Skip to main content

சங்க இலக்கியத்தில் உளவியல்

 

சங்க இலக்கியத்தில் உளவியல்


மனிதனின் மனத்தைக் குறித்துத் தோன்றிய உளவியல் கோட்பாடுகளும் கருத்தாக்கங்களும் இலக்கிய ஆய்வுகளைப் பாதித்துள்ளன. மனிதமனம் பற்றிய சிந்தனைகள் பிளேட்டோ முதலான அறிஞர்களால் பல நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளன. ஆயினும் உளவியல் ஆய்வு, அறிவியல் அடிப்படையில் ஆராயக்கூடிய ஒரு துறையாக 19 – ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் நிலைபெறலாயிற்று. இவ்வகையில் இத்துறையில் குறிப்பிடத்தக்கப் பணியை ஆஸ்திரிய நாட்டு வியன்னாவைச் சேர்ந்த சிக்மண்ட் பிராய்டு (கி.பி. 1856 – 1939) என்பவர் மனத்தின் இயல்பு, பாகுபாடு, செயற்பாடு என்னும் பகுப்பு நிலைகளில் மனத்தினை ஆராய்ந்து உளவியலுக்கு அறிவியல் தகுதியை அளித்தார். இவரது ஆய்வுமுறைகள் இலக்கியப் படைப்புக்களை ஆராயப் பலவகையிலும் பயன்பட்டு வருகின்றன.

இலக்கியத்தில் உளவியல் அணுகுமுறைகள்

            இலக்கியத்தை உளவியல் பார்வையோடு அணுகும்போது இலக்கிய ஆக்கங்களில் வரும் கதைமாந்தர்களின் மனநிலையோடு படைப்பாளியின் மனநிலையையும் தெளிவாக அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது. இலக்கியத்தை உளவியல் பார்வையில் அணுகும் போக்குப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படாததாகவும், சர்ச்சைக்கு உரியதாகவும் இன்றளவும் இருந்து வருகின்றது. படைப்பாளி, கதைமாந்தர்களைப் படைக்கும்போது அவற்றினுள் உருமாற்றம் பெறுகின்றான். ஓர் இலக்கியப் படைப்பாளி, சமுதாயத்தின் பிற மனிதர்களிடமிருந்து வேறுபட்டுத் தோன்றுவதற்கான அடிப்படைக் காரணம் அவனிடமுள்ள உளவியல் அறிவேயாகும்.

            குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என்று அனைத்து வகை மாந்தர்களின் மனநிலையில் நின்று, அவரவர் மனப்போக்கிற்கு ஏற்றவாறு எழுதும் திறமையே படைப்பாளியின் தனித்தன்மையாகும். உளவியல் அறியாத ஒருவன் படைப்பாளியாக இருப்பது கடினமே. இலக்கியம் வாழ்க்கையை உள்ளவாறு பிரதிபலிக்கின்றது என்று எண்ணும் கருத்துடையவர்களும், அது வாழ்க்கையைக் கற்பனையுடனும் இயம்புகின்றது என்ற கோட்பாட்டாளர்களும் உள்ளனர். கதைமாந்தர்களின் வாயிலாகப் படைப்பாளியின் மனத்தை அறிதலே உளவியலின் தனிச்சிறப்புக் கூறாகும்.

இலக்கியமும் உளவியலும்

          மனிதனின் எண்ணம், நடத்தை, படைப்பாற்றல் போன்றவை இலக்கியத்துடனும் உள்ளத்தோடும் தொடர்புடையன. சிக்மண்ட் பிராய்டின் உள்ளுணர்வு பகுப்பாய்வின் அடிப்படையில் இலக்கிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுடனும் படைப்புக்கள் பல தோன்றியும் வருகின்றன. இலக்கியங்களில் காணப்படும் கனவு பற்றிய சிந்தனைகள் உளவியல் சார்புடையன. சங்க இலக்கியத்தில் காணப்படும் அகப்பாடல்கள் 1862 பாடல்களும் உளவியல் அமைப்பில் அமைந்துள்ள பாடல்களாக உள்ளன. தொல்காப்பியமும் மெய்பாட்டியல் உளவியல் இலக்கணமாக அமைந்துள்ளது.

