Skip to main content

சிந்தையில் சிதறியவை – இறையன்பு (புத்தக மதிப்புரை)

  சிந்தையில் சிதறியவை – இறையன்பு   ( புத்தக மதிப்புரை )   இன்று புத்தக மதிப்புரையில் வெ . இறையன்பு அவர்கள் எழுதிய சிந்தையில் சிதறியவை என்ற   புத்தகத்தைப் பார்ப்போம் . இந்தப் புத்தகத்தை ஜனவரி – 2025 ஆம் ஆண்டு , சென்னை , கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டுள்ளார்கள் . பக்கங்கள் 232, விலை 250 ரூபாய் . வெ. இறையன்பு அவர்கள் எழுத்தாளர் , சிந்தனையாளர் , தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளர் , சமூக ஆர்வலர் எ னப் பல்துறைகளில் செயல்பட்டு வருகிறார். இவரது நூல்கள் , பொது வாசிப்புக்கும் தீவிர இலக்கியத்திற்கும் இடைப்பட்டவை. தத்துவப் பின்னணிகளை நோக்கமாகக் கொண்டவை. தனது படைப்புகள் குறித்து இறையன்பு , " மனிதனுக்கு உள்ளிருக்கும் தெய்வீக உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்வதே என் படைப்புகளின் நோக்கம்" என்கிறார். இவரது கட்டுரை , நாவல் , சிறுகதைத் தொகுப்புகளை ஆய்வு செய்து பல மாணவர்கள் எம்.பில் , பிஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார்கள்.   வெ. இறையன்பு அவர்கள் வார்த்தை ஜாலங்கள் இல்லாத , நேர்த்தியாக ,   கதை சொல்லும் பாணியில் சிந்திக்க வைக்கும் படைப்புகளைத் தந்துள்ளார். பல்வேறு பணிப் பொறுப்புகளி...

சிந்தையில் சிதறியவை – இறையன்பு (புத்தக மதிப்புரை)

 

சிந்தையில் சிதறியவைஇறையன்பு

 (புத்தக மதிப்புரை)

 

இன்று புத்தக மதிப்புரையில் வெ. இறையன்பு அவர்கள் எழுதிய சிந்தையில் சிதறியவை என்ற  புத்தகத்தைப் பார்ப்போம். இந்தப் புத்தகத்தை ஜனவரி – 2025 ஆம் ஆண்டு, சென்னை, கற்பகம் புத்தகாலயம் வெளியிட்டுள்ளார்கள். பக்கங்கள் 232, விலை 250 ரூபாய்.

வெ. இறையன்பு அவர்கள் எழுத்தாளர், சிந்தனையாளர், தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளர், சமூக ஆர்வலர் எனப் பல்துறைகளில் செயல்பட்டு வருகிறார். இவரது நூல்கள், பொது வாசிப்புக்கும் தீவிர இலக்கியத்திற்கும் இடைப்பட்டவை. தத்துவப் பின்னணிகளை நோக்கமாகக் கொண்டவை. தனது படைப்புகள் குறித்து இறையன்பு, "மனிதனுக்கு உள்ளிருக்கும் தெய்வீக உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்வதே என் படைப்புகளின் நோக்கம்" என்கிறார். இவரது கட்டுரை, நாவல், சிறுகதைத் தொகுப்புகளை ஆய்வு செய்து பல மாணவர்கள் எம்.பில், பிஹெச்.டி பட்டம் பெற்றுள்ளார்கள். 

