சதுரங்கக் காய்கள் (கவிதைத் தொகுப்பு)
பாவலர் வையவன்
நாம் புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் சதுரங்கக் காய்கள் என்ற தலைப்பில் பாவலர் வையவன் அவர்கள்
எழுதிய புத்தகத்தைப் பார்ப்போம். இப்புத்தகத்தை ஜுலை 2015 -ஆம் ஆண்டு திருவண்ணாமலை - சுபம்
பிரிண்டர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 160, விலை 125 ரூபாய்.
பாவலர் வையவன் அவர்கள் தமிழக
எழுத்தாளர்களுள் ஒருவர். மேடைகளில் அரிமா வென முழங்கும் ஆற்றல் மிக்க பேச்சாளர்.
அவரது படைப்புக்களில் நாடு, மொழி, மக்கள், தன்மானம், கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாவல்கள்,
சிறுகதைகள், கவிதைத் தொகுப்புகள், ஆங்கில நூல்கள், கட்டுரை நூல்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டப் படைப்புக்களைப்
படைத்தவர். சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும், மொழிப்
பெயர்ப்பாளராகவும் விளங்கியவர். தனது மகள் பெயரில் அமைந்த ‘தாரணி
பதிப்பகம்’ மூலம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை
வெளியிட்டு வருகிறார். படைப்பிலக்கியத்திற்காகப் பல்வேறு விருதுகளைப்
பெற்றுள்ளார்.
சதுரங்கக்
காய்கள்
எனும் தலைப்பில் அமைந்த இந்நூல் பாவலர் வையவன் அவர்களின் நான்காவது
படைப்பாகும். ஏற்கனவே இவர் ‘என் மனைவியின் கவிதை, ஞானத்திலிருந்து, மனசு
சுற்றிய மாவளி’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
சதுரங்கக்
காய்கள்
என்னும் கவிதைத் தொகுப்பு இந்நூலிற்கு சிந்தனையாளன் ‘மாத இதழ்’ பேரறிஞர் வே. ஆனைமுத்து
அவர்களும், திருவண்ணாமலை ‘நம் தினமதி’ ‘நாளேடு’ வழக்கறிஞர் ப.நடராசன்
அவர்களும் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
கவிதை
எழுதவும், கதை புனையவும்
முதலில் வேண்டப்படுவது மானுட விடுதலை பற்றிய அக்கறை, இரண்டாவதாக வேண்டப்படுவது கற்பனை வளம், மூன்றாவதாக
வேண்டப்படுவது தட்டுப்படுவதைத் தடுமாறாமல் உரைப்பதும் எழுதுவதும். இம்மூன்று தன்மைகளையும்
நிரம்பவே பெற்றுள்ளார் என் இனிய தோழர் வையவன். என்று வே. ஆனைமுத்து அவர்கள் தம் வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்நூலில்
அஃறிணைகளுக்குக் கடவுள் இல்லை, முற்றங்கள், வாசிப்பு, சதுரங்கக் காய்கள், வகுப்பறை உண்டியல்கள். பச்சைத் தமிழன், எதிரெழுத்து, திருஷ்டி
பொம்மைகள், மண்ணும் மொழியும், நடுகல்,
மின் கம்பங்கள், முத்தொழில், கோவில் யானை, முகமூடிகள், எழுத்தின்
வலி, வளர்ச்சி, வீடுபேறு என்று 38 தலைப்புகளில் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளைத் தமது கவிதைகளில் படைத்துள்ளார்
ஆசிரியர்.
அஃறிணைகளுக்குக்
கடவுள் இல்லை! எனும் தலைப்பில்,
பறவை, விலங்குகளுள் கடவுள் விலங்கோ கடவுள் பறவையோ எதுவும்
இல்லை! எந்த பறவையோ விலங்கோ
எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. எந்த மனிதரையும் வணங்குவதில்லை.