        இலக்கியத்தை உளவியல் நிலையில் ஆராயும்பொழுது, 1. படைப்பாளி உளவியல் 2. படைப்பாக்க உளவியல் 3. இலக்கியம் அளிக்கும் உளவியல் 4. அவையினர் உளவியல் எனப்1 பேராசிரியர் ரெனிவெலாக்குப் பகுத்துரைப்பர். முதலிரண்டு வகைகளும் படைப்பாளர் நோக்கிலும், அடுத்தது பாடுபொருள் நோக்கிலும், அவையினர் உளவியல் சுவையினர் நோக்கிலும் அமையும்.

படைப்பாளி உளவியல்

        படைப்பாளி தொடர்பானவை. பொதுவாகக் கலைஞனின் இயல்பு பிறரினும் வேறுபட்டது என்பர். புலவனின் இயல்பை நரம்பு நோய்க்கும் (Neuroticism), பைத்தியத்திற்கும் (Psychosis) இடைப்பட்டதாகக் கிரேக்கர்களும் கருதினர். கவிஞன் பிறரினின்று ஒரு சிலவற்றில் மிகவும் குறையுடையவனாகவும், ஒரு சில கூறுகள் பிறரினும் மிகுந்த நிறையுடையவனாகவும் காணப்படுதல் உண்டு. அவன் பெற்றுள்ள தனிச்சிறப்பு அவனது இழப்பிற்கு ஈடாகும் என்று உள நூலறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இலக்கியக் கொள்கைஎன்ற நூல், போப்கூனர் - குள்ளர், பைரன் - கோணற் காலினர், பிரௌஸ்ட் - காசநோயும் நரம்பு நோயுமுடைய உயரமானவர், கீட்சுபிறரை விடக் கட்டையானவர், தாமசு உல்வுமிக உயரமானவர்”2 என்று குறிப்பிடுகிறது.

           சங்க காலத்திலும் பெருங்கண்ணன், முடமோசியார், நரைமுடி நெட்டையார், நெடுங்கழுத்துப் பரணர், நெட்டிமையார்  போன்ற பெயர்களைக் காணும்போது முன்னர் கூறியது உண்மையோ என்று தோன்றுகிறது. ஒருவரது குறை அவனுக்குத் தூண்டும் உணர்வாய் அமைந்து பிறத்துறைகளில் மேம்பட வைக்கிறது என்று கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, ஐம்பொறிகளில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு உடையவர்கண் தெரியாதவர், காது கேளாதவர், ஊமையர், கூர்மையான அறிவுடையவராகவும் பிற பொறியுணர்வுகளில் பிறரினும் மேம்பட்டவராகவும் விளங்கல் காணலாம். எழுத்தாளர்கள் வாழ்க்கை சிக்கலிருந்து தப்பிக்கும் மனவுணர்வினாலேயே எழுதுகின்றனர் என்றும்  தமது அனுபவத்தை எழுதுகின்றனர் என்றும் பல்வேறு கருத்துக்கள்   உள்ளன.

            ஓர் எழுத்தாளன் பல்வேறு மனநிலைகளின் பிரதிபலிப்பாகவே அவனுடைய பல்வேறு பாத்திரங்கள் படைக்கப்படுகின்றன எனலாம். இவையெல்லாம் மிகவும் சிக்கலான, தெளிவுப்படுத்த வேண்டிய செய்திகளாகும். சங்கப் புலவர்களில் ஔவையார், ஆதிமந்தியார், வெள்ளிவீதியார், போன்ற பெண்பாற் புலவர்கள் வாழ்வில் அவலம் நேர்ந்ததாகக் குறிப்புக்கள் கிடைப்பதால் அவர்களின் அகப்பாடல்களில் வெளிப்படும் சோகவுணர்வு வெளிப்படுகின்றது என்பர். சங்கப்புலவர் வாழ்க்கையில் அறிப்படாத நிலையில் நமக்கு இவ்வகை ஆய்வுகட்கு வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. உருமேனிய நாட்டு எல்.ரூசா கவிஞர்களை மூன்று வகைகளில் காண்கிறார். அவை,

1.   கவலையற்ற மகிழ்வகையினர்இவர்கள் கலையாக்கத்தில் இடையறா மகிழ்வும் பறவை போன்ற கவலையற்ற வாழ்வும் உடையவர்.