வெ. இறையன்பு அவர்கள் வார்த்தை ஜாலங்கள் இல்லாத, நேர்த்தியாக,  கதை சொல்லும் பாணியில் சிந்திக்க வைக்கும் படைப்புகளைத் தந்துள்ளார். பல்வேறு பணிப் பொறுப்புகளில் பெற்ற அனுபவங்களும், சந்தித்த மனிதர்களும், வாழ்க்கையின் விழுமியங்களும், படைப்புகளாக மிளிர்ந்துள்ளன. இறையன்புவின் நூல்களைப் பற்றி ஜெயகாந்தன், வாசகனின் மனதை விசாலப்படுத்திச் சிந்தனையைத் தூண்டும்.  அதே சமயத்தில் அழகியல் உணர்வையும் மனிதநேயப் பண்புகளையும் வலியுறுத்துவதாக 'ஆத்தங்கரை' நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

     சிந்தையில் சிதறியவை என்னும் இந்நூலில் முயற்சியும் விடாமுயற்சியும், அறிவியல் மனப்பான்மை, வலிகளைக் கடப்போம், பரிமாறும் கலை, தொழில் நுட்பச் சிந்தனைகள், உபசரிப்பும் அனுசரிப்பும், கடமையும் உரிமையும், இங்கிதம் கற்போம், கவனமும் கவனச் சிதறலும், விழா நடத்தும் விதம் என்று 10 தலைப்புகளில் வெளியிட்டுள்ளார்.

முயற்சியும் விடாமுயற்சியும்

          முதல் முறை செய்வது முயற்சி. தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து முயல்வது விடாமுயற்சி. மனிதன் விடாமுயற்சியினால்தான் விண்ணைத் தொடுகிற சாதனைகளை மண்ணில் நிகழ்த்தி மகத்துவம் அடைந்தான். அவன் புதிர்களை அவிழ்க்க எப்போதும் தன்னை ஆயத்தமாக வைத்துக் கொண்டான். முதல் முறை தோல்வி அடைந்ததால் அவன் தொய்ந்து விடவில்லை. அதனால் இன்று பூமியெங்கும் மனிதன்  பல்கிப் பெருகினான்.

            விலங்குகள் அரிதாகவே அரிய முயற்சிகளை மேற்கொள்கின்றன. பாதுகாப்பான வாழ்க்கையையே அவை தேர்ந்தெடுக்கின்றன. அதனால்தான் ஒரு வாழ்விடத்தில் தங்களைச் சுருக்கிக் கொண்டன. மனிதனோ தோண்டித் துருவி அறியும் ஆற்றல் பெற்றவன். முதல் முறை வழுக்கி விழுந்தால் அவன் ஓய்ந்து விடுவதில்லை. மீண்டும்  எழுந்து நடக்க முற்படுவான். வழுக்குவதற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு முன்னேறிச் செல்பவன் அவன்.

            விடாமுயற்சிக்குத் தடையாக இருப்பது கவனச்சிதறல். ஒரு வகையில் மனத்தை ஒருமுகப்படுத்துவதற்குப் பயிலவேண்டும். அடுத்தவர்கள் ஊக்கம் தருவார்கள் என்று எல்லா நேரங்களிலும் எதிர்பார்க்க முடியாது. நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும். நமக்கு ஒத்த துணை அமைந்தால் விடாமுயற்சி களைப்பாக இல்லாமல் களிப்பாக இருக்கும். ஒவ்வொரு நொடியையும் எச்சரிக்கையோடு கையாள வேண்டும். ஒரு நொடி அயர்ந்தாலும் விபத்து ஏற்படும் சாத்தியங்கள் சாகசங்களுக்கு உண்டுவிடாமுயற்சியில் வேரூன்றுபவர்கள் தொடர்ந்து பயின்று எப்போதும் நெகிழித்தன்மையோடு விளங்குவார்கள். நேர்மறை மனநிலையை வளர்த்துக் கொண்டு உடலை வருத்திக் கொள்ளாமல் முயற்சியை முழுமையாக்குவார்கள்.

          இயற்கையிடமிருந்து நாம் விடாமுயற்சியைக் கற்றுக் கொள்ளவேண்டும். கடல் ஒரு பக்கம் அணைப்போட்டால் மறுபக்கம் பொங்கி வருகிறது. நீர்வரும் வழியில் தடைகளை ஏற்படுத்தினால் சுற்றி வளைத்து ஓடுகிறதுசரியான நோக்கத்திற்காகத் தொடர்ந்து முயல்பவர்களைக் காலம் ஆவணப்படுத்திக் கௌரவப்படுத்துகிறது. அவர்கள் வரலாற்றில் எப்போதும் வாழ்வார்கள்.

