பழந்தமிழரின் நீர் மேலாண்மையியல் சிந்தனைகள்
ஆய்வுச் சுருக்கம்
உலகம் நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்ற
ஐம்பெரும் பூதங்களால் ஆனது. இவை ஐந்தும்
ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. இவை தன் இயல்பில்
மாறி, மிகினும் குறையினும் அது பேரிடராக அமையும். எனவே ஆக்கவும் கெடுக்கவும் வல்ல இவற்றை முறையாக மேலாண்மை செய்வது நம்மை நாமே
காப்பதோடு உலகையும் காப்பதாயிற்று. இன்றைய சூழலில், அதிகரித்து வரும் நீர் பற்றாக்குறையைப் போக்க, நீர்ப் பஞ்சத்தைத் தவிர்க்க இன்றைய வல்லுநர்கள் நீர் மேலாண்மைச் சிந்தனைகள்
பலவற்றை முன்வைக்கின்றனர். அவர்கள் முன்
வைக்கும் நீர் வளங்களைப் பாதுகாத்தல், பெருக்குதல், சீரமைத்தல், சிக்கனமாகவும் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு கூறுகளும் சங்க
இலக்கியங்களில் தமிழர்களால் செயல்முறைப் படுத்தப்பட்டதை அறிய முடிகிறது.
முன்னுரை
ஒரு நாட்டின் வளமும் வளர்ச்சியும் நீர்மேலாண்மையை அடிப்படையாகக்
கொண்டே அமைகிறது. அதனால் ‘நீரின்றி அமையாது
உலகு’1 (குறள்- 29) வள்ளுவர் என்கிறார். மேலும் தண்ணீர் தன்னகத்தே அடக்கியுள்ள உயிர்வளர்க்கும் வலிமையை வள்ளுவர்,
”விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல்
தலைகாண்பது அரிது” 2
என்று சிறப்பிற்கிணங்க நீரினைச்
சேமிக்க ஏதுவாக பல நீர்நிலைகளை உருவாக்குபவர் கடவுளுக்கு இணையாக, உடலையும் உயிரையும் படைத்தவர் என்ற பெருமையைப் பெறுவார் எனச் சங்கச் சான்றோர்
அறிவுறுத்தினர்.
”நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே” 3
வள்ளுவர் திருக்குறளில் வான்சிறப்பு அதிகாரத்தை இடம்பெறச்
செய்திருப்பதும், இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் கதிரவன், திங்களோடு வான்மழையை இணைத்து, மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! என மழையைச்
சிறப்பித்துப் போற்றி இருப்பதும் பழந்தமிழர் மழைநீருக்கு அளித்த முக்கியத்துவத்தைப்
பறைசாற்றும்.
நீர்நிலைகளை உருவாக்குதல்
இவ்வுலகம் தன் நிலை திரியாமல் இருக்க, நீர்ப்பதத்தோடு கூடிய மண் இன்றியமையாதது என்பதைப் பழந்தமிழர் உணர்ந்திருந்தனர். உயிர்கள் வாழ உணவு எவ்வளவு முதன்மையானதோ அதைப் போல, இந்நிலம் வளமாக இருக்க நீர் முதன்மையானது என்பதை அறிவுறித்தினர். இதனை,
”நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே”4
என்ற புறநானூற்று அடிகள்
தெரிவிக்கின்றன.
உலக உயிர்கள் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் நீரையும் நிலத்தையும்
ஒன்றாகக் கலக்கச் செய்வோர், இந்த உடம்பையும்
உயிரையும் படைத்தவர் என்ற பெருமையைப் பெறுவார் என்கின்றனர் சங்கச் சான்றோர். இதனை,
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே” 5
என்று புறநானூறு குறிப்பிடுகிறது.
