Skip to main content

என் எண்ணச் சிதறல்கள்! (3)

  என் எண்ணச் சிதறல்கள் ! (3)             Linkedin எனும் தளத்தில் என்னுடைய எண்ணங்களைக் கடந்த சில மாதங்களாகக்   கவிதைகளாக வெளியிட்டு வருகிறேன் . அந்தக் கவிதைகளை அனைத்தையும்   தொகுத்து இப்பகுதியில் வெளியிட்டுள்ளேன் . 1.     தன் நம்பிக்கை! சந்தேகம்! மனநிம்மதியைக் கெடுக்கும் ஆயுதம்! சஞ்சலம்! செயல்திறனைக் குறைக்கும் பேராயுதம்! 2.     வாசிப்பு! அச்சுறுத்தும் வாழ்வின் இருண்ட பக்கங்கள் வாசிக்க வாசிக்க வெளிச்சம் அடைகிறது! தாகத்திற்குத் தண்ணீர்போல தரமான நூல்களைத் தேடித் தேடிப் படிப்பதால் வெளிபடும் வாழ்வு இனிக்கிறது! அறைக்குள் அடங்கிக் கிடந்த எண்ணச் சிறைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது! நல்ல நூல்களின் வாசிப்பு! வாழ்வின் அடையாளம் சுவாசிப்பதைப் போல் வாசிப்பை நேசிப்பது! 3.     படைப்பு! தற்புகழ்ச்சிக்காகவோ பிறரை மகிழ்விப்பதற்காகவோ எழுதப்படும் எழுத்துக்களை விட உய்த்துணர்வதற்கும் உட்பொருள் காண்பதற்கும் நல்வழி காட்டுவதற்கும் தெளிவான தேடலுடன் சொல்லும் செய்த...

சிலப்பதிகார கால ஆடை நாகரிகம்

 

சிலப்பதிகார கால ஆடை நாகரிகம்

          மனித நாகரிகத்தின் சின்னமாக விளங்குவது ஆடை. இது மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று. தட்பவெட்ப நிலைகளுக்கேற்ப உடற்பாதுகாப்பிற்கு ஆடை அணிதல் இன்றியமையாததாகும். கலை உணர்வையும், பொழுது போக்கினையும் மனித இனம் விரும்பியதால் அதற்குத் தகப் பஞ்சும், பட்டும், மயிராடையும் உருவாயின. தொழிலுக்கும், இனத்திற்கும் ஏற்றவாறு நிறமும், உடுக்கும் உடையும் மாறுபடுவதுடன் மகளிருக்கும் மைந்தருக்கும் என வேறு வேறு வகையான ஆடைகளும் தோற்றம் பெற்றன.

திருமண ஆடை

          திருமண ஆடை பற்றிய செய்தியினைச் சிலம்பு சுட்டவில்லை. ஆனால் திருமணக் காட்சியில், ‘கோடிக் கலிங்கம் உடுத்து’ (21:32) என்ற தொடரால் திருமணத்தில் கோடிக் கலிங்கம் அணியப் பெற்றமைத் தெளிவுபடுகிறது. இவ்வாடை கண்ணகியின் திருமணத்தில் அமையாது, கிளைக்கதையில் கற்புடைய மகள் ஒருத்தி அணிந்த செய்திக் குறிப்பால் உணர முடிகிறது.

துன்பத்தில் ஆடை

          கோவலனின் பிரிவுச் சூழலில் கண்ணகி மெல்லிய ஆடை அணிந்தவளாகச் சுட்டப்படுகிறாள். ‘மென்துகில் அல்குல் மேகலை நீங்க’ (4:48) என்பதால் துன்பக் காலத்தில் மேகலை அணியாமையும் புலப்படுகிறது. அசோக வனத்தில் சிறைப்பட்ட சீதை, ‘ஆவி அம்துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்’ என்பதால் துன்பச் சூழலில் பெண்கள் மென்மையான ஆடையினை அணிந்தமைப் பெறப்படுகிறது.

இரவு ஆடை

          மகளிர் தங்களுடைய வசதிகளுக்கேற்ப பல்வேறு ஆடைகளைப் புனைந்துள்ளனர். புகார் நகரம் வளமிக்க நகரம். அந்நகரத்தில் மக்கள் இரவுக் காலத்தில் தனிக்கோலம் கொண்டுள்ளனர். இதனை, ‘இரவிற்கு ஓர் கோலம் கொடி இடையார்தாம் கொள்ள’ (9:45) என்ற தொடர் கட்டுகிறது இவற்றால் சமுதாயத்தில் ஆடைகள் பெற்ற பாங்கினைக் காண முடிகின்றன.