அறிவியல் மனப்பான்மை

          அறிவியல் மனப்பான்மை அனைவருக்கும் அவசியம். அறிவியல் வாசிப்பவர்களுக்கு மட்டும் அல்ல, அவனியில் வாழ்கின்ற அனைவருக்குமே அது இன்றியமையாதது என்பதை உணர்ந்ததால் மனிதன் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகிறான்.

            அறிவியல் மனப்பான்மை என்பது எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் பகுத்தறிவு கொண்டு பரிசோதனை செய்து, சொல்லப்படும் காரணங்களை ஆராய்ந்து பார்ப்பதில் இருக்கிறதுஅறிவியலில் நம் நாட்டு அறிவியல், வெளிநாட்டு அறிவியல் என்றெல்லாம் இல்லை. இன்று நாம் பயன்படுத்தும் பொருட்களில் 90 சதவிகிதப் பொருட்கள் நம்முடையவை அல்ல. நாம் உண்ணுகிற உணவைத் தயாரிக்கக்கூட பல்வேறு நாடுகளின் கண்டுபிடிப்புகள் இன்று பயன்படுகின்றன.

            அறிவியல் என்பது பொதுவானது. உலகம் முழுமைக்கும் சொந்தமானது. டார்வின் கண்டறிந்த பரிணாம வளர்ச்சி நம் நாட்டுக்கும் ஏற்றதுதான். அதனால் அறிவியல் மனப்பான்மை உள்ளவர்கள் அறிவியலில் செயற்கையான வரைபடக் கோடுகளைத் திணித்துப் பார்ப்பதில்லை. எந்த அறிவியல் அறிஞனும் தான் கண்டுபிடித்ததை தன் நாட்டுக்கு மட்டும் என்று பிரகடனப்படுத்துவதில்லை. அது உலகம் முழுமைக்கானது என்பதையும், மானுடத்திற்கானது என்பதையும் அவன் அறிகிறான். அதனால்தான் அறிவு எந்தத் திசையிலிருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்பவனே அறிவியல் மனப்பான்மை உள்ளவன். யாரிடமிருந்து வருகிறது என்பது முக்கியமல்ல, எப்படி வருகிறது என்பதே முக்கியம்.

      சின்ன வயதிலிருந்து குழந்தைகளுக்கு அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்ப்பது அவசியம். அவர்களை கணநேரம் கட்டுப்படுத்துவதற்கான இல்லாத பூச்சாண்டிகளை உருவாக்கிப் பயமுறுத்தி வளர்ப்பது சரியல்ல.

குழந்தைகள் நம்பிக்கையையும், அறிவியலையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் வளர்க்கப்படுவது முக்கியம். பலர் அறிவியல் நமக்கல்ல. விஞ்ஞானிகளுக்கு மட்டும் தான் என்று கருதுகிறார்கள். மெய்ஞானிகளுக்கும் அறிவியல் தேவை என்பதை அவர்கள் அறிவதில்லை. வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அறிவியல் இருக்கிறது.

வலிகளைக் கடப்போம்

            வாழ்க்கையே வலியில்தான் தொடங்குகிறது. சிசு பிறக்கும் போது தாய்க்கும் வலி, குழந்தைக்கும் வலி.

            குழந்தை வெளியே வருவதால் ஏற்படும் பிரசவ வலியே வலிகளின் உச்சம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குழந்தைக்கும் இதுநாள்வரை இருந்து பாதுகாப்பு அகல்வதாலும், புதுச்சூழல் பிறப்பதாலும், தானே அனைத்தையும் சந்திக்கவேண்டும் என்பதாலும், வெளிச்சம் பழக்கப்படாததாலும் வேதனை ஏற்படுகிறது.  அதனால் குழந்தை ஓங்கி அழுகிறது. பட்ட அத்தனை வலியும் பட்டுப் போன்ற குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் தாய்க்குப் புன்னகை வந்துவிடுகிறது. மனமெல்லாம் மகிழ்ச்சி நிரம்பி வழிகிறது. ஆனால் பல்வேறு விதமான வலிகளின் தொடக்கமாகவே வாழ்க்கை அமைகிறது.

