மனஅமைதிக்குச் சில வழிகள் (புத்தக மதிப்புரை)
புத்தக
மதிப்புரையில் பி.சி.கணேசன் அவர்கள்
எழுதிய மன அமைதிக்குச் சில வழிகள் என்ற புத்தகத்தைப் பார்ப்போம். இந்தப்
புத்தகம் 2017 -ஆம் ஆண்டில், ஏழாம் பதிப்பாக, சென்னை, வானதி பதிப்பகம்
வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 108,
விலை 40 ரூபாய்.
நூலாசிரியர்
பி.சி. கணேசன் அவர்கள் சரித்திரம் படித்தவர். அறிவுலக மேதை. நாகரிக அரசியல்
விமர்சகர். சிறுகதை மன்னர், வரலாற்றுப் பேராசிரியர்,
சிறந்த நாவலாசிரியர், திரைப்பட இயக்குநர், நல்ல மொழிப் பெயர்ப்பாளர், பல்துறை அறிஞராக விளங்கிய மாமனிதர். பல்வேறு
பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள்
அனைத்தும் எளிய நடையில் பொதுமக்களைச் சென்றடையும் வகையில் அமைந்துள்ளது.
வெளியில்
எங்கெங்கோ சென்று நிம்மதியைத் தேடுகின்ற மனிதன் அதைத் தேட வேண்டிய இடத்தை மட்டும் ஏனோ
விட்டுவிடுகிறான். அந்த இடம் எது? அதில் நிம்மதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற எண்ணங்களை இந்நூல்
எடுத்து இயம்புகிறது.
அத்தியாயத்
தலைப்புகள் வெகு கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் கொடுக்கபட்டுள்ள வாசகம்
அந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ள கட்டுரைகளுக்குத் திறவுகோலாக அமைந்துள்ளது.
ஊன்றி நிற்கக் கால்கள், நம்பிக்கையே ஆரம்பம், மலை குலைந்தாலும், மனம் ஒரு குரங்கு, ஆலயங்களும் மருத்துவமனைகளே, தியானம் ஒரு
வழி, மனம் திருந்துதல்
ஒரு மார்க்கம், கழுவாய் உண்டு, தூங்குவதும் ஒரு வழி, விரக்தியை விரட்டுங்கள், பொழுது போக்கு தேவை என்று பதினொரு தலைப்புகளில் கட்டுரைகளை வழங்கியுள்ளார். இத்தலைப்புகளில்
இடம்பெறும் அனைத்துத் தரவுகளும், எல்லா வயதினர்க்கும் ஏற்றவகையில் வாழ்க்கை வழிமுறைகளை விளக்கும் நூலாக அமைந்துள்ளது.
1.
ஊன்றி நிற்கக்
கால்கள் என்ற தலைப்பில்,
’நம்மிடத்திலே
நாம் நிம்மதியைக் காண முடியாவிட்டால், வேறு இடத்தில் அதைக் காண முயற்சிப்பது வீண் கவலையாகும்’
என்ற பிரெஞ்சு வாசகத்துடன்
இந்த அத்தியாயம் தொடங்கியுள்ளது.
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு பிரச்சனை. அதனால் ஏற்படும் அமைதியின்மை, அதிலிருந்து விடுபட்டு மனஅமைதி பெறக் கடற்கரைக்குச் செல்கிறார்கள்; களியாட்டங்களுக்குச்
செல்கிறார்கள்; பொழுதுபோக்கை
நாடி எங்கெங்கோ போகிறார்கள்.
அவர்கள் எங்கு போனாலும் அவர்களுடைய பிரச்சனை அவர்களை நிழல் போலத் தொடர்கிறது. எதிலிருந்து
தப்பிக்க முயலுகிறார்களோ அது அவர்களோடு எப்போதும் ஒட்டிக் கொள்கிறது. என்ன காரணம்?
பிரச்சனைகளை எப்படிச் சமாளிப்பது என்று எண்ணுவதை விடச் சமாளிக்க வேண்டுமே என்ற
கவலையே இவர்களுடைய மனதை நிரப்பிக் கொண்டுவிடுவதால், பிரச்சனைகளிலிருந்து விடுபடும் முயற்சியில் அவர்கள் ஈடுபடும்போது
அவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் விரட்டிக்
கொண்டே போகின்றன.