ஆடை இழத்தல்

          ஆடை இழத்தல் என்பது காதல், சாதல் என்ற இரு நிலைகளில் சுட்டப்படுகின்றது. இது மன நெகிழ்ச்சியையும் மனம் அழிதலையும் காட்டுவதோடு நாணம் துறத்தலையும் வெளிப்படுத்தும். ஆய்ச்சியர் குரவை நப்பின்னையைத், ‘தையல் கலையும், வளையும் இழந்தே கையில் ஒழிந்தாள் முகம்’ (1725) எனவும் கண்ணனை ‘அறுவை ஒழித்தான்’ (1723) எனவும் காட்டுவன ஆடை இழத்தல் எனும் நிகழ்ச்சிக்குச் சான்றாகின்றன.

வண்ண ஆடைகள்

          சிலப்பதிகாரம் பல்வேறு வகையான வண்ண ஆடைகளை இயம்பும் பூதங்கள் வெண்மையான ஆடையினை அணிந்துள்ளன.

          ”நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம்

          புலராது உடுத்த உடையினன்” (22:21-22)

என அந்தணப் பூதம் அணிந்த நுரை போன்ற வெண்மையான ஆடையினைச் சிலம்பு காட்டும். ஆடையில் பூக்கள் பொறித்தமையினை ‘நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ’ (6:88) என்றதனால், மாதவி தூய நிறமுடைய ஆடையை அணிந்த செய்தியை அறிய முடிகிறது.

          பொற்கொல்லனை மெய்பையுடனும், நீலநிற ஆடையுடன் கள்வன் காட்டப்படுதலும், பருவத்திற்கு ஏற்ற ஆடை அணிந்த சமுதாயத்தில் அவரவர்கள் வினைக்கேற்ப ஆடை அணிந்த நிலையினையும் இளங்கோவடிகள் சுட்டியுள்ளார்.

வணிக ஆடை

          ஆடை வணிகத்தைச் சிலப்பதிகாரம் செம்மையுறக் காட்டுகின்றது. புகாரில்,

          ”பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

          செய்யப்பட்ட நுண்வினைக் காருகர் இருக்கை”(சிலம்பு 5:16-17)

அமைந்துள்ளது. மதுரையில்,

          ”நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்

         பால்வகை தெரியாப் பன்னூ நடுக்கத்து

         நறுமடி செறிந்த அறுவை வீதியும்” (சிலம்பு,14:205-207)

காணப்படுகின்றது. ஆடையினை உருவாக்குகின்ற தொழிலாளர்கள் பல்கி இருந்தமையினைத்

          ”துன்ன காரருந் தோலின் துன்னரும்

         கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கி” (சிலம்பு, 5:32-33)

இருந்த செய்தியினை இளங்கோவடிகள் தந்துள்ளார்.

நிறைவாக,

          காப்பியத்தில் ஆடை உடுத்தல் என்பது தனிமனித, சமுதாய பழக்கவழக்கங்களுக்கு மட்டுமன்றித் தனிமனிதனுக்கும், தொழிலுக்கும், இனத்திற்கும் தக ஆடையுடன் அவரவர்கள் தன்மைக்கேற்ப வண்ணமூட்டப் பெற்ற ஆடைகள் அணிந்தமையினையும் சிலப்பதிகாரம் தந்துள்ளது.

பார்வை நூல்

1.  சிலம்பில் மக்கள் வாழ்வும் வழிபாடும் - முனைவர் பெரி.அழகம்மை, உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி.

Comments

Popular posts from this blog

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு

  கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு   வடக்கிருத்தல் தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் வடக்கிருத்தலை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்குத் திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர்த்துறப்பதை ‘ வடக்கிருத்தல் ’ எனக் கொண்டனர். வடக்கிருக்க அடிப்படைக் காரணியாக அமைவன மானம் , வீரம் , நட்பு , தன்நோக்கம் நிறைவேறாமை எனலாம். வீரர் , புலவர் , மன்னர் ஆகியோர் வடக்கிருந்தமையை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. அவ்வாறு உயிர் துறப்பவர் துறக்கம் பெறுவர் என நம்பினர்.       கலைக்களஞ்சியம் , வடக்கிருத்தலை ‘ உத்ரக மனம் ’ என்றும் ‘ மகாப் பிரத்தானம் ’ என்றும் கூறும். ‘ நாணத்தகு நிலை ’ நேர்ந்ததனாற் சிலர் வடக்கிருந்ததாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன என்று கூறுகிறது.           கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் விட்டான். அவன் உயிர்விட்டப் பிறகு அவனை பார்க்காமலே நட்புக் கொண்டிருந்தப் பிசிராந்தையாரும், சோழனுடன் இருந்த பொத்தியார் என்ற புலவரும் அவன் வடக்கிருந்த இடத்தின் அருகில் வடக்கிருந்து உயிர்...

எண்ணம் போல் வாழ்வு

                                   எண்ணம் போல் வாழ்வு   நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·                    மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·                      வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·         கடமையைச் செய்யுங்கள், மகிழ்ச்சியை அறுவடை செய்யலாம். நன்மை, தீமை என்று எது நடந்...