            ஒவ்வொரு இன்பமும் ஒரு துன்பத்தை அடைகாத்துக் கொண்டுதான் வருகிறது. ஒவ்வொரு இனிமையும் ஒரு கசப்பைக் கக்கத்தில் வைத்துக் கொண்டுதான் நம் கதவைத் தட்டுகிறது. வாழ்க்கை ஒவ்வொரு சுகத்தின் வரவிற்கும் ஒரு வலியையும் வரவு வைத்துக் கொள்கிறது. வாழ்க்கையே வலிகளின் தொகுப்புதான். ஆயுளை நாம் செயற்கையான மருத்துவத்தால் நீட்டிக்க நீட்டிக்க வலிகளை வாங்கத் தயாராகிறோம் என்று பொருள்.

          விலங்குகளின் மனம் எளிமையானது. அவை கடந்தகாலத்தைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. எதிர்காலத்தைப் பற்றி எண்ணி ஏங்குவதுமில்லை. நிகழ்காலத்தில் அவை முழுமையாக வாழ்கின்றன. அதனால் பசி எடுக்கவில்லை என்றால் அவை உண்பதில்லை. வயிறு கோளாறாக இருந்தால் நாய்கள் புல்லைத் தின்று சரிசெய்துக் கொள்வதைப் பார்க்கிறோம்.

    விலங்குகளும் காயமுறுகின்றன. காடுகளில் அவை ஓடும்போது முள்ளில் சிக்கியோ, கிளைகளில் மாட்டியோ சிராய்ப்புகள் ஏற்படும். சில நேரங்களில் மற்ற விலங்குகளோடு மோதும்போது காயம் உண்டாகும். ஆனால் அவை அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. வலி ஒரு வாழ்வின் ஒரு பகுதியாகவே  இருக்கின்றன.

      வலிகள் வாழ்க்கையின் தொடர் ஓட்டமாக நம் பின்னால் ஓடிவந்து கொண்டேயிருக்கின்றன. வலிகளுக்கு நடுவே வளமானவற்றைக் கண்டு ரசிப்பதற்கும், இளைப்பாறிக் கொள்வதற்கும் இனியவற்றை நுகர்வதற்கும் நாம் பழக்கப்பட்டால்தான் வாழ்க்கை துயரங்களின் தொகுப்பாக இல்லாமல் இனிமையின் கையேடாக இருக்கும். வலிகளைத் தாங்குவதே முதிர்ச்சியின் முத்திரை.

பரிமாறும் கலை

      உணவின் கலை சமைப்பதில் அல்ல, பரிமாறுவதில் அடங்கியிருக்கிறது. இனிய உணவையும் முறையாகப் பரிமாறா விட்டால் நன்றாக இருக்காது. பரிமாறுவது ஒரு கலை. அது சிலருக்கே கைவருகிறதுஇப்போது சுவையாகச் சமைப்பது எப்படி என்று பலர் வகுப்பெடுக்கிறார்கள். ஆனால் பரிமாறுவது எப்படி என்று யாரும் சொல்லித் தருவது இல்லை. பரிமாறுவதின் சாரம், பதுக்கிக் கொள்வதல்ல.

            அன்பைப் பரிமாறுவது காதல்

            ஆதரவைப் பரிமாறுவது அடைக்கலம்

          இனிமையைப் பரிமாறுவது நட்பு

          அறிவைப் பரிமாறுவது கல்வி

          துன்பத்தைப் பரிமாறுவது அழுகை

          கரிசனத்தைப் பரிமாறுவது ஆறுதல்

          உணவைப் பரிமாறுவது விருந்தோம்பல்.

