எழுதுகோல் கனவுகள் (புத்தக மதிப்புரை)
புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய எழுதுகோல் கனவுகள் என்ற கவிதைப் புத்தகத்தைப் பார்ப்போம். இப்புத்தகத்தைத் திருச்சி, இராஜா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 170, விலை 130 ரூபாய்.
கவிஞர் மலர் மன்னன் அவர்கள் எழுதிய
எழுதுகோல் கனவுகள் என்ற இந்த கவிதைப் புத்தகம் மூன்றாவது படைப்பாகும். பல பத்திரிக்கைகளில்
கவிதைகள் எழுதியுள்ளார். கவிதை எழுத புலவர் பட்டம் தேவையில்லை என்பதை பட்டுக் கோட்டையார், கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, போன்றவர்களின்
வாழ்க்கை வரலாறு காட்டுகின்றது. கவிதை எழுத தேவை சிந்தனை, பயிற்சி, முயற்சி என்று தெரிந்து கொண்டேன் என்று நூலாசிரியர் தம் முன்னுரையில்
குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலுக்குக் கவிஞர் மணமேடு குருநாதன் அய்யர் அவர்கள் இந்நூலைப் பாராட்டி அன்பான
அணிந்துரை வழங்கியுள்ளார். முசிறி, தலைமையாசிரியர் (ஓய்வு) பெ. முத்துகிருஷ்ணன் அவர்கள் சிறப்பானதொரு அணிந்துரை எழுதியுள்ளார்.
இவருடைய கவிதைகள் தமிழ்ப்பாவை, முல்லைச்சரம், கல்கண்டு, தினமணி, தீக்கதிர், வண்ணக்கதிர், ராணிமுத்து, மின்னல், குடும்ப மலர் போன்ற இதழ்களில் வெண்பா, விருத்தம், சிந்து, சந்தம், அகவல் எனப்
பற்பல பா வகையில் வெளிவந்துள்ளது.
ஆசிரியரின் கவித்தோட்டத்தில் புதிய புதிய பூவினங்கள் நல்ல பாவினங்களாய் நமக்கு
விருந்தாகின்றன. வண்ணங்கள் வேறாகவும், மென்மையும்
தன்மையும் கொண்டு, மணமும் குணமும் வேறாய்க் கண்ணுக்கும் கருத்துக்கும் தோன்றி
எத்தனையோ செய்திகளை எடுத்து மொழிகின்றன.
இந்நூலில் தமிழ் வாழ்த்து, வளர்தமிழ் காப்போம், சிந்தனை செய்வோம், எங்கே செல்கின்றோம், தமிழுணர்வு வேண்டும், எந்நாள்? நெஞ்சு பொறுக்குதிலையோ?, அமைதி, பாரதி பாடிய பாரதம், மூப்பும் முடிவும், நோயற்ற உலகம், சின்னப்பெண்ணின் எண்ணக்குமுறல், மனிதநேயம், வானம் வசப்படும், நேரமேது?, நட்பு, இயற்கையெனும்
தூதன், வாழ்க்கை பயணம் போன்ற பல்வேறு தலைப்புக்களில் கவிதைகளைப் படைத்து அளித்துள்ளார்.
அமைதி எனும் தலைப்பில் அமைந்த கவிதையில்,
குடும்பத்தில் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே குறுக்கிட்டு தடுப்போர்க்கு
அமைதி கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனம் கொண்டு வாழ்கின்றவர்களுக்கு
அமைதி குடிகொண்டிருக்கும். அடுத்தவர்களிடம் பேசும் பொழுது அவர்களின் மனம புண்படாமல்
இனிய சொற்களைப் பயன்படுத்தி நன்மை ஏற்பட்டால் அங்கு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். இவ்வாறு வாழ்க்கையில்
அமைதி கிடைக்கும் நிலைகளைத் தம் கவிதை மூலம் நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும்,
”நடுக்கடலில் குலுங்காமல் நாவாய் செல்லும்
நாம்தேடும் அமைதி அந்தக்கடலில் துஞ்சும்!
