புரை யில் இறையன்பு அவர்கள் எழுதிய விருந்தோம்பல் இலக்கியங்கள் கூறுபவை என்னும் நூலை பார்ப்போம் . இந்நூலை சென்னை கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 200, விலை 200 ரூபாய்.   நூலாசிரியர் முனைவர் வெ . இறையன்பு ஐயா அவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூரில் பிறந்தவர் . ·                 வணிக மேலாண்மையியல் , ஆங்கில இலக்கியம் , தொழிலாளர் மேலாண்மையியல் , உளவியல் என்று நான்கு துறைகளிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர் . ·                           வர்த்தக நிர்வாகம் , ஆங்கில இலக்கியம் என்ற இரண்டு துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர் . ·                     மேலாண்மையியலில் முதுமுனைவர் பட்டம் பெற்றவர் . பல்வேறு அரசுத் து...

விருந்தோம்பல் (புத்தக மதிப்புரை)

 

விருந்தோம்பல் (புத்தக மதிப்புரை)

(முனைவர் வெ. இறையன்பு)

            புத்தக மதிப்புரையில் இறையன்பு அவர்கள் எழுதிய விருந்தோம்பல் இலக்கியங்கள் கூறுபவை என்னும் நூலை பார்ப்போம். இந்நூலை சென்னை கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 200, விலை 200 ரூபாய். நூலாசிரியர் முனைவர் வெ. இறையன்பு ஐயா அவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூரில் பிறந்தவர்.

·               வணிக மேலாண்மையியல், ஆங்கில இலக்கியம், தொழிலாளர் மேலாண்மையியல், உளவியல் என்று நான்கு துறைகளிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

·                         வர்த்தக நிர்வாகம், ஆங்கில இலக்கியம் என்ற இரண்டு துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்.

·                   மேலாண்மையியலில் முதுமுனைவர் பட்டம் பெற்றவர். பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றியவர்.

·                      நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

·                        புகழ்பெற்ற எழுத்தாளர், கல்வியாளர், சிந்தனையாளர் மற்றும் தன்னம்பிக்கைப் பேச்சாளர் எனப் பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர். இவர் 1963-ல் சேலத்தில் பிறந்து, நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்மேலும் இவரது படைப்புகளுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இந்நூலில் இலக்கியங்களில் உள்ள  விருந்தோம்பல் பற்றிய மகத்தான சம்பவங்களை எடுத்து நூலாக எழுதினால், அதை வாசிப்பவர்களிடம் ஒரு சின்னத் தாக்கத்தையாவது ஏற்படுத்தும் எனக் கருதி இந்த முயற்சியில் இறங்கினேன் என்று நூலாசிரியர் தமது முன்னுரையில் பதிவு செய்துள்ளார். இந்நூலைப் பத்து நாட்களுக்குள்  எழுதி முடிக்கப் பெருந்துணையாக ஜோசப் ராஜசேகரன் அவர்கள் உறுதுணையாக இருந்துள்ளார் என்றும் தம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் கல்யாணராமன் என்பவர் இந்நூலுக்கு விரிவானதொரு அணிந்துரையை வழங்கிச்  சிறப்பித்துள்ளார்.

     இந்நூலில் விருந்தோம்பல் குறித்தக் கட்டுரைகளாக, விருந்தோம்பல், விருந்தோம்பல் இலக்கணம், திருக்குறளில் விருந்தோம்பல், நாலடியார் காட்டும் விருந்தோம்பல், புறநானூற்றில் விருந்தோம்பல், பத்துப்பாட்டில் விருந்தோம்பல், பெரிய புராணத்தில் விருந்தோம்பல், மேற்கத்திய இலக்கியத்தில் விருந்தோம்பல், விருந்தோம்பல் அன்றும் இன்றும் என்று 20 க்கும் மேற்பட்டத்  தலைப்புகளில் தொகுத்து வெளியிட்டுள்ளார்.