ஆதியோடு இயைந்தது அஃறிணைகளின் வாழ்க்கை. வீட்டு
விலங்கென்றும் வீட்டுத் தோட்டமென்றும் இயற்கை எதையும் உயர்திணைக்கென உருவாக்கவில்லை!
அஃறிணையும் உயர்திணையும் சேர்ந்து வாழ்வதென்பது இயற்கைக்கு எதிரான
‘ஆண்டான் – அடிமை ஏற்பாடு. எந்த விலங்கோ பறவையோ இன்னொரு விலங்கினை இன்னொரு பறவையை வணங்குவதும் இல்லை வாழ்த்துவதும்
இல்லை. பக்கத்திலுள்ள பெரிய மரங்களின் பொற்பாத கமலங்களைப் போற்றி
வணங்குவதில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் கவிதையை அமைத்துள்ளார். மேலும்,
”அமாவாசை, கிருத்திகை
பிரதோஷம்,
பிறந்த நாள்
கும்பாபிஷேகம்
என
எந்தச்
சடங்குகளும்
அறவே
இல்லை
ஆனால்
…
நாள்கள்,
கோள்கள் குறித்தும்
பருவநிலை
மாற்றங்கள் குறித்தும்
அஃறிணைகள்
அறிந்து
வைத்துள்ள அளவிற்கு
உயர்திணைகள்
அறிந்து
வைத்துள்ளோமா என்பது
அய்யமே!
ஆயினும்
…
அஃறிணைகளுக்குக்
கடவுள் இல்லை!
அடுத்து முற்றங்கள் எனும் கவிதையில்,
முற்றம் என்பது பாரம்பரிய வீடுகளின் நடுவில்
இருக்கும் திறந்தவெளியாகும். வீட்டின் நடுப்பகுதிக்கு மேலே மேற்கூறை இல்லாமல், சூரிய ஒளி மற்றும் மழை நேரடியாக உள்ளே விழும் வகையில் இது சதுரமாகவோ
அல்லது செவ்வகமாகவோ அமைக்கப்படுகிறது. இதற்கு 'நடு
முற்றம்' அல்லது 'தொட்டி முற்றம்'
என்றும் பெயர். இது வீட்டின் மையத்தில் இருப்பதால், நல்ல காற்றை உள்ளே இழுத்து வெளியேற்ற உதவுகிறது. பகல் முழுவதும்
வீட்டிற்குள் இயற்கையான வெளிச்சத்தைத் தருகிறது. கடுமையான கோடையில் வீட்டை
குளிர்ச்சியாகவும், மழையில் இதமாகவும் வைத்திருக்க
உதவுகிறது. குடும்பத்தினர் அனைவரும் கூடிப் பேசுவதற்கும், குழந்தைகளுடன்
விளையாடுவதற்கும் இது ஒரு சிறந்த இடமாகப் பயன்படுகிறது. இத்தகைய
கருத்துக்களை வெளிப்படும் வகையில் இக்கவிதையை அமைத்துள்ளார் நூலாசிரியர்.
வீட்டுக்கு
எழுதிய
முன்னுரையாய்
விளங்குகின்றன
கோலங்கள்
கோலமிடுவது
பெண்களுக்கு
அளிக்கப்பட்ட
தண்டனையல்ல;
இல்லறத்தின் மாண்பை
எடுத்துச் சொல்லக்
கோலேச்சும் இல்லாளுக்குக்
கொடுக்கப்பட்ட பொறுப்பு!
அகத்தின் அழகு
முகத்தில் தெரிவதுபோல…
அகத்தின் அழகு
முற்றத்திலும் தெரியும்.
அடுத்து வாசிப்பு எனும் கவிதையில்,
வாசிப்பு என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அறிவை வளர்ப்பது, சிந்தனைத் திறனை
மேம்படுத்துவது, மொழித் திறனை வளர்ப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு
உதவுவது போன்ற வாசிப்பின் முக்கியத்துவத்தை நாம் கூறிக்கொண்டே செல்லலாம். வாசிப்புப்
பழக்கத்தை இளம் வயதிலிருந்தே ஊக்குவிப்பதன் மூலம், ஒரு அறிவார்ந்த மற்றும் முன்னேறிய சமூகத்தை உருவாக்க முடியும். வாசிப்பு என்பது
ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் சக்தி வாய்ந்தது.