நல்ல விருந்தோம்பலில் இவை அனைத்துமே பரிமாறப்படுகின்றன.

         நம் தமிழ் இலக்கியங்கள் விருந்தோம்பலில் பரிமாறுவது செம்பாகம் என்று செப்புகின்றன. விவேகசிந்தாமணியில் உப்பில்லாத கூழைக்கூட உவகையுடன் அளித்தால் அது உயர்ந்த உணவாகிறது என்று கூறப்பட்டிருக்கிறது. அதைப் போலவே அறுசுவை உணவையும் கடுகடுக்கும் முகத்துடன் பரிமாறினால் அது நீர்த்துப் போய்விடும் என்று கூறுகின்றது.

            பரிமாறும்போது உண்பவரின் இடது பக்கமாக நின்று பரிமாற வேண்டும். வலது பக்கம் நின்று பரிமாறினால் உண்பவருக்கு அது இடைஞ்சலாக இருக்கும். நமக்கும் இடது பக்கம் நின்று பரிமாறினால்தான் வசதிபரிமாறும்போது காய்கறிகள் எவை என்பதையும் சொல்லி பரிமாறுவது நல்லது. நிறையப் பரிமாறி வீணடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பரிமாறும்போது அவர்களுக்கும் திகட்டாமல் இருக்கும். உணவை நாம் அன்பாகப் பரிமாறி அக்கறையுடன் கவனித்தால் அது விருந்தினர்களுக்கு வாழ்நாளெல்லாம் மறக்காது. ஒருவரை விருந்துக்கு அழைப்பது பெரிதல்ல. அவர் மனம் கோணாதபடி சிறப்பாகக் கவனிப்பது முக்கியம்.

தொழில் நுட்பச் சிந்தனைகள்

          மனிதன் மட்டும் தொழில் செய்பவன்

    தாவரங்கள் தங்கள் உணவைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்கின்றன. சூரிய வெளிச்சமும், நீரும், மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துகளும் அவை உணவை உற்பத்தி செய்ய உதவியாக இருக்கின்றன. இலைகளில் பச்சையத்தை ஏற்றிக்கொண்டு பூத்தும் காய்த்தும் குலுங்குகின்றன.

           மனிதன் தாவரங்களின் தன்மையையும், விலங்குகளின் வேட்டையாடும் வேட்கையையும் ஒருங்கிணைத்துப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்டான். அவனே தாவரங்கள் பயிரிட முன்வந்தான். அப்போது வேளாண்மை உருவானது. வேளாண்மைக்கு ஏதுவாக உதவி புரிய விலங்குகளைப் பண்படுத்தினான். அவை அவன் காலைச் சுற்றும் வளர்ப்பு மிருகங்களாயின.

            இளைஞர்களுக்கு இன்று உடல் உழைப்பு குறைந்து வருகிறது. உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால் உடல் பருமன், இதயப் பிரச்சனை, கழுத்துவலி, முதுகுத்தண்டில் கோளாறு போன்றவை அதிகமாகி இருக்கின்றன. அவர்கள் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை  எழுந்து நடமாடுவதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம். அதே நேரத்தில் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி போன்றவற்றை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

       எளிய மக்கள் தொழில் நுட்பத்தால் பாதிக்கப்படுகிறார்கள். பெரிய வணிக நிறுவனங்கள் வந்து விட்டதால் பெட்டிக் கடை வைத்திருப்பவர்கள், மளிகைக் கடை வைத்திருப்பவர்கள் வேலை இழக்கிறார்கள்.