1.   விருந்தோம்பல் எனும் தலைப்பில்

          பண்பாடுகளில் சிறந்தது விருந்தோம்பல். தமிழ் இனத்தில் அதற்குத் தனிச் சிறப்பு உண்டு. ‘விருந்து என்றால் புதுமை, ‘ஓம்புதல் என்றால் போற்றுதல் என்று பொருள். ஒரு காலத்தில் விருந்தினர் என்றால் அது அறிமுகம் இல்லாதவர்களையே குறிக்கும். இன்று உறவினர்களையும், நண்பர்களையும் நாம் விருந்தினர் என்று அழைக்கின்றோம். இல்லத்திற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும அவர்களை அன்புடன் வரவேற்று அமர வைத்து உணவு தருவது விருந்தோம்பலின் நோக்கம். தொல்காப்பியத்தில்,

            விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே

வீட்டிற்கு வரும் புதியவர்களை இன்முகத்துடன் வரவேற்று உணவளிப்பது உயரியப் பண்பு என்கிறார் தொல்காப்பியர். இந்திய மண்ணில் உணவு, கல்வி, மருந்து ஆகியவற்றைப் பணம் பெற்றுக் கொண்டு கொடுப்பது பாவமாகக் கருதப்பட்டது. இன்று அவற்றின் பெயரால் வியாபாரம் நடைபெறுகிறது. அந்த காலத்தில் போகிற வழியில் தென்படுகிற வீடுகளுக்குச் சென்று இரவு நேரத்தில் தங்கி மறுநாள் பயணத்தைத் தொடர்வது வழக்கமாக இருந்தது. மேலும் பயணங்கள் என்பது பெரும்பாலும் யாத்திரைகளாகவே இருந்தன.

2. விருந்தோம்பல் இலக்கணம் எனும் தலைப்பில்,

            தமிழ் இலக்கியங்கள் விருந்தினரை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதைப் பல்வேறு பாத்திரங்களின் மூலமும், பாக்களின் மூலம் எடுத்துரைக்கின்றன. விருந்தினர்கள் இல்லத்தை ஒளிமயமாக்குகின்ற விளக்குகளாக இருந்திருக்கிறார்கள். விருந்தினர்கள் நம் வீட்டிற்கு வருவதால் ஏற்படும் நன்மைகளாக,

·                             ஊடலை அகற்றுபவர் - கணவன் மனைவிக்குள் ஊடல் கொண்டிருக்கும் போது திடீரென விருந்தினர் வந்தால் அவர்களை உபசரிக்கும் போது அவர்களுடைய கோபம் தணிந்துவிடும்.

·                       வினைமுடித்தால் விருந்து - தலைவன் வினை முடித்து மீண்டு வந்தால் விருந்து கொடுக்கிற மரபு தமிழகத்தில் இருந்ததை வந்தது அக இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

·                    களவொழுக்கத்தில் விருந்தோம்பல் - திருமணத்திற்கு முன்பு தலைவன் தலைவியைச் சந்திக்க விருந்தினரைப் போல வீட்டிற்கு வருதல் உண்டு,

          ”புகாஅக் காலைப் புக்கெதிர்ப்பட்டுழிப்

           பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும்” (தொல், களவு,17)

என்ற பாடல் மூலம், தலைவனாக வருவதற்குத் தயங்குபவன் கூட விருந்தினராக வந்தால் வரவேற்கப் படுகிறான்.

·            செலவழுங்குவித்தல் - செலவழுங்கல் என்றால்பிரிதலைத் தவிர்த்தல்என்று அகராதி விளக்கம் தருகிறது. தலைவன் பிரிவு துயர் நிறைந்த ஒன்று. பொருள் ஈட்டுவதற்கு அவன் காட்டு வழியில் பயணம் செய்ய வேண்டும்.

·         இல்வாழ்க்கையின் முக்கிய அறம் -விருந்தினரை நன்றாக உபசரித்து அவர் மனம் கோணாதவாறு அனுப்புதல் ஆகும்.

3. திருக்குறளில் விருந்தோம்பல்

               இருந்தோம்பி இல்வாழ்வு எல்லாம் விருந்தோம்பி

               வேளாண்மை செய்தல் பொருட்டு” (குறள் - 81)

   இந்தக் குறட்பாவில் வேளாண்மை என்கிற சொல், ‘உதவிஎன்கிற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் என்று புறநானூற்றிலும், வேளாண் சிறுபதம் என்று கலித்தொகையிலும், உதவி என்கிற பொருளில் வேளாண்மை என்கிற சொல் சுட்டப்பட்டுள்ளது.

                மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து

                நோக்கக் குழையும் விருந்து” (குறள்-90)

     விருந்தினரை வாசலில் உரிய முறையில் வரவேற்காமல் அவர்களுக்கு அறுசுவை உணவளித்தாலும் திருப்தி அளிக்காது என்பதைத் திருவள்ளுவர் தெளிவுப்படுத்துகிறார்.

    பசியோடு இருக்கிற பறவைகளுக்கும் உணவு தரவேண்டும். வாடிக் கிடக்கிற விலங்குகளுக்கும் பசியாற்ற முயலவேண்டும். கண்ணில் படுகிற அனைவருக்கும் நாம் நம் உணவை பகிர்ந்து கொடுப்போம் என்கிற மகத்தான தத்துவத்தை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

            பகுத்துண்டு கல்லுயிர் ஓம்புதல் நூலோர்

             தொகுத்தவற்று எல்லாம் தலை” (குறள்-322)

என்று வள்ளுவர் காட்டும் விருந்தோம்பல் மானுடத்தைத் தாண்டிய மகத்தான வாழ்க்கை நெறியாகும்.

4. நாலடியார் காட்டும் விருந்தோம்பல்

       பசியைவிடக் கொடுமையான ஒன்று இல்லை. அதனால் தான் தமிழ் இலக்கியங்கள் பசியைப் போக்குவதை அறமாகக் கூறி வருகின்ற. எல்லோரும் பெரிய அளவில் விருந்தைப் படைக்க முடியாது. தங்களால் இயன்றதை அடுத்தவர்களுக்குச் செய்யலாம். நாலடியார் இதற்கு ஆலம் விதையை உதாரணமாகக் கூறுகிறது.

            உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி

             இறப்ப நிழற்பயந் தாஅங்கு - அறப்பயனும்

             தான் சிறிதாயினும் தக்கார் கைப் பட்டாக்கால்

             வான்சிறிதாப் போர்த்து விடும் (நாலடியார்-38)

         கிள்ளியெடுக்கும் அளவே உள்ள ஓர் ஆலம் விதை நாளடைவில் கிளைகளும், விழுதுகளும் நெடிது வளர்ந்து அதிகமான நிழலைக் கொடுக்கும். ஆங்கிலத்தில் அதற்கு பானியன் மரம் என்று பெயர். வியாபாரிகள் தங்கள் பொருட்களை ஆலமரத்தின் நிழலில் வைத்து விற்பார்கள். சின்ன விதை பெரும் பந்தலைப் போல வளர்ந்து விடுகிறது. அதுபோல சிறியதாக செய்தாலும் அது தகுதியுள்ளவர்களுக்குச் செய்யப்பட்டிருந்தால் ஆகாயமே சிறிதாகும் அளவு வளர்ந்து பெரிதாகும்.

            மிகுந்தப் பசியோடு இருப்பவர்களுக்கு உணவளித்து உயிர்காப்பது மேலான செயலாகக் கருதப்பட்டது.

5. புறநானூற்றில் விருந்தோம்பல் - எனும் தலைப்பில்,

     பசியோடு வந்தவர்களுக்கு உணவிடுவதைத் தமிழ் மரபும், தமிழ் மண்ணும், தமிழ் இலக்கியங்களும் தொன்றுதொட்டுப் போற்றி வந்திருக்கின்றன. ஆவூர் மூலங்கிழார் பாண்டியன் கீரஞ்சாத்தனைப் பற்றிப் பாடும்போது விருந்தோம்பலைப் பாடும் பாடலில்,

           ஆங்கண்

          மணல்மலி முற்றம் புக்க சான்றோர்

          உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று

          உண்ம் என இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்” (புறம்,178)

காற்றைப் போல விரைந்து செல்லும் குதிரைகள் நிறைந்த முற்றத்தில் கற்றறிந்த பெருமக்கள் வந்தால் தன்னோடு சேர்ந்து உண்ண வேண்டும் என்று அவர்களைக் கெஞ்சிக் கேட்கும் கீரன் சாத்தன் என்று அவனுடைய விருந்தோம்பும் தன்மையைப் போற்றுகின்றார்.

