வாழ்க்கையே
ஒரு வழிபாடு – வெ. இறையன்பு
(புத்தக மதிப்புரை)
புத்தக மதிப்புரை சிறப்பு நிகழ்ச்சியில் வெ.இறையன்பு அவர்கள்
எழுதிய ‘வாழ்க்கையே ஒரு வழிபாடு’ என்ற புத்தகத்தைப்
பார்ப்போம்.
இந்நூல் ஆறாம்
பதிப்பாக
2011 -ஆம் ஆண்டு, விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள்
196, விலை 100 ரூபாய்.
வெ. இறையன்பு அவர்கள்
பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றார். பேச்சாளராகப்
பரிணமித்தார். பரிசாகக் கிடைத்த
நூல்கள் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தன. கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘பூபாளத்திற்கொரு
புல்லாங்குழல்’ என்ற தலைப்பில்
கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.
அமுதசுரபி, ஆனந்தவிகடன், இதயம் பேசுகிறது, தாமரை, கணையாழி, புதிய பார்வை, தமிழன் எக்ஸ்பிரஸ் என்று பல இதழ்களில் கதை, கவிதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். முதல் நாவல் ‘ஆத்தங்கரை ஓரம்‘ ஜெயகாந்தனின் அணிந்துரையுடன் வெளியானது. நர்மதா அணை
கட்டப்படுவதற்காக கரையோரத்தில் வசித்த மக்கள் விரட்டப்பட்டதை அடிப்படையாக கொண்டது இந்நாவல்.
இறையன்புவின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'அரிதாரம்'. ஐ.ஏ.எஸ். பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதத்தில் எழுதிய 'ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்' நூல் மிகுந்த
வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல சிறுகதைகளையும், நாவல்களையும்,
சுய முன்னேற்றக் கட்டுரைகளையும், வாழ்வியல்
விளக்க நூல்களையும் எழுதியுள்ளார். மேலும் இவரது கட்டுரை,
நாவல், சிறுகதைத் தொகுப்புகளை ஆய்வு செய்து பல
மாணவர்கள் எம்.பில், பிஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார்கள்.
வாழ்க்கையே ஒரு வழிபாடு என்ற இந்நூல் ஆன்மீகத்தை ஊறுகாயாக இல்லாமல் உணவாக கொள்ளும்
வகையில் எம்மதமும் சாராமல் அனைத்து மார்க்கங்களின் சாரத்தையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு தருணத்தையும் எப்படி இறைமைத்
தன்மையுடன் எதிர்கொள்வது என்பதுதான் இந்நூலின் சாரம்.
மிக உயர்ந்த எண்ணங்களைப் படிப்பவர் மனதில் விதைப்பதும், உன்னதமான மனிதர்களைப் பற்றிய நுண்ணிய விவரங்களைத் தெரிவிப்பதும்,
விழிப்புணர்வை அதிகப்படுத்த உந்துதலாய் இருப்பதும், உலகின் மகிழ்ச்சியின் அடர்த்தியை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துவதுமே என் எழுத்துக்களின்
நோக்கம் அதற்கான பெருங்கடலில் சின்னப் படகாய் இந்நூல் அமைக்கப்பட்டது என்று தம் முன்னுரையில்
நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் இந்நூலில் நூலாசிரியர் கருப்பையும்
கர்ப்பக்கிரகமே, மழலைகள் – இறைமையின் துளிகள், விதைகள் – விழுதுகள்
– கவிதைகள், உணவிலும் தெய்வீகம், சாதமே பிரசாதமாய்…, வீடும் வீடுபேறும், மௌன அர்ச்சனை, உடல் பாதையா? உபாதையா?,
கல்வியும் கடவுட் தன்மையும், செல்வமும் வளமையும்,
இல்லறமே அறமே!, சாந்தமே சந்நிதி, கலைகளும் ஆன்மீகமும், நேர்மை, என்று 20 க்கும் மேற்பட்டத் தலைப்புக்களில்
கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
1. கருப்பையும் கர்ப்பக்கிரகமே
ஒவ்வொரு மனிதனிடமும் புத்தனும் உண்டு. எத்தனும் உண்டு. விருப்பமானவரை வெளிக்
கொணர்கின்றனர். வேண்டியதையே தேர்ந்தெடுக்கின்றனர்.