2.   குழம்பிய அவல வகையினர்முன்னவருக்கு நேர்மாறானவர்

3.   சமநிலை உணர்வினர்அவலமும் மகிழ்வும் ஆகிய இருநிலைகளையும் சமனிலைப் படுத்தி அளிக்கும் தன்மைக் கொண்டவர்.

இறுதி வகையினரே பெரும்பான்மையினர் என்று எல்.ரூசா”3 விளக்கியுள்ளார். சங்கப் புலவர்கள் பெரும்பான்மையினர் மகிழ்வகையினரே எனலாம்.

           வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,

            நெடிய என்னாது சுரம்பல கடந்து

            வடியா நாவின் வல்லாங்குப் பாடி,

            பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி,

           ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி

           வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை ....”4

என்றுக் கோவூக்கிழார் விளக்கிக் கூறுவதாலும் இதை அறியலாம்.

பழுமரம் உள்ளிய பறவைப் போல”5

பழுமரம் தேடும் பறவை போல”6  

என வரும் இடங்கள் சங்கப் புறப்பாடல்களில் பல இடங்களில் இடம்பெறுகின்றன.

படைப்பாக்க உளவியல்

         படைப்பாக்க உளவியல் கவிஞனின் உளவியலுக்கும் கவிதையின் உருவாக்கத்திறகும் இடையே உள்ள வேறுபாடு ஆராயப்படுகிறது. உளக்கருத்துக்கும் அதை வெளியிடும் நிலைக்கும் உள்ள உறவு ஆராயத்தக்கதாகும். முதற்கண்  எந்நிலையில் படைப்பாளியாகின்றான்? அவனுக்கு ஏற்படும் தூண்டுணர்வு அல்லது அகத்தெழுச்சி (Inspiration) எவ்வாறு வாய்க்கிறது? என்பன சிந்திக்கத் தக்கனவாகும். சிலர் தெய்வீக ஆற்றலால் விளைகிறது என்பர். பக்தி இலக்கிய காலத்திலும், காப்பிய காலத்திலும் இவ் இறைத்தூண்டுதல் பற்றிய செய்திகள் உள்ளன.

          போதைத் தரும் குடிவகைகளை உட்கொள்வதால் கவிதை பிறக்கிறதென்றும் சிலர் கூறியுள்ளனர். சங்கப் புலவர்கள் அரசவையில் பெறும் நறவும், கள்ளும் உண்டபிறகு பாடினர் என்று கருதுமாறு, ஆற்றுப்படை நூல்களின் குறிப்புக்கள் காண்கிறோம். இவற்றைத் தமிழ்க் கவிஞர் சிலரும் போதைதரும் குடிவகைகளை உட்கொண்டு கவிதை எழுதியதாகச் சுட்டுவர்.

         ஒரு சிலருக்குத் தக்க சூழ்நிலைகள் அமைந்தால்தான் எழுதத் தோன்றுமாம். ஒருவருக்கு அழுகிய ஆப்பிள் பழத்தை எதிரே வைத்தபிறகே எழுத்தாற்றல் பிறக்கமாம்! மற்றொருவர் எழுத அமருமுன் துறவி போல் உடுத்திக் கொள்வாராம். ஒரு சிலர் இரவு நேரத்தையும் மற்றும் சிலர் காலை நேரத்தையும், எழுதுவதற்கு ஏற்ற நேரமாகக் கொண்டனர். ஒரு சிலர் ஆரவராமான சுழலில் எழுதியுள்ளனர். பொருளாதார நெருக்கடியும் ஒருவரது கவிதைப் பிறப்புக்குக் காரணம் என்பர். ஆற்றுப்படைப் பாட்டுகளும், பரிசில் துறைப் பாடல்களும் இதனை வலியுறுத்தும்.