படுத்தவுடன் தூங்குகின்ற மனிதருக்குப்
பழகியவர் போல அமைதி தோழனாகும்!”
என்று வாழ்க்கையில் அமைதி
நிலவும் சூழலைக் கூறுகிறார்.
மூப்பும் முடிவும்
என்னும் தலைப்பில்,
சேமித்தப் பணத்தையெல்லாம் குடும்பத்தின் உயர்விற்காக செலவழித்துவிட்டு, மனைவியை அல்லது
கணவனை இழந்து வாடும் மூத்தக் குடிமக்களின் நிலைமையை,
”சேர்த்த சில்லறை சிறுத்துப் போவதால்
காத்த உறவுகள் கல்லறை காட்டுது
முதியோர்
இல்லம் முளைத்து வருகுது
கதியிது என உயிர் கலங்கிக் கிடக்குது”
என்று கூறி வேதனையடைகிறார்.
கவிதைகளில் கற்பனை வளம் இருந்தால், அக்கவிதைகள் இலக்கிய நெஞ்சங்களில் என்றும் வாழும் என்பதற்கு மலர்மன்னன் அவர்களின்
கவிதைகளில் காணும் கற்பனைகள் சான்றுகளாக அமைகின்றன.
நோயற்ற உலகம் எனும் தலைப்பில்
”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது உடல்
மற்றும் மன ஆரோக்கியமே மிகச் சிறந்த செல்வம் என்பதைக் குறிக்கும் பழமொழியாகும். ஆரோக்கியமான
உணவு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம், தூய்மை மற்றும்
மன அமைதி ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் நோயற்ற, நீண்ட ஆயுளுடன் கூடிய சிறப்பான வாழ்வை வாழ முடியும் என்பதனை
அடிப்படையாகக் கொண்டுத் தம் கவிதையில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
”நோயற்ற ஓர் உலகம் படைப்பதற்கு
புகையினையும்
கழிவினையும் போக்கிவிட்டால்
புனிதத்தைத் தண்ணீரில் கண்டு விட்டால்
பகைக் கொண்ட நோயெல்லாம் பறந்தே ஓடும்
படைத்திடலாம் நோயற்ற உலகம் தன்னை!
என்று தம் கவிதையை முடிக்கிறார்.
சின்னப் பெண்ணின்
எண்ணக் குமுறல் எனும் தலைப்பில்,
ஏழைக் குடும்பங்களில் ஏற்படுகின்ற அவலங்களை ஒரு சின்னப் பெண்ணின் எண்ணக் குமுறலாக,
”அக்காள் திருமணம் அழுகையில் இருக்குது
இக்காலத்திலும் இடறுது வஞ்சம்
எந்தன் திருமணம் நிலுவையில் நிற்குது
தங்கம் வாங்க தவிக்குது நெஞ்சம்!
தந்தை உழைப்பில் தவிடுதான் வாங்கலாம்
உண்மை நிலையும் இதுதானே?
என்றும், பெண்களின் கொடுமைகளை
நாளிதழ், திரைப்படங்களில் நாளும் பார்க்கிறோம். ஆனால் அதற்கு தீர்வு தான் கேள்விக் குறியாய் உள்ளது என்று
தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
வானம் தொடும்
தூரம்தான்! எனும் கவிதையில்,
உண்மையான வெற்றி என்பது முயற்சிகளின் விளைவாகும். ஒரு தனிநபர் எதிர்கொண்ட தடைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதன் மூலம் அளவிட வேண்டும். தடைகள்தான் வெற்றியை வரையறுக்கின்றன. வெற்றிக்கான பயணம் ஒருபோதும் எளிதான, நேரான பாதை அல்ல; அது பல தடைகளால் நிறைந்துள்ளது. இந்தத் தடைகள்தான் வெற்றிகரமான நபர்களாக உருவெடுக்க உதவும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு, அந்தப் பாடங்களை நடைமுறைப்படுத்துங்கள். எல்பர்ட் ஹப்பார்ட் என்பவர், “ஒரு மனிதன் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு, தவறு செய்ய அஞ்சுவதுதான்”. மேலும், நாம் வெற்றியிலிருந்து அல்ல, தவறுகளிலிருந்தே கற்றுக்கொள்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில்,
”சாதிக்கும் எண்ணங்கள் சறுக்கிடாது!