ஆன்மீகம் என்பது, தன்னை எல்லோரிடமும் காண்பது.
வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் முழுமையாய் நுகர்வது.
உறக்கத்திலே விழிப்புணர்வு. கோபத்திலும் பொறுமை, தருவதிலும் பணிவு,
பெறுவதிலும் கம்பீரம் என்று வாழக் கற்றுக் கொள்வது.
விஞ்ஞானம் என்பது வெளியே தேடுவது. வெளியே தேடுபவற்றை ஒருவர் கண்டுபிடித்துவிட்டால், உலகம் முழுமைக்கும் பயன் உண்டு. மெய்ஞ்ஞானம் என்பது,
உள்ளே தேடுவது, ஒவ்வொருவரும் தேடவேண்டியது.
ஒவ்வொரு மனிதனும் நான்கு முறை பிறக்கிறான்.
கருவாகும் போது முதல் பிறப்பு.
முதல் பிறப்பில் குழந்தை எதுவும் தேட வேண்டியதில்லை. குழந்தை கருவானவுடன் பிரசவமாகும்
வரை எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை. குழந்தைக்கும் சேர்த்து
தாயே உண்ணுகிறாள். மருந்து உட் கொள்கிறாள். கருவறையைக் காட்டிலும் பாதுகாப்பான இடம் எதுவுமில்லை.
இரண்டாவது பிறப்பு என்பது வெளியே தேடத் தொடங்குவதன்
ஆரம்பம்.
குழந்தை பிறந்ததும் காற்றையும் உணவையும் வெளியிலிருந்து
தேட வேண்டியிருக்கிறது. தேட வேண்டிய சங்கடம் உணர்ந்தே,
பிறந்தக் குழந்தை அழ ஆரம்பிக்கிறது. ‘பாதுகாப்பின்மை
ஏற்பட ஆரம்பித்துவிட்டதே’ என்ற எண்ணமே அதன் பயத்துக்குக்
காரணம். முதலில் அழுதால் போதும். அதைக்
கவனிக்கப் பலர். அழுகை மட்டுமே அதன் தேடல். போகப் போகப் போட்டியிடவும் தனக்கான காற்றை வாயுமண்டலத்தில் நிறப் பிரிகை செய்யவும்
கற்றுத் தேர்வதே குழந்தை வளர்ப்பு.
கூட்டுப்புழுவாக அவர்கள் இருப்பது மூன்றாம் பிறப்பு.
உண்மையான வயது அப்போதுதான் கணக்கிடப்படுகிறது.
மூன்றாம் பிறப்பில் வேறொரு நாமகரணம் கட்டாயம்
உண்டு. அது முற்றிலும் புதிய பிறவியாக
நான் உருவெடுத்திருக்கிறேன் என்று உணர்ந்து பழைய வாழ்வை பாம்பு தோலுரிப்பதைப் போலக்
கழற்றி விடுவதற்காக.
மூன்றாம் பிறப்பில் தான் சித்தார்த்தன் புத்தராவதற்குப்
பயணப்பட்டார். வர்த்தமானர் மகாவீரர் ஆனார்.
ஞான சம்பந்தருக்குப் பால பருவத்திலேயே அது நிகழ்ந்தது. அப்பருக்கு முதுமையில் முகிழ்த்தது.
தன்னைத்தானே பிரசவிப்பதே நான்காம் பிறப்பு. கூட்டுப்புழு அப்போதுதான் வண்ணத்துப்பூச்சியாக
வரமுடிகிறது.
விழிப்புணர்வு என்பது மட்டுமே உணர்தலை நிகழ்த்தும்
ரசவாதம். புலன்களை அடக்குவது ஆறாவது அறிவு.
புலன்களைக் கடப்பது ஏழாவது அறிவு ஞானம்.
விழிப்புணர்புடையோர் இறைமையை வெவ்வேறு விதமாகத்
தேடுகிறார்கள்.
·
இலக்கியம் மூலம் தேடியவர்கள் பாரதி, தாகூர்.
·
ஓவியம் மூலம் தேடியவர்கள் பிகாஸோ, ரவிவர்மா.
·
சிற்பம் மூலம் தேடியவர்கள், காலத்தின் கரங்களில் காவியமாகப் படித்தனர். பயிர்கள் மூலம் தேடியவர் ஃப்யூகோகா.