         வாய்மொழியாகப் பாடியவற்றிற்கும் எழுத்தாணி கொண்டு எழுதியவற்றிற்கும் வேறுபாடுண்டு. கலி, பரிபாடல், வரி போன்ற பா வகைகளின் வாய்மொழித் தன்மையும், இசைத் தொடர்பும் மிகுதி. அகவல், வெண்பாப் பாடல்கள் எல்லாம் எழுதப் பெற்றத் தன்மையையே அதிகமாகக் கொண்டுள்ளன. மேலும் இவற்றில் ஓசை மட்டும் சிறப்பிடம் பெறுகிறது இசை அன்று. பக்தி இலக்கிய பாடல்களில் வாய்மொழியாகப் பாடப்பட்டாலும் இசைத் தன்மைமிக்க பல்வேறு விருத்தப்பா வகைகளால் அமைந்துள்ளன.

           இன்றும் தாமே மைகொண்டு எழுதுதல், தட்டெழுத்தில் பதிவித்தல், கூறி எழுதச் செய்தல், என்று பல முறைகள் உள்ளன. சிலர் முன்னரே கருத்தில் உருவாகியதைப் பின்னர் எழுதுகின்றனர். ஓர் ஆசிரியனின் நினைவில், உள்ளம் படைப்பதை நினைவுள்ளம் இலக்கிய வடிவில் தருகிறது.

இலக்கிய உளவியல்

        இலக்கியம் அளிக்கும் உளவியல் என்பதே உண்மையான இலக்கியம் சார்ந்த உளவியலாகும். மேற்கூறிய இரண்டும் இலக்கியத்தின் புறத்தே நிற்பவை. சங்க இலக்கியத்தைப் பொறுத்தளவில் இலக்கியம் அளிக்கும் உளவியல் என்ற அடிப்படையில் விரிவாகவும், விளக்கமாகவும் அமைந்துள்ளது.

தொல்காப்பியர் குறிப்பிடும் இலக்கிய விதிகள், துறைகள், கூற்றுகள், மெய்ப்பாடுகள் போன்ற அனைத்தும் தனித்தனியே உளவியலுடன் ஒப்பிடத் தக்கனவாகும். இயற்கைப் பின்னணிக்கேற்ற காதலுணர்வைப் படைப்பதே சிறந்த உளவியல் அடிப்படையினதாகும். சங்கப்பாடல்கள் அனைத்தும் அமைப்பாலும், நடையாலும் உரையாடல் திறனாலும், கருத்து அமைவாலும், நிகழ்ச்சிப் பின்னலாலும் பாத்திரப் படைப்பாலும் உளவியல் அடிப்படை என்பது கண்டுத் தெளியலாம்.

        சங்க இலக்கியம் 1862 அகப்பாடல் உடைய காதல் இலக்கியம். ஒவ்வொரு பாடலிலும் ஆண், பெண் உள்ளங்கள் உள்ளன. இப்பாடல்களைக் கற்பவர் 3724 காதல் உள்ளங்களைப் பற்றிய அறிவுப் பெறுவர். மேலும், காதல் தலைமையுடைய இவ்விருவரைப் பற்றி பாங்கன் நினைத்தனவும், ஊரார், கண்டார் நினைத்தனவும் ஆகிய பல்வேறு உள்ளங்களின் அறிவினையும் பெறுவர்”7 என்று டாக்டர்..சுப.மாணிக்கனார் குறிப்பிடுகிறார்.

             களவு காலத்தில் இனியவளாக இருந்த தலைமகள் கற்புக் காலத்தில் பரத்தையிற் பிரித்து இன்னாதவனாக மாறிவிட்டதை நினைத்து வருந்துகிறாள் தலைவி. நெருஞ்சி மலர் கண்ணுக்கு இனிதாகக் காட்சியளிக்கிறது, ஆனால் அருகிற்சென்று நாம் நடக்க முயன்றால் காலைப் பதம் பார்த்துவிடுகிறது. தலைவனின் நிலையும், இதுபோல உளது எனத் தலைவி நோகின்றாள்.

         நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே!

          புன்புலத்து அயன்ற சிறியிலை நெருஞ்சிக்

          சுடகின் புதுமலர் முட்பயந்  தாஅங்கு

          இனிய செய்தநம் காதலர்

          இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே!”8

அள்ளூர் நன்முல்லையாரின் இப்பாடலில் அவலத்திற்கு ஏற்ற அமைப்பு உள்ளது. அடிப்பட்டவள் பலகாற் சொல்லி அரற்றுவது போன்ற பாங்கில் பாடல் யாக்கப் பெற்றுள்ளமை அவலத்தை மிகுதிப்படுத்துகிறது.

          அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை!”9 என்ற குறிஞ்சிப் பாட்டுத் தொடங்குகிறது. தாயிடம் கூறப்போகும் செய்தி. அவளுக்கு மிக்க சினமூட்டும் என்பதால் அறத்தோடு நிற்கும் தோழி இவ்வாறு கெஞ்சிக் கெஞ்சி அழைக்கின்றாள், ”தாயே வாழ்வாயாக! தான் சொல்வதை விரும்பிக் கேட்பாயாக, தாயே!” என்னும் இந்நடைப் போக்குஅம்மா அம்மாஎன்று கொஞ்சிக் குழந்தையை நினைவூட்டவில்லையா? இத்தகைய கருத்துக்கேற்ற நடைப் போக்குகள் சங்க இலக்கியத்தில் மிகுதியாக உள்ளது.

          காமர் கடும்புனல் கலந்தெம்மொடு ஆடுவாள்”10 என்று தொடங்குகிறது குறிஞ்சிக்கலிப் பாட்டு ஒன்று தலைவி ஆற்றில் நீராடுகையில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட இருந்தபோது, தலைவனால் காப்பாற்றப்பட்ட செய்தியை தாயிடம் தோழி கூறுகிறாள், ‘தினைப்புலம் காக்கச் சென்றவர்கள் நீராடப் போனது ஏன்?’ என்று தாய் கேட்பாள் ஆகையால்காமர் புனல்’, ‘கண்டார்க்கு நீராடும் விருப்பத்தை ஊட்டும் புனல் என்றாள். ‘நிதானமாக நீராடியிருக்கலாமேஎன்று சினவாமல்கடும் புனல்‘ – வேகம் மிகுதியால் இழுத்துச் சென்றுவிட்டதுஎன்றாள். ‘தனியாகவா அவளை விடுத்துத் தோழி எல்லாம் வேடிக்கை பார்த்தீர்கள்?” என்று தாய் கடியுமுன் கலந்து தான் ஆடினோம். அவளை மட்டும் வெள்ளம் இழுத்துச் சென்றதுஎனக் கூறுவாள் போலக்கலந்தெம்மொடு ஆடுவாள்என்றும் கூறினாள். இதுபோல உரையாடல் முழுவதும் உளவியலுக்கு ஏற்பத் திறம்பட அமைந்திருக்கும் என்பதால் சொல்லுக்குச் சொல், வரிக்குவரி, சங்கப் பாடல்களில் காணலாம்.