சஞ்சலத்தை
நெஞ்சகத்தில் வளர்த்திடாது
போதிமரத்தடியில்
நீ அமர வேண்டாம்
புத்தகங்கள்
போதிக்கும் நீதி போதும்!
தேதி
வைத்து நிறைவேறும் திட்டம் யாவும்
திடமுடனே
செயலாற்று!
இப்புத்தாண்டில்
காதுக்கு
வரும் செய்தி கனவு காணும்
கனவிருந்தால்
வான் உனக்கு தொடும் தூரந்தான்!
என்று தன் கவிதையின்
வழி முன்னேற்றப் பாதையில் செல்ல ஊக்கப்படுத்திகிறார்.
மனிதநேயம் என்னும் கவிதையில்,
இன்றைய சமுதாயத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும்
இயந்திரமயமான வாழ்க்கைக்கு மத்தியில், மனிதநேயம் என்பது அன்பையும்,
கருணையும், பிறர் துன்பத்தில் பங்கெடுப்பதையும்
குறிக்கும் அவசியமான பண்பாகும். வன்முறை, சாதி மற்றும் தனிநபர் வாதத்திற்கு இடையே, உண்மையான மனிதாபிமான
செயல்கள் குறைந்து வருவதாகத் தோன்றினாலும், சமூக வலைத்தளங்கள்
மூலம் மக்கள் ஒன்றுபட்டு உதவும் போக்கு வளர்ந்து வருவது நம்பிக்கை அளிக்கிறது.
”வாழை மரம்போல் நின்று
வழங்கும் வள்ளல் நெஞ்சில்
தாழை மணம் போல் என்றும்
தவழும் மனித நேயம்!”
நூலகம் எனும் தலைப்பில்,
நூலகம்
அறிவுக் கருவூலமாகும். இது வாசிப்புப் பழக்கத்தை வளர்த்து, கல்வி, ஆராய்ச்சி மற்றும் பொது அறிவு மேம்பாட்டிற்கு அமைதியான சூழலை வழங்குகிறது. புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் டிஜிட்டல் வளங்கள் மூலம் அனைத்துத் துறை அறிவையும்
இலவசமாகப் பெற உதவும் நூலகம், தனிநபர் ஆளுமை வளர்ச்சிக்கும்,
சமூக முன்னேற்றத்திற்கும் மிக அத்தியாவசியமான இடமாகும்.
· விலையுயர்ந்த புத்தகங்களைச் சொந்தமாக வாங்க முடியாதவர்களுக்கும்,
பொதுமக்களுக்கும் புத்தகங்கள், செய்தித்தாள்கள்
மற்றும் மின்-நூலக சேவைகளை இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது.
· படிப்பிற்குத்
தேவையான அமைதியான மற்றும் நிசப்தமான சூழலை நூலகங்கள் வழங்குகின்றன.
· நடப்பு நிகழ்வுகள், வரலாற்று ஆவணங்கள், சமூக மற்றும் அறிவியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள உதவுகின்றன.‘கண்டதைப் படிப்பவன் பண்டிதன்’ என்பதற்கேற்ப, நூலகம் மனிதனின் அறிவுப் பசியைத் தீர்க்கும் ஒரு கல்விச் சாலை. இது ஒவ்வொரு ஊரிலும், பள்ளியிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான சமூகத் தேவையாகும்.
நூலகத்தின் பெருமைகளை நூலாசிரியர் தனது நூலில்,
”ஆலயம் இருக்கும் ஊரில்
அடிவைக்க விரும்பினாலும்
நூலகம் இல்லா ஊரில்
நுழையத் தயங்க வேண்டும்
கற்றலின் கேட்டல்
கையளவு நன்மையெனில்
கற்றலும் கேட்டலும்
கடலளவு நன்மைகளாகும்!”
என்று கவிதைகளின் வழி நூலகத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறியுள்ளார்.