·
உயிர்களின் மூலம் தேடியவர் தெரஸா.
உணர்வதைச் சொற்களால் சொல்ல முடியாது உணர்த்தவே முடியும். மற்றவர்களையும் உணரத் தூண்டுவதன் மூலம்.
2. மழலைகள் – இறைமையின் துளிகள் என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில்,
ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்துக்கு ஒரு தகவலாக
வருகிறது. அது தவமாக இருக்கிறது.
·
கன்னலாக ஆவதும் இன்னலாக இருப்பதும் நம் கவனிப்பில்.
·
வரமாக மலர்வதும் சாபமாக உதிர்வதும் நம் வளர்ப்பில்.
·
அனலாக ஆவதும் புனலாகப் பொங்குவதும் நம் அரவணைப்பில்.
விழிப்புணர்வுடன் வாழ்க்கையை அணுகும் பயிற்சியை
நாம் சரியான நேரத்தில் கற்றுத் தந்தால், தன் ஆற்றலை முழுமையாக எட்டிப் பிடிக்க
முடியும்.
‘முதற்குழந்தை பிறக்கும் போது ஒரு தாயும் பிரசவமாகிறாள்’-. என்றார் ஓஷோ. குழந்தையைப் பெற்றவர்கள் எல்லோரும் பெற்றோர்கள்
ஆகிவிட முடியாது. அவர்களுக்குச் சரியான இலக்கை நிர்ணயிக்க சகாயம்
செய்பவர்களே உண்மையான பெற்றோர்.
ஒரு மன்னனுக்கு அழகான இளவரசன் வாரிசாக இருந்தான். அவனுடைய முதுகில் கூன் இருந்தது. தினமும்
சில அடிப்படை உடற்பயிற்சிகளைச் செய்தால் போதும் கூன் நிமிர்ந்து விடும் என அரண்மனை
மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அவர்கள் கூறியதில் இளவரசனுக்கு
நம்பிக்கை ஏற்படவில்லை.
விரக்தியின் விளிம்பில் இருந்ததால், நம்பிக்கையின் மையத்துள் அவன் நுழைய முடியவில்லை. மன்னர் தேர்ந்த சிற்பிகளைக் கொண்டு நிமிர்ந்த நிலையில், கூன் இல்லாத இளவரசனுடைய தோற்றத்தைக் கற்பனை செய்து சிற்பமாக வடிக்கச் செய்தார்.
அந்தச் சிற்பத்தை இளவரசனுடைய அறைக்குள் வைத்தனர். இளவரசனுக்கு
‘நாமா? இவ்வளவு அழகாக ஆக முடியுமா? என்று
வியப்பு ஏற்பட்டது.
தன்மையுமறியாமல் தினமும் உடற்பயிற்சிகளை விழிப்புணர்வுடன் செய்ய ஆரம்பித்தான். சிற்பமே அவன் இலக்கு. ஒரு நாள் அவன் காலையில்
எழுந்தபோது, தானும் அந்தச் சிற்பம் போல் ஆனதை உணர்ந்தான்.
தன்னிடம் இருக்கும் அழகுணர்வை
உணர வைப்பதே குழந்தைகளுக்குச் செய்யும் கட்டாயக் கடமை. குழந்தைகள் கள்ளமில்லாமல்
பூமிக்கு வருகின்றன. அவை பிறப்புக்கு முந்தைய அனுபவங்களையும்
சுமந்து கொண்டு வருகின்றன.
அது மலரைப் பார்த்து, நிலவைப் பார்த்து, காகத்தைப் பார்த்து, கடலைப் பார்த்து அதிசயப்படுகிறது. இயற்கையின் அழகை உற்று நோக்கியவர்கள்தான். அவற்றின் பின்னே இருப்பது யார் என்று அறிந்து கொள்வார்கள்.
நடக்கக் கற்றுக்கொள்வது
என்பது விழுந்து எழுவதும் தான்.
பேசுவது என்பது பிழையான
உச்சரிப்புகளும்தான்.
3. உணவிலும் தெய்வீகம் என்ற தலைப்பில்,
உணவு என்பது உடலை வளர்க்கும் உன்னதம் மட்டுமல்ல. உயிர்த்தன்மையை மேம்படுத்தும் சாதனமும்.