பிரச்சனைகளை – பிரச்சனைகளாக ஏற்று, அவைகளைச் சந்திக்க நாம் தயக்கம் காட்டுகிறபோது நமது தோளின்மீது
வலுவாக அமர்ந்து நம்மை ஆட்டிப் படைக்க முயற்சிக்கின்றன. அதுவே நிம்மதி கெடவும் காரணமாகி விடுகிறது. அவற்றைப் பற்றிய
சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுச் செயலில் ஈடுபடத் தொடங்குபவனே நிம்மதியை
நோக்கி முதலடி எடுத்து வைக்கிறான்.
சிந்தனைக்குப் பிறகு செயல்தான் தொடர வேண்டுமே தவிர, பிரச்சனைகள் குழப்பங்களாக உருவெடுத்து மன நிம்மதியைக் கெடுக்க
அவமதிப்பதில் அர்த்தமில்லை. வாழ்க்கையில் சந்தித்துத் தீரவேண்டிய பெரிய பிரச்சனைகள் எத்தனையோ
இருக்கும்போது, சிறிய பிரச்சனைகளை
நாமாக உருவாக்கிக் கொண்டு மனநிம்மதி இழப்பது அறிவுடைமை ஆகாது. இந்த அத்தியாயத்தின்
தலைப்பில் குறிப்பிட்டப் பிரெஞ்சு வாசகமும் இதைத்தான் சொல்லுகிறது.
நிம்மதியை வெளியில் சென்று தேடினாலும் மனம் குழப்பமின்றித் தெளிவாக இருந்தால்தான்
விரும்பிய நிம்மதி கிடைக்கும்.
2.
நம்பிக்கையே
ஆரம்பம் என்ற தலைப்பில்
”நடைமுறை வாழ்க்கையில்
ஒவ்வொரு பெரிய காரியமும் நம்பிக்கையில் ஆரம்பித்துத்தான் முதல் அடியை எடுத்து வைக்கிறது. –
என்ற ஷிலிகல் என்பவரின் வாசகத்துடன்
தொடங்குகிறது.
மனிதன்
எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் நம்பிக்கையோடு தொடங்க வேண்டும். தமிழ்நாட்டில்
ஒரு நல்ல பழக்கம் உண்டு. ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போது அபசகுனம் பிடித்ததுபோல நடக்காது
என்றும், சொல்லக்கூடாது
என்றும் சொல்லுவார்கள். எதிர்மறைச் சிந்தனை கூடாது என்பதுதான் தமிழர்களின் நோக்கமாகும். நடக்கும், வாழும், வளரும் என்று
ஆசிர்வதிப்பதுதான் தமிழர் மரபு.
இதனால்
ஒரு காரியத்தைத் தொடங்கும்போது பெரியோர்கள் பலர் கூடி, அதை வாழ்த்துவது ஒரு சம்பிரதாயமாக நம்முடைய நாட்டில் இருந்து
வருகிறது.
திருமணத்தின்
போதும் வேறு மங்கல நிகழ்ச்சிகளின் போதும் பலருக்கும் அழைப்பு அனுப்பி, அவர்களை வந்து
வாழ்த்தச் சொல்லுகிறோம். எதற்காக? அந்த வாழ்த்துக்கள் ஊக்கத்தைக் கொடுக்கின்றன. உற்சாகத்தை
ஊட்டுகின்றன. இந்த ஊக்கமும்
உற்சாகமும் ஆக்கபூர்வமான சிந்தனைக்கும் செயலுக்கும் நம்மைத் தூண்டுகிறது. தன்னம்பிக்கை
பிறக்க இந்த வாழ்த்துக்களே நல்ல ஆதாரமாக அமைகின்றன.
நம்பிக்கையோடு
தொடங்கப்படுகின்ற வாழ்க்கை காரிய சாதனைகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கிறது.
இந்தப்
பேருண்மையை பகவத்கீதை வெகு அழகாக எடுத்துக் காட்டுகிறது.
‘நீ உன் கடமையைச் செய், பலனைப் பற்றிக் கவலைப்படாதே’ என்று கீதை உபதேசிக்கிறது. மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், பலனைப் பற்றிக் கவலைப்படாமல் ஒருவன் எவ்வாறு காரியம் ஆற்ற
முடியும் என்கிற கேள்வி எழும்.
பலன்
கிடைக்குமா, கிடைக்காதா
என்கின்ற சந்தேகத்துடன் செயல்களில் ஈடுபட்டால் செயல்திறன் குறைந்து போகிறது.
ஆகவே
ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கும் போது அதற்குரிய பலனைப்பற்றி எந்தவிதமான சந்தேகத்துக்கும்
இடம் கொடுக்காமல் செயல்படுமாறு கீதை உபதேசிக்கிறது.