நெல் முதலானவற்றை விதைத்து மழையை எதிர்பார்த்திருக்கும் மானாவாரி
புன்செய் நிலம் நிறைய இருப்பினும் அதனால் யாதொரு பயனும் இல்லை. அதனால் நிலம் பள்ளமான இடங்களிலெல்லாம் நீர்நிலை பெருகும்படி நீரைக் கூட்டவேண்டும். அவ்வாறு செய்வது, இவ்வுலகத்தில்
தம் பெயரினை நிலைநிறுத்துவதாகும் என்பதைப் புறநானூற்றுப் புலவர்,
”வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்குஉதவாதே அதனால்
.... ..... ...... .........
........... ..........
நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே
தள்ளாதோர் இவண்தள்ளா தோரே”6
என்று உலகிற்கு உணர்த்துகிறார்.
நீர்த் தடுப்பு மற்றும்
மழைநீர் சேமிப்பு
மழை நீரினைத் தடுத்து நிறுத்தி முறையாகப் பயன்படுத்தினால்
நீரின் தேவையும் அதனால், உணவு மற்ற பிற
தேவைகளும் நிறைவுறும்; தொழில்களும் சிறந்து விளங்கும்; பழந்தமிழர், இவ்வகை நீரின் தேவையை உணர்ந்திருந்தால், அந்நீரினைப் பலவகையினும் சேமித்து, அதனைப் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தினர். காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடி, கடலில் கலப்பதால் நன்மை இல்லை என்பது உணர்ந்து, ஓடிவரும் மழைநீரினைத் தடுத்து நிறுத்த நீரோட்டங்களின் இடையே நீர்த்தேக்கங்களை
ஏற்படுத்தி, மழைநீர் சேமிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். பெருமழையில் ஓடிவரும் காட்டாற்று வெள்ளத்தை அங்கே கிடைக்கும் மரங்கள், கரும்புகள் போன்றவற்றைக் கொண்டு தடுத்து நிறுத்தித் தேக்கினர். ஊர்கூடித் தடுத்து நிறுத்தும்போது ஏற்பட்ட ஆராவாரத்தை ‘பூசல்’ என சங்க இலக்கியத்தின் வழி அறியலாம்.
மழைநீரைச் சேமித்துவைக்க ஏதுவாக நீர்நிலைகளை அமைப்பது ஆட்சியாளர்களின்
தலையாய கடமையாகத் திகழ்ந்தது. இவ்விதம், மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடிவரும் மழை வெள்ளம் கடலில் கலந்து வீணாவதைத்
தடுத்து நிறுத்துவதற்காகக் கட்டப்பட்ட அணைகளை ‘கற்சிறை’ என்று தொல்காப்பியப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்”7
நகர்புறங்களில் மழைநீரைச் சேகரிக்கும் வழக்கம் இராசராசசோழன்
காலத்திலும் நடைமுறையில் இருந்திருக்கிறது. தஞ்சைப் பெரியகோயில் வளாகத்தில் பெய்யும் மழைநீர் முழுவதும் சிவகங்கை குளத்தில்
சேமிக்கப்படும் வகையிலும், நிலத்தடியில்
புதைக்கப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் நகரிலுள்ள முக்கிய குளங்களுக்கும், கிணறுகளுக்கும், அரண்மனைக்கும்
நீர் வழங்கப்பட்டதற்கான தடையங்களும், தேர்ந்த உத்திகளும்
தற்போதும் காணக்கிடைக்கின்றன.
பெரும் ஏரிகளில் தேக்கி வைக்கப்பட்ட நீர் ‘குமிழித் தூம்பின்’ உதவியோடு, புனல் வாயில் வழியே திறக்கப்பட்டு, போக்குக் கால்வாய்களின் மூலம் பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. ஏரி நீர் முழுவதையும் சிறு அமைப்பாகத் தாங்கி நிற்கும் தமிழரின் எளிய ஆனால்
வலிமையான தொழில்நுட்பமான ‘குமிழித் தூம்பு’ உத்திமுறை இன்றும் வியத்தகு ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல, உழவர்கள் பட்டை எனும் கருவிகொண்டு நீர் இறைத்து வயல்களில்
பாய்ச்சிய செய்தியை மதுரைக்காஞ்சி காட்டுகிறது.