”ஏடு தொட்டுப் படிக்கையிலே
சித்தர்களைப் போல நாமும்
கூடுவிட்டுக் கூடுபாயலாம்
நாடுவிட்டு நாடுபாயலாம்!
திரி எரிய எரிய
அறியாமை மெழுகு உருகி
அறிவொளி ஆழ நிறையும்
ஆறாவது அறிவெனும்
அடிப்படைத் தகுதியை
வாசிப்புத்தானே
வழங்குகிறது மனிதர்க்கு
கடவுச் சீட்டின்றிக்
காசுச் செலவின்றி
உலகெலாம் சுற்றிவர
வாய்ப்பளிக்கிறது வாசிப்பு!
வாழ்வதன் அடையாளம்
சுவாசிப்பதல்ல…
வாசிப்பது!
அடுத்தக் கவிதையாக, சதுரங்கக் காய்கள்
என்ற தலைப்பில்,
விருப்பப்பட்ட சதுரத்திற்குள் தானாக நகர்ந்து கொள்வதில்லை சதுரங்க ஆட்டக் காய்கள், அடுத்து நகர்வு
குறித்து பக்கத்துக் காய்களோடும் அவை பகிர்ந்து கொள்வதில்லை. எத்தனை முறை
வெட்டி வெளியில் வீசினாலும் சலிப்பின்றி மீண்டும் களம்புகும் களத்தில் தன்பலம் காட்டும்
வாய்ப்பின்றி அடுக்கிய கட்டத்திலேயே ஆயுள் முடிவதுண்டு சில காய்களுக்கு! ஆடுபவர்கள்
குறித்தும் அடிக்கடி அவர்கள் மாறுவது குறித்தும் காய்களுக்கொன்றும் கவலையில்லை! கறுப்பு – வெள்ளை எனும்
நிற பேதமிருந்தாலும் அதிகார சமத்துவத்தில் அங்கொன்றும் குறைவில்லை என்ற வகையில் இந்த
ஆட்டம் செல்லும். அந்த வகையில் சதுரங்கக் காய்கள் என்னும் தலைப்பில் அமைந்த
கவிதையில்,
”முப்படைகளின் வேலையும்
எப்படியாவது ...
அரசனைக் காப்பாற்றுவதே!
எடுப்பார் கைப்பிள்ளையாகவே
இருந்து பழகியவை
சதுரங்கக் காய்கள்
மக்களைக்
காப்பாற்றுவது குறித்த
அக்கறையோ கவலையோ
அரசனைக் காப்பாற்றும்
இந்த ஆட்டத்தில்
அறவே இல்லை!
வழக்கம்போல் காய்கள்
அடுத்தடுத்த
ஆட்டத்திற்கு மட்டும்
அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன
வாக்குச் சாவடியில்
‘வாக்காளர்கள் போல!