          குறிஞ்சிப் பாட்டு முழுவதும் உளவியல் அடிப்படைத் தன்மை பொருந்திருப்பதைப் பகுத்து ஆராய்தல் கூடும். சங்கப் பாடல்கள் உளவியல் தன்மை மிக்கன என்பதற்கு இவ் ஒரு பாடல் உதவும். இதில் பெருமை மிக்கத் தலைமகனும், மென்மை மிக்கத் தலைவியும் அறிவுமிக்க  தோழியுமாகிய பாத்திரப் படைப்பும், தலைவியின் அவலநிலையை அழகுற எடுத்துக் காட்டும் கருத்தமைதியும் சிந்திக்கத் தக்கவையாகும். ‘அன்னாய்என்று தாயை அழைத்துநீயும் வருந்ததிஎனத் தாய் அனுதாபப் படுவாள் போலப் பேச்சைத் தொடங்கி, ”இவளும் தேம்பும், என்று தலைவியின் அழுகையைச் சுட்டிக்காட்டி, ‘உங்கள் இருவருக்குமிடையே என்ன செய்வதென்று தெரியாமல் யானும் அஞ்சுகிறேன்” – இரு போர் அச்சமோடு யானும் ஆற்றேன்என்று வருந்திக் கூறிசெப்பல் ஆன்றிசின்; சினவாதமோ?” – ‘உண்மையை உரைக்கின்றேன்! கோபமில்லாமல் கேட்பாயாகஎன்று தோழி தொடங்கும் அழகிலேயே உளவியல் பாங்கில் நுட்பத்தைக் காணலாம். பாட்டு முழுதும் கற்பார் இதனை ஓர் உளவியல் பாட்டுஎன்றே கூறுவர். சங்க இலக்கியத்தில் இவ்வாறு உளவியல் ஆய்வுக்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

           சங்க இலக்கியத்தில் ஓவியம் பாட்டுப் பொருளாகும் இடம் ஒன்றுண்டு. இருபுறமும் மலைச்சாரல், இடையில் நெருப்புப் போன்ற பூக்களையுடைய சிவந்த வேங்கைமரம்,  அதன்மீது அருவிநீர் பூச்சொரிதல் போலக் கொட்டிக் கொண்டிருக்கிறது. இக்காட்சியைக்கஜலட்சுமிஓவியத்தோடு கபிலர் பெருமான் இரண்டு பக்கமும் இருயானைகள் இருந்து பனிநீரைச் சொரி தர, இடையில் திருமகள் செந்தாமரைப் பூவில் வீற்றிருப்பாள். இதனைக் குறிஞ்சிநில மலைக்காட்சிக்கு ஒப்பிடுவதால் கசலட்சுமி பற்றிய சித்திரமோ அல்லது இரவிவர்மர் கஜலட்சுமி ஓவியம் தீட்டியுள்ளார். ஆயினும் அவரது கற்பனைக்கு உதவியதன்று, ன்றை ரவிவர்மாவிற்கு முன்பே சித்திரமாய்ச் சிற்பமாய் நிலவியிருந்தது. அவற்றின் அடிப்படையில் கபிலரால் தீட்டப் பெற்றது இக்கலித்தொகைப் பாடல்,

            கதிர்விரு கனைகடர்க் கவின் கொண்ட நனஞ்சாரல்

             எதிரெதிர் ஓங்கிய மால்வரை அடுக்கத்து

             அதிர்இசை அருவிதன் அஞ்சின்ன மிசைவீழ

             முதிரினர் ஊழ்கொண்ட முழுவுத்தாள் எரிவேங்கை

             வரிநுதல் எழில்வேழம் பூநீர்மேல் சொரிதரப்

             புரிநெகிழ் தாமரை மலரங்கன் வீறெய்த்த்

             திருநயந் திருந்தன்ன தேங்கமிழ் விறல்வெற்ப”11

ஓவியத்தையே பாட்டுப் பொருளாக்கிய தொன்மை மிக்கத் தமிழ் கவிதை என்று இதனைக் கொள்ளலாம்.

          ஓவியம் போன்றதே கவிதை”12 என்பது உரோமப் பேரறிஞர் வகுத்த வாய்பாடு, தமிழ்க் கவிதை இதில் பெற்ற வெற்றியை மறுக்கமுடியாது.

           ஓர் ஓவியனும் ஒரு கவிதையும், ஒரு படைப்பாளனும் ஓரே விதமான உளநிலையை நம்மிடம் ஏற்படுத்தக் கூடும். கலைகளிடையே பொதுவியல்புகள் இருந்தாலன்றி இஃது இயலாது ஒருவகையான கலையுணர்வை, மனநிலையை உண்டாக்க வேண்டுமானால், அவற்றிற்கேற்ப பொதுத் தன்மைகளும் அவற்றிடையே அமைந்திருக்க வேண்டும்.