நீர் நிலைகள்
வேளாண்மை தவிர்த்து குடிநீர் உள்ளிட்ட பிறத் தேவைகளுக்கென
தனியே கிணறு, கூவல், நீர் உண்துறை
போன்றவற்றை உருவாக்கி பராமரித்தனர். இவற்றுள் கிராமத்து
பொதுநீர்நிலையான நீர்உண்துறையின் கட்டுமான அமைப்பு சிறப்பிடம் பெறுகிறது. அருவிநீரானது தரைக்குக் கீமே சுருங்கை மூலம் நீர் மீண்டும் ஆற்றில் கலக்கும்
அற்புதத் தொழில்நுட்பத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.
”...... ........... உண்துறை
மலை அலர் அணியும் தலைநீர் நாடன்” 8
பாலை நில மக்களின் நீர்
தேவைக்காக ‘கூவல்’ எனப்படும் நீர்நிலை
உருவாக்கப்பட்டிருந்தது. இதில் பெறப்படும்
நீர் மண் கலந்து கலங்களாக இருந்ததால் தேற்றாங் கொட்டையைப் பயன்படுத்தி நீர்சுத்திகரிப்பு
செய்து பயன்படுத்தினர். தமிழரின் இயற்கை
அறிவியல் தொழில்நுட்பத்திற்கு இது மிகச்சிறந்த சான்றாகும்.
”பூவற் படுவில் கூவல் தோண்டிய
செங்கண் சில்நீர் பெய்த சீறில்”9
நீரோட்டங்களின் இடையே மண்
அணைகள் அல்லது மண்கரைகள் கட்டும்போது நீர்க் கசிவைத் தடுப்பதற்காக ஏரிக்கரையில் கிடைக்கும்
மண்ணோடு, சில இயற்கைப் பொருட்களையும் சேர்த்து அழைத்து ‘அரைமண்’ உருவாக்கி நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ள விதம் பண்டையத் தமிழரின்
நுண்ணறிவைக் காட்டுகிறது.
நீர்வழிச் சூத்திரம்
நீர்நிலைகளிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் வெளியேறுவதற்கு
குமிழி, மதகு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மழைகள் அனைத்தும் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுக் கட்டப்பட்டுள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.
”ஓம்பா ஈகை மாவேள் எவ்வி
புனல் புதவின் மழலையோடு கழனி” 10
எடுத்துக்காட்டாக, கணக்கதிகாரத்தில் நீர்வழிச் சூத்திரம் என்கிற பாடல் மூலம், ஒரு குளத்தில் நீர் முழுவதும் ஆயகட்டுக்குப் பாய்ச்ச எவ்வளவு நேரம் பிடிக்கும்
என்பதனையும் கணக்கிடலாம். இந்நூலின் உரையாசிரியர்
மாதிரிக்கணக்கு ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார்.
”ஒரு நாளின் நாழிகையை ஒல்லா மனத்தின்
உரு நாழிகைக்கு ஈத்து மானே – தருமிலக்கம்
சேர்ந்ததற்கு வேறானது இன்னாழிகைக் கீந்து
பார்த்த தினம் பேரே பகர்”11
ஒரு குளத்திலிருந்து ஆயக்கட்டுக்கு நான்கு நாழிகையில் நீர்
பாயும் மதகு ஒன்று; ஆறு நாழிகையில் பாயும் மதகு ஒன்று; பன்னிரண்டு நாழிகையில் பாயும் மதகு ஒன்று இருப்பின் மூன்று மதகுகளையும் திறந்துவிட்டால்
எவ்வளவு நேரத்தில் ஆயக்கட்டு முழுமைக்கும் நீர் பாயும் என்பது கணக்கு. இதற்கு விடை இப்பாடலில் உள்ளது.
ஒரு நாளின் நாளிகை 60.
