என் எண்ணச் சிதறல்கள்!
Linkedin எனும் இணைய தளத்தில் என்னுடைய எண்ணச் சிதறல்களைக் கவிதைகளாக்க் கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வந்தேன். அந்தக் கவிதைகள் அனைத்தையும்
தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன்.
- மாற்றி யோசி!
புலியிடம் பகையென்றால்
நரியிடம் நட்பு தொள்ளாதே!
உனக்கு உயர்வில்லையென்றால்
மலைமீது கற்களை விட்டெறியாதே!
வாழ்க்கை உனக்கு அறைகூவலிட்டால்
சாவிடம் யோசனை கேட்காதே!
உனது இன்ப துன்பத்தின் திறவுகோல்
உன்னிடமே இருக்கிறது!
திறந்து அனுபவிப்பது
உனது மனநிலையைப் பொறுத்தது!
மாற்றி யோசி!
மாற்றம் என்பது நிலையானதல்ல!
- சந்தர்ப்பம்!
தவறுகள் செய்வது தவறில்லை!- ஏனெனில்
ஏதாவது ஒரு தவறில்
சரியின் சந்தர்ப்பம் அமைய
வாய்ப்புகள் இருக்கலாம்!
- நிம்மதியே வாழ்க்கை!
நிலைத்தக் கல்வியும்
நிலையான வேலையும்
அறநெறி வாழ்வும்
இணையும் பொழுது
நிம்மதியாகும் வீடு!
- அனுபவமே வாழ்க்கை!
துளையிடும் மூங்கிலே
புல்லாங்குழலாகிறது!
மிதிபடும் மண்ணே
பானையாகிறது!
அனுபவப்படும் மனமே
பக்குவமாகிறது!
- ஆசிரியர்கள்!
கல்லை வைரமாக்கும்
அறிவுச் சித்தர்கள்
ஆசிரியர்கள்!
- வாய்ப்புகள்!
சிலருக்குத் தேடி
வரும்!
சிலர் தேடினாலும் வராது!
- யார் நல்லவர்?
கொடுப்பவர் நல்லவர்!
நன்மை செய்பவர் நல்லவர்!
தீமைகளைப் பொறுப்பவர் நல்லவர்!
- தோல்வி!
தோல்வி
ஒரு செயலின் முடிவு!
செயலை மேற்கொள்பவரின் முடிவு அ்ல்ல!
- முயற்சி!
முயற்சியின் முடிவு வெற்றிதான்- அதற்கு
தோல்வி என்பதே இல்ல
- உறவே உயர்வு!
மனம் அன்பாய் மலர
இனியது சொல்லாய் மாறும்!
விருந்தால் அகம் மகிழ
உறவு உயர்வாய் பெருகும்!
சுற்றம் பெருகி வாழ
அறத்தோடு அன்பு நீளும்!
- வாழ்க்கை!
பெரியோரின் துணை
முதலீடு போன்றது!
வியாபாரம் போன்றது
வாழ்க்கை!
- நூலகம்!
வாசிக்கும் எண்ணம்
இருந்தால்
நேசிக்கும் எண்ணம் தானே வளரும்!
- அமைதி!
கெடுமதியைக் கைவிட
மனமிலார்க்கு
கிட்டாதே மன அமைதி!
- நட்பு!
முட்டாள்களின் நட்பை
விட
புத்திசாலிகளின் பகையே மேல்!
- எவை மேலானவை!
தானம் செய்வதை விட
இனிமையான சொற்கள் மேலானவை!
- நாவடக்கம்!
நாவடக்கம்
சொல்லுக்கும் மட்டுமல்ல!
உணவுக்கும் அவசியம்!
- பொங்கல் தின வாழ்த்துகளாக...
உழுதுண்டு வாழும்
தொழிலைக் காத்து
உயர்வைக் கொடுக்கும் செல்வம் பெற்று
உயிரினும் மேலான ஒழுக்கம் கொண்டு
பாரோர் போற்றும் பண்பு பெற்று
இடும்பை இல்லா இன்பம் போற்றி
நிறைவான வாழ்வை நிலைபெற்று வாழ்வோம்!
- அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
உயிர்காக்கும்
உணவை தரும்
உழவர்க்குத் திருநாள்!
நான் என்னும் எண்ணம் இன்றி
நாம் எனும் உறவுகள் யாவும்
கூடி மகிழும் நாள்!
பொங்கள் திருநாள்!
- அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளாக...
அன்பில் தொடங்கி
ஆனந்தத்தில் முடியட்டும்!
புன்னகையில் தொடங்கி
மகிழ்ச்சியில் முடியட்டும்!