        ஒரு யாசகன் சர்ச்சிலிடம் கை நீட்டியபோது அவர் வெள்ளி நாணயம் ஒன்றைக் கொடுத்தார். ஆலிவர் கோல்ட்ஸ்மித்திடம் சென்ற போது அவர் அந்த யாசகனின் தோள் மீது கைப்போட்டு உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். சர்ச்சில் கொடுத்த பணத்தில் பலமுறை உணவு உண்ண முடியும் என்றாலும், கோல்ட்ஸ்மித்தின் செய்கைதான் அந்த யாசகனுக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் அவர் அவனை நண்பனாகக் கருதி நடத்தினார்.

            உணவு அளிப்பது முக்கியமல்ல, ஆனால் அவர்களைத் தன்னோடு அமர வைத்துத் தான் உண்ணும்போது உபசாரம் செய்வதுதான் மகத்தான விருந்தோம்பல். அத்தகைய விருந்தோம்பலை செய்பவர்களே மேன்மக்கள்.

6. பத்துப்பாட்டில் விருந்தோம்பல்

        பத்துப்பாட்டில் யாசகர்களையும் விருந்தினர்களாக நடத்திய சிறப்பைக் காண்கிறோம். தமிழ் மன்னர்கள் எளிமையாக வாழ்ந்தார்கள் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ‘ஆடம்பரமான அரண்மனைகளிலும் உயர்ந்த மாளிகைகளிலும் அவர்கள் வாழவில்லை. தங்க சிம்மாசனத்தில் வீற்றிருக்கவில்லை. எளிமையாக வாழ்ந்து ஆட்சி நடத்தினார்கள்என்பதை மார்க்கோ போலோ போன்றவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். தங்களிடம் பரிசு பெற வந்தவர்களுக்குத் தங்களால் இயன்றதைக் கொடுத்து மரியாதையுடன் நடத்தி வழியனுப்பி வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் காண முடிகிறது.

            ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயரத்தொன் றாம் புலவர்

             வார்த்தை பதினா யிரத்தொருவர்பூத்தமலர்த்

             தண் தாமரைத் திருவேதாதாகோடிக் கொருவர்

             உண்டாயின் உண்டென் றறு

ஔவையார் எழுதிய இந்தப் பாடலில் தகுதி மிக்க அவையில் வீற்றிருக்கும் பெருமையை ஒருவர்தாம் பெருவார். ஆயிரத்தில் ஒருவர் தாம் புலமையோடு திகழ்வார். அவர்களிலும் பேச்சுத்திறன் உள்ளவர் பத்தாயிரத்திற்கு ஒருவராகவே இருப்பார். கொடைவள்ளல்களாகத் திகழ்பவர்களோ கோடிக்கு ஒருவராக இருப்பர். ஆற்றுப்படையின் வருகிற மன்னர்கள் கோடியில் ஒருவராக இருந்தார்கள்என்று கூறுவது தான் சிறப்பு.

7. ஆற்றுப்படையில் விருந்தோம்பல் எனும் தலைப்பில்

    பெரும்பாணாற்றுப்படையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் தொண்டைமான் இளந்திரையனைச் சந்திக்கச் செல்லும் வழியில் திகழும் விருந்தோம்பல்களை விவரிக்கின்றார். அதைப் படிக்கிற பொழுது ஒரு காலத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமல்ல. வள்ளல்கள் மட்டுமல்ல, எளிய சூழலில் வாழ்பவர்களும் பசியோடு இருப்பவர்களைப் பரிவுடன் கவனித்துத் தங்கள் உணவைப் பகிர்ந்து கொண்டது இயல்பாக நடந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.