உண்ணுகிற உணவு மட்டுமல்ல. சாப்பிடுகிற விதத்திலும் சாரம் அடங்கியிருக்கிறது. உணவின் மீது மரியாதை இருப்பவர்கள் தான் உண்ணுகிறார்கள். பலர் கொட்டிக் கொள்கிறார்கள். சிலர் அள்ளிப் போடுகிறார்கள்.
சிலர் அடித்துத் தள்ளுகிறார்கள். இன்னும் சிலரோ
சாப்பாட்டுடன் சண்டை போடுகிறார்கள்.
பலர் நாம் என்ன சாப்பிட்டோம் என்பது கூட நினைவில்லாதவாறு
சாப்பிடுவார்கள்.
உண்ணும்போது விழிப்புணர்வு இல்லாவிட்டால், படிக்கும்போதும் இருக்காது. ஏனென்றால்,
விழிப்பு உணர்வு என்பது ஒட்டு மொத்தச் செயல்பாடு.
பலர், அன்பு கிடைக்காததால் அதிகம் உண்கிறார்கள்.
இன்னும் சிலரோ, அதிகம் பேசுகிறார்கள்.
புத்தர் தனக்கு உணவு கொண்டு வந்த பெண்ணிடம் ‘உணவு உண்ணும்போது மௌனமாக உண்ணவேண்டும். உணவை ரசித்து, ருசித்துச் சாப்பிட வேண்டும். பேசுவதைத் தவிர்க்க வேண்டும். உண்ணும்போது உணவே உலகமாக
வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்.
4. வீடும் வீடுபேறும்
வீடு என்பது நம்முடைய வாழ்க்கையின் வழிமுறைகளை மெருகேற்றும்
மேன்மையை உடையதாக இருக்கிறது. அது இன்னொரு கருவறையாக இருக்கிறது.
கருவறையைப் போன்றே வாழுகின்ற இடத்தை உருவாக்கும் முயற்சியில்தான் நாம்
வீட்டை உருவாக்குகிறோம். அது வெளியே இருக்கும் திடப்பொருளான வீட்டைக்
காட்டிலும் நமக்குள் இருக்கும் வீடு பற்றிய பிரமை வலுவானது. அதனால்தான்
நம் கனவுகளில் நாம் குழந்தைப் பிராயத்தில் வாழ்ந்த வீடே வருகிறது. வாய்த்த வீடே வருவித்த வீட்டிலும் வலிமையாக ஆழ்மனத்தில் இடம் பெற்றிருப்பதே
காரணம்.
நம்மிடம் இருக்கும் ‘வீடு’ அகலும் போதுதான் ‘வீடு (பேறு) கிடைக்கிறது.
மழையையும் காற்றையும் ரசிக்க முடிந்தவர்களுக்கு அவை இனிமையாக
இருக்கும். இம்சையாக இருக்காது.
அழகிய சுஃபி
கதையொன்று.
மலை உச்சியில்
வாழ்ந்து கொண்டிருக்கும் சுஃபி ஞானியைப் பார்க்க இளைஞன் ஒருவன் இரவு நேரம் பயணம் செய்தான்.
அவருடைய இருப்பிடம் சென்ற போது யாருமற்ற ஏகாந்தச் சூழலில், ஒரு குடிசை இருப்பதைப் பார்த்தான்.
குடிசைக்குள்
காலடி எடுத்து வைத்ததும் பேரொளியுடன் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது.
அங்கே போய் பார்த்தால் அந்தத் துறவியைக் காணவில்லை. அறையோரத்தில் அமைதியாக ஒரு சின்ன விளக்கின் வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தார்.
பெரிய விளக்கை
விட்டுவிட்டுச் சின்ன விளக்கில் படித்துக் கொண்டிருக்கிறாரே என்று வியந்து,
‘ஏன் இந்த விளக்கில் படிக்கிறீர்கள். அவ்வளவு வெளிச்சம்
இருக்கும் போது? என்றான். ”பெரிய விளக்கு
அந்துப் பூச்சிகளுக்காகவும், விட்டில் பூச்சிகளுக்காகவும்.
அவற்றின் தொந்தரவு இல்லாமல் படிப்பதற்காகவே சின்ன விளக்கு’
என்று பதில் வந்தது.