கவிதைகயாக, வகுப்பறை உண்டியல்கள் எனும் தலைப்பில்,
ஆசிரியர் கற்பிக்கும் முறையில் கல்வி கரும்பாக இருந்தால், வகுப்பறைகூட இனிப்பறையாக மாறும்! அதற்கு, ஆசிரியர் என்ன செய்ய வேண்டும்? நூலுக்கு முன்னுரைபோல, வகுப்புத் தொடங்கும்போதே நாட்டு நிகழ்வுகளை உலக நடப்புகளுடன் இணைத்துப் பாடத்தைப் பயிற்றுவிக்க முயல வேண்டும். நடத்தப் போகும் பாடப் பகுதி குறித்த தயாரிப்பும் வேண்டும். விதைக்கப் போகும் செய்தி பற்றிய தொடர்பும் அதற்கான முன்னேற்பாடும் தெளிவாய்த் தெரிந்திருக்கவும் வேண்டும்! மாணவர்களின் உள்ளத்தை உணர்ந்து, அதைப் பக்குவப்படுத்திவிட்டால், எந்த நேரத்தில், எந்தப் பாடத்தை நடத்தினாலும் உள்வாங்கிக் கொள்வார்கள். அதனை அறிந்து கற்பிக்க வேண்டும். “ஆசிரியப் பணியை ஊதியம் தரும் ஒரு தொழிலாக மட்டும் கருதிவிடக் கூடாது. அது ஒரு சமூகப் பணி, எதிர்காலச் சந்ததியினரைச் சிறந்த முறையில் உருவாக்கி, உயர்ந்த சமூகத்தைக் கட்டமைக்கச் செய்யும் உன்னதமான சேவை. அது ஓர் இலட்சியத் தொண்டு”- என்று கூறியுள்ளார் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன்! . அந்த வகையில் வகுப்பறை உண்டியல் என்ற இக்கவிதையும்,
”மாணவர்கள்
எவ்வளவு போட்டாலும்
நிரப்பிக் கொள்ளும்
அகன்ற வயிறு
அவர்களுடையது.
அறிவு நாணயங்களை
அளவின்றி நிரப்பிக் கொள்ளவே
செவி ஓட்டைகள் இரண்டோடு
செய்யப்பட்டவர்கள் இவர்கள்
காதுகளால் உள்வாங்கிக்
கைவழியே வெளியேற்றும்
அபூர்வ உண்டியல்களாய்
அவர்கள் விளங்குகிறார்கள்!
எதிர்காலச் சேமிப்புக்கு ஏற்ற
மிகச்சிறந்த உண்டியல்கள்
இவர்களைத் தவிர
பிறிது எவையுமில்லை!
வருங்காலத் தேவைக்கு
வாய்ப்பாகச் சேமிக்கும்
பாதுகாப்பாகப் பெட்டகங்களாய்ப்
பள்ளிஅறைகள் விளங்குகின்றன.
என்று தம் கவிதையை முடிக்கிறார் ஆசிரியர்.
பச்சைத் தமிழன் எனும் தலைப்பில் அமைந்த கவிதையில்,
‘கல்வி நல்காக் கசடர்க்குத் தூக்குமரம்’ என்று பாடினான் பாட்டு நெருப்புப் பாவேந்தன். ‘ஒருமைக்கண் தாம் கற்ற கல்வி எனும் வள்ளுவனின் கூற்றுக்குக் கிணங்க எண்ணும் எழுத்தும் அறியா ஏழை மக்களுக்கு அதை உண்ணும் உணவோடு சேர்த்துக் கொடுத்ததால்தான், கண்ணெனத் தகும் கல்வியைப் பெற்ற ஏழைகள் காலண்டரில் தொங்கும் சரசுவதியை விடக் காமராசரையே பெரிதாய் வணங்கினர். கோட்டையில் இருந்து ஆண்டாலும் குடிசைகளின் மீதே அவரின் கவனம் இருந்ததால் ஏழைப் பங்காளர் என்றே அவரை அழைத்தனர்.
கல்வியைப் போலவே அணைகள் போட்டு முடக்கப்பட்டிருந்த வேளாண்மையை அணைகள் கட்டிக் காத்ததுடன் தொய்ந்து படுத்திருந்த தொழில்துறையைப் பேட்டைகள் உருவாக்கிப் பெருக்கிய பெருமை கருப்புக் காந்தி காமராசருக்கு உண்டு. இந்திய பிரதமர்களையே தீர்மானிக்கும் திறன் தன்வசம் இருந்ததால்தான் அவர் இந்தியாவின் பெருந்தலைவர் என்றும் தமிழகத்தின் அருந்தலைவர் என்றும் அழைக்கப்படுகிறார்.