ஒரு நாழிகைக்கு ஈந்து முதல் மழை 60/4 எனில் 15
இரண்டாம் மடை 60/6 எனில் 10
மூன்றாம் மடை 60/12 எனில் 5
மொத்தம் = 30
இந்நாளின் நாழிகைக்கு ஈந்து 60/30 எனில் = 2
மூன்று
மதகுகளையும் திறந்துவிட்டால் ஆயக்கட்டு முழுமைக்கும் இரண்டு நாழிகையில் நீர் பாய்ந்துவிடும்
என்பதே இப்புதிருக்கு விடை. மேலும் இப்பாடல்
தரும் சூத்திரம் மூலம் குளத்தின் கொள்ளளவு எவ்வளவு, மதகுகளின் வழி வெளிவரும் நீரின் அளவு என்ன?, பாசன வயலின் பரப்பு, மண்வகை, இருப்பிடம் ஆகியவற்றிற்கு ஏற்ப இம்மதகுகள் திறக்கப்பட வேண்டிய கால அளவு என்ன
உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அறியலாம்.
கல்லணையும் நீர்மேலாண்மையும்
பழந்தமிழரின் நீர்மேலாண்மை தொழில்நுட்பத்திற்கு மகுடம் போன்றது
கரிகாலன் கட்டிய மிகப்பழமையான கல்லணை. கடற்கரையில்
நாம் நிற்கும் போது கால்களுக்கு இடையில் உள்ள மணலை நீர் வாரிச் செல்லும். அதே சமயம் கால்கள் மண்ணுக்குள் புதையும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் அக்காலத்தில் கல்லணை கட்டப்பட்டிருக்கிறது. இக்கல்லணை காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்தி, கழனிகளில் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியது.
ஆற்றுமணல் படுகையில் பெரிய பெரிய பாறைகள் போட்டப்பட்டதும்
அந்த இடத்தில் உள்ள மணல் அரித்து பாறைகள் ஆற்றின் கீழ்மட்டத்தில் புதைந்தன. அதன்மேல் களிமண்ணைப் பரப்பி, அதன் மேல் மற்ற
பெரிய பாறைகள் அடுக்கப்பட்டன. இப்படி ஒன்றன்மேல்
ஒன்றாக பல பெரிய பாறைகள் அடுக்கப்பட்டிருந்தன. ஆற்றில் மணல்பகுதி முடிந்து கடினப்பகுதி வந்ததும் கீழ்மட்டத்தில் உள்ள பாறைகள்
அசையாமல் இறுகி பல்லாயிரக்கணக்கான கற்பாறைகள் அடுக்கப்பட்டு, தற்போது கல்லணை என அழைக்கப்படும் அணை 1080 அடி நீளத்திலும் 40 முதல் 60 அடி அகலத்திலும் வளைந்த வடிவத்தில் கட்டப்பட்டிருக்கிறது. ஓடிவரும் காட்டாற்றின் மணலில் அடித்தளம் அமைத்துக் கட்டியுள்ள பழந்தமிழரின்
இந்தத் தொழில்நுட்பம் உலகின் வியத்தகு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. மேலும், உலகின் வியத்தகு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. மேலும், 2000 ஆண்டுகள் கடந்தும் உலகிலேயே செயல்பாட்டில் உள்ள ஒரே அணை என்ற
பெருமைக்கும் கல்லணைக்கே உரியது.
நீர்நிலைப் பாதுகாப்பு
பழங்காலத்தில் ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் கிராமப் பொதுச் சொத்துக்களாக இருந்தன. அவற்றைப் பராமரிப்பதிலும் நிர்வகிப்பதிலும் விவசாயிகளுக்கு மட்டுமின்றிச் சலவைத்
தொழிலாளர், மீன் பிடிப்போர் மற்றும் கால்நடை வளர்ப்போர் போன்று ஏரி நீரைப்
பயன்படுத்துவோர் அனைவருக்கும் உரிமை இருந்திருக்கிறது.