எவ்வளவு பெரிய
வீடாக இருந்தாலும், நமக்குத் தேவை சின்ன, அமைதியான ஒரு மூலை. அடுத்தவர்கள் மற்ற இடங்களில் என்ன
வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். நம்மைத் தொல்லை செய்யாமல்.
நாம் என்னதான் வீடு கட்டிக் குடியிருந்தாலும் நிரந்தரமாக இங்கேயே இருக்க
முடியாது. திரும்பியாக வேண்டும். ஏனென்றால்
‘புல்லாங்குழலின் ஓசை மூங்கில் காட்டுக்குத்தான் திரும்ப வேண்டும்’
என்ற உண்மை மெள்ள மெள்ளவே சிலருக்குப் புரிகிறது.
5. கலப்பையே வேதமாய்!
ஆன்மீகம் என்பது வறுமையால் விளைவது அல்ல. அது செழுமையால் செதுக்கப்படுவது.
‘உழுவதே உன்னத வழிபாடு என்றார் தன்னை நாத்திகர் என்று அழைத்துக் கொண்ட இங்கர்சால்.
‘வயலில் விதைப்பவனும், மலரை வளர்ப்பவனும், மரத்தை நடுபவனும் மானிடரில் மகத்தானவன்’ என்றார் விட்டியர். தன்னுடைய அறுவடைப்
பாடலில்,
”பொன்னைப் புதையுங்கள்; அது
பருவம் முடிந்தாலும்
அப்படியே இருக்கும்’
‘நெல்லை விதையுங்கள்; அது
பன்மடங்காகப் பெருகிப்
பலன் தரும்”
என்றார் எட்வர்ட் எவரெட்.
திருவள்ளுவர் ‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்று முன்மொழிந்தார்.
தெய்வீகப் பணியான உழவை உயர்த்தியதற்குக்
காரணம். அது பட்டினியைப் போக்குவதால் மட்டுமல்ல; உற்று நோக்கினால் உழவு கற்றுத் தருகிறது. ஒரு விதை எப்படி மரமாகும் என்பதையும், ஒரு தூய எண்ணம் நம்மை எப்படித் தூக்கிப் பிடிக்கும்
என்பதையும்.
விவசாயிக்குத் தெரியும்; அவர் உழைப்பது தனக்காக மட்டுமல்ல; எறும்புகளுக்காகவும், ஈக்களுக்காகவும், கன்றுகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும்.
விருந்தோம்பலின் உச்சமாக, விதை நெல்லைக் கழனியிலிருந்து சேகரித்து வந்து உணவு
சமைத்தவர் இளையான்குடி மாறனார். ‘பயிரிலும் முக்கியம் பண்பு; உயிரிலும் முக்கியம் விருந்து’ என்று தாளாண்மையை உணர்த்தும்
வேளாண்மையை மேற்கொண்டு பக்திப் பயிர் வளர்த்தவர்.
6. செல்வமும் வளமையும்
மானுடம் செழிக்க வேண்டும் என்றால் வறுமையை விநியோகிக்கக்
கூடாது. செல்வத்தைத் தான் பகிர்ந்து கொள்ள
முடியும்.
பண்டமாற்று முறை இருந்தபோது நடந்ததை விட, பணம் வந்தபோது பகிர்தல் அதிகமானது. எங்கோ
நிகழும் பூகம்பத்திற்கு உதவி செய்ய அரிசியை அனுப்புவதை விட பணத்தை அனுப்புவது எளிது.
மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு பணம் மட்டுமே. தங்கத்திற்கென்று மதிப்பு எதுவுமில்லை. அதைத் தருவித்தது மனித மனமே. தங்கத்தை விட இரும்பு அதிக
உபயோகம் வாய்ந்தது. பணமதிப்பு தங்கத்தின் மூலம் நிர்ணயிக்கப்படுவதால்
இன்று அதற்கு மகத்துவம்.
‘பணம் வேண்டாம்’ என மறுப்பதல்ல ஆன்மீகம். ‘பணமே வாழ்க்கை’ என்று தன்னையே சிதைத்துக் கொள்ளாமல் இருப்பதே
ஆன்மீகம். இருக்கும் செல்வத்தை இனிய வழிகளில் செலவழிப்பதும்,
நேர்மையான வழிகளில் ஈட்டுவதற்காகதான் மெய்ஞ்ஞானத்திற்கு எழுதப்படும்
முன்னுரை.