            நேரத்தை மிச்சப்படுத்த வந்த தொழில் நுட்பக் கருவிகள் இன்று நேரத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. இன்று சமூக ரீதியாகத் தனிமைப்படுத்துவதும், சமூக நுண்ணறிவில் குறைவதும், உறவுகளை ஒதுக்கவும் அதிகமாக இருக்கிறது. பழகத் தெரியாதத் தலைமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

            தொழில்நுட்பம் கைகளை அறுக்கும் கத்தியாக இல்லாமல் போர் வாளாக இருக்க நாம் அதைத் தோழனாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

உபசரிப்பும் அனுசரிப்பும்

          ஒரு காலத்தில் உறவினர்கள் நம் இல்லத்திற்கு சொல்லாமல் கொள்ளாமல் வருவார்கள். அப்போது தொலைபேசி வசதி இல்லை. ஒரே ஊரில் பல உறவினர்கள் குடியிருப்பார்கள். ஊரின் எல்லைகளைத் தாண்டாமல் வாழ்வையே நிறைவுசெய்து கொள்கின்ற வாழ்க்கை முறை இருந்தது அன்று. ஒன்றுக்குள் ஒன்று திருமணம். உறவினர்களுக்குள்ளேயே கொடுக்கல் வாங்கல். எப்போது வேண்டுமானாலும் யாருடைய வீட்டிற்கும் சென்று திண்ணையில் அமர்ந்தால் உணவு வேளையில் நிச்சயம் உணவு கொடுத்து உபசரிக்கும் வழக்கம் உண்டு. இன்று காலம் மாறிவிட்டது.

       வீடுகளில் திருமணங்கள் நடப்பதில்லை. பந்தல் போடும் பழக்கமும் இல்லை. அக்கம் பக்கம் உறவினர், நண்பர் வீடுகளில் திருமணத்திற்கு வருபவரைத் தங்க வைக்கும் தேவையும் இல்லை. உறவினர்கள் எல்லாம் முன்பே வந்து ஆளுக்கொரு பணியை எடுத்துக்கட்டிக் கொண்டு சமையலறையில் செய்கின்ற அந்நியோன்யமும் இல்லை. இன்று திருமணங்கள் மண்டபங்களில் முடித்து விடுகிறார்கள். உறவினர்களை விட நண்பர்கள் தான் அதிகம் வருகிறார்கள். நம் வீட்டில் இரவு தங்குவது கிடையாது. அடுத்த வீட்டில் அனுசரித்துத் தங்கும் தேவையும் இல்லை.

       உபச்சாரம் என்பது ஒருவரை நாம் எவ்வாறு உள்ளத்தில் வைத்துப் போற்றுகிறோம் என்பதற்கான அடையாளம்.

கடமையும் உரிமையும்

          பெறுகிற பலன்களின் அடிப்படையில் நாம் ஆற்ற வேண்டிய பணிகளைக் கடமை என்று அழைக்கின்றோம். கடமையைக் கண்ணும் கருத்துமாக அனைவரும் ஆற்றினால் தான் உரிமைகள் உரிய விதத்தில் சென்றடையும் என்று முழுமையாக நாம் நம்புகிறோம். இயற்கை நமக்காகவே இருக்கிறது என்று நினைக்கிற சுயநலம் நம் ஒவ்வோர் அணுவிலும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. பார்க்கிற பொருளெல்லாம் பயன்படுமா என்று உரசிப் பார்க்கும் உள்ளம் நம்முடையது.