பயங்கரமான
அணுகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகிப் படுநாசம் அடைந்த ஹிரோஷிமா, நாகசாஹி போன்ற
நகரங்களை ஜப்பானிய மக்கள் நம்பிக்கையின் துணை கொண்டு மீண்டும் உருவாக்கி இருப்பது நமக்கெல்லாம்
ஒரு பாடம்.
சர்வநாசம்
அடைந்த நகரங்களையே நம்பிக்கை புதுப்பித்து விடுமானால், நம்பிக்கையின் மூலம், இழந்த மனநிம்மதியை ஒருவன் திரும்பப் பெற்றுத் தன்னுடைய வாழ்க்கையை
உருவாக்கிக் கொள்வதும் சாத்தியமே.
3.
மலை குலைந்தாலும்
எனும் தலைப்பில்,
‘ஞானம் பெற்ற எந்த மனிதனும் பதட்டம் அடையும் நிலையில் இருப்பதில்லை. மனஅமைதி நிலையே
ஞானம் என்று அழைக்கப்படுகிறது. –என்ற லாவேட்டர் என்பவரின் வாசகத்துடன் தொடங்குகிறது.
பிணி, மூப்பு, மரணம் ஆகிய
துயரங்கள் மனிதனுக்கு ஏன் ஏற்பட வேண்டும் என்று மனம் குழம்பிய மன்னன் சித்தார்த்தன்
துறவியாகி, போதிமரத்தடியில்
அமர்ந்து ஞானம் பெற்ற போது மனஅமைதி பெற்று ஊருக்குப் புதிய மார்க்கம் வழங்கினார் என்பது
வரலாறு.
ஞான
மொழிகளைச் சொன்ன நமது முனிவர்களும் கானகத்துக்குச் சென்று தனிமையில் அமர்ந்து தியானம்
செய்து வாழ்க்கைக்குப் பேருண்மைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார்கள் என்று நமது பண்டைய
நூல்களில் காண முடிகிறது.
இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகிறது. வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ள மனஅமைதி இன்றியமையாதது. அதுபோல வாழ்க்கையைப்
புரிந்து கொள்ளும்போது மன அமைதி தானாகவே வந்துவிடுகிறது.
வாழ்க்கையில் எத்தகைய பேரதிர்ச்சி ஏற்பட்டாலும் மனம் குலையாத நிலையில் மனிதன்
இருப்பானேயானால் அவனால் எந்தத் துன்பத்தையும் சமாளித்து வெற்றி கண்டுவிட முடியும் என்று
மலை குலைந்தாலும் மனம் குலையாதே என்கிற வாக்கியம் தெள்ளத் தெளிவாத உணர்த்துகிறது.
இந்திய அரசியலில் அரிய பெரிய சாதனைகளைச் செய்தவர் மூதறிஞர் ராஜரஜி. அவருக்கெதிராக
அரசியலில் பெரும் புயல் வீசிய போதெல்லாம் தனி ஒருவராக நின்று சமாளித்தவர்.
இவருடைய சொந்த வாழ்க்கையில் பெரிய சோகமான நிகழ்ச்சி அவருக்கு ஏற்பட்டது. ஹிந்து நிறுவனத்தில்
வேலை பார்த்து வந்த அவருடைய மகன் திடீரென்று காலமானார். இதைவிட அதிர்ச்சி தரத்தக்க செய்தி ஒரு பெற்றோருக்கு இருக்க
முடியாது. இருந்தும் அந்தச்
செய்தியைக் கேள்விப்பட்டவுடன் ராஜராஜி மனக்கலக்கம் அடையாமல் கீதையின் சுலோகங்களைப்
படித்து ஆறுதலடைந்தார் என்று சொல்லப்படுகின்றது.
மேற்சொன்ன செய்தி நெருக்கடி வந்தபோது மனஅமைதியுடன் அதை எதிர்நோக்கி, நிதானம் இழக்காமல்
இருந்தால்தான் அவர்களுக்கு முன்னே இருந்த பணிகளையும் கடமைகளையும் வெற்றிகரமாகத் தொடர
முடிந்தது.
”வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊரெய்தி
உள்ளப் படும்”
இந்தக் குறளில் வள்ளுவர்
மனவலிமையால் எவன் ஒருவன் சிறப்புப் பெற்று செயலாற்றும் சக்தி படைத்தவனாக இருக்கின்றானோ
அவனே நாட்டை ஆளுகின்ற தகுதி படைத்தவனாகவும் இருக்கின்றான் என்று தெள்ளத் தெளிவாக விளக்கிக்
காட்டியிருக்கிறார்.