       எயிற்றியர் வாழும் குடிசை முற்றத்தில் விளா மரத்தின் நிழலில் பார்வை மான்கள் கட்டப்பட்டிருக்கின்றன. பார்வைமான் என்பது வளர்க்கப்படுகின்ற மான். அந்த மானைக் கொண்டு காட்டு மான்களைப் பிடிப்பது வழக்கம். அம்முற்றத்தில் நிலத்தில் பதிக்கப்பட்ட குழிந்த உரல் இருக்கும். எயிற்றியர் தாம் கொண்டு வந்த புல்லரிசியை உலக்கையால் குத்தியெடுப்பார்கள். பின்பு கிணற்று நீரைக் கொண்டுவந்து பழைய விளிம்பு உடைந்து போன பானைகளில் வார்த்து அடுப்பில் ஏற்றிச் சோறு சமைப்பார்கள். பாணர்கள் என்று தெரிந்ததும் தாம் சமைத்த புல்லரிசிச் சோற்றை கருவாட்டோடு சேர்த்துத் தேக்கிலையில் குவித்துத் தருவார்கள்.

            வாடாத் தும்பை வயவர் பெருமகன்

           ஓடாத் தானை, ஒண்தொழிற் கழற்கால்

           செவ்வரை நாடன், சென்னியம் எனினே

           தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ, நும்

           பைதீர் கடும்பொடு பதம்மிகப் பெறுகுவீர் (பெரும்பாணாற்றுப்படை, 101-105)

    சின்னக் குடில்தான், விளிம்புகள் உடைந்த சட்டிகள்தாம். புல்லரசிதான். ஆனால் வந்தவர்களுக்கு இன்முகத்தோடு அந்த உணவை வழங்குகிற பரந்த உள்ளம் எயிற்றியருக்கு இருந்தது.

       சென்ற நூற்றாண்டிலும் தமிழகத்தில் இத்தகைய பண்புகள் இருந்தன. வெளியிலிருந்து வருவோர் தங்கிச் செல்ல வீட்டின் முன் திண்ணைகளும் பந்தல்களும் இருந்தன. இரவில் யார் கேட்டாலும் உணவளிக்க வேண்டும் என்கிற மரபும் இருந்தது. விருந்தோம்புகிற சமூகம் பாதுகாப்பானதாக இருக்கும். அங்குப் பசியும் பட்டினியும் தலைதூக்கவே முடியாது என்பதுதான் பத்துப்பாட்டு காட்டும் நயம்.

8. நீதி நூல்களில் விருந்தோம்பல்

            தமிழ் இலக்கியத்தில் நீதிநூல்களுக்கான முக்கியமான இடம் இருக்கின்றது. ஔவையார் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகியவற்றை எழுதியிருக்கிறார். அடுத்தவருக்கு உதவுவது என்பதன் நீட்சியே விருந்தோம்பல்! உணவால் உதவுவது விருந்தோம்பல். தென்னைமரத்து வேரில் நீர் ஊற்றினால் அந்தத் தண்ணீரை அது நன்றாக வளர்ந்த பிறகு இளநீராகத் தலைவாயிலாகத் தருகிறது. அதுப்போல் நாம் செய்கின்ற நற்செயல் வேறு ஒரு காலத்தில் வேறு ஒரு விதத்தில் பயன்தரும் என்று ஔவையார் மூதுரையில் குறிப்பிடுகிறார்.

            நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

             என்று தருங்கொல் எனவேண்டாநின்று

             தளரா வளர்தெங்கு தாள்உண்ட நீரைத்

             தலையாலே தான் தருதலால்” (மூதுரை – 1)

          சந்தன மரத்தினுடைய கட்டை எவ்வளவு தேய்த்தாலும் அதன் நறுமணம் குறையாது, து போல் சில அரசர்கள் செல்வத்தில்  குறைந்தவர்களாக இருந்தாலும், வறுமை அடைந்தாலும் விசால மனப்பான்மையோடு பிறருக்கு உதவுவார்கள் என்கிறார். ஔவையார்.

            சந்தன மென்குறடு தான்தேய்த்த காலத்தும்

              கந்தம் குறைபடா(து) ஆதலால்தத்தம்

             தனம்சிறியர் ஆயிடினும் தார்வேந்தர் கேட்டால்

             மனம்சிறியர் ஆவரோ மற்று” (மூதுரை -28)

கொடுத்தே பழக்கப்பட்டவர்கள் நிலை சற்றுத் தாழ்ந்தாலும் கொடுப்பதைக் குறைக்க மாட்டார்கள். தங்களை நாடி வந்தவர்களுக்குத் தங்களால் முடிந்த உதவியைச் செய்வார்கள்.

            பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. வண்டுகள் வாசமறிந்து வந்து அவற்றில் வாசம் செய்கின்றன. அதுபோல கொடுக்கிறவர்கள் பூங்காவாக இருக்கிறார்கள். மக்கள் அவர்களைத் தொலைவில் இருந்தே உணர்ந்து கொள்கிறார்கள்.

9. பெரியபுராணத்தில் விருந்தோம்பல்

          மக்களுடைய அடிப்படைத் தேவை உணவுதான். அது நிறைவேறினால் மட்டுமே அடுத்த தேவையை நோக்கி மனம் செல்லும். மாஸ்லோ என்பவர் மனிதத் தேவைகளைக் குறித்து முக்கோணம் ஒன்றை உருவாக்கினார். அதில் முதலாவது இருப்பது உடல் தொடர்பான தேவைகள். உணவு, நீர், ஓய்வு போன்றவை. அடுத்தத் தேவை, பாதுகாப்புத் தேவைகள். மூன்றாவது சார்ந்திருக்கும் தேவை. அந்நிலையில் அன்பு தேவைப்படுகிறது. நண்பர்களையும் உறவுகளையும் எதிர்பார்க்கிறோம். அடுத்ததாக, கௌரவம், மரியாதை எதையேனும் செய்ய வேண்டும் என்கிற உணர்வு. இறுதியாக, தன்னை உணரும் தேவை. தன்முழு ஆற்றவை ஒருவன் அடைய வேண்டும் என்று முனைகிறான். அந்த வகையில் அடிப்படைத் தேவையில் முதலிடம் வகுப்பது உணவு.

       கம்பராமாயணத்தில் கோசல நாட்டின் வளத்தைக் கம்பர் சொல்லோவியமாக ஆக்குகிறபோது அந்நாட்டில் அனைவருக்கும் நிலைபெற்ற செல்வமும், நீங்காத கல்வியும் இருந்தன என்று கூறுகிறார். அதனால் வறுமைத் துன்பத்தால் தம்மை அடைந்தவர்களுக்குக் கொடை வழங்குவதும், வந்த விருந்தினரை உபசரிப்பதுமே அவர்களின் அன்றாட வேலைகளாக இருந்தன என்று குறிப்பிடுகிறார்.

                பெருந் தடங் பிறை நுதலார்க்கு எலாம்

                பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்

                வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்

                 விருந்தும் அன்றி விளைவன யாவையே” (கம்ப, பாலகாண்டம் ,68)

      இளையான்குடி மாறனார் சிவனடியார் என்று சொன்னால் அவர்களைத் தம் இல்லத்திற்குள் அழைத்த வந்து, அவர்கள் திருவடியை நீரால் தூய்மை செய்து, தம் இருக்கையில் அமரச் செய்து, வழிபட்டு, அதற்குப் பிறகு நான்கு விதத்தில் அமைந்த அறுசுவை உணவுகளையும் அவர்களுக்கு விருப்பத்துடன் உண்ணுமாறு நாள்தோறும் கொடுத்துவந்தார் என்கிறார் சேக்கிழார். அத்தகைய விருந்தோம்பும் பண்பும் இறைநேயமும் மாறனாரிடம் இருந்தன.

            நான்கு விதத்தில் உணவு என்றால் அவை உண்பது, தின்பது, கடிப்பது, குடிப்பது ஆகிய நான்கையும் உள்ளடக்கியது. இத்தகைய நான்கு விதமான உணவுப் பொருட்களையும் வழங்கும்போதுதான் விருந்து முற்றுப் பெறுகிறதாம். இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம், துவர்ப்பு, உவர்ப்பு என்பவை நமக்குத் தெரிந்த ஆறு சுவைகள்.       

           ”கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவும் பாதம் விளக்கியே

           மண்டு காதலின் ஆசனத்திடை வைத்து அருச்சனை செய்தபின்

           உண்டி நாலு விதத்தில ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பிலா

           அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துளார்

                                                                                          (பெரியபுராணம். 443)

            பெரியபுராணத்தில் அடியார்களுக்கு உணவளிப்பதும், ஈகை செய்வதும், அதற்காக எந்த எல்லைக்கும் செல்வதும் கூறப்பட்டிருக்கிறது. தான தர்மத்திற்கு மீறித்தான் நமக்கு என்கிற அறக்கோட்பாடு அதில் இழையோடுகிறது.