அவையினர் உளவியல்

           இவ்வகை உளவியல் படிப்பவரை, கலைஞரைப் பற்றியது. வாசகர்ளாலேதான் இலக்கியப் போக்குகள் மாறுகின்றன. புதிய வகைகள் தோன்றுகின்றன என்றில்லாது ஆராய இவ்வகை இடம் தரும். இலக்கியப் போக்கை வாசகர்களின் மனப்போக்கே தீர்மானிக்கிறது.

 ஒவ்வொரு காலக்கட்டத்தில் உலகெங்கும் ஒவ்வொரு விதச் சுவையுணர்வு தலை தூக்குவதால், அதற்கேற்ப இலக்கியம் திசை திரும்புகிறது. சமுதாய மனவுணர்வு அலைகள் உலகெங்கும் ஒரு போக்காக நிகழ்வதும் உண்டு. படிப்படியாக முன்பின்னாக நிகழ்வதும் உண்டு. உலகெங்கும் வீரநிலைக் காலம் தொன்மையான இனங்களில் முன்பின்னாகத் தோன்றிப் பலகாலம் நிலைத்திருக்கிறது. வாய்மொழிக் காலத்துத் தோன்றிய இலக்கிய பண்புகள் பலவும் ஒரே அடிப்படையில் அமைந்துள்ளது. மக்கள் மனத்தைப் பிரதிபலிக்கும் புராணச் செய்திகளால் தொன்மைக் கூறுகளிலும் ஒற்றுமையும் வேற்றுமையும் காணப்படுகின்றன. எனவே அவையினர் உளவியல் என்பது சமுதாய பின்புல ஆய்வாக அமைகிறது.

நிறைவாக, 

இலக்கியம் தோன்றிய அன்றே அதன் வரலாறும், அதன் உளம் சார்ந்த நிகழ்வுகளும் உடன் தோன்றுகிறது. வரிவடிவம் தோன்றாமுன் வாய்மொழி இலக்கியமாக இருந்த காலத்திலும் அதற்கொரு வரலாறுண்டு ஆயினும், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட அதனைப் பற்றி உய்த்துணர் நிலையைக் குறிப்பிடுகிறது. பின்னர் படிப்படியாகத் தோன்றிய இலக்கிய வரலாறுகளின் வரலாறு பல்வேறு கால நிலைகளில் பல்வேறு வகைகளாக உருப்பெற்ற சிந்தனை வளர்ச்சியைக் காட்டும். உளவியல் ஆய்வுக்கு மனித மனம்போல இலக்கியமும் பயன்படுவதுண்டு.

உளவியல் நன்கு கற்றவர்கள் இயல்பு நீங்கிய மனநிலைகள், மன எழுச்சிகள், பாலுணர்வுச் சிக்கல்கள், கனவுகள், என்னும் பலவற்றை இலக்கியப் பனுவல்களில் கண்டு தெளிவர்.   

அடிக்குறிப்புகள்

1.    ஒப்பிலக்கியக் கோட்பாடுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், .17

2.    Rene Wellek & Austin Warren, Theory of Literature, p.105

3.    முனைவர். . கருப்பத்தேவன், தமிழும் பிறதுறைகளும், 2019, .33

4.    புறநானூறு, பா.எண்.47

5.    மேலது, பா.எண்.370

6.    பெரும்பாண், 20

7.    டாக்டர்..சுப.மாணிக்கனார், தமிழ்க் காதல், .469

8.    குறுந்தொகை, பா.எண்-202

9.    குறிஞ்சிப்பாட்டு, 1

10. குறிஞ்சிக் கலி, பா.39

11. கலித்தொகை, பா.எண்.44

துணை நின்ற நூல்கள்

1.    கருப்பத்தேவன்.முனைவர்., தமிழும் பிற துறைகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை, 2019.

2.    ஒப்பிலக்கியக் கோட்பாடுகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 1995.