எனவே, நெருக்கடிகளின்போது
நெஞ்சம் கலங்காத மனவலிமை வேண்டும். ஒருமுறை இந்த நிலையை ஒருவன் பெற்றுவிட்டால் பின்னர் வாழ்க்கையில்
எந்தக் கஷ்டமும் சாதாரணமானதாக ஆகிவிடும்.
மனவலிமை பெற்றவர்களே மனநிம்மதியையும் பெற்றவர்களாக இருக்கிறார்கள். எந்தக் கஷ்டத்தையும்
எதிர்நோக்கிச் சமாளித்துவிடலாம் என்கிற தன்னம்பிக்கை ஒவ்வொரிடமும் இருப்பது அவசியம்.
4.
மனம் குரங்கு
என்ற தலைப்பில்
‘பொறுமையே மிகப்
பெரிய சோதனையாகும்’ –
என்ற புத்தபெருமகனாரின் என்ற வாசகத்துடன் தொடங்குகிறது.
மனத்தின்
குணம் அலை பாய்வது, மனத்தை ஒருமுகப்படுத்துவதில் மனிதன் எந்த அளவுக்கு வெற்றி பெறுகின்றானோ, அந்த அளவுக்கு
அவன் எண்ணங்களைச் செயல்படுத்தும் ஆற்றல் படைத்தவனாகப் பரிணமிக்கறான்.
மனதை
ஒருமுகப்படுத்துவது என்றால் என்ன?
மனம்
ஒரு நிலைப்பட வேண்டுமானால் ஐம்புல உணர்ச்சிகளும் தற்காலிகமாகவாவது ஒதுக்கி வைக்கப்படுவது
அவசியம். எனவேதான் திருவள்ளுவரும்
‘பொறி வாயில்
ஐந்து அவித்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார். மனம் வெளியில்
எட்டிப் பார்க்கின்ற ஐந்து வழிகளை ஒருவன் அடைத்து விடுகின்ற வல்லமையைப் பெற்றிருந்தால், மனம் உயர்ந்த
ஒன்றை நாடுகின்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றது. அந்த நிலையே இறைநிலை, தெய்வ நிலை என்று அழைக்கப்படுகிறது.
மன அமைதி – இல்லற நிலை, துறவற நிலை
இரண்டில் எதை மேற்கொண்டாலும் தேவையானது தான்.
அமெரிக்க
எழுத்தாளரான நார்மன் வின்சென்ட் பீல் என்பவர் இது குறித்துப் பலவித நூல்களை எழுதியிருக்கிறார்.
அந்த
நூல்களில் திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார். அவர் கற்பனையில்
நூல்கள் எழுதுகிறவர் அல்லர். அனுபவபூர்வமான பல உண்மைகளை அவர் வெளியிட்டிருக்கிறார்.
செல்வச்
செழிப்பில் மிதந்தும் நிம்மதியின்றித் தவிக்கின்ற சமுதாயத்தில் அமெரிக்கச் சமுதாயம்
குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றது. இதிலிருந்து ஒரு பெரிய உண்மை தெளிவாகிறது.
பணம்
மட்டும் நிம்மதியைக் கொடுத்துவிடுவதில்லை. நிம்மதியைக் கொடுக்கக் கூடிய சக்தி மனம் ஒன்றுக்கு மட்டும்தான்
உண்டு.
நார்மன்
வின்சென்ட் பீல் இதை மிகத் தெளிவாகவே விளக்கிக் கூறியுள்ளார். அமெரிக்கச்
சமுதாயத்திலே மனநிம்மதியை இழந்தவர்களும் தன்னம்பிக்கை குறைந்து போனவர்களும் வாழ்க்கை
போராட்டத்தை எதிர்நோக்கத் துணிவில்லாதவர்களும் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண
மன மருந்துவ நிபுணர்களை நாடிச் செல்லுவது வழக்கமாக உள்ளது. அவர்களாலும் இவர்களின் பிரச்சனைகளுக்குச் சரியான தீர்வு காண
முடிவதில்லை.
வின்சென்ட்
பீலும் அவரது நண்பர்களும் மன மருத்துவத்தோடு தெய்வ நம்பிக்கையையும் வளர்க்கும் அமைப்புகளையும்
உருவாக்கி, மன பாதிப்புக்கு
உள்ளானவர்களுக்கு சிகிக்கை அளித்து, பெரு வெற்றி கண்டுள்ளார்கள்.
இதன்
காரணமாகவே தமிழர்களின் வாழ்ககையின் ஆலயம் உன்னதமான இடத்தைப் பெற்று, சமூகத்தின்
நடவடிக்கைகளின் மையப் பகுதியாக ஆலயம் போற்றிச் சிறப்பிக்கபட்டது
மனதைப்
புனிதமாக்கும் திருத்தலங்களாக ஆலயங்களை இந்துக்கள் கருதும் காரணமும் அதுதான்.