நட்பு எனும் கவிதையில்,
நட்பு, தோழமை , சினேகம் என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
”ஒருபூவில் பல இதழ்கள் இருப்பதைப் போல்
ஒரு பஞ்சு பலதுண்டாகப் பறப்பதைப்
போல்
ஒரு குலையில் பலகாய்கள் காய்ப்பதைப்
போல்
ஒரு மனமே பல பண்பை வெளிப்படுத்தும்!
வையத்தில் கற்றோரைத் தேடிச் சென்று
அழகோடும் அறிவோடும்
அமைக்கும் நட்பு
அணையாத விளக்காகும்
கொள்வீர் நட்பு!”
என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். வள்ளுவர்
”செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு” (குறள்-781)
என்ற குறள் வழி நட்பை போல் ஒருவன் செய்து
கொள்வதற்கு அருமையான செயல் எதுவும் இல்லை. நட்பைப் போல அருமையான பாதுகாப்பும்
இல்லை.
இயற்கையெனும் தூதன் எனும் கவிதையில்
இயற்கை (Nature) என்பது இயல்பாகத் தோன்றி, இயங்கும் சுற்றுச்சூழல், உயிரினங்கள் மற்றும்
வளிமண்டலம் போன்ற அனைத்துக் கூறுகளின் தொகுப்பாகும். இது பூமியின் அழகு, நிலப்பரப்புகள், தாவரங்கள், விலங்குகள்
மற்றும் பருவநிலைகளை உள்ளடக்கியது. மனிதகுலம் உயிர்வாழவும், சமநிலையான
சுற்றுச்சூழலைப் பேணவும் இயற்கை இன்றியமையாதது.
இயற்கையின் பல்வகை
அம்சங்கள்
·
காடுகள்,
நீர்நிலைகள், மலைகள் மற்றும்
உயிரினங்களுக்கிடையேயான பிணைப்பு.
· பல்லுயிரினத்தன்மை: பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடம்.
· தற்சார்பு வாழ்க்கை: இயற்கை வேளாண்மை (Organic Farming) மற்றும் நச்சுத்தன்மையற்ற
உணவு முறை
· .பாதுகாப்பு: இயற்கை
வளங்களை அழிவிலிருந்து காத்து, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு
சேர்ப்பது.
இயற்கையை
நேசிப்பதும், அதனுடன் இணைந்து வாழ்வதும் ஆரோக்கியமான
வாழ்க்கைக்கும், நிலையான பூமிக்கும் வழிவகுக்கும்.
வேளாண் விஞ்ஞானி
நம்மாழ்வார் எனும் கவிதையில்
நம்மாழ்வார் தமிழ்நாட்டின் முதன்மை
இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர்ஆவார்.இவர் தஞ்சாவூர்மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் இளங்காடு என்னும்
சிற்றூரில் பிறந்தார். இவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண்மை
இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப்புரட்சி, தொழில்மயமாக்கம்,
சூழல் மாசடைதல் தொடர்பாக
விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி மேலாண்மை முறைகளை
ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு
சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.
கோவில்பட்டி மண்டல
மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக
பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும்
பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். 1963
ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை இவர்
மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். நம்மாழ்வாரின்
சிறப்பினை விளக்கும் கவிதைகளாக,
”கண்ணின் மணிபோல
மண்ணின் வளம்காண
நம்மாழ்வார் வழியைச் சொன்னார்
நாம்தான் கேட்டதுண்டோ?