சிந்தனையில் தொடங்கி
செயலில் முடியட்டும்!
துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் பிறக்கட்டும்!
- விதைத்தது விளையும்!
தடுமாறா நல் மனதால்
ஆற்றல் பெருகும்!
மனமதை அடக்கினால்
அறம் பல குவியும்!
இன்சொல் ஆற்றலால்
உறவுகள் பலபடும்!
அறியாது வந்த விருந்தையும்
ஆற்றுவதால் நட்பு நீளும்!
இனியது எண்ணமாய் மலர
அனைத்தும் நம் வசப்படும்!
- அறமுடன் வாழ!
உள்ளம் நெறிபட
உயர்வு பெருகும்!
கள்ளம் அழிபட
கண்ணியம் வளரும்!
குறுக்கு வழி வெற்றியால்
வாழ்வு சறுக்கும !
சிறப்பான வாழ்விற்கு
சீறிய அறமே துணை!
- தைரியம்!
குடை மழையை நிறுத்தாது - ஆனால்
நம்மை
நனையாமல் தடுக்கும்!
தைரியம்
பிரச்சனையைத் தீர்க்காது - ஆனால்
எதிர்த்துப்
போராட உதவும்!
- கடமையே நல்லணி!
கரையிலே இருந்தால்
கடலைக் கடக்க இயலாது!
தரையிலே இருந்தால்
தாரகை எட்ட இயலாது!
சிறைப்பட்ட ஆற்றலால்
வெற்றி கிட்ட இயலாது!
தொய்விலா செயலால்
உயர்வை எட்ட இயலாது!
கடமையைச் செய்தால்
பயனை அடையலாம்!
- வாழ்க்கை!
நாம் வாழ
பொருள் வேண்டும்!
நாம் வாழ்வதிலும்
பொருள் வேண்டும்!
- நம்பிக்கை!
உன்னை நம்பு
உன் கைரேகைகளை நம்பாதே!
- முயற்சி!
வாழும் காலம்
சிறிது என்பதால்
நேரத்தை வீணாக்காதே!
வெற்றியின் தொலைவு தூரம் என்பதால்
முயற்சியைக் கைவிடாதே!
- வாழ்க்கை!
பொறுமையுடன்
இருந்தால்
வாழ்வு சிறக்கும்!
பொறாமையுடன் இருந்தால்
வாழ்வு சிதையும்!
- எளிமை!
அறிவால் வருவது
அடக்கம்
ஞானத்தால் ஒளிர்வது அமைதி
தகுதியால் பெறுவது பணிவு
அனைத்துக்கும் அணி எளிமை!
- தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்!
வானம் பொய்யா
வளம்பல பெற்று
பசிப்பிணி யில்லா உலகைப் போற்றி
பற்றற்ற வாழ்வை பண்புடன் கொண்டு
ஈடில்லா நெறியுடன் ஒழுக்கம் காத்து
அறநெறி வாழ்வை அன்புடன் பெற்று
இல்லற வாழ்வை இன்புடன் வாழ்ந்து
நன்றி மறவா நன்னெறி போற்றி
பகுத்துண்டு வாழும் பண்பை கொண்டு
எல்லா வளமும் இனிதுடன் பெற்று
தீப ஒளி திருநாளாம் இன்று
நல்மக்களுடன் தீதின்றி வாழ்க!
- துன்பம்!
தகாத நட்பும்
தகாத சொல்லும்
துன்பத்தைத் தரும்!
- வெற்றி!
வெற்றியும்
தோல்வியும்
எதிர்எதிரானது அல்ல
அடுத்தத்தடுத்தப் படிகள்!
- சினம்!
சுடுசொல் பேசி
கடுமை நீங்கி
கேட்கும் மன்னிப்பால்!
மனம் சிதைந்த காயம்
மாறாது எப்போதும்!
கதிரவனைக் கண்டு
களிக்கும் தாமரை
உக்கிர அனலில்
உருவொளி இழக்குமே!
சேர்ந்தாரைக் கொல்லும்
சினம் எனும் கொல்லிக்கு
வாழ்வில் பலி
கொடுக்காமல் வாழ்வோம்!
- வாழ்க்கை!
இருளும் ஒளியும்
மாறும் தன்மையது!
இருளில் தவித்தலும்;
ஒளியின்றி அமிழ்வதும்
நிரந்தரம் இல்லை!
சுழலும் சக்கரத்தில்
நிலையென எதுவும் இல்லை!
உன் அமைதி குழைக்க
உலகில் எவரும் இல்லை!
தன்மதி தெளிய
அடையும் ஆனந்த எல்லை!
Comments
Post a Comment