எதிரெழுத்து
என்ற கவிதையில்,
“புத்தகங்கள் கைத்துப்பாக்கிகளை விட வலிமையான ஆயுதம்” என்கிறார் லெனின். அந்த ஆயுதத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே நம்மை நாமே வலிமையாக்கிக் கொள்ள முடியும். அப்படி வலிமைப் படுத்திக் கொள்கிறோமா? என்றால் அதற்கான பதில் அத்தனை வலிமையாய் இல்லை என்பதே நிஜம்.
தனி மனிதனை, ஒட்டு மொத்த சமூகத்தை அப்படியே மாற்றியமைக்கும் சக்தி புத்தகங்களுக்கு உண்டு. இந்த உண்மையை உணர்ந்து இருந்ததால் காந்தியடிகள் ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் ஒரு நூலகம் கட்டுவேன் என்றார். வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றை வாசித்த லிங்கன் அமெரிக்காவின் அதிபரானார். ரூஸோவின் நூல்கள் பிரெஞ்சுப் புரட்சிக்கு வழிவகுத்தது. வாசிப்பு எனும் இக்கவிதையில்,
படைப்பாளியும் படைப்பாளனும்
ஒரே கோட்டில் சந்திக்கப்
‘படைப்பு’ எப்போதும் ஒரு
பாலமாய் அமைய வேண்டும்” என்று கூறுகிறார்.
மண்ணும் மொழியும் என்னும் கவிதையில்,
மண்ணும் மொழியும் மனிதனின்
இரு கண்கள் போன்றது. நாம் வாழும் பூமி (மண்) நமக்கு உணவையும், இருப்பிடத்தையும் தருகிறது. நம் தாய்மொழி நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
இரண்டையும் பேணிக் காப்பது நமது தலையாய கடமையாகும். இது இனமானத்தின்
அடிமுழக்கம் என்று இக்கவிதை உணர்த்துகிறது. மேலும்,
”இன்று
செல்லரித்த ஓலையாகிவிட்டது
சோழ பாண்டிய மண்
சேரலர்கள் பரவாயில்லை
கேரளர்கள் ஆகிய
முல்லைப் பெரியாற்றையும்
முடக்குகிறார்கள்!
ஈழத்துக்கு எதிராய்த்
தூது போகிறார்கள்!
உன் நாடு
தமிழ் நாடா? ஆங்கிலமா? இந்தியாவா?
இதற்கான விடையில்தான்
அடங்கியிருக்கிறது
”மானமும் அறிவும்”
நடுகல் எனும் கவிதையில்,
கால்நடைகள் வறட்டுப் புல்லை மேய்ந்துவிட்டுக் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தொலைநோக்கிப்
பார்க்கின்றன. முன்பெல்லாம்
அசைந்து அசைந்து கரையொதுங்கிய அலைகள் மிகுந்த ஏரிகள் இருந்த இடங்களில் இப்போது கானல்நீரைக்
கூடக் காணமுடியவில்லை! ஏரி குளங்குட்டைகளை
நிரப்பிய நீர்வரத்து ஓடைகளெல்லாம் காய்ந்து கைரேகைகள் போலாயின! என்றும்,
”மாண்டவர்களுக்கு
‘நடுகல்’ வைப்பது என்பது
நமது
பழக்கங்களுள் ஒன்று
மாண்டுபோன
ஏராளமான
வயல்களின்
அடையாளமாய்
இன்று
மனைப்பிரிவுகள் எனும் பெயரில்
‘நடுகற்கள்’
முத்தொழில் எனும் கவிதையில்,
நாலு சுவற்றுக்குள்
அடைப்பட்டுக் கிணற்றுத் தவளைகளாய் இருட்டில் கிடக்கும் பெரு தெய்வங்களைவிட நட்ட நடுவெளியில்
நிற்கும் நாட்டார் தெய்வங்கள் எவ்வளவோ தேவலாம். என்ன செய்ய?
கருவறைகளுக்குள்ளும் கறுவிக் கொண்டுதானிருக்கிறது. கடவுள்களின் கல்நெஞ்சம்.