ஒரு நாட்டின் நீர்நிலைகள் என்பவை அந்நாட்டின் உயிர்நாடிகளாகத்
திகழ்கின்றன. எனவே நீர்நிலைகளை உருவாக்கினால் மட்டும் போதாது. அவற்றை இயற்கைச் சீற்றங்களிலிருந்தும் பாதுகாத்தல் வேண்டும். நீர்நிலைகளை உருவாக்குவதிலும், அவற்றைக் காத்தலும்
நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற செயலாக அமைகிறது. அவ்வகையில், இயற்கைச் சீற்றத்திடமிருந்து நீர்நிலைகளைக் காக்க, காவலர் அமர்த்தப்பட்டனர். இதனை, ‘காப்புடைய கயம்’ என்று புறநானூறு
கூறுகிறது.
அடைமழைக் காலத்தில் நீர் நிறைந்து, அலைகளை எழுப்பிக் கொண்டிருக்கும் பெரிய குளத்திற்குக் காவல் இருந்த வீரனை அகநானூற்றிலும்
காட்டுகிறது.
”தொழில்மழை பொழிந்து பானாட் கங்குல்
எறிதிரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல்”12
சங்க கால புலவரான குடபுலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீரையும் நிலத்தையும் ஒன்றாகச் சேர்ப்பவர். உடம்பையும் உயிரையும் படைத்தவராவார் என்று பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார்
பாடலில்,
”காடு கொன்று நாடாக்கி குளம்
தொட்ட வளம் பெருக்கி” 13
என்று இரண்டாம் கரிகாலனுக்காகப்
பாடியிருக்கிறார்.
நிறைவாக,
நம் இலக்கியங்கள் உலக மக்களுக்கு உணர்த்துவது ‘உலகில் உயிர்கள் வாழ்வதற்கு உணவு போலவே நீரும்’ இன்றியமையாததாகும். உலக நீராதாரத்தில் 97.5 விழுக்காடு கடல்நீர். மீதமுள்ள 2.5 விழுக்காடு நன்னீரில் மனிதர்கள் பயன்படுத்த வல்ல நீரின் அளவு வெறும் 0.6 விழுக்காடாகும். இந்த சொற்ப
அளவு நீர்தான் விவசாயம், குடிநீர் போன்ற அடிப்படை மனிதத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு
வருகிறது.
நீர்நிலைகளுக்கு அகழி, அருவி, ஆறு, ஏரி, கடல், கம்மாய், கால்வாய், குட்டை, குளம், தெப்பக்குளம், மடை, வாய்க்கால் என ஐம்பதுக்கும் மேற்பட்ட பெயர்களைப் பயன்படுத்தியவன் தமிழன். பெயருக்கேற்ப ஒவ்வொரு நீர் நிலைகளையும் தனித்தனிச் சிறப்பையும் பயன்பாட்டையும்
கொண்டிருந்தது. இது நீர் மேலாண்மையில் அவனுக்கிருந்த பரந்துபட்ட அறிவைக்
காட்டுகிறது. இவற்றில் பல பெயர்கள் இன்று வழக்கத்தில் இல்லை. நீர் மேலாண்மை குறித்த நம் முன்னோர்களின் மரபுத் தொழில் நுட்பங்களும் மறைந்து
போனது. எனவே என்றும் இயற்கையோடு இயைந்த பழந்தமிழரின் நீர் மேலாண்மை
உத்திகளை உணர்ந்து, நீரை அலட்சியப்படுத்தாமல் சிக்கனப்படுத்திச் சேமிக்கும் பழக்கத்தை
உருவாக்கிக் கொள்வோம். நீர்நிலைகளைப் பாதுகாப்போம்.
அடிக்குறிப்புகள்
1. குறள், 29
2.
குறள், 16
3.
புறம், 18:22-23
4.
மேலது, 18:18-21
5.
புறம், 18:22-23
6.
மேலது, 18:27-29
7.
தொல், 1009
8.
புறம்,
390:23-24
9.
மேலது, 319:1-2
10.
மேலது, 24:18-19
11.
மணவழகன். முனைவர்.ஆ, பழந்தமிழர் வாழ்வியலும் பன்முக ஆளுமையும், அய்யனார் பதிப்பகம், சென்னை – 600 088. மறு பதிப்பு –
2024.
12.
அகம்,
252:11-13
13.
பட்டினப்பாலை,
283-284
---
Comments
Post a Comment