5.
ஆலயங்களும்
மருத்துவமனைகளே
‘நல்ல ஆலயங்கள்
உங்களைப் புனிதமாக்குகின்றன’ –
என்று சுவாமி விவேகானந்தரின் வாசகத்துடன் தொடங்குகிறது.
கோயில்
இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. ஒரு கட்டளை போலவே இந்த வாக்கியம் அமைந்துள்ளது. இவ்வளவு அழுத்தமாக
இப்படி ஒரு எச்சரிக்கையினை நம்முடைய முன்னோர்கள் விடுத்ததற்கு ஏதாவது காரணம் இருக்குமல்லவர?
ஓர்
ஊரின் மைய ஸ்தானம் ஆகவும் முக்கிய இடமாகவும் ஆலயத்தை நம்முடைய முன்னோர்கள் கருதினார்கள். இதற்குக் காரணம்
உண்டு. வாழ்க்கைப்
போராட்டத்தில் அல்லல்பட்டுத் தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் இடமாக ஆலயம் கருதப்படுகிறது.
வாழ்க்கையின்
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாத மக்கள் ஆலயத்துக்குச் சென்று ஆண்டவனைத் தரிசிக்கும்போது
மன அமைதி பெறுகிறார்கள். பிரச்சனைகளை எதிர்நோக்கிச் சமாளிக்கும் மனவலிமை அவர்களுக்கு
ஏற்படுகிறது. வேறெங்கும்
தேடிப் பெற முடியாத நிம்மதியை ஆலயங்களில் அவர்களைப் பெறுகிறார்கள்.
மேலை
நாடுகளில் மன மருத்துவ நிலையங்கள் செய்கின்ற வேலையை, வழிவழியாக இந்து ஆலயங்கள் இங்கு செய்து வருகின்றன.
இதற்கெல்லாம்
காரணம் நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை மனத்தின் ஆழத்திலிருந்து தோன்றுவது, இந்த ஆழமான
நம்பிக்கையினை தெய்வபக்தி ஒன்றினால்தான் கொடுக்க முடியும். இந்த பக்தியை அளிக்கக்கூடிய இடங்கள் ஆலயங்கள்.
ஆகவே
தான் ‘கோயில் இல்லா
ஊரில் குடி இருக்க வேண்டாம்’ என்ற கட்டளையினை நம்முடைய முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள்.
6.
தியானம் ஒரு
வழி
‘ஸ்தூலமான பொருள்களை
வைத்து தியானம் ஆரம்பமாகிறது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உன்னத நிலையை அடைந்து எதையும் நினைவு
கூறாத நிலையை அடைகிறது’ –
என்று சுவாமி விவேகானந்தரின் வாசகத்துடன் தொடங்குகிறது.
மனதை
ஒருநிலைப்படுத்துவதை தியானம் என்று சொல்லுகிறோம். மனதை ஏன் ஒருநிலைப்படுத்த வேண்டும். வாழ்க்கை பூராவும்
பேசிக் கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றிலும் நிகழும் பல நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுப்
பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கு ஆளாகிறோம்.
தெளிவு
உள்ளவன் எதையும் தீர்க்கமாகச் சிந்திக்கின்றவனாக இருக்கிறான். நிதானம் கொண்டவனால்
காரியங்களில் உறுதியாகச் செயல்பட முடிகின்றது.
வாழ்க்கையை
நம்பிக்கையோடு அவன் எதிர்நோக்கத் தொடங்குகிறான். ஒவ்வொரு நாள் தியானம் செய்யும்போதும் முதல் நாள் அவன் மனதில்
குழப்பமாகக் குவியத் தொடங்கிய எண்ணங்கள் தாமாகவே ஓர் ஒழுங்குக்கு வந்து, திட்டங்களாக
அவை உருப்பெற்றுவிடுகின்றன.
திட்டங்கள்
வரையறுக்கப்பட்டு விட்ட பிறகு செயல்படுவது சுலபமாகிவிடுகிறது. பின்னர் வாழ்க்கை
உற்சாகம் மிகுந்ததாக ஆகிவிடுகிறது.
வாழ்க்கையில்
உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ள தியானத்தில் ஈடுபடுங்கள், தியானத்தில் ஈடுபடுவோரை மனநோய் அண்டுவதில்லை. மன மருத்துவர்களும்
மன விடுதிகளும் அவர்களுக்குத் தேவையில்லை.