            நீர் வார்க்கிற நெல்வயல் கதிர் தருவது கடமை

           எருவிடுகிற பழமரம் கனி தருவது கடமை

           புல் தருகிற பசு பால் சுரப்பது கடமை

          தீனி தருகிற கோழி முட்டை தருவது கடமை

         எனக் கடமைகளை எதிர்பார்த்து அவற்றை வளர்க்கிறோம். பொய்த்துப் போகின்றவற்றை உதவாக்கரை என்று உதறித் தள்ளுகிறோம்அடுத்தவர்களுக்கான உரிமையை மதிப்பதும், அதை நிலைநாட்ட முயல்வதும் நம்முடைய ஒப்பற்ற கடமை. அதே நேரத்தில் சிலருக்கு மட்டுமே அனைத்து உரிமைகளும் என்பது இன்றிருக்கும் உண்மை நிலை. அனைவரும் தத்தம் கடமைகளை முறையாக நிறைவேற்றும் சமூகத்தில்தான் உரிமைகள் கடைக் கோடி மக்களுக்கும் செல்லும். கடமையைச் செய், பலன் தானாகக் கிடைக்கும் என்று நினைக்காமல் கடமையைச் செவ்வனே செய்துவிட்டு உரிமைகளுக்காக ஒடுக்கப்பட்டவர்கள் போராடும்போதுதான் அவர்களை சுரண்டுபவர்களிடம் இருந்து விடுதலை பெற்று சமதர்மச் சமுதாயம் உருவாகும்.

இங்கிதம் கற்போம்

          இங்கிதம் என்பது ஒருவருடைய பண்பாட்டை வெளிப்படுத்தும் பதாகை. சிலர் பொது இடத்தில் மற்றவர்களை மிகவும் கண்ணியமாக நடத்துவார்கள். மரியாதையாக அழைப்பார்கள். சின்னக் குழந்தைகளையும் ஒருமையில் அழைக்க மாட்டார்கள். மேடையில் பேசும்போது தரக்குறைவாகத் திட்டமாட்டார்கள்.

            ஒருவர் இல்லாத போது அவருடைய குணநலன்களைத் தாக்கிப் பேசக் கூடாது. அவர் நடத்தைக் கெட்டவர் என்பதைப் போல மற்றவர் பேசுவது மாண்புக்குரிய செயல் அல்ல.

            யார் இங்கிதத்துடன் நடந்து கொள்கிறார்களோ அவர்கள் மறைமுகமாக மற்றவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கும் வகுப்பு எடுப்பவர்கள், எல்லாவற்றையும் பள்ளிக்கூடமோ, பெற்றோரோ சொல்லிக் கொடுக்க முடியாது. நாம் பழகுகிற மனிதர்களிடமிருந்து மேன்மையான குணங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு இங்கிதமாக நடப்பவர்களை அனைவரும் விரும்புவார்கள். அவர்களை உபசரிக்கமாட்டோமா என்று காத்திருப்பார்கள். நம்மைப் பார்க்கிறபோதே அவர்கள் முகம் மலரும்.

கவனமும் கவனச் சிதறலும்

          கவனிக்கும் ஆற்றலே மனிதனை மகத்தானவனாக மாற்றியது. உற்றுக் கவனிப்பதும், உடனே ஒன்றைச் செயல்படுத்தத் துடிப்பதும் அவனுடைய உச்சபட்ச ஆற்றல்கள்.

            மனிதன் அனைத்தையும் கவனிக்கின்றான். அழகான தென்றலைக் கவனித்தான். அவன் செயற்கை விசிறி செய்து கொண்டான். கானகத்தைப் போன்று பல்வகைத் தாவரம் கொண்ட பூங்கா அமைத்தான். நீந்த முடியாததால் கப்பல்கள் செய்தான். கடலுக்குள் வாழும் உயிர்களைக் கண்டு நீர் மூழ்கிக் கப்பல் கண்டான்.

          இன்று எந்தப் பறவையாலும் விமானத்தின் வேகத்திற்குப் பறக்க முடியாது. எந்தக் குதிரையாலும் விரைவுத் தொடர் வண்டியின் வேகத்தில் ஓட முடியாது. கவனிப்பதும், போலச் செய்வதும், பின்னர் அபிவிருத்தி செய்வதும் மனிதனுடைய தகவல் பரிமாற்றத் திறனால் விளைந்தவைஇன்று கவனச்சிதறல்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தாங்கள் தீப வெளிச்சத்தில் படித்ததற்கும், மின்சார விளக்கில் படித்ததற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அதற்காக நாம் மறுபடியும் சிம்னி விளக்குகளுக்குச் செல்ல முடியாது. மின்னணுச் சாதனங்கள் இளைஞர்களை அதிகம் வசீகரிக்கின்றன. கற்றுக் கொள்ள வாய்ப்பைத் தருகிற அவை கவனச் சிதறலையும் ஏற்படுத்துகின்றன. அந்தத் தூண்டுதலைச் சமாளிப்பதற்கு வைராக்கியம் தேவைப்படுகிறது.