3.    செல்வகணபதி.முனைவர்.சண்முக,  ஒப்பிலக்கிய வரம்பும் செயற்பாடும், ராஜா பப்ளிகேஷன்ஸ், காஜாமலை, திருச்சி,1998.

----

 

 

Comments

Popular posts from this blog

எண்ணம் போல் வாழ்வு

                                                                        எண்ணம் போல் வாழ்வு             நினைவுகளே பழக்கவழக்கங்களாக மாறுகின்றன. எனவே தான் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் அமைகிறது. வெற்றி பெற்ற அனைவரும் பிறரைத் தன் நடத்தையால் மகிழ்விக்க நினைத்தவர்களே என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ·         வங்கியில் பணத்தைச் சேமிப்பதைவிட இதயத்தில் இனிய எண்ணங்களைச் சேமிப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு உதவும் வைப்பு நிதியாகும். ·      மனம் - மகிழ்ச்சி அளிக்காத நிகழ்வுகளை மறந்து விடும் இயல்புடையது. ·         வெறுப்பு - மனத்தையும், உணர்வையும் பற்றிக் கொண்டுள்ள தொற்று நோய். எனவே வெறுப்பிற்கு விடுதலை தரும்வரை மகிழ்ச்சி நம்மை அணுகாது. ·   ...

பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்

திருக்குறளில் எனது சிறு முயற்சியாக… .  " பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்"  என்ற இத்தலைப்பில் அமைந்த 133 வரிகள் கொண்ட இப்படைப்பு முருகனின் ” கந்த சஷ்டி  கவசம் ” போன்று உருவாக்கப்பட்டது. இப்பகுதி அறத்துப்பால் 38  அதிகாரங்கள், பொருட்பால் 70  அதிகாரங்களிலிருந்து மட்டும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையில், திருக்குறளின் சாராக அமைத்து வழங்கியுள்ளேன். அறமும், பொருளும் ஒருவருக்கு அமைந்தால் இன்பம் தானாகக் கிட்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது. ”பொய்யில் புலவன் பொய்யா மொழிகள்” காக்க காக்க அறத்தைக் காக்க (1) காக்க காக்கக் குறளைக் காக்க உலக மொழிகளில் ஒப்பற்ற நூலாம், நோக்க நோக்க பெயா்த்து நோக்க மனிதன் கற்று மனிதம் காக்க ஐம்பொறி உணா்வை காக்க காக்க புகழுடன் வாழ ஒழுக்கம் காக்க அறநெறி வாழ்வை இறைவழி காக்க வானம் பொய்யா வளத்தைக் காக்க பசிப்பிணி யில்லா உலகைக் காக்க பற்றற்ற வாழ்வை பரிவுடன் காக்க அறத்தைக் காக்க அன்பைக் காக்க (2) குறையிலா வாழ்வை குணமுடன் காக்க இல்லற வாழ்வுடன் நல்லறம் காக்க பண்பொடு பயனும் அறத்துடன் காக்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க...

மனிதனாக வாழ ...

  மனிதனாக வாழ ... ·         பிறர் உன்னை தூற்றும் பொழுது தலை நிமிர்ந்து நில். ·         பொறாமை, கோபம், வீண் மயக்கம் போன்ற குணங்களை விரோதிகளாக எண்ணுதல். ·         வெற்றி -   தோல்வி,   இன்பம் – துன்பம் இரண்டையும் சமமாக பாவித்தல். ·         உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்யாதிருத்தல். ·         நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை. பகைவர்கள் இல்லாமல் வாழ முயற்சி செய்தல். ·         மனத்திடத்தோடு வாழ்தல். ·         ஏற்றத் தாழ்வு இல்லா மனநிலையுடன் இருத்தல். ·         மனிதனுக்கு உரியது - கலங்காத அறிவு, அன்பு நிறைந்த மனம், ஆரோக்கியமான   உடல். ·         எதற்கும் அஞ்சாதே -   பயம் நம்மை கோழையாக்கி விடும்.      யாரையும் வெறுக்காதே ...