இதையே
கீதை அழுத்தமாக உபதேசிக்கிறது. ஞான வாழ்க்கையின் திறவுகோலாக தியானத்தைத்தான் கீதை குறிப்பிட்டுச்
சொல்லுகிறது.
7.
மனம் திருந்துதல்
ஒரு மார்க்கம்
‘தவறுகளுக்காக வருந்தியபின் தெளிவான வாழ்க்கை காத்திருக்கிறது’ – என்று ஷேக்ஸ்பியரின்
வாசகத்துடன் தொடங்குகிறது.
வாழ்க்கையில்
ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறான். ஒவ்வொரு மனிதனும்
தான் செய்யும் தவறுகளை அறிந்தேதான் செய்கிறான். வாழ்க்கை நிர்ப்பந்தங்களாலும் வேறுபல சூழ்நிலைகளாலும் மனிதன்
பல தவறுகளைச் செய்துவிடுகிறானே தவிர, அவன் செய்த தவறுகளை அவனுடைய மனசாட்சி அவனுக்கு எப்பொழுதும்
சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறது.
இப்படி
ஒவ்வொரு முறை தவறுகளை மனசாட்சி சுட்டிக் காட்டும்போதும் குற்ற உணர்வு அவனை அறியாமலே
அவனுடைய உள்ளத்தை ஆட்கொண்டு விடுகிறது.
குற்றம்
செய்தவன் எத்தகைய கடுமையான மனப்போராட்டங்களுக்கு உள்ளாகிறான் என்கிற விஷயத்தை ரஷிய
ஞானி டால்ஸ்டாய தன்னுடைய பல நாவல்களில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். குறிப்பாகக்
குற்றமும் தண்டனையும் என்கிற நாவலில் குற்றம் செய்தவனின் மனப்போராட்டத்தை மிக அருமையாகச்
சித்தரித்துக் காட்டியிருக்கிறார்.
ஆக, குற்றம் செய்த
எவனுக்கும் மனநிம்மதி இருக்க வழியில்லை. ஒவ்வொருவனும் வாழ்க்கையில் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ குற்றங்கள்
செய்து கொண்டே தான் இருக்கின்றான். இந்தக் குற்றங்கள் கூடுதலாகும்போது மனநிம்மதியும் பெரிய அளவில்
பாதிக்கப்படுகின்றது. சிறிய குற்றம் செய்கின்றவன் மிகுதியான உணர்ச்சிகளுக்கு ஆட்படுகிறவனாக
இருப்பின் அதிகமான அளவில் பாதிப்புக்கு உள்ளாகிறான்.
செய்த
பாவத்துக்கு வருந்தி, மன்னிப்புப் பெற்று, மன நிம்மதியை அடைகிறவன் மீண்டும் பெரிய மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத்
தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறான்.
பிராயச்சித்தம்
என்கிற ஒன்று மட்டும் இல்லாமல் போகுமானால் எத்தனையோ மனிதனுடைய வாழ்க்கை நிம்மதியின்மை
என்கிற பாறையின்மீது மோதி சுக்குநூறாக நொறுங்கிப் போயிருக்கும். செய்த தவறுகளை
உணர்ந்து மனம் திருந்துவது மன நிம்மதி பெறுவதற்கான ஒரு சிறந்த வழியாகும். இதைப் புரிந்து
கொண்டால் தவறுகளால் மனநிம்மதி இழக்க வேண்டிய அவசியம் இருக்காது.
8.
தூங்குவதும்
ஒரு வழி! என்ற தலைப்பில்,
‘தூக்கமே, புகலிடம் அற்றோருக்கு நீ ஒரு புகலிடம். தோழமை இல்லாதோருக்கு
நீ ஒரு தோழன்’ – என்று ஸினேசர் எலியட் என்பவரின் வாசகத்துடன் தொடங்குகிறது.
ஒருவன்
எவ்வளவு நேரம் தூங்குகின்றான் என்பது முக்கியமில்லை. தூங்குகின்றபோது எவ்வளவு ஆழ்ந்து நித்திரை கொள்ளுகிறான் என்பதுதான்
முக்கியம்.
தூக்கம்
கெட்டுப்போனால் தன்னுடைய சிந்தனைகளின் மீது தனக்குள்ள கட்டுப்பாட்டையும் மனிதன் இழந்து
விடுகிறான் என்பதாகும். ஆகவே, நமது எண்ணங்களின் மீது நாம் ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால்
தூக்கம் நமக்கு இன்றியமையாதத் தேவையாகிவிடுகின்றது. இதனால் கவலைகளால் தூக்கமிழந்து தவிப்போருக்கு இரவு படுக்கச்
செல்லுமுன் தூக்க மாத்திரை சாப்பிடும்படி டாக்டர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.