     நம்முடைய உற்றுநோக்கலைக் கூர்மைப்படுத்த எத்தனையோ பரிசோதனைகளும் பயிற்சிகளும் உள்ளன. அவற்றை நாம் மேற்கொண்டு கவனத்தைச் செம்மைப்படுத்த வேண்டும்.

            எதிர்காலத்தில் கவனச்சிதறல்கள் தான் மிகப்பெரிய சிக்கலாக இருக்கும். அதில் சிக்கிக் கொள்ளாதவர்கள் தான் வெற்றி வீரர்களாக வலம் வருவார்கள்.

விழா நடத்தும் விதம்

          விழாக்கள் பலவிதம். உறவினர்களும் நண்பர்களும் வருகைபுரியும் வகையில் நம் இல்லத்தில் நடக்கும் எண்ணற்ற விழாக்கள் உள்ளன. தொட்டிலில் போடுவது, காதுக் குத்துவது, திருமணம், பிறந்த நாள்,  வளைகாப்பு போன்ற விழாக்கள் மற்றவர்களை அழைத்து மனமாரக் கொண்டாடும் நிகழ்வுகள். அப்படிப்பட்ட விழாக்களில் வருகிறவர்கள் அனைவரையும் சரியாக உபசரித்து, சமமாக நடத்தி, திருப்தியுடன் வழியனுப்பி வைப்பது அவசியம். ஒருவர் மனம் கோணினாலும் உறவுகள் நீர்த்துப் போய்விடும்.

            அரசு விழாவாக இருந்தாலும் சரி, சொந்த விழாவாக இருந்தாலும் சரி, பொது விழாவாக இருந்தாலும் சரி, அவற்றில் விருந்தினர்கள் மட்டும் முக்கியமல்ல. நம் அழைப்பை ஏற்று வருகின்ற அனைவரும் முக்கியமானவர்கள் தான். இன்றிருக்கும் சூழலில் சுற்றுசூழலுக்கு  நெருக்கடி ஏற்படும் தருணத்தில் நாம் முடிந்த அளவிற்கு ஞெகிழியைத் தவிர்த்து இயற்கையோடு இயையும் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. எந்த விழாவாக இருந்தாலும் ஆடம்பரங்களைத் தவிர்த்து எளிமையாகக் கொண்டாடுவது நல்லது.

   விழாவை எப்போது நினைத்தாலும் நமக்கும், அதில் கலந்து கொண்டவர்களுக்கும் இனிய நினைவுகள் தோன்றுகிறதோ, அந்த விழாவே ஆகச் சிறந்த விழா.

நிறைவாக,

      சிந்தையில் சிதறியவை என்ற இந்நூல் நூலாசிரியரின் சொந்த அனுபவங்களின் நிகழ்வுகளின் தொகுப்பாகவே அமைந்துள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு தலைப்புகளின் செய்திகளும் அனைவருக்கும் பொருந்துவனவாக அமைந்துள்ளது. மனித இயல்புகள், நிஜ வாழ்க்கையின் அனுபவங்கள், இயற்கை, சமூக அக்கறை இவை அனைத்தும் இக்கட்டுரைத் தொகுப்பில் நிறைந்துள்ளது. இதில் அடங்கியுள்ள வார்த்தைகள் மிக எளிமையாகவும், தெளிவாகவும் உள்ளது. இதனை வாசிப்பதன் மூலம் உங்களின் எண்ணங்கள், உணர்வுகள் அனுபவங்களுடன் கலந்திருக்கும் என்று நம்புகிறேன்.

            நாகரிகம் முன்னேறுவது புத்தகங்களால்தான்! - என்ற சர்ச்சிலின் கூற்றிற்கிணங்க புத்தகங்களை வாசிப்போம்.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...