மக்காத குப்பைகள் மண்ணுக்குள் செல்வதைத்
தடை செய்தார்
இக்கால மக்களில்
இவர் பேச்சை எவர்கேட்டார்
விடைபெற்றார்
பின்நாளில் பிறப்பெடுத்து
வருவார் நம்மாழ்வார்
எந்நாளும் அவர்வழியில்
இருந்தே நமைஆள்வார்”
என்று
நம்மாழ்வாரின் பெருமைகளைத் தம்கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
பேசும்
மரம் எனும் கவிதையில்,
”பட்ட மரமாய் பாழாய்ப் போயினும்
படமாய
நின்று பட்டறிவு வூட்டுவேன்
சுட்ட போதிலும் கரியாய் மாறிச்
சுடுநீர் சுவைநீர் வைத்திட உதவுவேன்”
என்னைத் தொட்டால் உணர்வேன். ஏனென்றால் என்னைத் தொடாமல் ஊற்றும் குளிர்ந்த நீரால் எப்படி
சிலிர்ப்பேன். வெந்நீர் ஊற்றினால்
காய்ந்து விடுவேன் என்று எப்படி சொல்வீர்கள். மண்ணில் வளம் உண்டென்றால் வனப்பை செழிப்பை பசுமை நிறத்தால் வெளிபடுத்துவேன். வளமில்லை எனினும்
காட்டுவேன். மேனியில் வற்றும்
பொலிவினை இலைகளின் உதிர்வால் உணர்த்துவேன். காதலும் செய்வேன். கிளை எனும் கை நீட்டி காதலிக் கொடியின் கரம் தொட்டு அணைப்பேன். ஆதலால் மாந்தரே
அறிவீர் உங்கள் அன்பும் பாசமும் என்றும் நினைப்பேன். பெற்ற பிள்ளை விட்டே ஓடினும் பெறாத பிள்ளைநான் உம்மைக் காப்பேன். நற்றமிழ்ப்
புலவரும் மக்கட் பண்பிலார் மரம் போல்வர் என்றால் எப்படி ஏற்பேன்.
பெண்ணே
உனக்காகச் சிறு யுத்தம் எனும் தலைப்பில்
சிந்தி! எழு! போராடு!, கண்ணியமில்லாக்
கல்யாணப் பேச்சு, சறுக்கும் சமுதாயத்தில் நீ, கலந்துரையாடும் கண்ணும்! நெஞ்சம்!, இது சரியோ பெண்ணே! கல்வி ஒரு சீதனம், மாமனார்க்கு ஒரு மடல், வாங்க புது மாப்பிளே!, பெண்ணே நீ மாமியானால்!, பலித்தது பாரதிக் கனவு, வன்கொடுமை பெண்கடமை, வாழ்க பெண்மை என்று பத்துக்கும் மேற்பட்டக் கவிதைகளை எழுதியுள்ளார்.
‘எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லைகாண்' எனும் மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, இன்று
எல்லாத் துறைகளிலும் புதுமை படைத்து, பெண்கள் வெற்றிக்கொடி நாட்டி
வருகின்றனர். பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி என நற்பண்புகள் பல வாய்க்கப்
பெற்ற பெண்குலத்தின் பெருமையைப் போற்றும்விதமாக ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி அனைத்துலகப் பெண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சிந்தி! எழு! போராடு! எனும் கவிதையில்
நகைமுகப் பெண்ணே, கேள்இந்
நானிலம் உன்னைத் தூற்றும்!
நகையிலே உனக்குப் பித்தாம்!
நாள்தொறும்
வாசத் தோடு
சிகை விரும்பும் பூப் பித்தாம்!
செழிக்கு முன் அழகாலெனும்
பகை வருமாம் சிரித்தால்
பழி வருமாம் ஊருக்கே!
பெண்களை முடக்கி வைக்கும் உத்தியாக, பண்பாய் நீ இவற்றையெல்லாம் பணிவுடன் கருணை என்பர். பெண்களை சிறப்பு
செய்யும் பேச்சு என மகிழ்வாய். சக்தியை இழக்க செய்து சக்தியே என பக்தியின் போர்வையில் கூறுவார்கள். பாழ்மனம் கொண்டவர்கள்
இவ்வுலகில் கொடுமைகள் பல செய்தவர்களுக்கும் இன்முகம் காட்டி நிற்பார்கள்.
சறுக்கும் சமுதாயத்தில் நீ எனும் கவிதையில்
”பெண்ணே உண்ணா நோன்பில்
பொங்கும் ஒரு கூட்டம் போல்
பொன், சீர் கேட்போர் கண்டு
பொங்கும் இச் சமூகம்
கண்சோர்ந்து நோன்பிருந்தோர்
கலைந்து போவார் போல
கண்ணை மூடிக் கொள்ளும்
பெண்ணின் கொடுமை கண்டும்!