டாக்டர்களின்
ஆலோசனையின் பேரில் தூக்க மாத்திரை சாப்பிடுவது தவறில்லை. அவர்களின் ஆலோசனையைப் பெறாமல் தன்னிச்சையாக அதை உட்கொள்ளுவது
தீமையில் போய் முடியும்.
மனநிம்மதிக்குத்
தூக்கம் ஒரு சிறந்த மார்க்கம். வாழ்க்கை அனுபவமும் வைத்தியப் போதனையும் அதைத்தான் சொல்லுகின்றன.
9.
விரக்தியை விரட்டுங்கள்
என்ற தலைப்பில்,
‘வாழ்க்கையின்
பளப்பளப்புகள் மறைந்துவிட்டது என்று எண்ணுகிறபோது கோழை மரணத்தைத் தேடிக் கொள்கிறான். துணிவுள்ளவன்
தொடர்ந்து வாழ்ந்து பிரச்சனைகளைச் சமாளிக்கிறான். –
மார்ஷல் என்பவரின் வாசகத்துடன் தொடங்குகிறது.
கிழக்கிந்தியக்
கம்பெனியின் ஆதிக்கத்தை இந்தியாவில் நிலைநாட்டுவதற்குக் காரணமாக இருந்த ராபர்ட் கிளைவ்
பற்றி ஒரு சம்பவத்தைச் சொல்லுவார்கள்.
வாழ்க்கையில்
வெற்றி பெற முடியாமல் விரக்தி அடைந்த கிளைவ் இரண்டு முறைக்கு மேல் தற்கொலை முயற்சியில்
ஈடுபட்டாராம். ஒவ்வொரு முறையும்
ஏதோ காரணத்தினால் அவரது தற்கொலை முயற்சி தோற்றுப் போயிற்று.
அதன்பின்
கிழக்கிந்தியக் கம்பெனியில் குமாஸ்தாவாக வேலைக்கு அமர்ந்த அவர், பிரிட்டிஷ்
சாம்ராஜ்யம் இந்தியாவில் வேரூன்றக் காரணமாக இருக்கும் அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்து
வரலாற்றிலும் இடம்பெற்றார்.
கிளைவின்
தற்கொலை முயற்சி வெற்றி பெற்றிருந்தால் வரலாற்றுத் திருப்பத்துக்குக் காரண புருஷராக
விளங்கிடும் வாய்ப்பை அவர் இழந்திருப்பார். வரலாற்றுச் சிறப்புப் பெறவேண்டிய வாழ்க்கை ஆரம்பத்திலேயே
துண்டிக்கப்பட்டிருக்கும்.
எனவே, இறைவன் அளித்த
வாழ்க்கையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொருவரும் முயலுதல் வேண்டும். ஒவ்வொருவருடைய
எதிர்காலத்திலும் என்ன காத்திருக்கிறது என்பதை எவரும் முன்கூட்டியே கணித்துச் சொல்லிவிட
முடியாது.
மனநிம்மதியுடன்
வாழக் கற்றுக்கொண்டால் வாழ்க்கைப் பாதையில் நம்பிக்கையுடன் நடைபோட முடியும். அவ்வாறு பயணத்தை நடத்தும்போது எத்தனையோ அரிய வாய்ப்புக்களைச்
சந்திக்கவும் முடியும். அந்த வாய்ப்புக்களைச் செம்மையாகப் பயன்படுத்தும்போது புதிய
பல வெற்றிகள் நம்மை நாடி வரும்.
10.
பொழுதுபோக்கு
தேவை
‘பொழுதுபோக்கு
என்பது சோம்பேறித்தனமாக இருப்பதல்ல. களைப்பைப் போக்கிக் கொள்ள மாற்று வேலையில் ஈடுபடுவதாகும்’ –
என்ற சி. சிம்மன்ஸ் என்பவரின் வாசகத்துடன் தொடங்குகிறது.
கடுமையான
உழைப்புக்கு மத்தியில், களைப்பைப் போக்கிக் கொள்ளக் கட்டாயமாக ஒவ்வொருவரும் கையாள
வேண்டிய பொழுது போக்காகும்.
கடுமையான
உழைப்பால் உடல் களைத்துப் போவதைப் போலவே, ஒரே பணியை திரும்பத் திரும்பச் செய்வதால் மனமும் சோர்வுக்கு
ஆளாகிவிடுகிறது. இந்த மனச்சோர்வு
மனஅமைதி குலைவதற்கு சுலபத்தில் வழிகோலி விடுகிறது.
