சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வாக...
சேலம், மகிழம் தமிழ்ச் சங்கம் மற்றும் டுடே பன்னாட்டு
ஆய்விதழ் இணைந்து உலக தாய்மொழி தினம் - 2026 ஐ முன்னிட்டு
சேலம், செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா (29.03.2026)
இன்று நடந்தது. இவ் விழாவில் என்னுடைய நாட்டுப்புற
இலக்கியங்களில் பண்பாட்டுக் கலைகள் எனும் புத்தகமும், மக்கள் தகவல் தொடர்பு சாதனங்களில் தமிழ் எனும்
ஆய்வுக் கட்டுரையும் வெளியானது.
மகிழம் தமிழ்ச்
சங்கத்தின் தலைவர் முனைவர் கற்பகராமன் அவர்கள் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவ்விழாவினை மிகவும் சிறப்பாக
நடத்தினார்கள். நாங்கள் விழா முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் 7 மணிக்கு அனைத்துப் புகைப்படங்களையும்
எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
புத்தக வெளியீட்டு நிகழ்வு
புத்தக வெளியீட்டு
விழாவிற்கு இன்று காலை திருச்சியிலிருந்து காலை 8 மணிக்கு நானும் என் தம்பியும் கிளம்பினோம்.
சௌடேஸ்வரி மகளிர் கல்லூரிக்கு காலை 10.30 மணிக்குச் சென்றோம். முப்பெரும் விழா என்பதால்
அனைவரும் வருவதற்கு சற்று தாமதம் ஆனது. எனவே 11.30 மணி அளவில் தொடங்கியது.
முதலில் தமிழ்த்
தாய் வாழ்த்துடன் துவங்கி, சிறப்பு அழைப்பாளர்கள் உரை முடிந்தவுடன் முதலில் பன்னாட்டுக்
கருத்தரங்க நிகழ்வு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பின் சான்றோர்களுக்கு விருதுகள்
வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அடுத்த நிகழ்வாக புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதியம் 1.30 மணிக்கு நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. நாங்கள் மதியம் நல்ல
சூடான உணவு கொடுத்தார்கள். சாப்பிட்டு விட்டு வந்தோம். இன்றைய நிகழ்வு மிகவும் அருமையாகவும்,
மனநிறைவாகவும் அமைந்தது.
குணசீலம் ( பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்)
குணசீலம்
பெருமாள் கோயில் 5000 ஆண்டுகள் பழமையானது. இது அனைத்து விதமான
நோய்களையும் குணப்படுத்தவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை
மறுவாழ்வு பெறச் செய்யவும் உதவுகிறது. இங்குள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள்,
பக்தர்களைத் தீய சக்திகளிடமிருந்து காப்பதாகவும், அவர்களின் உள்ளத்திலும் மனத்திலும் நேர்மறை ஆற்றலை ஊட்டுவதாகவும்
நம்பப்படுகிறது.
சேலத்திலிருந்து வரும்போது
4.30 மணிக்கு குணசீலத்திற்கு வந்தோம். கோவில் அப்பொழுதான் திறந்தார்கள். அனுமதி கட்டணம்
மிகவும் குறைவு. நான் இன்றுதான் முதலில் அந்த கோயிலுக்குச் சென்றேன். மிகவும் பழமையான
கோவில். வேலை நடந்து கொண்டிருந்தது. சாமியைப் பார்த்துவிட்டு வந்தோம்.
நிறைவாக,
இன்றைய நாள்
(29.03.2026) மிகவும் மகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்தது. நான் இதுவரை என்னுடைய நூல்களை
பதிப்பகத்தில் கொடுத்து வெளியிடுவேன். ஆனால் நூல் வெளியீட்டு நிகழ்வாக எதிலும் பங்குபெற்றதில்லை.
சமீபத்தில் வெளியிட்ட 5 நூல்களையும் திருவையாறு ஔவை அறக்கட்டளையிலும், சேலம் மகிழம்
சங்கத்திலும் வெளியிட்டு வருகிறேன். இது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. புதிய அறிமுகமும்,
இன்னும் அதிகமாக எழுதவேண்டும் என்ற ஆர்வமும் எழுகிறது. மனநிறைவாகவும் உள்ளது.


.jpg)

Comments
Post a Comment