ஓஷோ குறிப்பிடுவது போல, பலருக்குப் பணம் அவர்கள் முட்டாளாக நீடிக்கத் தேவைப்படுகிறது.
பணம் நம்முடைய அறியாமையை மூடி மறைக்க உதவுகிறது. பணத்திற்கொரு குணமுண்டு. அதைச் சேர்க்க ஆரம்பிப்பவர்கள்
சேகரித்துக்கொண்டே இருப்பார்கள். பிறகு எப்படி நிறுத்துவது என்பதைக்
கூட அவர்கள் மறந்து போய்விடுவார்கள்.
நாம் நம்முடைய பேராசைகளுடன் பிறவிப் பெருங்கடலை
நீந்த ஒரு போதும் முடியாது. புத்தர், மஹாவீரர் போன்றோரின் துறவு மகத்தானது. ஒரே நாளில் அனைத்தையும்
உதறி எறிந்துவிட்டு வரமுடிந்த மகான்கள் அவர்கள். அவர்களிடம் துறப்பதற்கு
நிறைய இருந்தது.
பணத்தைச் சேர்ப்பது வேறு; சேமிப்பது வேறு.
சேர்ப்பது என்பது அடுத்தவர்களுக்குச்
சொந்தமானவற்றையும் அபகரித்துக் கொள்வது; சேமிப்பது என்பது தன்னுடைய
வருமானத்தில் மிச்சம் பிடிப்பது.
பகவத் கீதையில் ஒரு வாசகம்
புறப்பொருட்கள் மீது கவனத்தைக் குவிப்பவர்களுக்கு
அவர்கள் மீது பிடிப்பு வருகிறது.
”பிடிப்பிலிருந்து ஆசை
ஆசையிலிருந்து கோபம்
கோபத்திலிருந்து குழப்பம்
குழப்பத்திலிருந்து மறதி
மறதியிலிருந்து முட்டாள்தனம்
முட்டாள்தனத்திலிருந்து அழிவு”
இயல்பான வாழ்வை வாழ்கிறவர்கள் பழைய
சாதத்தையும் அமிர்தமாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை மையத்துக்குள்
அவர்களைக் கொண்டு சேர்ப்பதாக இருக்கிறது. பணம், செல்வம், நிலம் எல்லாம் நம்மை இருத்தலுடைய ‘நான்’ என்கிற மையத்தில் இணைப்பதாக
இருக்க வேண்டுமே தவிர, நம்முடைய தனிப்பட்ட ‘நான்’ என்பதை வலுப்படுத்தி விடக்கூடாது.
அப்போதுதான் பூக்களைப் பூக்களாகவும், பூமியைப் பூமியாகவும் நம்மால் பார்க்க முடியும்.
7. இல்லறமே அறமே!
திருமணம் வேறு; மண வாழ்க்கை வேறு.
நம்மால் திருமணத்தை ஆடம்பரமாக
எளிதில் நடத்திவிட முடியும். இல்லறத்தை இனிமையாக நடத்துவது தான்
மிகவும் சிரமமானது.
அதனால் தான் இப்போது இல்லறம்
துறவறமாக மாறிவிட்டது. இல்லறமும் சிறந்தது; துறவறமும் சிறந்தது. ஆனால் இரண்டையும் ஒன்றில்
ஒன்று கலப்பது அபாயமானது.
அன்பும், அறனும், இருந்தால் மட்டுமே, இல்வாழ்க்கை பண்பும், பயனும் உடையது என்றார்
வள்ளுவர்.
திருமணம் நம் சுயத்தை விரிவுப்படுத்திக்
கொள்ளும் முயற்சி. தனக்கென மட்டுமே வாழ்பவன் இன்னுமோர்
உயிருக்காகப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குவதே அதன் முதற்படி.
இன்று பலருடைய திருமணங்களுக்கு
ஆதாரம் அன்பைத் தவிர மற்ற எல்லாமுமாக இருக்கின்றன. பணமும், பதவியும், தகுதியும் பல்லைத் துருத்திக்
கொண்டு முன் நிற்பதால் திருமணம் நறுமணம் வீசாமல் போகிறது. திருமணமான மறு கையோடு சிலர்
விவகாரத்துக்கு விரைகிறார்கள்.