மேலைநாடுகளில்
Holiday என்று பொழுது போக்கிற்காக ஒதுக்கிய நாளைக் குறிப்பிடுகிறார்கள். வாரத்தில் ஆறுநாட்கள்
கடுமையாக உழைத்த பிறகு ஏழாவது நாளை போழுதுபோக்கிற்காகச் செலவிடுகிறார்கள். இப்படிச் செய்வதன்
மூலம் ஆறு நாட்களில் கடுமையான உழைப்பதற்கான உடல் வலிமையினையும் மன உற்சாகத்தினையும்
பெற்று விடுகிறார்கள்.
மேல்நாட்டினர்
தாங்கள் செய்யும் பணிகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம்
கொடுக்கிறார்களோ அதற்கு சற்றும் குறையாத வகையில் பொழுதுபோக்கிற்கும் கொடுக்கிறார்கள்.
வேறு
சிலர் சில பொழுது போக்குகளையும் வைத்திருப்பார்கள். அவைகளில் ஆங்கிலத்தில் Hobby என்று சொல்லுவார்கள்.
புத்தகம்
படித்தல், தோட்ட வேலை
செய்தல், மீன் பிடித்தல், இசைப்பயிற்சி
செய்தல், ஸ்டாம்பு சேகரித்தல், புகைப்படம்
எடுத்தல், ஓவியம் வரைதல்
என்று ஒவ்வொருவரும் தங்கள் திறமைக்கு ஏற்ற விதத்திலும் மனதிருப்தி அளிக்கும் வகையிலும்
ஒரு பொழுது போக்குப் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.
இவையெல்லாம்
வாழ்க்கையின் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டுக் கவனத்தை வேறு திசையில் திருப்பி மனதை
ஏதோ ஒன்றில் ஈடுபடச் செய்ய மனிதன் கண்டுபிடித்துள்ள உபாயங்களாகும்.
தேசப்பிதா
காந்திஜி கைராட்டையில் நூல் நூற்பதை ஒரு கடமையாக எண்ணி அதில் கவனத்தைச் செலுத்தினார்.
பண்டித
ஜவஹர்லால் நேரு தன்னுடைய நெருக்கடியான நிர்வாக அலுவல்களுக்கு இடையே கவிதைகள் படிப்பதற்கென்று
நேரத்தை ஒதுக்கி வைத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் தங்களுடைய கடுமையான உழைப்புக்கு இடையேயும்
நேரத்தை ஒதுக்கிப் பொழுது போக்கை நாடியது எதனால்?
பொழுதுபோக்கின்
அருமை அவர்களுக்குத் தெரியும். பொழுது போக்கிற்கென்று அவர்கள் ஒதுக்கிய நேரத்தில்தான் தங்களுடைய
அன்றாடப் பணிகளைத் தொடர்வதற்கான உற்சாகத்தை அவர்களால் பெற முடிந்தது.
மனநிம்மதி
பெற விரும்புகிறவர்கள் பொழுது போக்கை ஒரு கலையாக பயிலுதல் அவசியம். வாழ்க்கை நடவடிக்கைகளை
உற்சாகத்துடன் மேற்கொள்ள அது அவர்களுக்குப் பெரும் துணையாக இருக்கும்.
நிறைவாக,
இந்நூலில் உள்ள அனைத்துத் தகவல்களும் வாழ்க்கை நடைமுறை உண்மைகளையும், வாழ்ந்து காட்டிச்
சென்றுள்ள பெரியோர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களையும் மேற்கோள்களாக அமைத்துள்ளார்
நூலாசிரியர். ஒவ்வொரு அத்தியாயத்தின்
தலைப்பிலும் அதன் தொடர்பான ஒருவரின் பொன்மொழியைப் பதிவிட்டுள்ளார். அதை ஊன்றிப்
படித்துச் சிந்தித்தப்பின் அத்தியாயத்தில் சொல்லப்படுகின்ற செய்தியைப் படித்தால் நிச்சயம்
அது படிப்போரிடையே மனமாற்றத்தைத் தோற்றுவிக்கும் வகையில் இருக்கும். இந்நூல் படிக்க
வேண்டிய புத்தகமாகவும், பாதுகாக்க வேண்டிய புத்தகமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை
எனக்கு உண்டு. மாணவர்கள், தமிழ்ச் சான்றோர்கள்
அனைவரும் பயன்பெறும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது என்றும் நம்புகின்றேன்.
‘இன்று நீ படிக்கும் புத்தகம் தான்
நாளை நீ உட்காரும் நாற்காலியை தீர்மானிக்கும்’
Comments
Post a Comment