”சாமிகள் எதுவும்
கைநீட்டித் தின்றதாய்
சரித்திரமில்லை என்றாலும்
நடந்து கொண்டுதானிருக்கிறது
பகவான்களுக்குப்
படைத்தல்”
கடவுளின் பெயரால்
சேர்த்துவைத்துள்ள
காசுபண
நகைநட்டுகளுக்காகத்தான்
இரும்புக் கதவுகள்
பூட்டுகள் எனக்
கனகச்சிதமாய் நடக்கிறது
‘காத்தல்’
சொல்லவே தேவையில்லை
மதங்களின் பெயரால்
நாடெங்கிலும் நடக்கிறது
அமோகமாய்
‘அழித்தல்’
ஆக..
ஒப்புக் கொள்ளலாம்
படைத்தல், காத்தல், அழித்தல்
என்னும் முத்தொழிலும்
சாட்சாத் சாமிகளின்
சோலியென்று”
கோவில் யானை எனும் கவிதையில்,
யானைக்கும் தமிழர்க்கும் பொருத்தங்கள் பல உண்டு. சொல்லிக் கொள்ளக்கூடிய வரலாற்றுப் பெருமிதங்கள் இருவருக்கும் ஏராளம்.
ஆதி உலகுக்குப் பாதை வகுத்ததில் இவர்களின் கால்களே முன்னோடிகள்!
இருவருமே அடுத்தவர்களை ஆசிர்வதிப்பதில் அலாதி சுகம் காண்பவர்கள்.
சங்க காலம் முதல் இந்தக் காலம் வரை அடுத்தவர் உயரவே அயராது உழைப்பவர்கள்.
போர்க்களமாயினும் நெற்களமாயினும் ஒருவருக்கொருவர் சளைத்தரல்லர்.
இருவர்க்கும் கரும்பும் வாழையும் பிடிப்பது போலவே மதமும் பிடிக்கும்
கோவிலும் பிடிக்கும். ஆண்டவர்கள் பவனிவரும் தேருக்கும் தேர்தலுக்கும்
முன்வரிசையில் இவர்களே கம்பீரமாய் நடப்பார்கள். மீண்டும் காலுக்கு
விலங்கிட்டுக் கம்பத்தில் கட்டப்பட்டு அடுத்த தேர்தல் வரை அடங்கியும் கிடப்பார்கள்.
இருவருமே நெற்றியில் நாமம் சாத்திக்கொண்டு இந்திய சர்க்கஸ் கூண்டில்
இன்பமாய் இருப்பவர்கள். என்றும் இருவருக்கும் உள்ள ஒற்றுமையைக்
குறிப்பிடுகிறார்.
முகமூடிகள்
சுற்றிலும்
முகமூடிகள்!
பார்த்துப் பார்த்து முகம் சுளிக்கிறது. அரசியல்
முகமூடி, ஆன்மீக முகமூடி, இலக்கிய முகமூடி,
இசங்களின் முகமூடி இன்னும் எத்தனையோ முகமூடிகள். வீதிகளில் கடைகளில் என்று அனைத்து இடங்களிலும் எங்கு நோக்கினாலும் முகமூடிகள். ஒருவர் முகத்தை ஒருவர் அடையாளம் காண முடியாததால் முட்டி மோதிக்கொண்டு முனகிப்
போகிறார்கள். பார்வையற்றோர்களிடம் மட்டுமே பளிச்சென்ற முகத்தை
காணமுடிகிறது. அடுத்தது காட்டும் பளிங்கு போல் அனைவரின் முகமும்
இருந்தது அந்தக்காலத்தில். இன்று நடிப்பது காட்டும் முகங்களே
நாலா பக்கமும் தெரிகின்றன.
·
வேலைக்குச்
சேரும்போது இருந்த முகம் வேலையில் சேர்ந்த பின் இல்லை!
·
கடன் கேட்கும்
போது இருந்த முகம் திருப்பிக் கொடுக்கும் போது இல்லை!
·
பெண் பார்க்கும்போது
இருந்த முகங்கள் திருமணத்திற்குப் பின் இருதரப்பிலும் இல்லை.