குரானில் – விவாகரத்து செய்த பின்னர் மனைவியை கௌரவமாக நடத்து’ – என்று விதித்திருக்கிறது. கடவுள் ஆணுக்குப் பெண்ணை ‘உதவியாளர்’ என்று தான் படைத்ததாகப்
பைபிள் கூறுகிறது. அதனால்தான் திருமணத்தின் போது ‘கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருப்பீராக’ என்று தேவாலயங்களில் ஓதப்படுகிறது.
ஆங்கிலத்தில் ‘திருமணத்தில் எல்லா வலிகளும் உண்டு; ஆனால் பிரம்மசர்யத்தில் எந்த சந்தோஷமும் இல்லை’ என்று சொல்லப்படுவதுண்டு.
தியாகம் கருப் பொருளானால்
இல்லறமும் துறவாகும். தாம்பத்யமும் தவமாகும்.
8. நேர்மை
நேர்மை என்பது பணம் சம்பந்தப்பட்டதல்ல.
நம் எண்ணம், சொல், செயல் ஆகியவை ஒரே புள்ளியில் குவிய வேண்டும்.
அவற்றில் அன்பும், பண்பும் விஞ்சியிருக்க வேண்டும்.
அப்போதுதான் நம் நேர்மையில் நேர்மை இருக்கும்.
மற்றவர்களுக்காக நேர்மையாக இருப்பவர்கள், அவர்கள் தனிமையில் இருக்கும் போதெல்லாம் தவறிழைப்பார்கள்.
தடுக்கி விழுவார்கள். அவர்களுக்கு நேர்மை முகமல்ல; முகமூடி மட்டுமல்ல. சட்டத்திற்காக நிகழ்த்துபவர்கள். அதை மீறும் வழிகளை மட்டுமே ஆய்ந்து கொண்டிருப்பார்கள். தண்டனை மட்டுமே அவர்களைப் பயமுறுத்துவதாக இருக்கிறது. சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளே அவர்களது ஆதாயம்.
நம் அறியாமையை ஒத்துக்
கொள்ளுவது கூட நேர்மை தான். தெரியாததைத் தெரியாது என்று ஏற்றுக்
கொள்ளும்போது நம் இதயத்தில் ஓர் ஒளி பிறக்கிறது. ஆனால் அதற்கு நிறையத் துணிவு
தேவைப்படுகிறது.
கலையிலும் நேர்மை, செயலிலும் நேர்மை, தொழிலும் நேர்மை என்று
வாழ்பவர்கள் வாக்கு சத்தியமாக ஜொலிக்கிறது. மாணவராக இருக்கும்போதே
ஆசிரியர் சொல்லியும் காப்பியடிக்க மறுத்தவர் மகாத்மா. நம்முடைய சொல் மிகவும்
வலிமை வாய்ந்ததாக மாற வேண்டுமானால் வாய்மை இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்கள் உலகம் முழுவதையும் தங்கள் கட்டிலாக
மாற்றிக் கொள்வார்கள்.
நிறைவாக
மிக உயர்ந்த எண்ணங்களைப் படிப்பவர் மனத்தில் விதைப்பதும், நுண்ணிய விபரங்களைத் தெரிவிப்பதும்,
விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மகிழ்ச்சியின்
அடர்த்தியை அதிகப்படுத்துவதும் என் எழுத்துக்களின் நோக்கம் என்பதைத் தம் நூலின் முன்னுரையில்
குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர் அவர்கள். இந்நூல் திருக்குறள்
போல் எம்மதமும் சாராமல், அனைத்து மார்க்கங்களின் சாரத்தையும்
உள்ளடக்கியதாக அமைந்துள்ளது என்பதை இந்நூலை வாசிக்கும் அனைவரின் மனதிலும் தோன்றும்
வகையில் படைத்துள்ளார். மாணவர்கள், சான்றோர்கள்
அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
‘மனிதனைச் செம்மைப்படுத்துவதிலும்,
சிந்தனையை
விரிவடையச் செய்வதிலும்
வாசிப்புக்கு
நிகர் வேறில்லை’
என்று கூறி
விடை பெறுகிறேன்.
நன்றி வணக்கம்.
Comments
Post a Comment