என்ற கவிதையின் வழி பெண்களுக்குக் கொடுமை நடந்தாலும் அதைக் கண்டும் காணாமல்
இருப்பது ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் உள்ளது. வரதட்சணை பிரச்சனைகளும்
அன்றைய காலக்கட்டத்தில் அதிகமாக இருந்தாலும், தற்பொழுதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்த வண்ணம் தான்
இருக்கின்றன.
”வரதட்சணை விளக்கில்
வார்ப்பாய் கண்ணீர் நெய்தான்
பரவும் ஒளி மிகுந்தால்
பசுமையாகும் வாழ்வு”
ஒரு
நாட்டினுடைய வளர்ச்சியை, பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் கல்வி அறிவு இவைகளே நிர்ணயிக்கின்றன. இவற்றில் பெரும்பங்கு பெண்களையே சாரும். ஏனெனில்
பெண்களின் கல்வியறிவு அவர்தம் குடும்பத்தின் வளர்ச்சி மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கும்
வழிவகுக்கும்.
பெண்களுக்கு என்று பாதுகாப்பின்மை, மற்றும் கல்வியறிவு இல்லாத நிலை மட்டுமே அவர்களின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்
காரணிகள். இந்தியாவில் மட்டும் பெண்களின் கல்வியறிவு என்பது
கைக்கு எட்டாத கனியாகவே இருக்கிறது. ஏனென்றால் நம் இந்திய தேசம்
பெரும்பாலும் கிராமப்புறங்களால் உருவானது. அதனால்தான் கிராமங்கள்தான்
இந்தியாவின் விடியல் என்று காந்தியடிகள் கூறினார்.
இக்கால கட்டத்தில் துணிந்து நின்று சமுதாயத்தை
எதிர்கொள்ளும் பெண்கள்தான் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள்.
அதற்கு அவர்களுக்கு தேவையான கல்வியறிவும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்
பட்சத்தில் கிராமத்து பெண்களும் தங்கள் நிலையை நாட்டுவர் என்பதும் உறுதி.
பலித்தது
பாரதிக் கனவு
எனும் தலைப்பில்
ஓடும் நதியையும், தேடும்
நிலத்தையும் பெண் என்று
வர்ணிப்பார்கள். காட்டையும் மலையையும் பெண்ணாய் காண்பார்கள்.
வீட்டுத் தெய்வத்தைப் பெண்ணாய் வேண்டுவார்கள். முதலில் பெண்குழந்தை பிறந்தால் உற்றார் உறவினர்கள் மகிழ்வார்கள். அடுத்ததும் பெண் பிறந்தால் மனத்தால் சலிப்படைவர். அடுத்ததொரு
குழந்தை ஆண்குழந்தை இல்லையென்றால் குடும்பத்திற்கு கெடுதல் என்பார்கள்.
”காற்றில் புகழ்ச்சி கலந்தது ஏனோ?
போற்றிய நெஞ்சம்
தூற்றிடத் தானோ?
ஆற்றலில் பெண்கள்
ஆண்களை மிஞ்சுவார்
தூற்றிய ஆண்கள்
தூக்கத்தில் அஞ்சுவார்!
மாளும் பெண்மை
மறைந்தது காற்றாய்
ஆளும் பெண்மை
எழுந்தது ஊற்றாய்
பாரதி நெஞ்சில்
பெண்ணியம் கண்டநாம்
பாரதப் பெண்களில்
பாரதியைக் காண்கிறோம்”
வாழ்க
பெண்மை எனும் தலைப்பில்,
”பூப்பறிக்கப் புறப்பட்ட
வளையல் கையால்
போர்முனையில் படைக்கருவி
தூக்குகின்றார்!
பாப்புனை பழகிவிட்டார்!
சமையல் செய்யும்
பண்பாட்டுக் கலைகளையும்
காத்து நின்றார்!
சாப்பாடு சரியில்லை
என்போரையும்
சமையலறை கொண்டு
வந்து நிற்க வைப்பார்!