குடும்பவிளக்கில் விருந்தோம்பல் என்ற தலைப்பில்,

            தமிழகத்தில் திருமணங்களுக்கும், மங்கள நிகழ்வுகளுக்கும் நூல்களைப் பரிசளிப்பது வழக்கமாக இருந்த காலம் ஒன்று உண்டு. அப்போது பெரும்பாலும்குடும்ப விளக்குநூலையே பரிசளிப்பார்கள். பின்னர் குத்துவிளக்குகளைப் பரிசளிக்கும் பழக்கம் புழக்கத்தில் வந்தது. இப்பொழுது பூங்கொத்துக்களைப் பரிசளிக்கிறார்கள்.

         நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்கிற கருத்தை வலியுறுத்தி எல்லாப் பெண்களும் பணிக்காக வெளியே செல்ல முடியாவிட்டாலும் அவர்களுடைய ஆற்றலைப் பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும் என்கிற வித்த்தில் நூல் ஒன்றை உருவாக்கினார் பாரதிதாசன். பெண்கள் பணிக்காக வெளியே சென்றால் தான் குடும்ப முன்னேற்றம் என்பது இல்லை. அவர்கள் இல்லக் கடமைகளை நன்றாகச் செய்தாலே குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று சுட்டிக்காட்டுகிற நூலாக அமைந்திருக்கிறது.

            இந்நூலில் விருந்தோம்பல் குறித்தச் செய்திகள், கோட்பாடுகள் ஆகியவை செறிவாக இடம் பெற்றிருக்கின்றன.  தலைவன் வீட்டிற்கு விருந்தினர் வருகிறார்கள். அப்போது தலைவன் வீட்டில் இல்லை. தலைவி விருந்தினரை வரவேற்கிறாள். மகிழ்ச்சி மேம்பட வருக, வருக என்று அவள் வரவேற்கும் பாங்கு மிக நேர்த்தியாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. வரும் விருந்தினரை எவ்வாறு வரவேற்கவேண்டும் என்று புரட்சிக் கவிஞர் எழுதுகிறார்.

         வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் ஆண் ஆணோடும், பெண் பெண்ணோடும, குழந்தைகள் குழந்தைகளோடும் அமர்ந்து பேசுவது மரபு, அதைப் பாரதிதாசன் சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் நம் வீட்டில் இருந்த நாட்களை மறந்து போகாத வண்ணம் நடந்து கொள்வதும் விருந்தோம்பல் பண்பாடாக நம் இல்லங்களில் மின்னியிருக்கின்றது என்பதை உணர்கிறோம்.

இந்திய மரபில் விருந்தோம்பல் என்னும் தலைப்பில்,

           இந்தியா நெடிய பாரம்பரியம் கொண்ட பண்பாட்டை உடையது. மற்ற நாடுகள் நாகரிகம் அடையாமல் நாடோடிகளாகத் திரிந்த காலத்தில் நேர்த்தியான குளியல் அறைகளையும், நகர அமைப்பையும் கொண்டிருந்த பெருமையை உடையது. அதன் தொடர்ச்சியாக விருந்தோம்பலில் தனக்கென ஒரு நெறியை வகுத்துக்கொண்டு கடைபிடித்து வந்தது. இன்றைய காலக்கட்டத்தில் நகரமயமானதாலும், நேர நெருக்கடியாலும் அது சற்று நீர்த்துப் போயிருந்தாலும் அதன் தொன்மை வியக்க வைப்பதாக இருக்கிறது.

            இந்தியா அன்னத்தை அளிப்பதில் சிறந்து விளங்கும் நாடு என்கிற பொருளில், மகாகவி பாரதியார்,

            ஞானத்திலே பரமோனத்திலேஉயர்

            மானத்திலே அன்ன தானத்திலே

           கானத்திலே அமுதாக நிறைந்த

           கவிதையிலே உயர்நாடு

அன்னதானம் என்பது மகத்தான கடமை என்று இந்த மண்ணில் மக்கள் நினைத்திருந்தார்கள். பசியோடு இருப்பவர்களுக்கு உணவு அளிப்பது பரோபகரம் இல்ல. மாறாகத் தார்மீகச் செயல் என்று கருதினார்கள்.

        தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்று பாரதியார் முழங்கினார். ஒவ்வொரு மனிதனுக்கும் உணவு வழங்குவது சமூகத்தின் கடமை என்பதை அவர் வலியுறுத்தினார். பொதுவுடைமைப் பார்வையில் பூத்தக் கவிதைப்பூ.

மேற்கத்திய இலக்கியத்தில் விருந்தோம்பல் என்னும் தலைப்பில்,

            வேர் என்பது புகழை மறுக்கும் பூ என்று கூறிய கலீல் கிப்ரான், விருந்துகளில்லா வீடு சுடுகாடு என்று குறிப்பிடுகிறார். பெருந்தன்மை என்பது ஒருவர் தம் சக்திக்கு மீறிக் கொடுப்பது. பெருமை என்பது நம் தேவைக்குக் குறைவாக எடுத்துக் கொள்வது. பெருந்தன்மை என்பது எனக்குத் தேவையானதை அடுத்தவர்களுக்குக் கொடுப்பது அல்ல. அடுத்தவர்களுக்கு என்னைவிட அதிகமாகத் தேவைப்படுவதைக் கொடுப்பது என்று கூறுகிறார்.

    நெல்சன் மண்டேலா ஜனாபதியாகத் தென்னாப்பிரிக்காவில் பதவியேற்ற போது சிறைச்சாலையில் தாம் இருந்தபோது சிறை அதிகாரிகளாகப் பணியாற்றிய அனைவரையும் சிறப்பு விருந்தினராக பதவியேற்பு விழாவிற்கு அழைத்தார் என்று கூறப்படுகிறது.

   மனிதன் கிழக்கானாலும் மேற்கானாலும் ஒரே மாதிரியான குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறான் என்பதையும், அவனுடைய பொதுப்படையான அறத்தில் நுண்ணிய வேறுபாடுகள் இருந்தாலும் அது மானுடத்தைச் செழிக்க வைக்கும் விரல்களாகவே ஒரே உள்ளங்கையை நோக்கி நீள்கின்றன என்பதையும் உலக இலக்கியங்களை வாசிக்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

நிறைவாக,

      விருந்தாட்டு, விருந்தாடி, விருந்தாளி, விருந்தாற்றுதல், விருந்திடுதல், விருந்தினன், விருந்து, விருந்துக்கூடம், விருந்துசொல்லுதல், விருந்து வைத்தல், விருந்தோம்பல், விருந்தோர் எனப் பத்துக்கும் மேற்பட்ட சொற்களைத் தமிழ் அகராதிகளில் காண்கிறோம். இவ்வளவு சொற்கள் காணப்படுவதில் இருந்தே, தமிழ் பண்பாட்டில் விருந்தோமல் நீண்ட நெடிய வரலாறு கொண்டது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். தமிழிலக்கியங்களில் காணப்படும் விருந்தோம்பல் தொடர்புடைய முக்கியத் தகவல்களை எதையும் விட்டுவிடாமல் பதிவு செய்யக் கடுமையாக உழைத்துள்ளார் நூலாசிரியர். தமிழக இளைஞர்களுக்கு முன்னேறத் துடிக்கும் வாழ்க்கைக் கடலில், வெ.இறையன்பு ஐயா அவர்கள் ஒரு துடிப்பான கலங்கரை விளக்காகத் திகழ்கிறார். தனிமையிலிருந்து மனிதர்கள் வெளியேற வேண்டுமானால் விருந்தோமலே நல்வழி என்கிறார் நூலாசிரியர். இந்நூல் நமக்கு முன்னோர்களின் பண்பாடுகளை நினைவுக் கூறும் விதமாக அமைந்துள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய ஓர் அரிய நூலாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

                நினைத்தால் வருவதில்லை, உழைத்தால் வருவது முன்னேற்றம்

           

           

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·                       பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·     பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல்.             உண்மைக்குப் புறம்பானவற்றைச்  செய்யாதிருத்தல். ·     நண்பர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·                 ம னத்திடத்தோடு வாழ்தல்,  ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·             மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·                      எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.              எவரையும் வெறுக்...