·
முகமூடிகளைக்
கழற்றிக் கழற்றி மாட்டியே தொன்மை முகங்கள் தொலைந்து போயிருக்கின்றன.
எழுத்தின் வலி எனும் கவிதையில்,
எழுத்து என்பது வெறும்
வார்த்தைகள் அல்ல.
அது சிந்தனையின் வெளிப்பாடு. நீங்கள் எழுதும் விதம் மற்றும்
எழுத்துக்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் உணர்வுப்பூர்வமான ஒருவரின் மனநிலையை
மாற்றும் சக்தி கொண்டது. மௌனமான உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுப்பதே எழுத்து.
கோபம், அன்பு, துக்கம், மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கருவியாகும்.
எழுத்தின் வலி எனும் கவிதையில்
”மொழிவது முற்போக்காய்
இருந்தால் போதும்
மொழி எக்கேடு
கெட்டாலும்
பரவாயில்லை
பெருமைக்காக
ஆங்கிலம் கலந்து
பேசும்
தமிழ் இலக்கிய
முற்போக்குகள்
சில
மொழி குறித்து
இங்ஙனம்
வழியெல்லாம்
மொழிகின்றன!
மொழியின் வளர்ச்சியினைக் குறித்து எழுத்துப் புலம்புவதாக்க்
குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
வீடுபேறு
வீடு என்பது வெறும்
செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடம் அல்ல; அது அன்பு, பாதுகாப்பு, மற்றும் நிம்மதி நிறைந்த ஒரு அழகான
உணர்வு. நம் மனதிற்குப் பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடும்
போது, அந்த இடம் நமக்கு முழுமையான பாதுகாப்பைத் தருகிறது.
”இருந்தோம்பி
இல்வாழ்வதில்
துலங்குகிறது
வீட்டின் பெருமை
வீட்டை வைத்தே
விளங்கிக் கொள்ள
முடிகிறது
ஒருவரது
உழைப்பின் உயரத்தை
கூடிவாழும்
குடும்பங்களின் முகவரியாய்
வீடுகளே விளங்குகின்றன”
கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் என்பவை பயமுறுத்த ஏற்பட்ட பழமொழிகள் அல்ல. பயனுள்ள வாழ்க்கையை வாழச் சொல்லும் கட்டளை. உணர்ச்சிகளின்
ஊற்றும் தலைமுறைகளின் நாற்றும் வீடுகளின்றி வேறெங்குச் செழிக்க முடியும். வீடுபேறு அடைவது என்பது வேறொன்றுமில்லை. நல்ல வீடு அமைவதுதான்
என்று இக்காலத்தில் உணர்த்தும் விதமாக இக்கவிதை அமைந்துள்ளது.
நிறைவாக,
பாவலர் வையவன் அவர்கள் தமிழ்க்கவிதை
உலகிற்குப் புதியவர் அல்ல. ‘சிந்தனையாளன்’ என்ற மாத இதழில் தொடர்ந்து எழுதிவரும் பாடல்களின் வழி பலரின் நெஞ்சில் இடம்
பிடித்தவர். இவர் பாவலர் மட்டுமன்றி சிறந்த படைப்பிலக்கியவாதி.
தன்மானப் பகுத்தறிவு கொண்டவர். சாயாத் தமிழுணர்வும்,
இயற்கையை நுனித்துப் பாடும் அழகுணர்வும் இவரின் எழுத்துகளுக்கு உண்டு.
மெல்லிய எள்ளல் சுவையும் அதில் கலந்திருக்கும். இந்நூலின் முடிவாக சமுதாயத்திற்குத் தேவையான கருத்துப் புதையலை பதிவு செய்துள்ளார்.
அனைவருக்கும் பயனுள்ள நூலாக அமையும் என்பதில் எவ்வித மாறுபாடும் இல்லை.
‘ஒரு நூலகம் திறக்கப்படும் போது
ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும்’
-விவேகானந்தர்
Comments
Post a Comment