கூப்பாடு போட்டுச்சீர்
வரிசை கேட்போர்
கூறாமல் ஓட்டங்கள்
பிடிக்க வைப்பார்!”
சுட்டிகளின்
குட்டித்தீவு என்னும் பிரிவில்,
செல்லனும் கிளியும், காலையிலே
ஒரு சோலயிலே..., சாலை விதிகளை மதிப்போம், எங்க வீட்டு மாமரம், முதலும் முடிவும் உயிரில்,
வினையும் விளையும், நட்பை வளர்ப்போம், வெற்றிக் கோட்டை, நடமாடும் அழகு, மலையில் ஒரு மாயம், தொட்டிமீன்கள், கோழியின் பெருந்தன்மை, சீருடைப் பூக்கள். துள்ளிச் செல்வோம் பள்ளி, நினைத்தாலே இனிக்கும் என்னும்
பத்துக்கும் மேற்பட்ட கவிதைகளைப் படைத்துள்ளார்.
நினைத்தாலே இனிக்கும் என்னும் கவிதையில்,
பிஞ்சு விரலும் கொஞ்சும் மொழியும்
அஞ்சும் மனமும்
அஞ்சா செயலும்
பஞ்சின் உடலும்
பட்டுக் கன்னமும்
நெஞ்சை அள்ளும்
நினைத்தாலே இனிக்கும்”
என்று குழந்தைகளின பேசும்
மழலை மொழியைக் கேட்கும் பொழுது பெற்றோர்களுக்கு வீசும் தென்றலாய் இருக்கும். எல்லையில்லா
அன்பு மொழியும் இனிமை தரும். பிள்ளையில்லை நீ பேசும் தெய்வமே
என்று பிள்ளைகளின் இனிமைத் தன்மையைக் குறிப்பிடுகிறார்.
கவிதைகளில் கற்பனைவளம் இருந்தால், அக்கவிதைகள் இலக்கிய நெஞ்சங்களில் என்றும் வாழும் என்பதற்கு மலர்மன்னன் கவிதைகளில்
காணும் கற்பனைகள் சான்றுகளாக அமைகின்றன.
நறும்பூக்களாய்க் குறும்பாக்களாக 600 ஹைக்கூக் கவிதைகளையும் படைத்துள்ளார். அவற்றில் முத்தான பாக்களாக,
”ஈரமணல் வாகனம்
சொட்டும் நீர்
ஆற்றின் கண்ணீர்”
என்ற எண்ண ஓட்டத்தில்
காவிரித் தாயின் கண்ணீர் அன்றோ புலப்படுகிறது.இவ்வாறு எத்தனையோ கவிதைகளின் எண்ணக்
கற்கள் பிரமிடுகளாய் எழும்பி நிற்கின்றன. குறுகத் தரித்த குறள்
போல் குறும்பாவில் சிறந்த கருத்துக்களை வரிகளாக்கி, கவிதைகளாக்கிப்
படைத்துள்ளார் ஆசிரியர்.
நிறைவாக,
”சாவிலும் தமிழ்ப் படித்து சாகவேண்டும்.
என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்” என்ற
ஈழத்தமிழன் சச்சிதானந்தன் கூற்றின் படி, ஒவ்வொருவரும் இவர் கவிதைகளைப்
படிக்க வேண்டிய கவிதையாக அமைந்துள்ளது. நாட்டில் அறிவு தோற்று
உணர்வுகள் வெல்லும் போதும், அன்பு தோற்று ஆணவம் வெல்லும் போதும்,
நிதானம் தோற்று வேகம் வெல்லும் போதும், தாய்மொழியுணர்வு
மங்கும்போதும் இவர் விழிப்புணர்வு ஊட்டுகிறார். இது நூலாசிரியரின்
உணர்வுகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. தமிழ் சான்றோர்கள் அனைவரும்
படிக்க வேண்டிய நூலாக அமைந்துள்ளது.
”வாசிப்பை நாளும் நேசிப்பாய்,
நல்ல நூல்கள்
அனைத்தையும் சுவாசிப்பாய்”
Comments
Post a Comment